உச்சமான ஆனந்தம் நமக்குள் இருக்கிறது.
மனிதன் இதை உணர்வதில்லை. மாறாக வெளி உலகில் தேடி அலைகிறான். இன்பம் எங்கே எதிலே என்று நிலையில்லாத இன்பத்தைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைகிறான்.
இன்பம் என்பது வெளியில் இல்லை. தடையற்ற இன்பம், துன்பத்தின் இடையீடு இல்லாத இன்பம் நம் ஆன்மாவில் இருக்கிறது என்ற உண்மை நமக்குத் தெரிவதில்லை.
நஷ்டத்தை சந்திக்கும் ஒரு வணிகன் , ஏன் அடிக்கடி நஷ்டம் என்ற காரணத்தை தேடி ஆராய்ந்து, லாபத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளைத் தேடுகிறான்.
அதுபோல உலகியல் நாட்டங்களிலும், தேட்டங்களிலும் நிலையான இன்பம் இல்லை. ஒரு கட்டத்தில் நிம்மதி தொலைந்து போய்விடுகிறது என்பதை உணரும் மனிதன், நிலையான இன்பத்தை பெற வழி என்ன என்பதைத் தேட வேண்டும்.
ஆன்மிகம்தான் அதற்கான வழிமுறை என்பதை உணர்ந்து கொண்டுத் தேட வேண்டும். ஆன்மிகத்தில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.
ஆசைக்கு அடிமையாகிவிடாமல், திட மனதுடன் ஆன்மிக முன்னேற்றத்திற்கான வழியைத் தேட வேண்டும். இல்லையெனில் அல்லல் பட வேண்டியதுதான். பிறவித் தளையில் அகப்பட்டுக் கொண்டு இறந்தும் பிறந்தும் அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
நீர்க்குமிழி போன்று நிலையற்றது வாழ்க்கை .
அழுது கொண்டு பாலர் பள்ளி சென்றதும் . ஆனந்தமாய் கல்லூரி சென்றதும், காதலியுடன் கதைத்ததும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொஞ்சியதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து ஆனந்தப்பட்டதும், நடைதளர்ந்து கட்டிலில் உட்கார்ந்து காலனை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் நினைத்துப் பார்த்தால் - காலக்கடலில் ஒரு சொட்டுக¢கூட வராது நம் மொத்த வாழ்க்கை.
வழிதவறி வந்து சேர்ந்து விட்டோம் என்று வயதான பின்னால் வருத்தப்படுவதை விட, இளவயதில் ஆன்மிகத்தினை வழித்துணையாக கொள்ள வேண்டும்.
ஆத்மாவின் ஆனந்தத்தை உணர்ந்து அனுபவிப்பதற்குதான் அரிதான மானுட பிறவி அளிக்கப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையைப் பற்றிய நோக்கும் வாழ்வின் போக்கும் ஆன்மிக வழியில் அமையுமானால் அடைய வேண்டிய இலக்கை எளிதாக அடைந்து விடலாம் என்றுதான் உபநிடதங்கள் உரைக்கின்றன.
நான் ஆன்மா. தூய ஆன்மா. நான் உடம்பு அல்ல. நான் ஆன்மிக மயமானவன் என்று மனத்துக்கு ஓயாமல் உபதேசித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனாலும்..
உடல் நலம் வேண்டும் என்னும் பிரார்த்தனையோடு தொடங்குகிறது கதோபநிஷத். ஏன் அப்படி?
உபநிடதங்களின் ஒப்பற்ற உள்ளீடு எல்லாவற்றுக்கும் மேலான எல்லையற்ற ஆன்மாவைப் பற்றியது என்றாலும் உடல் நலம் காப்பது பற்றிய பிரார்த்தனையோடு தொடங்குகிறதே கதோப உபநிஷத்.
ஏன் அப்படி?
உடம்பு என்னும் கருவியைக் கொண்டுதான் உறுபொருளான தெய்வீகத்தை உணர முடியும். எனவே உடம்பினை ஓம்புதல் அவசியம். அதனால் தான் உடல் நலம் வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தொடங்குகிறது கதோபநிஷத்.
உடலைப் பேண வேண்டும். உடலைக் கொண்டே முயன்று , “நான் உடல் அல்ல” என்று உணர வேண்டும். தன் உடலுக்குள்ளே ‘தான்’ இருப்பதை உணர வேண்டும். அப்படித் தன்னை உணர்ந்தால், பேரானந்தத்தை உணரலாம்.
ப. முத்துக் குமாரசுவாமி
No comments:
Post a Comment