Follow by Email

Monday, 24 February 2014

சனி நல்லவரா கெட்டவரா?

வேதாளமும் வேதியனும்
     
 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக்கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

“அ ஹோய்.. வாரும் பிள்ளாய் வேதியனே!   உன்னைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!   எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காத உன் திடமனதை பாராட்டி, உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கேட்டுக் கொண்டே வா.! 

நான் முன்பே சொன்னது போல் சூரியனுக்கு பிள்ளைகளாக பிறந்தவர்கள் யமனும் சனிபகவானும் . இதில் யமன் நேரில் வந்து நின்றாலும் பயப்படாதவர்கள் கூட சனிபகவான் என்றால் பயப்படுவார்கள். ஒன்பது கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறார்.

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற பட்டப்பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் பெருமை பெற்றவர் சனி பகவான் ஒருவரே. 

சனி பகவானுக்கு ஒரு கால் ஊனம். அது எப்படி வந்தது என்றால்..
  
ஒரு முறை கயிலாயத்தில் ஒரு விழா. விநாயகருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ் வைபவத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்திருந்தனர். அப்போது விநாயகருக்கு வேழ முகம் இல்லை. முருகனைப் போன்ற முகம். 

அவ்விழாவிற்கு தானும் செல்ல வேண்டும்¢ என ஒரு குழந்தை  அடம் பிடித்தது. தாயார் சாயா தேவியோ குழந்தையின் மகிமையை அறிந்தவள். குழந்தைக்கு சமாதானம் சொல்லி போக விடாமல் தடுத்தாள். 

அம்மா நான் யாரையும் அருகில் சென்று பார்க்கவில்லை. தூரத்தில் ஒரு ஓராமாய் நின்று பிறந்த நாள் விழாவைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கெஞ்சியது.

இரக்கப்பட்ட தாய் அனுமதியளிக்கிறாள்.

கயிலை மலையின் மீது குழந்தை மெல்ல மெல்ல ஏறி வருகிறது.  உமையொருபாகன் தனது ஞானக் கண்ணால் கண்டு கொள்கிறார். உடனே உமையிடம், தேவி கயிலை மலை மீது ஒரு குழந்தை தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது, அதன் பார்வை பொல்லாதது, என்வே விநாயகன் மீது அக்குழந்தையின் பார்வை படாதவாறு விநாயகரைப் பாதுகாத்துக் கொள் என்கிறார்.

பார்வதிக்கு உடனே ரோஷம் வந்து விட்டது.  “என் மடியில் உட்கார்ந்திருக்கும் போது என் குழந்தைக்கு எந்த தீங்கும் வராது. அந்தக் குழந்தையால்  என் மகனுக்கு எந்த பாதிப்பும் வராது’  என்று பதில் சொல்கிறாள்.

தவழ்ந்து வந்த குழந்தை விழா நடக்கும் மேடைக்கருகே வந்து விட்டது.  எல்லோர் பார்வையும் அக்குழந்தையின் மீது பட்டது. தேவர்கள் அனைவரும் , என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினர்.  

அக்குழந்தையின் பார்வையோ விநாயகர் மீதே இருந்தது.  அணிமணிகள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் சிரித்த முகமாய் இருக்கும்  கணேசரது முகத்தை குழந்தை கூர்ந்து கவனித்தது.

அந்த நொடியில் அச்சம்பவம் நடந்தது. விநாயகர் மயங்கி விழுந்தார் அவரது தலை குழைந்து காணாமல் போய்விட்டது. 

பார்வதி பதறிப்போனாள்.  கணேசனின் நிலையைக் கண்டு கதறினார்.  அய்யோ ஈஸ்வரர் சொன்னதை கேட்காமல் போய்விட்டேனே என்று கலங்கினார். அவரது சோகம் கோபமாய் மாறியது . இதற்கு காரணமான குழந்தையை கோபத்துடன் பார்த்தாள். 

‘நீ இங்கே வந்ததால்தானே என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது.  நீ இனி எங்கும் செல்ல முடியாதவாறு உன் கால்கள்  முடமாகட்டும் என்று சபித்தாள்’

ஈசன் , பைரவரை அழைத்தார். பைரவா ‘நீ வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருப்பவர் யாராயிருந்தாலும் அவரது தலையைக் கொய்து வா’  என்று ஆணையிட்டார்.

பைரவன் வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருந்த யானைக் குட்டியின் தலையை வெட்டி வந்து ஈசனிடம் கொடுத்தார். 

ஈசன் அத்தலையை விநாயகரின் உடலோடு ஒட்டினார்.

இதற்கிடையில் கால்கள் பாதிக்கப்பட்ட குழந்தை விந்தி விந்தி நடந்து கொண்டே தன் இருப்பிடம் திரும்பியது.

சாயாதேவி நடந்ததை உணர்ந்து கொ£ண்டாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது.   

விழாவுக்கு வந்த மகனுக்கு உணவுக் கூட கொடுக்காமல்   சாபமிட்ட, அவளது மகனின் வயிறு பெருத்துப் போகட்டும் என்று சாபமிடுகிறாள். விநாயகரின் வயிறு பெருத்துப் போகிறது.

விநாயகரின் அழகிய முகம் மறைவதற்கும், பானை வயிறு ஏற்பட்டதற்கும் சனி பகவானே காரணமாகும். 
  
சனி பகவானி¢ன் பார்வை பட்டு தொல்லைப்பட்டவர்கள் ஏராளம். 

இலங்கை வேந்தன் இராவணனின் கதை முடிவதற்கும் சனியின் பார்வையே காரணமாகும்.

பரமேஸ்வரனிடம் , யாரும் தன்னை வெல்ல முடியாத அளவில் வரம் பெற்ற இரவாணன் தேவர்களை அடிமைப்படுத்தினான் , நவக்கிரகங்களையும் கொண்டு வந்து தன் சிம்மாசனத்திற்கு செல்லும் படிக்கட்டுகளாக அமைத்து வைத்து அவர்கள் மீதேறி நடந்து சென்றான். 

நரரதர் ராவணனைச் சந்திக்க   வருகிறார்.  அவரிடம் தன் பெருமையைப் பற்றி பேசி கர்வப்படுகிறான் ராவணன்.

ராவணா!  உன் புகழினை , வலிமையை இந்த உலகே அறியும். நவக்கிரகங்களையும் வென்று படிக்கட்டுக்களாய் அமைத்துக் கொண்டாய்.  உனது படிக்கட்டுகளில் படுத்திருப்பவர்களி¢ல் சனி பகவான் ஈஸ்வரன் பட்டம் பெற்றவன், உனது புகழை அவன் பார்க்க வேண்டும், அவனைத் திருப்பிப் போடு என்கிறார் நாரதர்.

சனி பகவானைத் திருப்பிப் போடுகிறான் இராவணன்.  இராவணனின் முகத்தை உற்றுக் கவனிக்கிறார் சனி. 

அப்போது அண்ணா! என்று   ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கிறான் இரவாணன். மூக்கறுபட்டு இரத்தம் வழிய சூர்ப்பனகை வந்து கொண்டிருக்கிறாள்.

சனியின் பார்வை சரியாக வேலைச் செய்கிறது என்று எண்ணிக்கொள்கிறார் நாரதர்.

இப்படி வலிமைமிக்க இராவணனின் அழிவிற்கு காரணமாகிறார் சனிபகவான்.
வேதியா! அரிச்சந்திரன் கதை தெரியுமா உனக்கு ?   காசி நகரத்து அரசனாய் இருந்தவன்.  நேர்மைக்குப் பெயர் போனவன்.   மக்களுக்கு நல்லாட்சி தந்தவன்.  அவன் ஜாதகத்தில் சனியின் பார்வைபடுகிறது.  

விதி மாமுனி விஸ்வாமித்திரர் உருவத்தில் வந்து சேர்கிறது   சொன்ன  சொல் காத்திட வேண்டும்  என்பதற்காக , விஸ்வாமித்திரரிடம் நாடுநகரத்தையும், இழந்து கொடுக்க வேண்டிய பணத்திற்காக , தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனையும் அடிமையாய் விற்று, தானும் ஒரு ஒரு புலையனிடம் வெட்டியானாய் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதல்லாமல். தன்மனைவியையே வெட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.  சொல்லொண்ணா துன்பம் அடைகிறான். அவன் இத்துன்பம் அடைய சனி பகவானே காரணமாகிறார்.

நளன் தமயந்தி கதை தெரியுமா?

நிடத நாட்டு மன்னன் நளன் . அவனிடம்  குடும்பினி தேசத்து அரசிளங்குமரியான தமயந்தியின் அழகினைப் பற்றி ஹம்சப் பறவை சொல்கிறது. அதே ஹமசம் தமயந்தியிடமும் ,உனக்கு ஏற்ற ஆணழகன் நளன்தான் என்று கூறுகிறது.

தமயந்தின் மேல் எமன், சனி போன்ற இந்திரன் , கலிபுருஷன், துவாப்பரன் தெய்வங்களும் ஆசைகொள்கின்றனர். 

ஆனால் நளனும் தமயந்தியும் திருமணம் புரிந்து கொள்கின்றனர்.  நளனைப் பற்ற சரியான சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருக்கிறார் சனி.

ஒரு முறை இறைவழிபாட்டிற்கு சென்ற நளன் தன் குதிகால்கள் சரியாக நனையாமல்  குளித்துவிட்டு ,வழிபாட்டிற்குச் சென்று விடுகிறான். இதுவே சரியான காரணம் என்று  உடனே நளனை பிடித்துக் கொள்கிறார் சனி.

நளனுக்கு கெடுதல்கள் நேருகின்றன. புஷ்கரனுடனான ,சூதாட்டத்தில் தன் இராச்சியத்தை இழந்து தன் மனைவியுடன¢  கானகத்திற்குச் செல்கிறான்.  அங்கே தமயந்தியைப் பிரிகிறான்.  பிறகு அவன் காப்பாற்றிய கார்க்கோடகன் என்ற  அரவமே அவனைத்  தீண்ட  உருவம் கறுமையடைந்து மாறிப்போகிறான். கோசல அரசன் ரிதுபாலன் என்பவனிம் சமையற்காரனாக பணிபுரிகிறான்.  

இறுதியில் தமயந்தியுடன் இணைந்தாலும், நேர்மையான அரசன் துன்புறுவதற்கு சனிபகவான் காரணமாக இருக்கிறார்.

சனி ஒரு முறை சிவபெருமானையே  பீடிப்பதற்காக செல்லும் போது அவர் ஒரு குளத்தின் தாமரைத் தண்டில் மறைந்து கொள்ள நேரிடுகிறது. அதே போல் திருமாலும் சனிக்கு பயந்து மறைந்து கொள்கிறார். 

குழந்தையாய் இருந்த காலத்தில் சனியால் அவதிப்பட்டார் விநாயகர். ஆனால்  அதன்பின் விநாயகரைப் பிடிக்க முடியவில்லை. அதே போல் ஆஞ்சநேயரையும் சனியால் பிடிக்க முடியவில்லை என்று கதைகள் கூறுகின்றன.  

‘வேதியா!  சூரியனின் குமாரனும், நவக்கிரகங்களில் ஒருவனாகவும் விளங்குகின்ற சனிபகவான் ஏனிப்படி அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார்.  சனி பகவான் நல்லவரா கெட்டவரா?   இந்தக் கேள்விக்குறிய பதில் உனக்குத் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனமாக இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்’, என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  

ஒரு மனிதனின் இப்பிறவியை நிர்ணயம் செய்வது சென்ற பிறப்பில் அவன் செய்த நல்வினையும் தீவினையும் என்கிறது இந்து மதம்.

சென்ற பிறவியின் வினைகளின்படி இப்பிறவியில் அவன் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப , அமைந்திருக்கும் கிரக நிலையில், அந்த நேரத்தில், அதற்கேற்ற குடும்பப் பின்னணியில்  பிறவி யெடுக்கிறது   உயிர்.   

மனிதப் பிறவி மட்டுமன்றி கீழான பிறவியும் எடுக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களை கிரகங்களோ, ஏனையவரோ முடிவு செய்வதில்லை . அவனே முடிவு செய்து கொள்கிறான். 

தீதும் நன்றும் பிறர் தர வாரா’  என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

கிரகங்கள் எப்போதும் அதற்குடைய இயற்கைத் தன்மையில் இருக்கின்றன. நம்முடைய நேரப்படியே பலன்கள்  நடைபெறுகின்றன.

கடலோரத்தில் பிறந்தால் மீன்பிடிப்போம், வனத்தில் பிறந்தால் வேட்டையாடுவோம்,  சமவெளியில் பிறந்தால் விவசாயம் செய்வோம், பாலைவனத்தில் பிறந்தால் ஒட்டகம் மேய்ப்போம். நிலங்கள் அதன் இயற்கைத் தன்மையுடன்  எப்போதும் இருக்கின்றன. நாம் எங்கே பிறக்கிறோமோ அதன்படி நம் தொழில் அமைவதைப் போல     நமது வினைகளை அனுபவிக்கும் சூழநிலைக்கேற்பவே நம்  பிறவி அமைகிறது.   

 நம் பிறந்த நேரத்தில்  நிலவுகின்ற கிரகங்களின்   அமைப்புப்படி , பலன்கள்  விளைகிறது. 

கஜமுகாசுரன் என்ற அசுரன் தவமிருந்து, தான் மனிதர்களாலும், தெய்வங்களாலும், விலங்குகளாலும், கொல்லப்படக்கூடாது என்றும், எந்த ஆயுதங்களும் தன் உயிரை பறிக்கக்கூடாது  என்று இறைவனிடம் வரம் வாங்குகிறான்.  

எனவே அவனை அழிக்க ஒரு படைப்பு தேவைப்பட்டது. அதற்காக அவதரத்தவர் விநாயகர்.  யானைமுகமுடைய விநாயகர் , தன் தந்தததை உடைத்து கஜமுகாசுரனை அழிக்கிறார்.

எனவே எனவே விநாயகருக்கு  வேழ முகம் அமைவதற்கு காரணமாகி,  கஜமுகாசுரனின் அழிவிற்கு முக்கிய காரணகர்த்தா ஆகிறார் சனி பகவான் என்பது நமக்கு விளங்குகிறது.  இதில் சனி மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் நல்லதையே செய்துள்ளார் என்பது தெரிகிறது.

அரிச்சந்திரனின் விதிப்படி அரிச்சந்திரனின் குடும்பத்திற்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் ,விளைவு அவர்களுக்கு நன்மையாகவே முடிகிறது.  அரிச்சந்திரனின் புகழ் காலங்கள் கடந்தும் பேசப்படுவதற்கும்  அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களும் ,உறுதியான மன நிலை¬யும் காரணமாகும் , இதன் பிறகு இழந்த நாடு நகரத்தையும்  சனி பகவானின் அருளால் பெற்று மகிழ்கிறார்.

நளன் தமயந்தியின் பிறப்புக்கும் அவர்களின் முன் ஜென்மமே காரணமாகும்.  முற்பிறவியில் காட்டுவாசிகளின் தலைவனாக வாழ்ந்த நளனும், அவன் மனைவியும் வழிதவறிவந்த ஒரு சிவனடியாரின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்தவர்களாவர்.

அதனாலேயே  அரசகுடுமபத்தில் பிறக்க நேர்ந்தது. இருப்பினும் அவர்களின் ஊழ்வினையின் காரணமாய்  சனி பகவானின் பார்வையில்  படநேர்ந்தது. இருப்பினும் சனி அவர்களுக்கு நல்லதையே செய்தார் என்பது  முடிவு சுபமாய¢ அமைவதி¤லிருந்து புரிகிறது. பரத்வாஜரின்  அருளாசிபடி, நளன் சனி பகவானுக்கு திருநள்ளாறில் ஒரு குளம் வெட்டி வழிபட்டு  இழந்த செல்வங்களையெல்லாம் பெற்று மகிழ்ந்தார் என்று  புராணக்கதையொன்று  கூறுகிறது.
 சனி பகவான்  12 ராசிகளையும் சுற்றிவர  முப்பது ஆண்டுகள் ஆகிறது.  எனவே  மனிதனுடைய வாழ்நாள் காலத்தில்  சனிபகவானுடைய பார்வையிலிருந்து  யாரும்   தப்ப முடியாது என்பது மட்டும் உண்மை. ஆனாலும் அவரை வணங்கி வழிபடும் போது   அவர் மனமிறங்கி தன் பார்வையை தணித்துக் கொள்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

  தனக்கு உண்டான கடமையைச் செய்யும் ஒருவரை அந்தக் கடமையின் தன்மை எதுவாகயிருந்தாலும்,   சாஸ்திரங்கள் குறை கூறுவதில்லை.

இந்தக் கருத்தையே  “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”  என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் வலியுறுத்துகிறார்.

வாழ்க்கை இன்பமாகவே அமைந்து விட்டால் ஒரு மனிதன் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லை.  அவன் ஆன்மா தெளிவடைவதுமில்லை. இன்ப துன்பத்தை அனுபவித்து, அதிலிருந்து  விடுபடும்போதே , இந்த வாழ்க்கையைப் பற்றிய  தெளிவான சிந்தனை ஒரு மனிதனுக்கு உண்டாகிறது. அவன் மனம் பக்குவமடைகிறது. 

‘எனவே வேதாளமே!

மனித மனம் பக்குவப்பட்டு, பரம்பொருளை நெருங்க காரணமாய் இருக்கும் சனீஸ்வரன் நல்லவரே! என்பதே உன் கேள்விக்கான என் பதிலாகும்.  

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.
   

No comments:

Post a Comment