ads

Sunday, 29 December 2013

நவராத்திரி


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் அருள்புரியும் சக்தியின் அம்சங்களை வழிபாடு செய்யும் ஒன்பது இரவுகளே நவராத்திரிகள் எனப்படுகின்றன. 

ஒன்பது இரவுகள் பத்து பகல்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி எனப்படுகிறது.

சக்தியின் அம்சங்களான துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று மூப்பெரும் தேவியரை இத்தினங்களில் வழிபாடு செய்து வணங்குகிறார்கள்.  

வட இந்தியாவில் இவ்விழா பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், பஞ்சாபின் வடபகுதி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்த சக்தி  வழிபாட்டினை மிகவிசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

வருடத்தில் நான்கு முறைகள் இந்த நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை சாரதா நவராத்திரி,  வசந்த நவராத்திரி,  ஆஷாட நவராத்திரி அல்லது வராஹி நவராத்திரி,   பௌஷநவராத்திரி அல்லது சியாமளா நவராத்திரி  எனப்படுகின்றன.   

இவற்றில் வசந்த நவராத்திரியும், சாரதாநவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பருவநிலை மாற்றம் பெறும் வசந்த கால ஆரம்பத்திலும், குளிர்கால ஆரம்பத்திலும் இந்த இரு நவராத்திரிகளும் கொண்டாடப்படுகின்றன.

 இந்த சித்திரை  மற்றும் புரட்டாசி மாதங்களை யமனின் கோரப்பற்கள் என்கிறார்கள். ஏனெனில் இந்த பருவ சூழல் மனிதர்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தக் கூடியதாம். 

இதனால்தான் சித்தர்கள் இந்த இரண்டு மாதங்களையும் வழிபாட்டிற்காக ஒதுக்கிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. 

சாரதா நவராத்திரி எனப்படும் நவராத்திரியே பெருவாரியான இந்து பெருமக்களால் கொண்டாடப்படும் மகாநவராத்திரி ஆகும்.

குளிர்காலம் ஆரம்பிக்கும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தமிழுக்கு புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை முடிந்த முதல் தினத்தில் ஆரம்பமாகிறது. 

நவராத்திரியில் ஆண்கள் பங்குபெற்றாலும் பொதுவாக பெண்களாலேயே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இல்லத்தின் சக்திகள் உலகத்தின் சக்தியை வழிபடும்நாட்களே நவராத்திரி தினங்கள். 

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி என்பது வசந்தருது ஆரம்பமாகும் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தமிழுக்கு சித்திரை மாதத்தில்  கொண்டாடப்படுகிறது



இந்த வசந்த நவராத்திரியை ஒட்டி ஒரு கதை சொல்லப்படுகிறது.

முன்னொருகாலத்தில் அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சிசெய்து வந்தான். அவனுக்கு லீலாவதி, மனோரமா என்று இரண்டு மனைவிகள். 

துருவசிந்து ஒரு நாள் வேட்டைக்கு சென்ற சமயத்தில் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்தான். 

 மனோரமாவின் மகனான சுதர்ஷனன் என்ற இளவரசனுக்கு அயோத்தியின் அரசனாக முடிசூட்டும் ஏற்பாடுகள் முறைப்படி  நடந்தன.

ஆனால் துருவசிந்துவின் இன்னொரு மனைவியான லீலாவதியின் தகப்பனும் உஜ்ஜயினியின் அரசனுமான யுதஜித் என்பவன், தன் பேரனும் லீலாவதியின் மகனுமான சத்ருஜித் என்பவனே அயோத்தியின் அரசனாக வேண்டும் என்று விரும்பினான். 

அதற்கான முயற்சியில் இறங்கினான். இதை மனோரமாவின் தகப்பனும் கலிங்கநாட்டு அரசனுமான வீரசேனன் என்பவன் விரும்பவில்லை. 

தங்கள் பேரனை அரசனாக்கும் முயற்சியில் இரண்டு அரசர்களுக்கும் போர் மூண்டது. போரில் வீரசேனன் கொல்லப்பட்டான். 

மனோரமாவும் அவனது  மகன் சுதர்சனனும் உயிர்தப்பி ஓடி காட்டிற்குள் பரத்வாஜ் ரிஷியின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். ரசகுமாரனின் உதவியாளனாகிய ஒரு நபும்ஸகனும் அவர்களுடன்  இணைந்து கொண்டான். 

தன் பேரனை அயோத்தியின் அரசனாக்கிய யுதஜித், சுதர்ஷனனை தேடிக் கொல்லும் நோக்கில் காட்டிற்குள் தன்  வீரர்களை அனுப்பி வைத்தான். 

பரத்வாஜ் ரிஷியின் ஆசிரமத்தில் தாயும் மகனும் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களை கைதிகளாக தன்வீரர்களுடன் அனுப்பி வைக்கும் படி தூது அனுப்பினான்.  அடைக்கலம் புகுந்தவர்களை காப்பது என் கடமை என்று பரத்வாஜ் உறுதியாய் கூறிவிட்டார்.

சீற்றம் கொண்ட யுதஜித்திடம், அவனது மந்திரிகள் ரிஷிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறி அமைதிப்படுத்தி, அவனை உஜ்ஜயினிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரமத்தில் இருக்கும் துறவி ஒருவர் சுதர்ஷனனுடன் வந்த நபும்சகனை சமஸ்கிருத மொழியில் கிலீபா என்று அழைத்தார்.

சுதர்சனனும் அவனை க்லி.. க்லீம் என்று அழைத்தான்.. நாளடைவில் அது க்லீம் என்றாகியது. க்லீம் என்பது சமஸ்கிருதத்தில்  ஆற்றல்மிக்க அன்னையின் பீஜ அட்சரமாகும். 

அந்த வார்த்தை அரசகுமாரனுக்கு ஒருவித அமைதியையும் இன்பத்தையும் தந்ததால் , அவன் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்து தவநிலையை எய்தினான். 

ஜப எண்ணிக்கையின் வீர்யம் அன்னையை  அவன் முன் தோன்றச் செய்தது. சுதர்சனனுக்கு காட்சிதந்த சக்திதேவி அவனுக்கு சக்தி  வாய்ந்த அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கியருளினாள். 

ஒருமுறை பனராஸ் அரசனின் ஒற்றர்கள் பரத்வாஜ் ஆசிரமம் வழியாகச் செல்லும் போது, சுதர்சனனையும் அவன் ஆயுதங்களை கையாளும் திறமையையும் பார்த்து, அவன் தங்கள் அரசனின் மகள் இளவரசி சசிகலாவிற்கு சரியான கணவனாக அமைவான் என்று எண்ணி,  அரசனிடம் கூறினார்கள். 

அரசன் சுதர்சனை முறைப்படி வரவழைத்து தன் மகளை அவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகளைச்  செய்தான்.

இதை அறிந்த யுதஜித் பனராஸ் மீது படையெடுத்து வந்தான். சுதர்சனன் தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த ஆயுதங்களின் துணையோடு யுதஜித்தைத் தோற்கடித்து தன் மாமனாரையும் காப்பாற்றினான். சக்தி தந்த ஆயுதங்கள் யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தொழித்தது.

சுதர்சனன், சசிகலா திருமணம் விமரிசையாக நடந்தது.  அனைவரும் தேவியை , அவரது மந்திரங்களை உச்சரித்து போற்றி வணங்கினர்.   

மனம் மகிழ்ந்த சக்தி, அவர்களின் முன் தோன்றி தன்னை  வருடந்தோறும் இதே  வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள் உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து  நன்மைகள் விளையும் என்று அருளி  மறைந்தாள். 

அதன் பின் சுதர்சனன் தன் மாமனாரிடம் விடைபெற்று தன் மனைவியுடன் பரத்வாஜ் ஆசிரமம் அடைந்தான். அவனை வாழ்த்திய முனிவர் அவனை அயோத்தியின் அரசனாக முடிசூட்டி வைத்தார். 

சுதர்சனன் தன் நாட்டு மக்களோடு வருடந்தோறும்  வசந்த காலத்தில் தேவிக்கு விழா எடுத்து வணங்கி மகிழ்ந்தான். இதுவே வசந்த கால நவராத்திரி ஆயிற்று. 

சுதர்சனனின் வழிதோன்றல்களாகிய இராம லக்ஷ்மணர்கள் சீதையைக் கண்டுபிடித்து மீட்டு வரும் முயற்சியில் வெற்றிபெற  புரட்டாசி மாதத்தில் வரும்  சாரதா நவராத்தியில் தேவியை வணங்கி வேண்டிக்கொண்டனர் என்று  இராமாயணம் கூறுகிறது.

சாரதா நவராத்திரி

உலகெங்கும் வாழும் இந்து பெருமக்கள் அனைவராலும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே இந்த சாரதா நவராத்திரி ஆகும். 

வட இந்தியாவில் மட்டுமன்றி தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு,  கர்நாடகா, ஆந்திரா , கேரளா மாநிலத்திலும் இந்த நவராத்திரிவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இல்லத்தில் கொலுவைத்து , தினசரி   வழிபாடு செய்து பெண்கள் கூட்டமாக இந்த நவராத்திரி வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். அம்மன் கோயில்களிலும் அம்மனை துர்கையாக, லக்ஷ்மியாக, சரஸ்வதியாக அலங்கரித்து,   கொலுப்பொம்மைகள் வைத்து    வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். 

‘ஓர் ஆத்மாவானது, ஓர் அறிவு பெற்ற உயிராய்  பூமியில் தோன்றி,   பிறவிகள் தோறும் தனது நிலையில் உயர்ந்து , ஞானியாய்  மலர்ந்து இறுதியில் இறைவனை அடைகிறது’  என்பதையே தத்துவார்த்தமாக  இந்தக் கொலுப்பொம்மைகள் கூறுகின்றன. 

சக்தியின் ஒன்பது அம்சங்களை ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யவே இந்த ஒன்பது நாட்கள் என்று கூறப்படுகிறது ,  தற்காலத்தில் முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபட்டும், அடுத்து வரும் மூன்று நாட்களில் மகாலக்ஷ்மியையும், அதனடுத்து வரும் மூன்றுநாட்களில் சரஸ்வதியையும் வழிபாடு செய்து, இறுதி நாளில் மகிஷாசுரனை துர்காதேவி அழிக்கும் நிகழ்வோடு இவ்விழா முற்றுபெறுகிறது. 

மகிஷன் என்ற எருமைத் தலை கொண்ட அசுரனை அழிக்க , அனைத்து தெய்வங்களும் ஆயுதங்கள் அளிக்க, அம்பிகையானவள் துர்கை அவதாரம் எடுத்து சிங்கத்தின் மீதேறி, ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிஷனின் தலையை சீவித் தள்ளினாள் என தேவி மகாத்மீயம் கூறுகிறது. 

போரில் துர்கை வெற்றிபெறும் நிகழ்வே விஜயதசமியாக கொண்டாடப்படுக்கிறது. 

பத்தாவது நாளில் கோயில்களில் பெரும்பாலும் சண்டிஹோமம் நடைபெறுகிறது. சண்டி என்பவள் முப்பெரும்தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

பெண்கள் பெரும்பாலும் இந்த பத்துநாட்களும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்கின்றனர்.

மதிவாணன் 


2 comments:

  1. சிறப்பான பகிர்வு...

    வாழ்த்துக்கள்...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. thank you
    Danabalan sir


    and also my Wishes for bright and prosperous new year to you.


    mathivanan

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...