ads

Thursday, 27 March 2014

வேதாளமும் வேதியனும்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.

வாரும் பிள்ளாய்  வேதியனே!  நான் கொடாக் கண்டனாக இருந்தாலும் நீ விடாக் கண்டனாக இருக்கிறாய்.!  முடியாது என்று தெரிந்த  பின்னும் பின்வாங்காமல்  நீ விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறாயோ என்றுத் தோன்றுகிறது.  சரி, பார்க்கலாம் இதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை.

வேதியா! இந்த மனித வாழ்க்கையே ஒரு புதிர்போல்தான். சில சமயம் சில கேள்விகளுக்கு  விடைதெரியாது.   எது சரி எது தவறு என்பதைச் சொல்லமுடியாமல்    அறிவு மயங்கி நிற்கும் நேரமும் உண்டு.  

சிலரின் செயல்கள், இப்படிப்பட்ட   மனிதர்களும்  இப்பூமியில் வாழ்கிறார்களா என்று  நம்மை திகைப்பில் ஆழ்த்துவதும் உண்டு.

 அப்படிப்பட்ட பெரியார்  ஒருவரின் கதையை இன்று உனக்காக    சொல்லப் போகிறேன்.    

அவர் சிவபக்தர். சிவ பக்தர் என்பதை விட  சிவனின் மேல் அளவற்ற பித்து உடையவர்.  சிவனடியார்களுக்கு செய்யும் தொண்டு அந்த ஈசனுக்கே செய்யும் தொண்டு என்று வாழ்ந்து வந்தார். இயற்பகை என்பது  அவரது பெயர்.  ஊர் காவிரிப் பூம்பட்டினம்.  

பரம்பரைத் தொழில் வாணிபம் என்பதால் சொத்து பத்து அதிகம்.  அவருக்கு ஒரு அழகு மனைவி. கணவன் கிழித்த கோட்டைத் தாண்டாதவள்.  பெயர் மணக்குல மடந்தை. 

சிவனின் அடியவர்கள் அனைவருக்கும் அவரின் வீட்டில்தான் தினசரி உணவு. அதிகாலையில் பற்ற வைக்கப்படும் அடுப்பு  இரவு 12மணிவரை எரிந்து கொண்டேயிருக்கும். 

இயற்பகை வீட்டிற்கு போனால் வயிறார உண்டு வரலாம் என்று நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வருபவர் ஏராளம்.

சமையல்ஆட்களை வைத்து சமைத்து, பசியோடு வரும்  அடியர்களுக்கெல்லாம் இன்முகத்துடன் பரிமாறுவாள் இயற்பகையின் மனைவி. 

கணவர் இருந்தாலும் வியாபார விசயமாய் வெளியில் சென்றிருந்தாலும் சிவனடியார்களுக்கு உணவிடும் பணி  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது.

தன்னைத் தேடி வரும் சிவனடியார்களுக்கு  உணவு மட்டும் அல்ல, அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்தனுப்புவார். இதனால் அவரது பெயர் ‘இல்லையென்று சொல்லாத இயற்பகை’ என்றே மக்களால்  வழங்கப்படலானது.  

அன்று இயற்பகை வீட்டில் சுமங்கலி பூஜை. தன் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று சுமங்கலிப் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறாள் மணக்குல மடந்தை.  இப்பூமியில் நெடுநாள் வாழ, நீண்ட ஆயுள் வேண்டும் என்ற ஆசையெல்லாம் இயற்பகைக்கு இல்லை.

 சுமங்கலி பூஜையில் கலந்து கொள்வதற்காகவேணும் நிறைய பேர் இல்லத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு உணவளித்து, தேவையான பொருட்களையும் கொடுத்தனுப்பலாம் என்பதால் மனைவியின் வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்தார்.

ஊரே திரண்டது.  சுமங்கலிகள் அனைவரும் ஒன்று கூடி மகாலக்ஷ்மியை வழிபட்டனர்.  வழக்கமாய் நடைபெறும் சிவவழிபாடும் நடைபெற்றது.  அனைவரும் வயிறார அறுசுவையுடன்  உணவுண்டு மகிழ்ந்தனர். 

வந்திருந்த சுமங்கலிகள் அனைவருக்கும் உயர்ரக பட்டுச் சேலைகள் ,இன்னும் அவர்களே எதிர்பார்க்கா வண்ணம், தட்டுகளில் அணிகலன்களும் தங்க குங்குமச் சிமிழ்வைத்துத் தரப்பட்டது. 

சிவனடியார்களின் கூட்டமும் அன்று அதிகம் . அனைவரும்  திருப்தியுடன் உண்டு வாழ்த்திச் சென்றனர். 

மாலை நேரம். இயற்பகை வீட்டைச் சுற்றி வந்தார். நெருங்கிய உறவினர் ஒரு சிலரைத் தவிர பிறர் திரும்பிவிட்டனர். பணியாட்கள்  துப்புறவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அடுப்பில் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. 

‘மடந்தை’ பணியாட்கள் அனைவரும் உண்டுவிட்டார்களா? வேறுயாரேனும் உணவு உண்ணாமல் இருக்கிறார்களா? 

‘எல்லோரும் உணவருந்தி விட்டார்கள் ஸ்வாமி, உணவுண்ட திருப்தியுடன் சிவனடியார்களும் திரும்பி விட்டனர்.  தாங்கள் மட்டும் இன்னும் உணவருந்தவில்லை’.

 ‘நீ¢  உணவு உண்டாயா மடந்தை?’

தங்களை விட்டு நான் என்று தனியா உணவருந்தியிருக்கிறேன் ஸ்வாமி

சரி வா, இருவரும் சேர்ந்து உண்ணலாம்.

இருவரும் உட்பக்கமாகத் திரும்பும் வேளையில்  வாயிலில் ’சிவோஹோம்’ என்று குரல் கேட்டது.

இயற்பகை கண்கள் மலர வாயில் பக்கம் திரும்பினார்.

சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இயற்பகையும், மடந்தையும் விரைந்து சென்று சிவனடியாரை வணங்கி ,வாருங்கள் ஸ்வாமி!  உணவருந்தலாம். அழைத்தனர்.

உள்ளே அழைத்துச் சென்று சிவனடியாருக்கு கைகால் கழுவ நீர் கொடுத்தார்கள்.

அதன்பின் தம்பதி சகிதமாய் அடியாருக்கு பாத பூஜை செய்து , அவரது காலில் விழுந்து வணங்கி, அவரை உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, அருகிருந்து பரிமாறினர்.

 சிவனடியார் திருப்தியுடன் உண்டபிறகு  கைகழுவ சொம்பினால் நீரெடுத்துக் கொடுத்தாள் மடந்தை.

நிமிர்ந்து பார்த்தார் அடியார். ய்ஏவ்... ஏப்பம் விட்டார்.

அடியார் கைத் துடைக்க புதுத் துணியை பணிவுடன் நீட்டினாள் .

ம்ம் .. இல்வாழ்க்கைக் கூட சுகமாக இருக்கும்தான் போலிருக்கு.. பணிவிடை செய்ய இப்படி ஒரு பெண்ணிருந்தால் சுகமோ சுகம்.  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே  முன் கதவை நோக்கி நடந்தார் அடியார்.

‘ஸ்வாமி! என்ன சொன்னீர்கள்? ஏதோ கேட்டது போல் தோன்றியது சரியாக விளங்கவில்லை’.  பணிவுடன் கேட்டார் இயற்பகை. 

 ‘ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்  உன்னைப் பற்றி. ஈசனின் மேல் அளவு கடந்த பக்தியாமே.?’

ஆம் ஸ்வாமி! இந்த அடியேனுக்கு எல்லாமே ஈசன்தான். இந்த உடல் ,உயிர் , என் உடைமைகள் அனைத்தும் அவருக்கே சொந்தம். அடியார்க்கு செய்யும் தொண்டு , அந்த மகேசனுக்கு செய்யும் தொண்டெனவே வாழ்ந்து வருகிறேன் ஸ்வாமி.

‘ஆம்.. அதையும் தான் கேள்விப்பட்டேன். அதோடு இன்னொன்றையும் கேள்விப்பட்டேன். இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவனாமே நீ?’ 

‘ஆம் ஸ்வாமி! அந்த பரமனின் அடியவர்கள் என்னிடம் இருப்பதை எதைக் கேட்டாலும் இல்லையென்னாது கொடுப்பது என்பாக்கியம் என்றே வாழ்ந்து வருகிறேன்.’

‘எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவாயா?’

‘என்னிடம் இருப்பதை எதைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவேன் ஸ்வாமி. என்னிடம் இல்லையென்றால் வெளியில் வாங்கி வந்தாவது கொடுப்பேன் ஸ்வாமி.’

‘அப்படியா? சந்தோஷம். உன்னிடம் இருப்பது ஒன்று எனக்குத் தேவைப்படுகிறது தருவாயா  இயற்பகை?’

‘தந்தேன் ஸ்வாமி! இனி அப்பொருள் என்னுடையது  இல்லை,  உங்களுக்குச் சொந்தமானது. என்னவென்று சொல்லுங்கள் இப்பொழுதே எடுத்து வந்து தருகிறேன்.

‘வாக்குமாற மாட்டாயே இயற்பகை?’

‘ஸ்வாமி! என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்?  கொண்ட கொள்கையிலிருந்து வாக்கு மாற மாட்டான் இந்த இயற்பகை. இது நான் வணங்கும் எம்பெருமான் ஈசன் மேல் சத்தியம்.!’

‘அப்படியென்றால் உன் மனைவியை எனக்குத் தா இயற்பகை! உனக்கு பணிபுரிந்த அவள் இனி எனக்குப் பணி  புரியட்டும்’.

‘தந்தேன் ஸ்வாமி! இப்பொழுதே அழைத்துச் செல்லுங்கள்.’

‘மடந்தை வா இங்கே.  உன்னை இந்த சிவனடியார்க்கு தருவதாக வாக்களித்துவிட்டேன்.  என் சொல்லை மீறாத தர்ம பத்தினி நீ.  என் வாக்கை காப்பாற்று. இந்த சிவனடியாருடன் செல்.’

கணவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்  மடந்தை. ‘ஸ்வாமி! உங்கள்  கரம் பற்றிய நாளிலிருந்து உங்கள் வாக்கை இதுவரை நான் மீறியதில்லை.  இப்போது மட்டும் மீறுவேனா?  உங்கள் கட்டளைப்படியே  சிவனடியாருடன் செல்கிறேன்.  விடைகொடுங்கள்.’

‘மகிழ்ச்சி மடந்தை.  ஸ்வாமி! மடந்தை இனி உங்கள் சொத்து. அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நானே ஊர் எல்லைவரை வந்து உங்களை  வழியனுப்பி வைக்கிறேன்.’

இயற்பகை சிவனடியாரையும் , மடந்தையையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

 விவரம் தெரிந்து உறவுகள்  கொந்தளித்தனர்.

கட்டிய மனைவியை எவனாவது அடுத்தவனுக்கு விட்டுக் கொடுப்பானா? என்ன மனிதன் இவன்?

ஈசனின் மேல் பக்தி இருக்கவேண்டியதுதான்,  பைத்தியக்காரனாக  அல்லவா இவன் இருக்கிறான். 

என்ன தினவிருந்தால் அந்தச் சாமியார்  அன்னமிட்ட கையையே அசிங்கப்படுத்த நினைப்பான்? வாருங்கள், மனைவியை வைத்து  காப்பாற்ற  வகைதெரியாத அந்த மடையனுக்கும் , பெண்ணை வெறும்  பொருளாக எண்ணும் அந்த சாமியாருக்கும் சரியான பாடம் புகட்டுவோம்.

ஒன்று திரண்டு எல்லோரும் விரைந்தனர். அதற்குள் மூவரும் ஊர் எல்லையை நெருங்கி விட்டிருந்தனர்.

‘நில் இயற்பகை!  வைத்து வாழத்தானே என்  பெண்ணை  உனக்குக் கொடுத்தேன். இப்படி வந்தவன் போனவனுக்கு தாரை வார்க்கவா கொடுத்தேன். பெண்டாட்டியை நீ வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாம். என்பெண்ணை ஒரு பரதேசி கூட்டிச் செல்ல ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.’  

‘அவள்  என் மனைவி . தாரை வார்த்துக் கொடுத்த  போதே உங்களுக்கு அவள் மீது உள்ள உரிமைபோய்விட்டது. அவளின் வாழ்க்கை எப்படி என்பதைத் தீர்மானிப்பது என்னிஷ்டம். எல்லோரும் வழிவிட்டு விலகுங்கள்.  மீறி எவனாவது எங்களைத் தடுத்தால் அடுத்த நொடியில் அவன் தலை  தரையில் உருளும். இயற்பகை வாளை  உருவி உயர்த்தினார்.’

‘முட்டாள். தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் உரிமை போகலாம், உறவு எப்படியடா போகும்? பெற்றோர் பிள்ளை உறவு  சுடுகாடு மட்டும் தொடரும் பந்தம். அது என்றும் நீங்காது.  என்  பெண் தாலியறுத்தாலும் சரி,  இப்படி ஒரு ஈனமான காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்’.  மடந்தையின் தகப்பனும் வாள்  உருவினான்.

பல தலைகள் தரையில் உருண்டன. இயற்பகையின் வாழ்வீச்சுக்கு பயந்த மற்ற உறவினர்கள் பின் வாங்கினர்.  இயற்பகை மனைவியை சிவனடியாருடன் அனுப்பி வைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். 

வேதியா! கதை இத்துடன் முடிகிறது.  கேள்விக்கு வருகிறேன்.

தன்னையே நம்பி வந்த ஒரு பெண்ணை, ஆயுள் முழுதும் உன்னை வைத்துக் காப்பாற்றுவேன் என்று அக்கினியை  வலம்வந்து கரம் பற்றிய  மனைவியை , ஒரு ஆண்மகன்,  அடுத்தவனோடு அனுப்பலாமா?  

என்னதான் இறைபக்தி என்றாலும், கொள்கையென்றாலும்  இப்படி கண்மூடித்தனமாய் நடந்து கொள்வது அறிவீனம் இல்லையா?  

குடும்பஸ்தன் ஒருவன்  இப்படி தன் பெண்டாட்டி,  பிள்ளைகளை தானம் செய்வதெல்லாம்  முறையா?  இயற்பகை செய்தது சரியா? தவறா?    என் கேள்விக்கு பதில் சொல்!   தெரிந்தும் தெரியாததும் போல்  இருந்தாயானால் உனக்குத் தான் ஆபத்து. உன் தலை வெடித்துச் சிதறும்..

“வேதாளமே!  நீ ஆரம்பத்தில் கூறியது போல் இந்த மனித வாழ்க்கையே  புதிரானதுதான். வாழ்க்கையில் நடந்து விடும் சில விசயங்களை நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியாது.  

வேதாளமே! இந்த வாழ்க்கை என்பது யானையைப் போல். அறிவு  சிறு எறும்பைப் போல். சில கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முடியும்.  சில கேள்விகளுக்கு விடையை மனதால்தான் தேட முடியும். 

இது போன்ற தருணங்களில் எது சரி? எது தவறு? என்பதை தீர்மானிக்கும் வேலையை மனதிடம் விட்டுவிடுவதே சரியானது.

ஞானிகள் சொல்வார்கள்! இந்த உலக வாழ்க்கையே மாயை, உறவுகளும் மாயை என்று.  கிருஷ்ணரிடம் ஒரு முறை இந்தக் கேள்வியை நாரதர் கேட்டார். கிருஷ்ணா!, மாயை, மாயை என்கிறார்களே அப்படியென்றால் என்ன? 

 கிருஷ்ணர் சிரித்தபடி, நாரதரே, தாகமாய் இருக்கிறது.  எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா  பார்க்கிறீர்களா? என்று கேட்கிறார்.

தண்ணீரைத் தேடிச் செல்கிறார் நாரதர். அங்கே ஒரு அழகியைப் பார்த்து காதல் கொள்கிறார். மணந்து கொள்கிறார்.  பிள்ளைகள் பிறக்கிறார்கள். காலங்கள்  பல கடக்கிறது.  

ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வருகிறது. வாழ்ந்த வீடு அடித்துச் செல்லப்படுகிறது.  நாரதர் தன் மனைவி பிள்ளைகளையெல்லாம் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். 

பிள்ளைகள்ஒவ்வொருவராக தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இறுதியில் மனைவியும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படுகிறாள். துக்கம் தாங்காமல் நாரதர் ஓ வென்று அலறி கதறுகிறார்.

கிருஷ்ணர் நாரதரை தட்டி எழுப்புகிறார். நாரதரே,  தண்ணீர் கொண்டு வருகிறேன்  என்று  சென்றீர்கள்!  ஒருநாழிகை ஆகிவிட்டதே ,ஆளைக்காணாமே என்று வந்தேன்,  ஏன்  இங்கே படுத்துக்கிடக்கிறீர்கள்? என்று வினவுகிறார். 

நாரதர் எழுந்து என்னது ஒரு நாழிகைதான் ஆனதா?  அங்கே ஒரு வாழ்க்கையே நடந்து முடிந்து விட்டதே.   கிருஷ்ணா இதுதான் மாயையா? நான் ? என் சுகம், துக்கம் என் மனைவி பிள்ளைகள் பிரிவு, எல்லாமே மாயையா? விளங்கிக் கொண்டேன். என்கிறார் நாரதர்.

வேதாளமே!  இந்த வாழ்க்கை மாயை என்றால் நிஜம் எது? நிரந்தரம்எது?  பரம்பொருளின் பாதம் ஒன்றே!  அதைப் பற்றிக் கொள்வதற்கான வழியைக் கண்டறியவே இந்த வாழ்க்கையைப் பயன்படுத்தின்கொள்ள  வேண்டும். 

ஞானிகள்   இதை உணர்ந்து கொண்டவர்கள். எனவே அவர்கள் பந்த பாசத்தை அறுத்துக் கொண்டு   வெளியில்   வந்து விடுகிறார்கள்.  இல்லற வாழ்வில் உள்ளோன் படிப்படியாய் தான் இந்த நிலைக்கு வரமுடியும். ஒருசிலருக்கு ஒரு பிறவியிலே இந்த நிலை கிடைக்கும். சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம். 

இயற்பகை போன்றோர்கள் முற்றும் உணர்ந்த ஞானிகளுக்கு சற்றுக் குறைந்தவர்கள். ஆனாலும் இல்லற வாசிகளை விட மேம்பட்டவர்கள். அவர்களின் வழி பக்தி நெறி.  

இறைவன் மேல் அதீத பக்தி வைப்பதினால் இறைவனைத் தவிர வேறொன்றையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். தன்னையே இறைவனுக்குத் தரத்துணிவார்கள்! நந்தனாரைப் போல்.  தன் உடல் உறுப்பையும் தரத்துணிவார்கள்! கண்ணப்பனைப் போல். தன் குழந்தை குட்டிகளையும் தரத்துணிவார்கள்! சிறுத்தொண்டரைப் போல்.  இயற்பகை இறைவன் மேல் கொண்டிருப்பதும் அத்தகைய பக்தித்தான்.

சாதாரண மனநிலை உள்ளவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமான செயலாகத் தான் தெரியும்.   இது பக்தியின் உச்ச கட்டம் என்பது ஆழ்ந்து  யோசிக்கையில் நம்  மனதுக்கு புரியும். 

 இறைத் தொண்டே பெரிதென வாழ்ந்த இயற்பகையும், கணவன் சொல்லை மீறாமல் நடந்து இறைசேவை செய்து வந்த மணக்குல மடந்தையும் ஈசனின் திருவடியில் இணைவதுதான்  நீ கூறிய கதையின் முடிவு. 

 முடிவு சுபமானதாவே இருக்கிறது.  எனவே  இயற்பகை செய்தது சரியே! என்று என் மனது பதில் சொல்கிறது.” வேதியன் கூறி முடிக்கிறான்.

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...