இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள்.
இந்து மதம் புராணங்களாலும், இதிகாசங்களாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஒரு மனிதன், தன் இறைவனை எந்த உருவத்தில் தரிசிக்க, வணங்க விரும்புகிறானோ அந்த உருவத்தை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் இந்த உருவங்களுக்கு, வடிவங்களுக்கு தனித்தனியான தத்துவங்களும், உருவாக்கங்களும், நம்பிக்கைகளும், வணங்குவதற்குரிய மரியாதையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை சீரழிக்கும் வேலையை சினிமா செய்து வருகிறது.
இந்துக்கள் தாங்கள் வணங்கும் தெய்வ உருவங்கள் மீது எல்லாவற்றையும் தாண்டிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் வழியே தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரே விஷயம், நம்பிக்கை. அந்த நம்பிக்கை வழியிலான வாழ்க்கை.
இந்துக்கள் தங்கள் தெய்வங்கள் பற்றி புராணங்கள், இதிகாசங்கள், கதைகள் வழியாக படித்து தெரிந்த கொண்டார்கள். படிக்க முடியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தெருக்கூத்து, நாடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்டார்கள். இதன் அடுத்த கட்டமாக வந்த சினிமாவில் அதை நேரடியாகவே பார்த்தார்கள். கருப்பு வெள்ளை காலம் தொட்டு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் காலம் வரை சினிமா இந்துக்களின் தெய்வங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தெம்பூட்டுவதாக, உறுதிப்படுத்துவதாக இருந்தது.
ஆனால் எமனுக்கு எமன், அதிசய பிறவி என இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பை கிண்டல் செய்ய ஆரம்பித்ததிலிருந்து அதன் போக்கு மாற ஆரம்பித்தது. அது சமீபத்தில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் வரை தொடர்கிறது.
இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.
ஒரு மதத்தின் எதிர்காலம் அதன் புனிதம் காப்பதில், நம்பிக்கை காப்பதில் இருக்கிறது
No comments:
Post a Comment