ads
Monday, 22 April 2013
இந்தியாவின் தலைநகரம் ஸாரி.... தலைக்குனிவு நகரம் டெல்லி!!
மாதத்தில் பாதி நாளாவது அத்துமீறல் தொடர்பான செய்திகள் வராமல் இல்லை.
ஒவ்வொரு விடியலிலும் இன்று யார்? எத்தனை பேர்? என்ன வயதுடையவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ என்ற பயத்துடனேயே. அன்றைய செய்தித்தாள்களை, செய்தி அலைவரிசைகளை, இணையதளங்களை பார்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
உங்களுக்கு தெரியுமா? கடந்த ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை மட்டும் 393 பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது டெல்லியில் மட்டும்.
ஆணும் பெண்ணும் பரிபூரணமான சுதந்திரமாக வாழும் அமெரிக்காவில், ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லாத இங்கிலாந்தில், குறுகிய காலத்தில் குடும்ப வாழ்க்கையை துறந்து விடும் ஜெர்மனியில், வாழ்க்கை வாழ்வதற்கே என்று என்னும் இத்தாலியில் கூட இந்த அளவு அபாயகரமான புள்ளிவிவரங்கள் இல்லை.
பெண்ணை மதிக்கும் ஒரு தேசத்தில், தாயாக போற்றும் இந்தியாவில், பருவம் எய்யாத சிறுமிகள் கூட பாதிக்கப்படுவதை காணும் பொது அதிர்ச்சி ஒரு புறம், அவமானம் மறுபுறம்தான் ஏற்படுகிறது.
எத்தனை கொடூரமான, வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது.
முதலில் செய்திகள் வருகிறது. ஆவேச அலைகள் எழுகிறது. சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கிறது, போராட்டம் நடத்துகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.
இதெல்லாம் நடந்து முடிவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறிவிடுகிறது.
மீண்டும் பழைய நிலை. ஆவேச குரல், கண்டனம், போராட்டம், கைது.
ஏன்... ஏன் இந்த இழிநிலை?
மனிதன் மிருக நிலைக்கு தாழ்ந்து போக என்ன காரணம்?
மாறிவரும் மனித மன கோணல்கள், கலாச்சார சீரழிவுகளுக்கு எப்படி முற்று புள்ளி வைப்பது?
சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும் என்பதுதான் ஏகோபித்த குரலாக இருக்கிறது.
உடனே .... நாகரீக மனித குலத்தின் அடையாளமாக தங்களை உருவகப்படுத்திக் கொள்பவர்கள் கூக்குரல் இடுவார்கள்.
இந்த மனிதநேய புனிதர்கள், மனிதாபிமான காவலர்கள், மனிதனை மனிதன் கொல்லும் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் உத்தமர்கள். தூக்குத் தண்டனையை காட்டுமிராண்டித்தனம் என்பார்கள். அந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்யக்கூடாது என்று கண்டிப்பார்கள்.
எல்லாம் சரி... ஐந்து வயது சிறுமி. நான்கு நாட்களாக ஒரு அறையில் பூட்டி வைத்து பாலுறவு கொண்டிருக்கிறான் ஒருவன்.
பருவம் எய்யாத அந்த பெண்ணுடன் உறவு கொள்ள, மெழுகை உருக்கி ஊற்றி மென்மை படுத்திருக்கிறான் அந்த கொடூரன்.
மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் புத்தர்களே, புனிதர்களே, பதில் சொல்லுங்கள்.
இவனை, இவன் போன்றவர்களை என்ன செய்யலாம்?
சரி ... மரணதண்டனை வேண்டாம்... பொது இடத்தில் வைத்து கல்லால் அடிக்கலாமா?
கழுமரத்தில் ஏற்றி தொங்க விடலாமா?
மாறுகால் மாறுகை வாங்கி ஊனப்படுத்தலாமா?
பாலுறுப்பை நசுக்கி கசையடிக்கலாமா?
துண்டு துண்டாக வெட்டி கூறு போடலாமா?
மன்னர்கள் காலத்து தண்டனை மாதிரி கண்களை குருடாக்கலாமா?
மிருகத்தோலை உப்பு தடவி, உடலோடு வைத்து தைத்து, தனிமை சிறையில் அடைக்கலாமா? சொல்லுங்கள் என்ன தண்டனை கொடுக்கலாம்?
கொல்வது பாவமென்றால் கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைக்கலாமா? இவன்தான் காமகொடூரன், காமுகன் என்று.
என்ன செய்யலாம்? மரணதண்டனை தவறு என்பது ஒரு வாதமாக வைத்துக் கொண்டாலும், எல்லாக் குற்றங்களுக்கும் பொருந்தாதே.
சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை பார்க்கும் போது ஒரு சில வினாடியில் முடிந்து போகும் மரணதண்டனையை விட, வேறு தண்டனை கொடுப்பதே சரி என்று படுகிறது.
விடுதலைபுலிகள் கடுமையான குற்றம் செய்தவர்களை தனிமை சிறையில் அடைப்பர்களாம்.
அங்கே எந்த வெளிச்சமும் இருக்காது. வெளிச்சத்தை பார்க்கவும் முடியாது. அப்படியே இருந்து.... இருந்து அவர்கள் பார்வை திறன் இழந்து போவார்கள். தனிமையில் இருந்து பைத்தியமானவர்கள் கூட உண்டாம்.
அவர்கள் ஒரு வேளை விடுதலை செய்யப்பட்டால், சூரிய வெளிச்சத்தை பார்த்தால், கண்கள் குருடாக போகுமாம். இந்த குற்றவாளிகளுக்கு, இது போன்ற தண்டனைகளை கூட அறிமுகப்படுத்தலாம்.
என்ன செய்ய குற்றத்தின் தன்மை அப்படி.
Sunday, 21 April 2013
திருப்பதி ஏழுமலையான் பரமசிவனே!
ஏடு கொண்டல வாட வெங்கட்ரமணா.... கோவிந்தா... கோவிந்தா ...
கோஷம் விண்ணை பிளக்கிறது.
அந்த அற்புத உருவத்தை கண்ணால் கண்டாலே அடியவரின் துன்பம் யாவும், தூசாய் பறக்கிறது. அனுதினமும் கல்யாண கோலமாய், அந்த சந்நிதானம் அடைய கூட்டம் அலைமோதுகிறது.
உண்மையில் சங்கட ஹரனான வேங்கடரமணன் யார்? பிரம்மனா? சிவனா? திருமாலா?அம்பிகையா? முருகனா?
இந்த கேள்வி இன்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக பலரால் கேட்கப்பட்டு இது என் தெய்வம் என்று அவரவர்களால் கொண்டாடப்படுகிறது.
ஏழுமலையான் வடிவமென்பது எந்த வைணவ ஆகமத்திலும் மகாவிஷ்ணுவை குறித்து விளக்கப்படும் பல்வேறு வடிவங்களிலும் கூறப்படாத தனி வடிவம்.
மேலிரண்டு கைகளில் இயல்பாக சங்கு சக்கரம் காணப்படுவதில்லை.( அவை அலங்காரத்தின் போது போருத்தப்படுபவையே)
அபிஷேக காலங்களில் அணித்து அலங்காரங்களையும் நீக்கிவிட்டு பார்க்கும் போது அவனது பூரண அழகு கொப்பளிக்கும் திருவுருவம் புலப்படும்.
லிங்காரமாக விளங்கும் ஜடாமகுட தலைமுடி.
அழகே உருவான அற்புத திருமுகம். நாமத்தால் மறையாத கருணை பொழியும் கண்கள். மதுரமான அதரம், தோடுடைய நெடிய செவிகள், அலைபுரளும் சடை. நீண்ட நெடிய உருவம். கடி மார்பில் படரும் முப்புரினூல் வைஜயந்தி, கௌஸ்துபம், மார்பில் ஸ்ரீவஸ்தம்.
கைகளில் விளையாடும் நாகாபரன்கள், யோக போக முத்திரை காட்டும் மேலிரண்டு கைகள். கீழ் வலக்கை வராத முத்திரையாக திருவடியை காட்ட, இடக்கை கட்டிய விலம்பிதமாக தொடை மேல் இருக்கிறது.
இப்படி ஒரு ஆஜானுபாஹுவான வடிவத்தின் இடையோ, மிககுறுகி மேல்லிடையாக காட்சி தருகிறது.
சரணடைந்தவரை காக்கும் திருவடிகளோ கம்பீரமான தண்டையும், லாவண்யமான கொலுசும், மெட்டியும் அணிந்து வேங்கடவனின் அழகுருவத்தை தாங்கி நிற்கிறது.
இவன் யார்?
இவன் விஷ்ணு மட்டும்தானா?
இவனை பரமேஸ்வரனாக கொள்ளவும் வலுவான காரணங்கள் இருக்கிறதே.
ஏழுமலையான் பரமசிவனே!
வெங்கடேஸ்வரன்.. வெங்கடேசன் என்ற பெயரே கூறுமே ஈசன், ஈஸ்வரன் என்று. நெடிதுயர்ந்து நிற்கும் வெங்கடேஸ்வரனின் திருவுருவத்தை காண்போம்.
ஈசனுக்கே உரியது பாம்பு. ஏழுமலை தெய்வத்தின் கைகளிலும் கம்பீரமாய் நாகாபாரணம்.
மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் அலைபுரளும் அழகிய அளகபாரம் இருக்க துய்ய செஞ்சடை, சடைமுடி, பிரதான சிவபரம்பொருள் ஏற்றது. திருமலை தெய்வத்தின் சிரத்திலும் நீள் சடையான ஜடா மகுடமே.
அறியாமல் வில்வத்தை பறித்து போட்ட வேடனுக்கு முக்தி கொடுத்தவன் சங்கரன். வில்வம் பரமனுக்கு அவ்வளவு பிரியமானது.
திருமலையில் (திருமாலுக்கு மார்கழி மாதமான ) தனுர் மாத வழிபாட்டில் (துளசியை விட) வில்வ தளம் கொண்டே அர்ச்சனை நடக்கிறதே....
சிவராத்திரி காலத்தில் சேஷ்திர பாலகர்களுக்கு அபிஷேக வழிபாடுகள் இன்னும் நடைபெறத்தான் செய்கிறது.
வேங்கட நாதனை வேதாந்த கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடமென்றே விரகறியாதவர் தாங்களில்
லாருயிர் தாமறியாரே என்கிறார் திருமூலர்.
த்வாதசலிங்க ஸ்தோத்திரம் செய்த ஆதிசங்கரர் ஸ்ரீசைல மல்லிகார்ஜுன சிவனை பாடும்போது ...
ஸ்ரீசைல ச்ருங்கே விவிதப் ரசங்கே சேஷாத்திரி ச்ருங்கேபி சதா வசந்தம்...
(பற்பல மலைத்தொடர்களை கொண்ட ஸ்ரீசைலத்தில் அல்லது சேஷாத்திரி மலையின் உச்சியில் எப்போதும் குடி கொண்டவனே.) என்று சிலேடை போல் பாடுகிறார்.
சிவன் தான் என்று முடிவாக சொல்லிவிடவும் முடியாது. அதேசமயம் அம்பிகையே என்று சொல்லவும் தோன்றுகிறது.
திருமலைவாசன் அம்பிகையே.
கோவிந்தனுக்கு உரிய வாகனம் பெரிய திருவடியான கருடன். திருமலை ஆலையமெங்கும் நாராயணனுக்குரிய கருட சின்னம் காணப்படவில்லையே.
அம்பிக்கைக்குரிய கம்பீரமான சிம்ம வாகனமே எங்கும் வீற்றிருக்குறது.
விக்கிரகத்தை கூர்ந்து பாத்தோமானால் அம்பிக்கைக்கே ( பெண்ணுக்கே) உரிய கொடி இடையே காணப்படும். பின்புறம் நீண்ட தலைமுடியும் பின்னங்கால் வரை தொங்கும் அழகான பின்னலும் கூட உண்டே.
திருவடிகளில் மெட்டி, தண்டை, கொலுசு என்று அவளுக்குரிய அனைத்துமே இருக்கிறது. திருமலை ப்ரம்மோற்சவ விழ நடைபெறுவது அம்பிக்கைக்குரிய சரத் நவராத்திரி காலத்தில் தான் என்பது மற்றோர் சிறப்பு.
கோவிந்த ரூபினி என்று இதைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் சூசனையாக புகழ்கிறதோ?
அபிஷேகத்தின் போது ஸ்ரீ சூக்த பாராயணம் கேட்கிறதே...
வெள்ளிகிழமைகளில் ஏழுமலையானுக்கு அன்பிக்கைக்கே உரிய மஞ்சளால் அல்லவா அபிஷேகம் நடைபெறுகிறது. படவையாலேயே அலங்காரம் வேறு.
காஞ்சி மாமுனிவர் மஹா பெரியவர் ஒரு முறை திருப்பதி விஜயம் செய்த போது,
இங்கே எழுந்தருளி இருக்கும் வெங்கடேச பெருமான் சர்வமும் ஆனவர். எனக்கு அம்பாளாகவே தோன்றுகிறார். புடவை உடுத்தல், வெள்ளிகிழமை திருமஞ்சனம், நவராத்திரி உற்ச்சவம், யாளி பிம்பங்கள் இவையெல்லாம் என் எண்ணத்தை பிரதிபலிக்கின்றன என்றார்.
தன்னுடன் எந்த தெய்வமும் அருகில் இல்லாமல் தனியாக நிற்பதின் காரணம், தானே அனைத்துக்கும் காரணமான பராசக்தியாகவே இருப்பதால் தானோ.
தானே தேவியாக இருக்கும் போது எப்படி மற்றொரு தேவியை உடன் வைத்திருக்க முடியும்.
திருமலையில் நித்யமும் பெருகிவரும் செழிப்புக்கும், மக்கள் கூட்டத்திற்கும், ஏழுமலையான் சாந்தியத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரமே என்று கூறுகிறார்களே....
எழுமளியானுக்கு பாலாஜி என்ற பெயர் இருக்கிறதே. இந்த பெயர் வந்ததே திருமலை தெய்வம் பாலா திரிபுர சுந்தரியாக இருப்பதால் தான் என்று கூறி வணக்கும் பலரும் இருக்கிறார்களே....
அதனால் சந்தேகமேயில்லை.. அம்பிகையே தான்.
ஆனால் அப்படியும் அறுதியிட்டு கூறிவிட முடியாது. வேங்கட மலையில் வாழ்பவன் கந்தனே என்றும் காரணக்களை அடுக்கலாம்.
திருமலை தெய்வம் திருமுருகனே.
வெங்கடாத்திரி மலை சுப்பிரமணிய வாச ஸ்தலமாகவே சிவரகசியம் என்னும் புராதன நூல் போற்றுகிறது.
வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாமல் பழனி, செந்தூர், பரகுன்றம் என்று முருகவேல் ஆலயங்களில் மட்டுமே காணப்படும் முடியிறக்கும் வழிபாடு இங்கு மட்டும்தானே நடைபெறுகிறது.
அருணகிரி பெருமான் வெந்த குரமார குக சேந்த மயூரா வடவேங்கட மாமலையில் உறைவோனே என்கிறார்.
பால தேவராயர் சிவகிரி கையிலை திருப்பதி வேலூர் என்றும்...
பண்டுதான் தங்கியிருந்த வேங்கட மலை என்று கந்தபுராணமும் குறிப்பிடும்.
சுவாமி என்று எல்லா தெய்வங்களையும் பொதுவில் குறிப்பிட்டாலும் சுவாமி என்ற அருட்பதம் முருகனுக்கே உரியது.சுவாமி என்றால் குரமாரசாமியே என்பார் காஞ்சிமுனிவர்.
திருமலை கோவிலின் தீர்த்தத்தின் பெயர் சுவாமி புஷ்கரிணியே தான்.
ஸ்ரீ முத்துசுவாமி தீச்சிதர் தன சுபிரமன்யேன ராக்ஷிதொஹம் என்ற சுருதியில் வெங்கடேஸ்வர நாமருபேன என்றே பாடுகிறார் என்றால் இவன் முருகன் தானே.
அப்படியானால் ஏழுமலை தெய்வம் யார்தான் இவன். நாம் மட்டுமல்ல நீ யாரென்று தெரியவில்லையே .. நீ சிவனா..விஷ்ணுவா..அம்பிகையா.. என்று தியாகராஜா சுவாமிகளே வியந்து கேட்கிறார்.
வைணவத்தின் முடி மன்னர்களான ஆழ்வார்கள் கூட மற்ற எல்லா இடத்திலேயும் திருமாலையே போற்றிய போதும், நாராயணனாக மட்டும் காணவில்லை.
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னானும் தோன்றுமால் சூடும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாக இணைந்து.
என்று ஹரிஹர அபேத மூர்த்தியாகவே கண்டார்கள்.
திருப்பதி வெங்கடேசனுக்கு உரிய சிறப்பான சகஷ்கர நாமமும், அதிசயிக்க வகையில் பாதி நாமங்கள் பரந்தாமனுக்கும் மீதி நாமங்கள் பரமனுக்கும் பொருந்துகின்றன.
திருப்பதி திம்மப்பனிடம் தீராக்காதல் கொண்ட அன்னமையா என்று அழைக்கப்படும் அன்னமாச்சாரியார் இந்த கேள்விக்கெல்லாம் பதிலாக முடிவை காட்டி பாடி விட்டார்.
எந்த மாத்ரமுன எவ்வறு தலசின அந்த மாத்ரமே நீவு என்று...
வைஷணவர்கள் உன்னை அன்புடன் விஷ்ணு என நினைப்பார்கள்.
வேதாந்திகள் உன்னை பரபிரம்மம் என்பார்கள்.
சைவர்களான பக்தர்களுக்கு நீயே சிவபெருமான்.
கபாலிக குலத்திற்கு பைரவனாக இருக்கிறாய்.
சாக்தரோ நீ சக்தியின் வடிவம் என்றே எண்ணுவார்கள்.
அனைத்தும் கடந்த பரம் பொருள்தானே எல்லாமுமாகவும் இருக்க முடியும்.
வி. அரவிந்த ஸுப்பிரமண்யம்
வி. அரவிந்த ஸுப்பிரமண்யம்
கலவர பூமியில் உயிரை துச்சமென நினைத்து!!
புதுமை, வித்தியாசமான முயற்சி, சமுதாயத்திற்கு ஆற்றும் அரும்தொண்டு இவற்றை கணக்கில் கொண்டு விருதுகள் வழங்குவது வழக்கம்.
உலகம் முழுவதும் இது நடைமுறையில் இருக்கிறது. மருத்துவத்தில், விஞ்ஞானத்தில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு, சினிமாவில் ஆஸ்க்கார் விருது தருவது போல், சிறந்த புகைப்படங்களுக்கு புலிட்சர் என்ற விருதுகள் வழங்கப்படுகிறது.
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை படம்பிடித்த அஸோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர்களுக்கு இப்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கலவர பூமியில் உயிரை துச்சமென நினைத்து துணிச்சலுடன் படம் பிடித்திருதாலும், மனித அவலங்களை சொல்கிறது படங்கள்.
Photos: BBC
Friday, 19 April 2013
என்னதான் செய்யும் நாகதோஷம்?
கண்ணுக்கு லச்சனமான பையன். கவர்மெண்ட் வேலை. கைநிறைய சம்பளம். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்.
பெண்ணை கட்டிகொடுத்தால் காலத்திற்கும் கவலை இல்லாம இருக்கலாம்.
இது பெண்ணை பெற்ற பெருமாளின் கணக்கு. ஆனால் ஜோதிட கணக்கு போட்ட ஜோசியர் போட்டார் ஒரு குண்டை.
பொண்ணு ஜாதகம் கிளின். ஆனால் பையன் ஜாதகத்திலே நாகதோஷம் இருக்கு, சரியா வராதுங்களே.
அவ்வளவுதான் .. பெருமாள் ஆசையில் மண்ணை போட்டார் ஜோதிடர். ஜோதிட நம்பிக்கை உள்ள பெருமாளுக்கு, அதை மீறி பொண்ணுக்கு கன்னிகாதானம் செய்ய விருப்பம் இல்லை. விழுந்து விட்டது முற்றுப்புள்ளி.
அதற்கு முன் சிறு விளக்கம். பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.
அதோடு இவர்கள் ஓன்று எழில் அல்லது இரண்டு எட்டில் இருந்தால் .கடும் பாதிப்புக்களை தருவதாகவும், நான்கில், பனிரெண்டில் இருந்தால் பாதியளவு பாதிப்பை தருவதாகவும் ஜோதிடம் சொல்கிறது.
அதற்கான விளக்கம் இதுதான்.
தாமத திருமணம், தாம்பத்திய தகராறு, கணவன் மனைவி அன்னியோனியம் குறைவு, பிறதார சேர்க்கை அல்லது பிரிவு என்றெல்லாம் பட்டியலில் ஒரு பகுதி.
ஆராய்ந்து பார்ப்போம். முதலில் லக்னம்.
லக்னம் என்பது என்ன? ஒரு ஜாதகரின் குணத்தை பிரதி பலிக்கும் கண்ணாடி. ( இது முழுமையான கருத்தல்ல. ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளலாம்)
அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார். நம்பகத்தன்மை என்பது குறைவு.
பெரிய வேதாந்திகள் மாதிரி வியக்கியானாம் செய்வார்களே தவிர, அதை வாழ்க்கையில் கடை பிடிக்கிறார்களா என்பதை சி.பி.சி.ஐ டி, சி.பி.ஐ, போட்டுத்தான் கண்டுபிடிக்க முடியும். அவ்வளவு ரகசியமானவர்கள்.
ஏழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை பாக்கியத்திற்கு தடைஉத்தரவு வந்து விடும்.
முறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும்.
இது பலன். சரி.. ஒருவருக்கு இந்த அமைப்பு இருந்தால் மற்றவருக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லக் காரணம் என்ன?
ஒருவர் தீய பழக்கம் கொண்டவராக இருந்தால், மற்றவர் நல்லவராக இருந்தால் தானே குடும்ப வண்டி நல்லவிதமாக ஓடும்.
அப்பறம் ஏன் தோஷம் இருந்தால் தோஷம் வேண்டும் என்று வலு கட்டாயமாக இணைக்க வேண்டும்?
நல்ல கேள்விதான்.
பாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரேகுணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. இது திருடன் கையிலே சாவி கொடுத்தால் திருட்டு போகாது என்கிற மாதிரி தான்.
ஆனாலும் இது வேற சங்கதி.
ராகு கேது பாலுணர்வை தூண்டுவதில் வல்லவர்கள். இது ஆணுக்கு இருந்தால் அவர் மன்மதனுக்கு மருமகனாக இருப்பார்.ஆள் அந்த விஷயத்தில் பலே கில்லாடி.
பெண்ணுக்கு இருந்தால் காமனுக்கு மாமன் பெண்ணாக இருக்கும்.
இவர்கள் ஒன்றிணைந்தால் என் ..இன்டு... என் பிளஸ் ஒன், ஹோல் சோகையர்... பை டூ.. என்ன புரியலையா.. புரியுறவங்களுக்கு புரியும். புரியாதவங்கள் சுட்டி டி.வி பாருங்க.
அப்படியும் புரியலையா?
அதாவது, ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாவிட்டால் வீட்டு சாப்பாடு வெறுத்து போகும். ஓகே.
ஏழில் ராகு கேது இருந்தால் பார்க்கிற இடத்திலேயே பரிசம் போடுற மாதிரி அழகு பெண்ணா இருந்தாலும் சரி, டிப் டாப்பா அச்சு அசல் அரவிந்த சாமி மாதிரி ஆணாக இருந்தாலும் சரி, மாப்பிள்ளையா மணமேடை ஏற முடியாது, மாப்பிள்ளை தோழனா தான் நிற்க முடியும் என்பது அனுபவ உண்மை.
ஆனால் இந்த வீட்டுக்கு உரிய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்து, குரு பார்வையும் இருந்தால், கரிச்சான் குஞ்சு மாதிரி இருந்தாலும் கல்யாணம் ஆயிடும்ங்கோ.
இரண்டில் ராகு கேது இருந்தால் முன்கோவம், முரட்டுத்தனம், வாய் நீளம்.
அப்போ மற்றவருக்கும் இருந்தால்?
இந்த மனுஷன் இப்படித்தான்...பெண்
இவளை திருத்தவே முடியாது- ஆண்.
சமபலம் பொருந்திய வக்கீல்கள். வாதத்தில் வெல்ல முடியுமா? விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.
எட்டில்?
பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு. குடும்ப வாழ்வில் குளறுபடி, ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம்.
இருவருக்கும் இருந்தால்?
எதுவும் எல்லை மீறி போகாது. ஆனாலும் பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். கூடிகுறையும் குடும்ப சந்தோசம்.
இதற்கு தனபாவ கிரகங்கள் வலுவாக இருக்கிற மாதிரி பார்த்து இணைத்து விட்டால், எங்கிருந்தோ, எப்படியோ பணம் வரும். ஓகே..
இதுதாங்க நாக தோஷம்.
இதையும் படிங்க
கலகலக்குது காங்கிரஸ் பேஸ்புக்!! அடடா!!
திருவாரூர் நிர்வாண பெண் சித்தரின் திருவிளையாடல்
துரியோதனனும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்!!
இதையும் படிங்க
கலகலக்குது காங்கிரஸ் பேஸ்புக்!! அடடா!!
திருவாரூர் நிர்வாண பெண் சித்தரின் திருவிளையாடல்
துரியோதனனும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்!!
Thursday, 18 April 2013
முஷரப் வீட்டை முற்றுகையிட்டது ராணுவம் - கைதா?
நாணயத்தின் இரண்டு பக்கம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பர்வேஸ் முஷாரப்புக்கு இப்போது இறங்கு முகம்.
அவர் ஆட்சியில் இருந்த போது செய்த சில தவறுகள் இப்போது அவருக்கு எதிராக பூதமாக நிற்கிறது.
பலுசிஸ்தான் தலைவர் ஒருவரை கொலை செய்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பியது, வக்கீல்களை அவமதித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் இப்போது அவரை ஜெயிலுக்கு அனுப்ப காரணமாக மாறுகிறது.
இதற்கு பயந்து தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக துபை மற்றும் லண்டனில் தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் வந்தார். வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்தது. அதோடு தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் தொடர்ந்தது. இருந்தும் தாய் நாடு திரும்பினார்.
தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததில் இவரது 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
அப்போதே அவருக்கு எதிராக காய்கள் நகர்கின்றன என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டார்கள். கார்கில் யுத்தம் என்னால் நடத்தப்பட்ட ஓன்று என்று உள்ளூர் ஆதரவை பெற முயற்சித்தார். இது எதுவுமே எடுபடவில்லை .
இந்நிலையில் இவர் மீதான கிரிமினல் வழக்குகள் மூலம் அரசு இவருக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இன்று காலை பாகிஸ்தான் ஐகோர்ட்டில் ஆஜராக முஷாரப் வந்தார். இவரது ஜாமின் நீட்டிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.
இருப்பினும் கோர்ட்டில் இருந்து அவசர, அவசரமாக வெளியேறினார். தற்சமயம் கிடைத்த கடைசி தகவல் படிபர்வேஸ் முஷரப்பின் விட்டை தற்போது ராணுவம் முற்றுகை இட்டுள்ளது.
காரணம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த இஸ்லாமாபாத் ஹைகோர்ட் அவரை கைது செய்ய உத்தரவிட்டது. அவ்வாறு உத்தவிட்டதை தொடர்ந்து முஷரப்பை கைது செய்வதற்காக அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது ராணுவம்.
இந்திய அரசியலில் அமெரிக்காவின் தலையீடு -விக்கிலீக்ஸ்
பண்ணையார்த்தனம் என்பது அமெரிக்காவிற்கு அதிகம். தனக்கு ஆமாம் சாமி போடும் நாடுகளுக்கு தாராள நிதி உதவி, அனைத்து நிலைகளிலும் ஆதரவு என்று கரிசனம் கட்டுவதற்கு ஒரு எல்லையே இருக்காது.
எதிராக திரும்பி விட்டால்? எதையும் செய்யும் என்பதற்கு ஏராள உதாரணம் இருக்கிறது.
நம் சிந்தனை அதை பற்றி அல்ல.
அமெரிக்காவின் உளவு ராக்கெட்டுக்கள் விண்ணில் சுழன்றபடி உலக நாடுகள் அனைத்தையும் கண்காணிக்கின்றன.
இந்த கண்காணிப்பு எதற்கு?
அந்தந்த நாட்டின் ராணுவ கேந்திரங்கள், அணுஉலைகள், ஆராச்சி கூடங்களை துப்பறிவது அதன் நோக்கம். இதுநாள் வரை உலகமே இப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தது.
இதை தடுக்க முடியாது. இதை பற்றியும் அமெரிக்கா வெளியே சொல்வதும் இல்லை. அதெல்லாம் ராணுவ ரகசியம்.
விண்ணில் இருந்து உளவு பார்ப்பது ஒரு பகுதி தான். அந்தந்த நாட்டின் மண்ணில் இருந்து கொண்டு தான் அதிகம் உளவு பார்க்கிறது என்ற உண்மையை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது விக்கிலீக்ஸ்.
உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள், தூதரக வேலையை மட்டும் செய்வதில்லை. அது அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன என்பதுதான் செய்தியே.
அந்தந்த நாட்டின் அதிபர்கள், தலைவர்கள் என்ன செய்கிறார்கள், யாரை சந்திக்கிறார்கள், அதன் தாக்கம் எப்படி இருக்கிறது, அதனால் வரும் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது முதல், சின்ன சின்ன தகவல்களைக்கூட தூதரக அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள்.
அந்த ஆவணங்கள் தான் இப்போது வெளியே வந்து பலரை தூங்க விடாமல் செய்கிறது.
இந்தியா தொடர்பாக 2011இல் அது வெளியிட்ட ஒரு ஆவணத்தில் பா.ஜ.க. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் எப்படி எல்லாம் இரட்டை நிலைப்பாட்டுடன் வேஷம் போடுகிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அமெரிக்க தூதரக உயர் பொறுப் பிலிருந்த பீட்டர் பாலிக் அத்வானியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 2009ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய தினத்தில் நடந்தது.
இந்த சந்திப்பின் போது பீட்டர் பாலிக்கிடம் அத்வானி, ‘பா.ஜ.க. ஆட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால், அமெரிக்கா-இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எந்த பாதிப்பும் வருகிற மாதிரி நடந்து கொள்ள மாட்டோம் என்று உறுதி அளித்தார் என்கிறது விக்கிலீக்ஸ்.
ஒவ்வொரு நாட்டின் அரசியலிலும் அமெரிக்கா எப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்தின என்பதற்கு இன்னொரு ஆதாரத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ். குறிப்பாக இந்திய அரசியலில்.
2009-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறை வழங்கப்பட்டது.
இதை கேள்விப்பட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சிக்கு ஆளானாராம். என்னது பிரணாப் முகர்ஜியா? அலுவாலியா அல்லது ப.சிதம்பரத்திற்கு கொடுத்திருக்கலாமே.
ஏன் அப்படி நடக்கவில்லை என்று தன் தூதரக அதிகாரிகளுக்கு கேள்வி கேட்டு அறிக்கை அனுப்பினாராம். நம்ப முடிகிறதா? நம்புங்கள் இதுதான் உண்மை.
கடந்த வாரம் மறைந்த ராஜீவ்காந்தி மீதும், அவரது சகோதரர் சஞ்சய் காந்தி மீதும் குற்றசாட்டுக்களை அடுக்கியது விக்கிலீக்ஸ். இது இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியது.
அதோடு விடவில்லலை. தமிழ்நாட்டு பக்கமும் அதன் பார்வை திருப்பி இருக்கிறது விக்கிலீக்ஸ். கொஞ்சம் காத்திருப்போம். இன்னும் என்னன்ன வருகிறது என்று. அப்பறம் தொகுத்து எழுதலாம்.
Wednesday, 17 April 2013
திருவாரூர் நிர்வாண பெண் சித்தரின் திருவிளையாடல்
சித்தர்கள் இருக்காங்க, கொல்லி மலையில் இருக்காங்க, திருவண்ணா மலையில் இருக்காங்க, இமயமலையில் இருக்காங்க என்று பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.
இவர்களை கண்ணால் பார்க்க முடியாது. மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் இவர்கள் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு.
ஊருக்குள் யாராவது அழுக்கு துணியோடு, சோறு கொடு, காசு கொடு என்று கேட்காமல் எங்காவது ஒரு முட்டு சந்தில் படுத்துக் கிடந்தால் அவரு ஒரு சித்தரு என்று சொல்லும் வழக்கம் பொதுவாக மக்களிடம் உண்டு.
நமக்கு தெரிந்த வரையில் சித்தர்கள் மகிமையை படித்ததோடு சரி. பாரத்தது இல்லை.
கிழே காணும் வீடியோவை பாருங்கள். நீங்களே ஒரு முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.
(வீடியோவில்) “கோப்பியம்” திருவாரூர் நிர்வாண பெண் சித்தரின் திருவிளையாடல்… -உண்மையும் பின்னணியும்
அம்மா பிரதமர் ஆவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.!!
அடுத்த ஆண்டு நடக்க உள்ளது நாடாளுமன்ற தேர்தல். தேர்தல் வருகிறது வெல்லப்போவது யாரு? என்ற கேள்வி படித்தவர் முதல் பாமரன் வரை இருக்கவே செய்யும்.
அதற்கு தீனி போடுவது போல், பல நிறுவங்கள் களத்தில் குதிக்கும்.
நாங்கள் நாடு முழுவது பயணம் செய்து 4,444 பேரிடம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தினோம். அதன் அடிப்படையில் இந்த கட்சி பதவி இழந்து அந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகும்.
சில சமயம் இது உண்மையாகி இருக்கிறது. பல சமயம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த ஜோசியத்திற்கு ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறது.
கருத்து கணிப்பு சொல்லும் விஷயம் என்ன தெரியுமா?
பிரதான தேசிய கட்சிகளுக்கு வேப்பெண்ணெய் பலகாரத்தில் விருந்து வச்ச மாதிரி கசப்பான செய்திதான் அது.
அதுமட்டுமல்ல, ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கா விட்டால், அடுத்து என்ன.... மாநில கட்சிகளிடம் தான் மண்டி போட வேண்டும் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
தமிழகத்தில் அ.தி.மு.க. அடுத்து , முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்று அடுத்த குண்டையும் வீசி இருக்கிறது.
என்னது அ.தி.மு.க. வா?
நம்புங்க தலைவா? நம்புங்க.
ஒரு புறம் கடுமையான மின் தட்டுப்பாடு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வு.
மந்திரி பெயரை மக்கள் நினைவுக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வாரா வாரம் மந்திரிசபை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என அதிருப்திகள் ஒரு புறம் விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி அம்மா அலை அடிக்கிறது.
அலை அடிக்க என்ன காரணம்?
இலங்கை விவகாரத்தில் மாணவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு அரசு எடுத்த நடவடிக்கை, காவிரி விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு, இது இரண்டும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைக்க கதவை திறந்துள்ளது.
கடந்த முறை வெறும் 9 இடங்களில் வென்ற அ.தி.மு.க, இந்த முறை 27 இடங்களில் வெற்றி பெரும் என்று அம்மா பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது நவ் டி வி.
ஐயோ.. அப்போ தி மு க?
பிசாசு மாதிரி பின் தொடர்வது 2ஜி. அதை தொடர்ந்து காத்து கருப்பாக இருப்பது இலங்கை விவகாரம்.
இலங்கை விவகாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசுடன் கடைசி வரை இருந்து விட்டு வெளியேறிய தி.மு.க.வை மக்கள் மறக்க, மன்னிக்க தயாராக இல்லை என்கிறது கருத்து கணிப்பு.
கடந்த முறை கிடைத்த 18 இடங்களில் பாதியாவது கிடைத்தால், கலைஞர் நம்பாத கடவுள் பாக்கியம்.
கடவுளே... அப்போ காங்கிரஸ்?
தமிழ்நாட்டை மறந்துட வேண்டியதுதான். ஒரு சீட் கூட கிடைக்காது என்கிறது கணிப்பு.
இது தற்போதைய நிலைமை.
தேர்தல் வருவதற்குள் காங்கிரஸ் மற்றும் தி மு க எதையாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் இது மாறலாம் என்கிறது அதே கணிப்பு.
இது ஒன்றும் முடிவல்ல, இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு உருப்படியா எதையாவது செய்யுங்க. நல்ல பெயர் வாங்கலாம்.
இல்லாவிட்டால், அம்மாவின் முரட்டு பக்தர்கள் சொல்வது போல், அம்மா பிரதமர் ஆவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.
இதையும் படிங்க
கலகலக்குது காங்கிரஸ் பேஸ்புக்!! அடடா!!
இதையும் படிங்க
கலகலக்குது காங்கிரஸ் பேஸ்புக்!! அடடா!!
கலகலக்குது காங்கிரஸ் பேஸ்புக்!! அடடா!!
பேஸ்புக் என்றாலே பள்ளிபருவ மாணவர் முதல், பல்நோக்கு பார்வை கொண்ட இளைஞர் கூட்டம் ஓன்று கூடும் இடம். இங்கே பரிமாறப்படாத தகவல்களே இல்லை.
இங்கே இருந்து குப்பை கொட்ட வேண்டும் என்றால், எதையும் தாங்கும் இதயம் வேண்டும். இல்லாவிட்டால் அவமானப்பட்டு ஓட வேண்டியதுதான்.
சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி ஒரு பேஸ்புக் கணக்கு துவங்கினார். எழுந்த எதிர்ப்பலையை பார்த்து, போதுமடா சாமி என்று அன்றே கணக்கை முடித்துக் கொண்டார்.
அவரிடம் அந்த அனுபவத்தை கேட்டிருந்தால் பல புத்தகம் எழுதுகிற அளவிற்கு மேட்டர் இருக்கும்.
இப்போது உறவு சரி இல்லாத காரணத்தாலோ என்னவோ காங்கிரசின் ஞானதேசிகன் கேட்கவில்லை.
இது இளைஞர்கள் யுகம். அவர்கள் அதிகம் நடமாடுவது ஓன்று சினிமா தியேட்டர் பக்கம், அடுத்து பேஸ் புக்கில் தான் எப்படியோ துப்பு துலக்கி விட்டார்.
அதனால் பேஸ்புக்கில் வலம் வரும் இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்க காங்கிரஸ் சார்பில் ஒரு பேஸ்புக் கணக்கு கடந்த 15 ம் தேதிதான் துவக்கப்பட்டிருக்கிறது.
நண்பர் ஒருவர் மூலம் தகவல் நம் காதுக்கு எட்டியது. நானும் எட்டி பார்த்தேன்.
என்னத்தை சொல்ல... நீங்களே பாருங்க.
காங்கிரஸ் பேஸ்புக் லிங்க்
Subscribe to:
Posts (Atom)
குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil
கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...











.jpg)




















.jpg)











