“மரணம் என்பது நிச்சயமான ஒன்று, அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும். உயிருக்கு பயந்தவன் நானில்லை..
ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.. 99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன், உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம் என கௌரவமாக வாழ்ந்தவன்..
என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் விடக்கூடாது. அதற்காகத்தான் பயப்படுகிறேன்.. இந்த பீமன் என் தொடையை கதையால் அடித்து நொறுக்கி ரத்தத்தை குடிப்பதாக சபதம் செய்திருக்கிறான்.
பாஞ்சாலியோ.. என் ரத்தத்தினால்தான் தன் கூந்தலை முடிப்பாளாம்.. என்ன ஒரு அவமானம்..
இவ்வளவு வீராதி வீரர்கள் இருந்தும்.. தம்பிகள் இருந்தும்.. வீரமிக்க பாட்டனார், ஆசாரியர் அனைவரும் இருந்தும்.. இத்தனைக்கும் மேலாக வில் வித்தையில் ராமனுக்கு நிகரான வீரன், என் நண்பன் கர்ணன் இருந்தும் இந்தப் போரில் தோற்று விட்டேனே.. என்ன காரணம்?
என் வம்சம் முழுதும் என்னுடன் முடிந்து விடுமோ? என் தாய் தந்தையர் இருவரும் இருக்கிறார்கள்.. அவர்களுக்குப் பின்?..
இறைவன் என்னை முற்றிலுமாய் கைவிட்டு விட்டான் என்றே நினைக்கிறேன்.. ஒரு அரசனாக எனக்கு சரி என்று பட்டதைத் தான் செய்து வந்தேன்.. ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்..
இந்தக் கண்ணன் உட்பட.. அவர்களின் மேல் எந்தத் தவறும் இல்லையாம்.. ஒருக்கால் உண்மை அதுதானோ? என் மேல்தான் தவறோ?
பாண்டவர்களிடம் கொஞ்சம் இரக்கத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? தவறு செய்து விட்டேனோ? என்ன நினைத்து என்ன செய்வது? எல்லோரையும் இழந்து விட்டேன்.. இனி போய் என் ஒரு உயிருக்காக யாருடைய காலிலும் மண்டியிட மாட்டேன்.
இதுதான் விதி என்றால் அது அப்படியே நடந்து விட்டுப் போகட்டும்.. போராடிச் சாகிறேன்.. தொடையை நொறுக்கினால் என்ன? சிரசையே சிதைத்தால்தான் என்ன? உறவுகளை பலி கொடுத்த பதினேழு நாட்கள் போர் நடந்து விட்டது.. இன்னும் ஓரிருநாட்களில் என் தலை தரையில் சாய்ந்து விட்டால் பாண்டவர்களின் கொடி உயரும்.. உயர்ந்து விட்டுப் போகட்டும்..”.
துரியோதணனுக்கு உறக்கம் வரவில்லை.. எப்படி வரும்? வந்தால்தான் அது அதிசயம்.. பல சிந்தனைகள் அவன் மனதில் அலைபாய பாசறையில் உலவிக் கொண்டிருந்தான்.
பாசறை வாயிலில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.. யாரது இந்த இரவு நேரத்தில்? அதுவும் பெண் போலத் தெரிகிறது.. யாராக இருக்கும்..
‘யார் அது?’ துரியோதணன் குரலைச் சற்று உயர்த்தினான்.
பதில் பேசாமல் அந்த பெண்ணுருவம் உள்ளே நுழைந்தது..
‘அம்மா.. நீங்களா? இந்த நேரத்தில்.. நாய் நரிகளும் , கழுதைப் புலிகளும் நடமாடும் இந்த யுத்த பூமியில்.. நீங்கள் ஏனம்மா வந்தீர்கள்?’ துரியோதணின் குரல் நெகிழ்ந்தது . கண்களில் நீர் துளிர்த்தது.
‘மகனே துரியோதணா!’ காந்தாரி துரியோதணனை ஆசையுடன் அணைத்துக் கொண்டு அவனது தலையை வருடினாள்.
‘நீ இங்கே மனம் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருக்க.. என்னால் எப்படியப்பா நிம்மதியாக இருக்க முடியும்? உன்னை சந்தித்து பேசி விட வேண்டும் என்று இதயத்தில் ஓர் உந்துதல்.. அதனால் ஓடோடி வந்தேன்..’
‘அம்மா! இனிமேல் எங்கே என் குரலைக் கேட்க முடியும் என்று வருந்துகிறீர்களா? 99 பிள்ளைகளை பறிகொடுத்து விட்டீர்கள்? நான் ஒருவன் போனால் என்ன இருந்தால் என்ன? ‘
‘துரியோதணா! கௌரவக் குலச் செல்வமே! எங்களுக்கு கொள்ளிப்போட நீ ஒருவன் இருக்கிறாய் என்று நம்பிக்கையில்தான் இந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேனப்பா.. நீ இப்படியெல்லாம் பேசாதே.. எனக்கு தாங்கவில்லை..’
‘அம்மா! நாளை என் இறுதி நாள் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறதம்மா.. வீரனுக்கு நித்தம் மரணம் தானம்மா.. மரணத்தின் எதிர் நிற்க நான் பயப்படவில்லை.. வயதான காலத்தில் பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூடச் செய்யாமல் உங்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டுச் செல்கிறேனே என்பதுதான் என் மன வேதனைக்குக் காரணம்.. உறக்கம் தொலைந்ததற்கு காரணம். வேறொன்றும் இல்லையம்மா..’
‘மகனே சுவேதனா! நீ எங்களுக்கு வேண்டும்.. நான் சொல்வதை தயவு செய்து கேள்.. என் வேண்டுகோளை மறுக்காதே.. எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்குமானால் எந்த அஸ்திரத்தினாலும் உன்னை வெல்ல முடியாது. மரணமும் உன்னை நெருங்காது.. நான் சொன்னபடி செய்வாயா மகனே? ‘
‘அம்மா.. நான் உயிர்வாழ்வது உங்களுக்கு முக்கியம் என்றால் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.. ஆனால் அதற்காக யார் காலிலும் விழச்சொல்லாதீர்கள் உங்கள் மகன் வீரத்தோடும் மானத்தோடும் வாழ்ந்தான்.. மறைந்தான் என்பதைத் தவிர வேறொரு அவச் சொல்லை எனக்குத் தேடித் தந்துவிடாதீர்கள் அம்மா!’
‘மகனே! நீ யார் காலிலும் விழ வேண்டாம்.. இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு.. குழந்தையாய் எப்படி என் கையில் தவழ்ந்தாயோ.. அந்த நிலையில் உடலில் ஓராடையும் இன்றி நீ வா..
இத்தனைக் காலம் என் கணவரைப்போலவே நானும் வெளி உலகத்தை பார்க்கக்கூடாது என்று என் கண்களைக் கட்டி விரதமிருக்கின்றோனோ.. அந்த கட்டுகளை களைந்து, என் இருவிழிகளாலும் உன்னை பார்க்க வேண்டும்..
அப்படி என் கண்களின் வழியே நான் உன்னைப் பார்த்து , நீ மரணமின்றி இன்னும் நெடுநாள் வாழ வேண்டும் என்று ஆசிர்வாதிக்கிறேன்.. அதன் பின் உன்னை மரணம் நெருங்காது..’
‘அம்மா! என்ன இது?...’
‘மறுக்காதே மகனே! நான் உன் தாயடா.. என் பேச்சைக் கேள்..’
தாயின் பேச்சைத் தட்ட மனமின்றி துரியோதணன் பாசறையை விட்டு வெளியேறி தடாகத்தை நோக்கி நடந்தான்.
அதே சமயத்தில் இந்த உரையாடல் , பாண்டவர்களின் பாசறையில் இருந்த சர்வ வியாபியான கண்ணனின் மனதில் கேட்டது.
காந்தாரியின் பதிவிராதா தன்மையையும் அவளது கற்பின் ஆற்றலையும் கண்ணன் அறிவான்.. அவள் கூறியது மட்டும் நடந்து விட்டால் துரியோதணனை வெல்ல முடியாது என்று கவலைப்பட்டான்.. என் சக்திகளும் காந்தாரியின் கற்பின் சக்தி முன் பலிக்காது.. என்ன செய்யலாம்..யோசித்தான்.
திரௌபதை அவிழ்ந்த கூந்தலுடன் செய்த சபதமும் அவனது மனதில் தோன்றியது..
பாசறையை விட்டு கண்ணன் வெளியேறினான்.. தடாகத்தின். அருகில் உள்ள சோலையில் நின்று கொண்டான்.
துரியோதணன் தடாகத்தில் மூழ்கி குளித்தான்.. தன் உடைகளை அங்கேயே களைந்து ஓர் ஓரத்தில் போட்டு விட்டு , உடைகளற்ற உடலில் நீர்த் துளிகள் வழிந்தோட கரையேறி பாசறையை நோக்கி¢ நடந்தான்..
“துரியோதணா! என்ன இது கோலம்? நீயா இப்படி? எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன் தானே நீ.. இந்த வானமும் கிரகங்களும் நட்சத்திரங்களும், இரவுத் தேவதைகளும் பார்க்க நிர்வாணமாய் வரலாமா? எங்கே உன் உடைகள்? இதோ என்னிடம் புதிய உடைகள் இருக்கிறது அணிந்து கொள்.. “ என்றபடியே கண்ணன் துரியோதணனின் முன்னே வந்து கொண்டிருந்தான்.
‘கண்ணா! வழி விட்டு விலகி நில்.. உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை.. நான் என் தாயைச் சந்திக்க வேண்டும்..’
“என்ன இது அநியாயம்.. துரியோதணா.. நீ என்ன சின்னக் குழந்தையா? இல்லைச் சிறுவனா? உடையின்றி, பிறந்த மேனியுடன் தாயின் முன் செல்வதற்கு உனக்கே அசிங்கமாய் தெரியவில்லையா?
என்னதான் உன் தாய் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தாலும்.. அவள் முன் ஒரு வயது வந்த ஆண்மகன் , அவன் மகனாகவே இருந்தாலும் இப்படி நிற்பது மிகப்பெரிய பாதகமானச் செயல் என்பது உனக்குத் தெரியாதா?
எங்கேயாவது இப்படி நடந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறாயா? சாஸ்திரங்களை படித்தவன்தானே நீ? எதற்கு இந்த விபரீத புத்தி.?” யாராவது இதை அறிந்தால் அவர்கள் உன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாளை இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன பேசும்?
கண்ணனின் பேச்சால் துரியோதணன் குழம்பிப் போனான்.
‘கண்ணா.. என் தாயின் கட்டளைப் படியே நான் செல்கிறேன்.. எனது நன்மைக்காகவே இதைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்..’
‘எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. நாளை உன் செயல் எப்படிப் பேசப்படும் என்று எண்ணிப் பார்த்தாயா?’
‘கண்ணா! இப்போது நான் என்னதான் செய்யட்டும்?’
‘நீ உடைகள் அணியாமல் இந்த வாழை மரத்தின் மட்டைகளை உன் இடுப்பில் அணிந்து கொண்டு செல்.. அது கூட ஒரு விதத்தில் ஏற்புடையதுதான்.. சாஸ்திரக் குற்றமும் இல்லை.. உன் தாயின் கட்டளையையும் நீ நிறைவேற்றியது போல் ஆகும்..’
‘சரி கண்ணா.. எனக்கும் அதுதான் சரியெனப்படுகிறது’.. வாழை இலை ஒன்றை எடுத்து தன் இடுப்பில் கட்டிக் கொண்டான் துரியோதணன்.
வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டான் கண்ணன்.
வந்து விட்டேன் அம்மா! பாசறைக்கு வந்து தாயின் முன் நின்றான் துரியோதணன்.
காந்தாரி இறைவனை வேண்டினாள்.. ‘நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் என் மகனை நான் பார்த்த பின், என் பார்வை பட்ட அவன் உடலிலிருந்து உயிரை வலுக்கட்டாயமாக எவராலும் அழிக்க இயலாமல் போகவேண்டும்..
இதோ இத்தனைக் காலம் நான் கொண்டிருந்த விரதத்தையும் மீறி இப்போது என் கண்களின் கட்டுகளை அவிழ்க்கிறேன்’.. காந்தாரி தன் கட்டுக்களை அவிழ்த்தாள்.
எதிரில் நின்ற மகன் துரியோதணனை வாஞ்சையுடன் பார்த்தாள்.. ‘இவன் பிறந்ததிலிருந்து நான் இவனைப் பார்க்க வில்லை.. இதோ என் முன்னால் என் மூத்தச் செல்வன்.. எவ்வளவு கம்பீரத்துடன் அவன் முகம் காட்சியளிக்கிறது..
கண்களில் மட்டுமே மெல்லிய சோகம் படர்ந்திருக்கிறது.. திரண்ட புஜங்கள் அவனது வீரத்தைப் பறைசாற்றுகிறது.. அவன் என்னை கும்பிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் உறுதியான கைகள் எவராலும் தோற்கடிக்கவே முடியாத மாவீரன் என்றல்லவாச் சொல்கிறது..
எப்படி என் மகனை தோல்வி நெருங்க முடியும்.. என்னால் நம்ப முடியவில்லையே.. அய்யோ! என்ன இது, இவன் இடுப்புக் கீழ் வாழை இலையை கட்டிக¢கொண்டிருக்கிறானே.. இடுப்புக்கு கீழ் இவன் தாக்கப்பட்டால் இவன் உயிர் போய்விடுமே.. கடவுளே! நான் என்ன செய்வேன்’.. காந்தாரி வருத்தத்தினால் கண்ணீர் வடித்தாள். கண்களைக் கட்டிக் கொண்டு பாசறையை விட்டு வெளியேறினாள்..
விடிந்தது.. போர் தொடங்கி பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதணனுக்கும் கடும் கதையுத்தம். துரியோதணனை துரத்தி துரத்தி அடித்தான் பீமன்.. துரியோதணன் களைத்துப் போனாலும் , சண்டையைத் தொடர்ந்தான்.. பீமனை அடிக்க, தன் வலுவனைத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு ஆக்ரோஷத்தோடு கத்தியவாறு கதையை ஓங்கினான்.
கண்ணன் பீமனுக்கு சைகைக் காட்டினான்.
ஓங்கிய கதை கீழே விழுவதற்குள் பீமனின் கதை துரியோதணனின் இடுப்பிற்கு கீழ் வலுவாய் தாக்கியது. துரியோதணனின் தொடை எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்டது.
* *
எங்கு தர்மம் இருக்கிறதோ.. அங்கே தான் ஜெயம் உண்டாகும். இறைவனும் தர்மத்தின் பக்கமே இருப்பான். துரியோதணனிடம் சிறந்த பண்புகள் இருந்தாலும், அவன் பாதை தர்மத்திற்கு விரோதமாகவே இருந்தது.
வீரத்தின் மூலம் அல்லாமல் வஞ்சக சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களின் நாட்டினை பறித்துக் கொண்டு, பாண்டவர்களின் உடைகளை களைந்து சாதாரண உடை கொடுத்து அவமானப்படுத்தி, சகோதரர்களின் மனைவி என்றும் பாராமல், பெண் என்ற இரக்கமும் கொள்ளாமல் திரௌபதியை சபையோர் முன் நிறுத்தி , மானப்பங்கப் படுத்தி, பாண்டவர்களை அழிக்க தர்மத்திற்கு முரணாகச் செயல்பட்டான்.
பாண்டவர்களோ.. கொடுத்த வாக்குபடி காடுகளில் வாழ்ந்து.. நியாயமாக தங்களுக்கு சேர வேண்டிய நாட்டினை கேட்டார்கள். அவர்களுக்காக கண்ணனே தூது சென்றான். தன்னிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் , படை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தினால் ஐந்தடி நிலம் கூட கொடுக்க மறுத்து விட்டான் துரியோதணன். பாசமும் இல்லை.. இரக்கமும் இல்லை.
தர்மம் ஜெயிக்க வேண்டும். கற்புக்கரசியான திரௌபதியின் சபதம் பலிக்க வேண்டும் என்பது தானே நியாயம். கண்ணன் நியாயத்தின் பக்கமே செயல்பட்டான்.
அதே சமயம் காந்தாரியின் பதிவிராதா தன்மையின் சக்தியையும், அவள் வாக்கும் பலிதம் ஆகும் என்பது தெரிந்து , அது நடக்காமலிருக்க முயற்சியை மேற்கொண்டான்.
தான் தாயின் கட்டளையை முழுமையாய் நிறைவேற்ற முடியாமல் போனான் துரியோதணன்.
சாஸ்திரம் கூறும் ஒழுக்க நெறியும் காப்பாற்றப்பட்டது. தர்மமும் ஜெயித்தது.
No comments:
Post a Comment