Follow by Email

Wednesday, 5 March 2014

தெரியுமா உங்களுக்கு?

* இல்லத்தில் எந்தெந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். 

அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்னும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னும் விளக்கேற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

 * கன்னி மூலை என்றால் என்ன?

வடக்கிழக்குப் பகுதி கன்னி மூலை எனப்படும். 

* உறங்கும் போது எத்திசை நோக்கி தலை வைக்கக்கூடாது?

வடதிசை நோக்கி  தலை வைத்து உறங்குவது சரியில்லை. இந்த பூமியை வடக்கு தெற்காக ஒரு காந்தவளையும் சுற்றி வருகிறது அது வடக்கில் மையம் கொள்கிறது.   நமது உடலிலும் அவ்வாறே  ஒரு காந்தச் சுழல் இருந்து கொண்டிருக்கிறது அது சிரசில் மையம் கொள்கிறது.  

வடதிசையில் நாம் தலை வைத்துப் படுக்கும் போது இந்த இரு மையங்களும் ஒன்றுக் கொன்று எதிராக  செயல்புரிவதால் மனம் அமைதியற்ற அலைபாயும். உறக்கம் கெடும். உடல் பாதிப்பும் ஏற்படும் இதனால் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

* நித்ய பூஜை என்றால் என்ன?

தினசரி செய்து வரும் பூஜைகளே நித்ய பூஜையாகும். 

* நைமித்திக பூஜை என்றால் என்ன?

சிறப்புத் தினங்களில் செய்யப்படும் சிறப்புப் பூஜை நைமித்திக பூஜை எனப்படும்.

* மலர்களைத் தவிர்த்து எந்தெந்த பத்ரங்களை அர்ச்சனை பூஜைக்குப் பயன்படுத்தலாம்?

துளசி, வில்வம், வேப்பிலை, அருகு.

* ‘துவஜ ஸ்தம்பம்’ என்றால் என்ன?

துவஜ ஸ்தம்பம் என்றால் கொடி மரம்.

* கோபுர தரிசனம் என்றால் என்ன?

ஆலய கர்ப்பகிரகத்திற்கு மேலே இருப்பது கோபுரம். இறைவனின் ஸ்தூல உருவமாக கருதப்படுவது கோயில் அமைப்பு. இதில் சிரசு கர்ப்பக்கிரகததின் மேலுள்ள  கோபுரமாகும். இராஜ கோபுரம் இறைவனின் பாத கமலமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எனவே திருக்கோவில் அருகே வந்ததும் கோபுரத்தை நிமிர்ந்து நோக்கி வணங்குகிறார்கள். 

* நைவேத்யம் என்றால் என்ன?

நைவேத்யம் என்பது திரு அமுது படைத்தல். சமைத்த சைவ உணவு, பொங்கல் வகைகள் , பலகாரங்கள் இவற்றிற்கு நெய் விட்டு இறைவனுக்கு அன்புடன் படைப்பது நெய் வேத்யமாகும்.

* மூலஸ்தான விக்கிரகம் கருங்கல்லில் அமர்ந்திருப்பது ஏன்? 

பிரபஞ்சத்திலுள்ள சக்தியை ஈர்ப்பதற்காகவே மூலஸ்தான விக்கிரகம் கருக்கல்லில் அமைந்துள்ளது. கருங்கல்லில் சிலிகான் எனப்படும் ஒலி அதிர்வுகளை ஈர்க்கும் தாதுப்பொருள் உள்ளது. இவைதான் தற்போது தொலைக்காட்சி, கணிணி, கைபேசி போன்றவற்றில் உபயோகப்படுகிறது. 

ஒலி அதிர்வுகளை ஈர்க்கவும்  அனுப்பவும் இந்த சிலிகான் பயன்படுகிறது.  பிரபஞ்சத்திலுள்ள அதிர்வுகளை ஈர்க்கவும், மந்திர ஒலி அதிர்வுகளை பிரபஞ்ச வெளிகளுக்கு அனுப்பவும் கருங்கல்லுக்கு ஆற்றல் அதிகம் இருப்பதை வெகுகாலத்திற்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால் கருங்கல்லால் மூலஸ்தான விக்ரகத்தை அமைத்தார்கள். 

* இறைவனுக்குத் திரை போடப்படுவதன் காரணம் என்ன?

மாயை என்கிற திரை இறைவனை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை விலக்கினால் இறைவன் காட்சி கிடைக்கிறது. இறைவனை வழிபட முடிகிறது.

மனதின் மாசுகளை விலக்கினால் நம் மாயை விலகி ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. ஆத்ம தரிசனம் ஞானத்தை அளிக்கிறது. 

* இந்து என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது?

பரத கண்டம் என்ற பெயரிலேயே அக்காலத்தில் இந்தியா அழைக்கப்பட்டது. வெளி நாட்டிலிருந்து வருகை புரிந்த அந்நியர்களும் படையெடுப்பாளர்களும் இமய மலையில் உற்பத்தியாகும் ஆங்கிலத்தில் இந்து நதி என்றழைக்கப்பட்ட,  சிந்து நதிக் கரையோரமும், அதற்கு தெற்கேயும் வாழ்ந்த மக்களை குறிக்கும் பொருட்டு இந்துக்கள் என்று அடையாளமிட்டு அழைத்தனர். 

அம்மக்கள் கடைபிடித்த கொள்கைகளே இந்து மதம் என கூறப்படலாயிற்று என்பது ஆய்வார்களின் கருத்தாகும்.  உலகில் பிற மதங்கள் அனைத்தும் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே நம் மக்கள் கடைபிடித்த இறை, மற்றும் நன்னெறிக் கொள்கைகளுக்கு தோற்றம், கால வரம்புத் தெரியவில்லை. இன்று இந்து மதம் என்றே அழைக்கப்படுகிறது. 

நாம் இந்துக்கள் என அழைக்கப்படுகிறோம். நாடு இந்தியா என்று அழைக்கப்படுகிறது. ‘இமய மலைக்கும் இந்து மகாசமுத்ர பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி இந்தியா எனவும் அங்கு வாழும் மக்கள் இந்துக்கள் எனவும், அவர்களின் கலாச்சாரம் இந்து சமயம் எனப்படுகிறது.’ என்று கூறுவோரும் உண்டு.

* இந்து மதம் சனாதன தர்மம் என ஏன் வழங்கப் படுகிறது?

எப்பொழுது யாரால் தொடங்கப்பட்டது என்றறிய  முடியாத அளவு தொன்மை வாய்ந்த,  பழமையான நெறி, சனாதன தர்மம் என வழங்கப்படுகிறது. 

* இந்து மதத்தின் சிறப்பம்சம் என்ன?

1. இறைவன் ஒருவனே, அவனைப் பல உருவங்களில் வழிப்படுகிறோம். எம்முறையில் வழிபட்டாலும் இறையருளைப் பெற முடியும். 

2. இறைவன் உருவமில்லாதவன், நம் மனத்தில் அவனை நிலை நிறுத்த ஒரு அடையாளம் தேவைப்படுவதால் உருவ வழிபாடு ஏற்பட்டது. இறைவனை அடையும் வழியில் முன்னேற்றம் காணக் காண உருவ வழிபாடு தேவையற்றதாகி விடுகிறது. அதை உணர்த்தவே அருவ வழிபாடாகிய ஜோதி வழிபாடு ஏற்பட்டது. 

3. ஆத்மா மனிதனாக பிறவியெடுக்கிறது. பல பிறவிகள் எடுத்தெடுத்து மறைந்தாலும்,  ஆத்மாவிற்கு அழிவில்லை. அது முடிவில் பரம் பொருளோடு ஒன்றிவிடுகிறது. அப்போது பிறவிப் பயணம் முடிவுறுகிறது. 

4. செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒருவனின் அடுத்த ஜென்மம் அமைகிறது. ஒருவனின் உயர்நிலை, தாழ்நிலைகளை அவனது முன் ஜென்ம வினைகளே தீர்மானிக்கிறது. 
5. அன்பே இறைவன். அனைத்துயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னை நேசிப்பது போலவே அனைவரையும் நேசிக்க வேண்டும். இதுவே இறைவனை அடையும் எளிய வழி.

* ரிஷி என்பவர் யார்?

மந்திரங்களை உணர்ந்தவர் ரிஷி எனப்படுவர். வேதங்கள்,  ஒலி ஒளிவடிவமாக  வான் வெளியில் நிறைந்துள்ளது. தவ வலிமையால் அவ் வொலி அலைகளை தரிசித்து ஒலிகளை உணர்ந்து அவற்றை உரைத்தவர்களை ரிஷிகள் என்று அழைக்கிறோம். 

* வேதங்கள் எத்தனை? அவை எதைப்பற்றிக் கூறுகின்றன?

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என நான்காகும். இவை இறைவனால் அருளப்பட்டு, முனிவர்களால் உணரப்பட்டவை. அவற்றில் இறைவன் தன்னைப்பற்றிய உண்மைகளையும், வாழ்வியல்  நெறிகளையும் அறிவுறுத்தியிருக்கிறார். 

ரிக் வேதம் :  இறை துதிப் பாசுரங்கள் எனப் பொருள்படுகிறது. இதில் இந்திரன், வருணன், அக்னி ஆகிய தேவர்களைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்புமிக்க காயத்ரி மந்திரம் இதில் இடம் பெற்றுள்ளது. 

சாம வேதம் : இவை யாகத்தின் போது இறைவனைப்பற்றி உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள் உள்ளன. யாகத்தில் நமக்கு வேண்டியதை கூறி அவற்றை அருளும்படி இறைவனிடம் வேண்டும் படியான மந்திரங்கள், துதிப் பாடல்கள் இதில் அடங்கியுள்ளன. 

யஜுர் வேதம் : யாகங்கள் பூஜைகள் இவைகளை நடத்தும் குருக்கள் எத்தகைய சடங்குகளைச் செய்ய வேண்டும். எந்த சமயத்தில் எந்த மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும்என்று இதில் துறப்பட்டுள்ளன. உரை நடை வடிவிலானது யஜு ர்வேதம்.

அதர்வண வேதம் : மந்திரம், மாந்த்ரீகம், யந்திரம் முதலியனவற்றைப்பற்றியும், இவற்றின் மூலம் ஒருவன் தன் பொருளாதார ஆதாயங்களை அடைய முடியும் என்பது பற்றியும் அதர்வண வேதம் எடுத்துரைக்கிறது. 

* சம்ஸ்காரம் என்றால் என்ன?

ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் , இறந்த பின்னும் கூட உடலில் உறையும் ஆன்மாவின் முன்னேற்றம் கருதி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் செய்யப்படும் சடங்குகள் சம்ஸ்காரங்கள் எனப்படும். முக்கியமான சமஸ்காரங்கள். 

1. காது குத்தல், 2. விவாகம் 3. அந்திமக்கிரியை(உயிர்பிரிந்த பின்) ஆகும். இவை மூன்றும் அக்னி சாட்சியால் செய்யப்பட வேண்டியவை. 

* மத நூல்களின் படி மனித வாழ்வின் நான்கு நிலைகள் என்ன?

1. பிரம்மச்சர்யம் 2. கிருகஸ்தம் 3. வனப்பிரஸ்தம்     4. சன்யாசம்.

* மூன்று குணங்கள் யாவை?

சத்வம், ரஜோ குணம், தமோ குணம்

சத்வம் : அன்பு, அடக்கம், ,சாந்தம், பொறுமை, ஞானம் போன்ற நற்குணங்கள் நிரம்பியது சத்வ குணம் ஆகும். 
ரஜோ : கோபம், பொறாமை, வீண் பெருமை இவையெல்லாம் ராஜஸம் என்ற ரஜோ குணங்களாகும். 

தமோ : தமோ குணம் சோம்பல், து£க்கம் நிறைந்தது. வெட்டியாக பொழுதை போக்குபவர்கள் தாமஸ குணம் மிக்கவராய் இருப்பர்.

மனிதனின் மூன்று உணர்வு நிலைகள்

1. ‘ஜாக்ரத் (விழிப்புநிலை)
2. ஸ்வப்னம் (கனவு நிலை)
3. சுஷுப்தி (து£க்னநிலை)

* ஏழு வகை உயிர்பிறப்புக்கள் யாவை?

1.தேவர்
2. மனிதர்
3. விலங்கு
4. பறவை
5. ஊர்வன 
6. நீர் வாழ்வன 
7. தாவரம்

* ஏழு மேலுலகங்கள் யாவை?

பூலோகம், புவர்லோகம், சவர் லோகம், மஹர் லோகம், ஜனோ லோகம், தபோலோகம், ஸத்ய லோகம். 

* ஏழு கீழுலகங்கள்

அதலம், விதலம், ஸுதலம், தலாதலம், ரஸாதலம், மலாதலம், பாதாளம்.

* ஆறு ஆதாரங்கள் அல்லது சக்கரங்கள் யாவை?

மூலாதரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறும் உடலில் முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருந்து புருவமத்தி வரை ஆறு இடங்களில் உள்ள யோக சூட்சம் சக்கரங்களாகும். 

* கடவுளை அடைய கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம்.

* ராஜயோகத்தின் எட்டு உறுப்புகள் யாவை?

1.இயமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணயாமம்
5. பிரத்யாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இயமம் என்பது - கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, பிரம்மச்சார்யம் இரக்கம். வஞ்சனையின்மை, பொறுமை, து£ய்மை, இவையறிந்து உண்ணல், திட மனம், ஆகிய பத்தும் இயமம் எனப்படும்.

நியமம் எனப்படுவது- 

1. எப்போதும் மகிழ்ச்சியுடனிருத்தல்
2. இறைவனிடம் அசையாத நம்பிக்கை
3. அறத்தினின்று வழுவாமை
4. உயர்ந்தோரை மதித்தல்
5. நன்னு£ல்களை படித்தறிதல்
6. பிறப்பு, செல்வம், அதிகாரம் இம் மூன்றும் இருந்தாலும் அதற்காக கர்வமுறாமல் எளிமையாய் இருத்தல்
7. நன்மை தீமை, பாவ புண்ணியம் 
8. இவற்றை பகுத்துணருதல்
9. அடக்கத்துடன் பொறுமையை கடைபிடித்தல்.
10. மனதை சலனமின்றி வைத்திருத்தல்.
11. புலன்களை தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருத்தல். 
இவை யாவும் நியமங்களாகும்.

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடும் காரணம் என்ன?

இரு காதுகளையும், அதாவது வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து செய்யும் உடற்பயிற்சியே தோப்புக்கரணம் எனப்படுகிறது. 

தலையில் இருபுறமும் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணமிட்டு விநாயகரை வழி படுவதால் சுஷூம்ணா என்ற யோகத் தளம் தட்டப்பட்டு மூலாதாரமாகிய முதுகெலும்பின் அடிப்பாகத்திலுள்ள மூலாதாரத்தில் குண்டலிணி சக்தி விழித் தெழுகிறது என்பர். அகக் கரணங்கள், பிறக்கரணங்கள் அடக்கப்பட்டு அகந்தையும் ஆணவமும் அழிந்து இறைவனைச் சரணடைவதே தோப்புக்கரணத்தின் தத்துவமாகும்.

தோப்புக்கரணம் வந்தக் கதை

மாகத முனிவருக்கும் விபுதை என்பவளுக்கும் பிறந்தவன் கஜமுகாசுரன். இவன் சிவபெருமானை வணங்கி அனைவரையும் வெல்லும் ஆற்றலைப் பெற்றான்.  அதன் பின் தேவர்களையும் , முனிவர்களையும் துன்புறுத்தி  மூன்று வேளையிலும் 1008 தோப்புக் கரணம் போட வைத்தான். 

சிவனின் ஆணைக்கிணங்கி , அசுரனை அடக்கச் சென்ற விநாயகர் தமது வலது தந்தத்தை உடைத்து சிவமந்திரம் கூறி கஜமுகாசுரனை நோக்கி ஏவினார்.  அது அவனை இரண்டாகப் பிளந்து சென்றது

சாகாவரம் பெற்ற அவன் பெருச்சாளியாக மாறி எதிர்த்து வந்தான். தன் கையிலிருந்த பாசத்தால் அடக்கினார்.

மகிழ்ந்த தேவர்களும் முனிவர்களும் விநாயகர் முன் 1008 தோப்புக்கரணம் போட முன்வந்தனர். அவரோ மூன்று முறை போட்டால் போதும் என்று அருள்புரிந்தார்.

மனம் ,சித்தி, புத்தி, அகங்காரம் என்ற நான்கு அகக் கர்ணமும், கை, கால், கண் , மூக்கு என்ற நான்கு புறக் கர்ணமும் கொண்ட தோப்புக் கரணம் இடுவதனால் , (குண்டலினிய சக்தி தூண்டிவிடப்படுகிறது)  அறிவு வளர்ச்சியும் , உடல் ஆரோக்கியமும் உண்டாகும் என்பது யோகிகள் வாக்கு.

குட்டிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டதற்கான கதை.

வடக்கிலிருந்து தென் பொதிகை மலையை நோக்கி அகத்தியர் வரும் காலத்தில்  காவிரியை தன் கமண்டலத்தில்  அடக்கிக்கொண்டார். குடகு மலை வந்ததும் அங்கு சில காலம் தங்கி சிவபூஜை  செய்து கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் சூரபத்மனுக்கு பயந்து இந்திரலோகத்திலிருந்து இந்திராணியுடன் ஓடிவந்த இந்திரன் சீர்காழி எனும் தளத்தில் தங்கி தோணியப்பரை வணங்கி வந்தான்.  சூரபத்மனின்   ஆணைப்படி வருண பகவான்  மழை பொழிவதை நிறுத்திக் கொண்டான். மழை பொய்த்ததால் இறைவனை வணங்க பூக்கள் இல்லாமல் போனது.

நாரதரின் ஆலோசனைப்படி இந்திரன் விநாயகரை எண்ணித் தவம் செய்ய  , இந்திரனுக்கு உதவ விநாயகர் மனம் கொண்டார்.

காகம் வடிவெடுத்த விநாயகர் அகத்தியர் தவம் புரிந்த குடகு மலைக்கு வந்தார். காவிரியிருந்த கமண்டலத்தின் விளிம்பில் அமர்ந்தார்.  கண்விழித்த அகத்தியர் காகத்தை விரட்ட, கமண்டல நீர் கவிழ்ந்து ஆறாகப் பாய்ந்தது. 
  
காகம் அந்தணச் சிறுவனாக மாறியது.  மாயச்சிறுவனின் மேல் கோபம் கொண்ட அகத்தியர் சிறுவன் தலையில் கொட்ட அவனை துரத்தினார். சிறுவன் விநாயகராக மாறி அகத்தியருக்கு அருள்புரிந்தான்.

ஆனைமுகக் கடவுளே! உன்னையேக் கொட்டத் துணிந்தேனே என்று வருந்தி தன்னைத் தானே குட்டிக் கொண்டார்.  அதைத் தடுத்த விநாயகர். அகத்தியரே! உன்னைப் போல் என்னை வழிபடும் பக்தர்கள்  சிரசில் குட்டிக்கொண்டால் அறியாமை நீங்கி அறிவுப் பெறுவார்கள் என்று அருளி மறைந்தார் விநாயகர்.
  
தலையில் குட்டிக் கொள்ளும் போது சூட்சும நரம்புகள் தூண்டிவிடப்படுகின்றன. இதன் மூலம் மூளையில் ஏற்படும் அதிர்வு அதன் செயல் திறனை அதிகப்படுத்துகிறது என்கிறது அறிவியல்.

* எழுத ஆரம்பிக்கும் போது ஏன் பிள்ளையார் சுழி போட்டு எழுதுகிறோம்?

பிள்ளையார் சுழி, ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து ஒரு நேர்க்கோட்டை இழுப்பது. இது பிந்துவிலிருந்து ஆரம்பித்து ஓங்கார நாதம் உண்டானதையும் பின் சிருஷ்டி உண்டானதையும் குறிக்கும். பிரணவ ஸ்வரூபமாக விநாயகர் விளங்குவதால் இது பிள்ளையார் சுழி என வழங்கப் படுகிறது. எடுத்தக் காரியம் தடையின்றி லாபகரமாய் முடிய வேண்டும் என்பதற்காகவும் பிள்ளையார் சுழி போடப்படுகிறது என்றும் விளக்கம் கூறப்படுகிறது. 

* முருகன் கையிலுள்ள வேலின் தத்துவம் என்ன?

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி என்ற மூன்றின் உருவமாக முருகன் வேலாயுதம் தரித்துள்ளார். 

* விபூதி எதைக் குறிக்கிறது?

ஞானம் என்ற நெருப்பில் வினைகளனைத்தும் சுட்டெரிக்கப்பட்டவுடன் எஞ்சி நிற்பது பரிசுத்தமான சிவ தத்துவமே என்பதைக் குறிப்பதே வெண்ணீறு. 

மதிவாணன் 

No comments:

Post a Comment