கடவுள் இருக்கிறரா?
இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்பதற்கான காரணம்.. கடவுள் இல்லை என்ற அவநம்பிக்கையினால் அல்ல.. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணரவும் முடிகிறது.
ஆனால் இந்தக் கேள்வி எழுவதற்கு , இருக்கிறார் என்ற உண்மையை யாராவது தேங்காய் உடைத்ததைப் போல் பளிச்சென்று தெளிவாக விளக்கமாட்டார்களா என்ற ஆசைதான் காரணம். இல்லையென்று நினைப்பவர்களும் உணர்ந்து கொள்ளட்டுமே என்ற ஆசைதான் காரணம். அந்தத் தேடுதலுடன் சமீபத்தில் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பிரபஞ்சம் எப்போது? எப்படித் தோன்றியது?
ஒன்று தேவும் உலகும்
அன்று நான்முகன் தன்னோடு
தேவருலகோடு உயிர் படைத்தான்.
-நம்மாழ்வார் திருவாய் மொழி
கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதை அறிவியலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அந்தக் கடவுளைப் படைத்தது யார் என்ற கேள்வி அந்தப் பதிலுடனேயே வருவதைத் தவிர்க்க முடியாது. தன்னையும் படைத்து ,
தன் விதிகளையும் படைத்துக் கொண்டது பிரபஞ்சம் என்ற சித்தாந்தத்திற்கு விளக்கம் ஏதும் இருக்கிறதா? என்பதுதான் அறிவியலின் தேடல். கிட்டதிட்ட அறிவியலின் தேடல் என்பது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியுமா என்றத் தேடல்தான்.
இத்தேடலில் பிரபஞ்சம் எப்படி உருவானது? எப்போது உருவானது என்பதை அறிவியல் நிரூபித்து விட்டது.
விஞ்ஞானத்தின் தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்ட ஆய்வுகளின் வழி, (டிப்ராக்ஸியின் சமன்பாடு, க்வாண்டம் விதிகள், பாலியின் எக்ஸ்ளுஷன் பிரின்சிபல், ஹைசன்பர்க்கின் நிச்சயமற்ற தத்துவம் என்று பலதும் இருக்கின்றன.
நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன், சந்திரபோஸ், வைன் பார்க், ஸ்டீபன் ஹாப்ஃக்கின்ஸ் போன்றோரின் ஆய்வுகளும் மற்றும் தற்காலத்திய அணுவிஞ்ஞானிகள் அனைவர்களின் முயற்சிகளும் )
இந்த பிரபஞ்சம் முழுவதும், பிரபஞ்சத்தின் இருக்கும் அனைத்தும், திடப்பொருள், சக்தி என்ற இருவகையில் (மாலிக்யூக்கள் எனும் நுண் அணுக்களால்) ஆனது. திடப்பொருள் என்பதில் கண்ணில் நாம் காணும் அனைத்து விதமான பொருட்களுமே. நான் நீங்கள், நாற்காலி, மேஜை , நாய்க்குட்டி, லோரி,கார், கிரகங்கள் எல்லாமே..
இவைகளின் உருவாக்க ஆதாரங்கள் கார்பன், பாஸ்பரஸ், இரும்பு துத்தநாகம் போன்ற தனிமங்கள். இந்த தனிமங்களைப் பிரித்தால் ப்ரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான்கள், இவற்றையும் பிரித்தால் ஹேட்ரான்கள் லெப்டான்கள்.
சக்தி எனும் போது, ஒளிக்கதிர்கள், எக்ஸ்ரே, உஷ்ணம் , ரேடியே அலைகள் போன்றவை . இவை நான்கு விதமான ஆதார ஈர்ப்பு விசைக்குள் வருகின்றன. அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை, அணுக்கருவுக்கு வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை, மின்காந்த விளைவு, புவி ஈர்ப்பவிசை மொத்தம் நான்கு சமாச்சாரம்.
இவற்றையும் ஒருமைப் படுத்த இயலும் என்று இயற்பியல் கூறுகிறது. திடப்பொருள் சக்தி இரண்டுமே ஒன்றுதான் என்பதையும் அறிவியலால் நிரூபிக்க முடிகிறது.
அறிவில் கண்டுபிடிப்பின் படி, பிரபஞ்சத்தின் உண்மை என்று சொல்வது கீழ்வரும் 2 விசயங்கள்தான்.
1. பௌதிக இயற்பியல் விதிகள். இந்த விதிகளின் படி பிரபஞ்சத்தின் அத்தனை திடப்பொருள்களும் சக்திவடிவங்களும் இயங்குகின்றன. இந்த விதிகள் கணித சமன்பாடுகளாக விவரிக்கப்படுகின்றன.
2. இந்த விதிகள் செயல்பட துவங்கிய போது இருந்த ஆரம்பநிலை. இதை இனிஷியல் கண்டிஷன் என்கிறார்கள், இதை விளக்கி ¤விட்டால் அதற்கு அடுத்த நிலைகளை விதிகளைப் பயன்படுத்திச் சொல்லி விட முடியும். இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கி விட முடியும்.
அந்த ஆரம்பம் நிலை..
பதினைந்து பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்(ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3,00,000 மைல்கள் ) ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பகுதியான மில்லி செகண்டில் சூன்யத்தில் ஒரு வெடிப்புத் தோன்றியது.
அந்த வெடிப்பின் போதே காலமும் நேரமும் தோன்றியது. இயற்பியல் பௌதிக விதிகளும் அப்போதே ஆரம்பமானது. இந்த ஆரம்பத்தை ஒருமித்த கணமாக (சிங்குலாரிட்டி) அறிவியல் கூறுகிறது.
வெடித்த அந்த மில்லி செகண்டில் பிரபஞ்சம் சர சர வென பெரிதாகிக்கொண்டே வளர்ந்து இப்போதிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. நம் பிரபஞ்சம் இப்படித்தான் வெடிப்பில் உருவாகியது. இது தான் பிரபஞ்சம் உருவானதற்கான பிக்பேங்க் தியரி. காஸ்மாலஜி என்னும் பிரபஞ்ச அறிவியல்.
சரி எப்போது எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பதை அறிவியல் கூறிவிட்டது. எப்படி அதை உறுதிப் படுத்தியது?
1960 ல் ராட்சத ரேடியோ டெலஸ்கோப்புகள் வந்து விட்டன. அதன் உதவியால் விண்வெளியின் ஆழத்துக்குள் நுட்பமாக ஆராயும் போது, அதன் ஆரம்ப நாட்களிலிருந்து இப்போதுதான் நம்மை வந்து சேரும் பிரபஞ்சத்தின் சித்திரத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது, திட்டவட்டமாக அப்போதிருந்த பிரபஞ்சமும் இப்போதிருக்கும் பிரபஞ்சமும்வேறு வேறு.
பிரபஞ்சம் பல மடங்காக விரிவடைந்திருக்கிறது, வலுவிழந்திருக்கிறது என்பது தெளிவாகியது. 1965ல் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லா திசைகளிலும் ஒரு லேசான உஷ்ணம் பரவியிருப்பதை கண்டுபிடித்தார்கள். அது இப்பிரபஞ்சம் ஆதியிலிருந்து இப்படியேத்தான் இருக்கிறது என்ற தத்துவத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது.
இந்த உஷ்ணம் பிரபஞ்சத்தின் ஆரம்பமான மகாவெடிப்பில் மிச்சமிருக்கும் உஷ்ணம். அதாவது வெடிகுண்டு வெடித்த பின் அந்த இடத்தில் மிச்சமிருக்கும் சூடான புகைபோல.
ஆக பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரவாரமான ஆரம்பம் இருந்திருக்கிறது. அது வெடித்து பரவி ஒரு தீர்மானமில்லா முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவியல் தெளிவாக இந்த கண்டுபிடிப்புகளின் வழி அறிந்து கொண்டது.
கணக்குச் சமன்பாடுகள் விண்வெளியில் மிஞ்சியிருக்கிற உஷ்ணம் இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் அதர்ச்சிகரமான பிறந்த தேதியின் அத்தாட்சிகள் தெரிகின்றன. கருவிகள் மூலம் பார்க்க முடிகிற 15 மில்லியன் ஒளி ஆண்டுகள் என பிரபஞ்சத்தின் வயதும் தெரிகிறது.
பிரபஞ்சத்திற்கு பிறப்புமில்லை அழிவுமில்லை என்பதுதான் மனித இனத்தின் புராதன நம்பிக்கை. இந்த இரண்டும் அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த சிங்குலாரிட்டி கணத்தில் பிரபஞ்சமும் அதனுடன் சேர்த்து காலமும் தூரமும் உருவாயின எனும் போது சிருஷ்டி கர்த்தாவை அனுமானிப்பது கஷ்டமாய் இருந்தது.
இயல்பியல் ( குவாண்டம் )விதிகள் “அந்த வெடிப்புக்கு முன் காலமில்லை, நேரமில்லை அந்தவெடிப்பு நிகழுமுன் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. அந்த வெடிப்பு இயல்பாய் நிகழ்ந்த ஒன்று, அப்படி நிகழும் சாத்தியம் இருக்கிறது, இயல்பாய் பிரபஞ்சம் தோன்றுவதற்கு குவாண்டம் விதிகளின், ஹைசன்பர்க்கின் தத்துவம் வழி இடம் இருக்கிறது” என்கிறது.
( விளக்கம் தேவைப்படுபவர்கள் ஃஸ்டீபன் ஹாக்கின்ஸின் தி பிளாக் ஹோல்ஸ் என்ற தொகுப்பில் உள்ள தி ஒரிஜன் ஆப் தி யுனிவர்ஸ் என்றக் கட்டுரையைப் படிக்கவும்)
இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த திடப்பொருள், மொத்த சக்தி இரண்டும் ஒன்றுக்கொன்று ஒன்று சமமாக, எதிராக இருப்பதால் பிரபஞ்சத்தின் ஆரம்பகணம் எனபது குவாண்டம் கிரேவிட்டி தத்துவப்படி சூன்யத்திலிருந்து உண்டாகியிருக்கலாம் ஃபேய்மன் என்பவர் விளக்கியிருக்கிறார்.
குவாண்டம் விதிகள்
நுட்பான அணுத்துகள்களுக்கானவை அவை எப்படி பிரம்மாண்ட பிரபஞ்சத்திற்குப் பொருந்தும்? என்றொரு கேள்வி எழுகிறது.
பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் அது மிகச் சிறியதாக மிக அடர்த்தியாக இருந்திருக்கிறது எனவே குவாண்டம் விதிகள் அந்த பிரபஞ்சத்திற்கு செல்லுபடியாகும் என்று பதில் சொல்லப்பட்டது.
ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ், ஜேம்ஸ் ஹார்ட்டில் போன்றோர் இதை நிரூபித்திருக்கிறார்கள். அந்த ஆரம்ப கணத்தை ப்ளாங்க் கணம் என்கிறார்கள். குவாண்டம் விதிகளைக் கண்டுபிடித்த (விஞ்ஞானி மாக்ஸ் ப்ளாங்கின் பெயரால்)
எந்த விதியையும் மீறாமல் எந்த விதிக்கும் காரணத்துக்கும் தேவையில்லாமல் பிரபஞ்சம் தோன்றியிருக்கலாம் என்பதே அறிவியலின் முடிவு.
இதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? பரிதோசதனை மூலம் நிரூபணம் இருக்கிறதா என்றால்.. குவாண்டம் உலகில் இன்றும் சக்தி துகள்களாகவும், துகள் சக்திகளாகவும் அவ்வப்போது தன்னிச்சையாக தோன்றுகிறது, மாறுகிறது. இன்றைய பரிசோதனைகளில் வெளிப்படும் வெளிச்சங்கள் ஃபோட்டான்கள் அனைத்தும் இப்படி எதிர்பாராமல் தன்னிச்சையாகத் தோன்றுபவையே. க்வாண்டம் விளைவுகள் அனைத்து இப்படிப்பட்டவையே என்று காரணம் காட்டுகிறார்கள்.
இவ்வாறாக அறிவியலாளர்கள் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் காட்டுகிறார்கள்.
பிரபஞ்சம் இப்படி ஒரு வெடிப்பில் ஒரு கணத்தில் உருவானது என்பது நீரூபிக்கப்பட்டுவிட்டப் பின்னர் அந்தக் கணத்தை ஏற்படுத்தியவர் கடவுள் என்றால் அவர் பிரபஞ்ச ஆரம்பம் ஒரு வான வேடிக்கை போல் இருக்கட்டும் என்று வெடியை பற்ற வைத்து விட்டாரா?
என்றக் கேள்வி எழுகிறது. கடவுள் நம்பிக்கை கேள்விக்குறியாகி விடுகிறது..
பிரபஞ்சம் ஏன் தோன்றியது?
இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணம் என்ன? மனிதனுக்காகவா?
இந்த பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையையும் விதிகளையும் உன்னிப்பாய் பார்க்கும் போது அதில் ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் இருப்பதை காண முடிகிறது.
எத்தனையோ விதத்தில் இந்த பிரபஞ்சம் ஆரம்பித்திருக்கலாம்.. எத்தனையோ விதத்தில் இதன் விதிகளும் அமைந்திருக்கலாம்.. ஏன் இந்த ஆரம்பமும் ஏன் இந்த விதிகளும்?
இவை எப்படித் தீர்மானிக்கப்பட்டன? ஏன் இவை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன?
உதாரணத்திற்கு அணுவுக்குள் இருக்கும் ப்ரோட்டான்கள், நியுட்ரான்களுக்கு இடையே உள்ள எடை வித்தியாசம் இரண்டு எலக்ட்ரான்களுக்குச் சமம்.
இப்படி இல்லாமல் வேறு விதமாக இருந்திருந்தால் நியூக்கிளியைடுகள் இலலை. அதாவது உயிர்களே உருவாகியிருக்க முடியாது. அதே போல் ப்ரோட்டான் ஈர்ப்பு எடை என்று ஒரு விசயம் இருக்கிறது. இது சற்று வேறாக இருந்திருந்தால் காலக்ஸிகள் இல்லை.. சூரிய சந்திரன்கள் இல்லை. சூரியனிலிருந்து பிரிந்த பூமி இல்லை. நீங்களும் நானும் இல்லை.
அதே போல் பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத்தில் வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறைவாக இருந்திருந்தால் அது சுருங்கி மடிந்திருக்கும். வேகம் சற்று அதிகமாகியிருந்திருந்தால் நட்சத்திரங்கள் இல்லாமல் போய் சாம்பலாகி உதிர்ந்திருக்கும்.
எல்லாவற்றிற்கும் ஏனிந்த தனித் தன்மை? கடைசியில் மனிதன் தோன்றி இந்தக¢கேள்வியைக் கேட்பதற்காகத்தான் என்கிறார்கள்.
இந்த பிரபஞ்சம் உருவாக எத்தனையோ சாத்தியக் கூறுகள் உள்ளன. விதிகள் உள்ளன. ஆனால் இந்த ஆரம்பநிலையும் விதிகளும் வேறுவிதமாக இருந்திருந்தால் புத்திசாலி மனிதன் தோன்றியிருக்க மாட்டான்.. இந்தக் கேள்வியே உருவாகியிருக்காது என்பதே பதில். ( இதை அன்த்ராபி தத்துவம் என்கிறார்கள்)
ஆனாலும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் கடுகு போல் இருக்கும் பூமி ஓர் அற்பமான கிரகம். சூரியக்குடும்பமே இந்த ஸ்பைரல் காலக்ஸியில் ஒரு ஓரத்தில் இருக்கிறது. இவ்வளவு அற்பமான மனிதனுக்காக கோடானு கோடி காலக்ஸிகள் உடைய பிரபஞ்சம் உண்டாகியிருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக இருக்கிறது.
ஆறடி உள்ள மனிதனுக்காக கோடிக்கணக்கான கேலக்ஸிகள், நட்சத்திரங்கள்.. நம் கண்களுக்கே புலப்படாத தூரத்திற்கு வான் வெளியில் நீண்டு பரவியிருக்கின்றன என்பது அதிகப்படியானதாகத் தெரிகிறது. எனவே இந்த அன்த்ராபி தத்துவம் அடிபட்டு போய்விடுகிறது.
பிரபஞ்சம் எப்படி ஆரம்பித்தது என்ற கேள்விக்கு விடை அளித்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூட ஏன் பிரபஞ்சம் தன்னை ஆரம்பிக்கத் தீர்மானித்தது? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்று தன் தி ஒரிஜன் ஆப் தி யுனிவர்ஸ் என்ற கட்டுரையின் முடிவில் கூறுகிறார்.
பிரபஞ்சத்திற்கு ஒரு விளக்கம் இருக்கிறது. அதை பிரபஞ்சத்தால் விளக்க முடியாத போது. பிரபஞ்சத்தை விட மேலான ஒரு தத்துவம் தேவைப்படுகிறது. அதைக் கடவுள் என்று சொல்லலாம் என்றால் அந்தக் கடவுளைப் பற்றி விளக்க முடியாது.
ஒருவேளை கடவுளே தன்னைத் தானே விளக்கிக் கொண்டால்தான் உண்டு என்பதே ஒரே வழி.
கடவுள் நம் அறிவதற்கு அப்பாற்பட்டவராக இருக்கலாம் அல்லவா? எல்லா காரணத்தையும் கடவுள் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறாரா?
பரந்த தெய்வமும் பல் உலகும்
படைத்து அன்று உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்தது கடந்து
இருந்தது கண்டும் தெளிய கில்லீர்
என்று நம்மாழ்வாரைப் போல், அவ்வளவு உறுதியாய் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நவீன விஞ்ஞானிகள் பிராஸஸ் தியாலஜி என்ற முறையில் சிந்திக்கிறார்கள்.
இந்த பிரபஞ்சம் திடப்பொருளும் சம்பவங்களும் மட்டுமல்ல. ஒரு திசையில் செல்லும் நிகழ்வு என்கிறார்கள்.
இருப்பதை விட ஆவது முக்கியம் என்கிறார்கள். எதிர்காலத்தில் நிகழ்வதை, நிகழ்காலத்தில் தீர்மானிக்கப்படாத உலகை அவர்கள் சொல்கிறார்கள். சாத்தியக்கூறுகள் பல உள்ளன. இயற்கை அவைகளை தேர்ந்தெடுக்கிறது. ஒரு மலையோ , ஒரு நதியோ , ஒரு மனிதனோ வெறும் அணுத்துகள்களின் கூட்டம் என்று சொன்னால் மட்டும் போதாது இவை அனைத்தும் சூழ்நிலையைச் சார்ந்த திறந்த அமைப்புகள் என்கிறார்கள்.
மனிதன் என்பவன் அணுக்கூட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல.. அவன் ஒரு தகப்பன், ஒரு தலைவன், ஒரு தச்சன், ஒரு கொலைகாரன் என்று அவனுக்கு பலவித அடையாளங்கள் சூழ்நிலைக்கேற்ப உள்ளன.
முழு உலகும் ஒன்றுடன் ஒன்று சார்ந்த கூட்டமைப்பு என்கிறார்கள். கேயாஸ் தியரி, நான் லீனியர் சிஸ்டம்ஸ் போன்றவை அண்மைக் கால விஞ்ஞானிகளை ஈர்க்கின்றன.
ஆல்ஃப்ரெட் வெல் நார்த்வைட் ஹெட் என்ற கணிதவியல் தத்துவாதி,
“கடவுள் என்பவரின் பொறுப்பு உலகை ஒழுங்குப்படுத்துவது, நேரடியாக இல்லாமல் பல சாத்தியக் கூறுகளை அமைப்பதன் மூலம் செய்கிறார். அவைகளில் ஒன்று பிரபஞ்ச இயக்கத்தை இயற்பியல் விதிகளின்படி செயல்படுத்துவது என்கிறார்.
அவருடைய சிருஷ்டி நல்லதை நோக்கிச் செல்லவேண்டும் என்கிற ஒரே குறிக்கோள் மட்டுமே, கடவுள் என்பவர் பிரபஞ்சத்தைப் படைத்தது மட்டுமல்லாமல் , அதன் இயக்கத்திலும் முன்னேற்றத்திலும் பங்கு கொள்வது, என்ற சித்தாந்தத்தை முன் வைக்கிறார் வைட். நல்லது நடக்கிறது. பிரபஞ்சம் மெல்ல மெல்ல தன்னை ஒழுங்குப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.
கடவுள் எல்லாம் தெரிந்தவர் என்றில்லாமல், பிரபஞ்சத்தின் மாறுதல்களை உண்டாக்கி அதை நடத்திச் செல்பவர் என்கிறார்.
மனித உயிர் இவ்வளவு சிறப்பாக பரிணமித்து வந்தருப்பதைப் பார்க்கும் போது இது உண்மையாக இருக்கலாம் என்றுத் தோன்றுகிறது.
கடவுள் பற்றிய முழு உண்மையை மனித மனதால் அறிந்து கொள்ளமுடியாது என்றேத் தோன்றுகிறது. காரணம் மனிதனுக்கு எல்லைகள் உள்ளன.
மனிதன் மெல்ல மெல்ல விஞ்ஞான கண்டுபிடிப்பால் மேலேறிக் கொண்டிருந்தாலும் கண்ணால் பார்க்கக்கூடியவை ஒரு அலை அகலம் மட்டுமே. காதால் கேட்கக்கூடியவை சில ஒலி அலைகளை மட்டுமே. மனதால் எண்ணக்கூடியவை அறிவின் எல்லைகளுக்கு உட்பட்டவை மட்டுமே.
கடவுள் பார்க்காத காட்சியாக, கேட்காத கானமாக, புரியாத வார்த்தையாக இருக்கலாம் அல்லவா?
பிரபஞ்சத்தின் ரகசியத்தை நாம் அறிந்தாலும் அது நம்அறிவிற்குப் புரியாது. ஜேம்ஸ் ஜீன்ஸ் என்னும் பிரிட்டிஷ் வானவியலாளர், பிரபஞ்சதில் ஒரு காரணமும், பொறுப்பும், ஒரு நோக்கமும் இருப்பதைப் பார்க்கிறோம் அந்த சக்திக்கு நம் மனித மனம் போல் ஒரு குணம் இருப்பதாகத் தெரிகிறது.
மனித மனம் அழகுணர்ச்சி, பாசம், நீதி போன்ற வற்றை எப்படி சிந்திக்கிறதோ அப்படியே கடவுளும் சிந்திருக்கலாம் என்று கூறுகிறார்.
கடவுளுக்கு ஒரு மனம் இருக்கிறது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கடவுளே ஒரு மனம் தானோ என்று வியக்கிறார்கள்.
நம்மாழ்வார் கூறுவைதைப் போல்
அவரவர் தமதமது அறிவளி வகைவகை
அவரவர் இறையவர் என் அடி அடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே..
அவரவர் தங்கள் தங்கள் அறிவு அறியும் வகையில் கடவுளைக் காண்கிறார்கள். இதில் எதுவும் தப்பில்லை அவரவர் விதிகளின் படி அடைய முடியும்.
இதில் அணுவிஞ்ஞானிகளையும் சேர்க்கமுடியும், கடவுள் இல்லை என்பவர்களையும் சேர்க்க முடியும்.
அறிவியல் கணிதக் கோட்பாடுகளால் முழு உண்மையை அறிய முடியாது என்பதே உண்மை.
மனதால் அறிய முடியாத உண்மைகள் இருக்கலாம். அறிவால் விளக்கமுடியாததாய் , விளக்கம் முழுமைபெறாமல் இருக்கலாம். ஆனால் உணர்ந்து கொள்வது மட்டுமே சாத்தியப்படலாம்.
இதை மிஸ்டிக் நாலெட்ஜ் என்கிறார்கள். விளக்கமில்லாமல் உணர்ந்து கொள்வது.
மிகச்சிறந்த சிந்தனையாளர்களான ஐன்ஸ்டீன், பாலி, ஹைஸன் பர்க், ஷ்ரோடிங்கர், எடிங்டன், ஜீன்ஸ் எல்லோரும் உணர்வு பூர்வமாக உண்மை அறிதலைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதன் சாரம் இதுதான்.
விஞ்ஞானத்தால் ஓரளவுக்கு விளக்கங்களைச் சொல்ல முடியும்.
இந்த பிரபஞ்சம் எப்படி எவ்வாறு தோன்றியது என்பதற்கு பதில் கூற முடியும். ஆனால் ஏன் என்ற கேள்விக்கு பதில் கூறமுடியாது. அறிவியலும், தர்க்க சாஸ்திரமும் , கணித சாஸ்திரமும் இங்கே தோற்றுப்போகின்றன.
அதை வேறுவிதமாகத்தான் உணர முடியும். சிலர் மனதில் உள்ளே ஏற்படும் வினோத அமைதி என்கிறார்கள். ஐன்ஸ்டீன் அதை காஸ்மிக் ரிலீஜியஸ் ஃபீலிங் என்கிறார்.
இந்த ஆன்மிக அனுபவம் பிரபஞ்சம் முழுவதையும் கடவுளுடன் சேர்ந்து பார்க்கும் ஓர் அனுபவம் என்கிறார்கள். உண்மையுடன் ஏற்படும் ஓர் தொடர்பு. வார்த்கைள், கணித குறியீடுகள், அறிவியல் சூத்திரங்கள் போன்ற இடைத்தரகர்கள் இல்லாமல் ஏற்படும் ஓர் தரிசனம் என்கிறார்கள்.
கடவுள் எப்படி இருப்பார்?
அவன் ஆணல்லன் பெண்ணுமல்லன் அல்லா(து) அலியல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லானுமாம்
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே
- நம்மாழ்வார்
அவன் ஆண் அல்ல, பெண்ணும் அல்ல, நபும்சகனும் அல்ல. காணவும் இயலாதவன், உள்ளவன் அல்ல.. இல்லை யெனவும் முடியாது. நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறவன்.. அவனை விளக்குவதும் மிகவும் கடினமான நிலையாகும்.
ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலம் 90வது பாடலில் பத்து மந்திரங்கள் உள்ளன. இதை புருஷ சூக்தம் என்பர். சில மாறுதல்களுடன் யஜூர் சாம அதர்வண வேதங்களிலும் உள்ளது.
இதில் புருஷன் என்பவரைப்பற்றி பேசப்படுகிறது. நம் இந்து மதத்தில் கடவுள் தத்துவங்களின் ஆதாரம் இதுதான்.
ஆயிரக்கணக்கான தலைகள் உள்ளவர். ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளவர். ஆயிரக்கணக்கான பாதங்கள் உள்ளவர். அவர் பூமியெங்கும் வியாபித்தவர். பத்துவிரல்களால் எண்ணமுடியாத எண்ணிக்கை வடிவில் உள்ளார். எது முன்பே இருந்ததோ? எது இனி வரப்போகிறதோ, எது இப்போது காணப்படுகிறதோ எல்லாம் பரமபுருஷனே.
சாகா நிலைக்கு ஈசனாக இருப்பவரும் பரமபுருஷனே. எது அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் மறைவிலிருந்து வெளிப்படுகிறதோ அதுவும் புருஷனே. இங்கு காணப்படுபவை எல்லாம் அவருடைய மகாத்மீயமே. இவையனைத்தைக் காட்டிலும் அப்பரமபுருஷனே அதிகமானவர். உண்டானவை கால் பாகம். முக்கால்பாகம் அழிவற்றதாய் அவருடைய பரமபதத்தில் இருக்கிறது. இவ்வாறாய் நம்முன்னோர்கள் அவரை விவரிக்க முயன்றிருக்கின்றனர். நம்மாழ்வார்..
திடவிசும்பு எரிவளி நீர் நிலம் - இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய்
அவைஅவைதொறும்
உடல்மிசை உயிரெனக்
கரந்தெங்கம் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை
உண்ட சுரனே. என்று விளக்குகிறார்.
விண்வெளி, தீ, காற்று, நீர், நிலம் இவைகளை ஆதாரமாய் கொண்ட பொருள்களில் மறைந்து, உள்ளேயும், வெளியேயும் வியாபித்து, வேதத்தில் உள்ளவனாவான். இவைகளை உண்டவனும் அவனே.
கடவுளைப் பற்றி உபநிஷத்துகளும் சிந்திக்கின்றன. உபநிஷத்துக்களில் பத்து உபநிஷத்துக்கள் முக்கியமானவை. இவைகள் சிலவற்றில் இன்றைய விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தைப் பற்றி கேட்கும் கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றன.
யஜூர் வேதத்தில் உள்ள ஈசோப உபசநிஷத், “ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” என்று துவங்குகிறது. அனைத்தும் ஈசன் வசிப்பதற்கு. வஸ்யம் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அணிவது. எல்லாமே ஈசனை அணிந்தது.
கேனோபநிஷது சாம வேதத்தைச் சேர்ந்தது. அது இப்படி ஆரம்பிக்கிறது.
யாரால் விதிக்கப்பட்டு மனம் அதன் இலக்கை அடைகிறது?
யாரால் செலுத்துப்பட்டு வார்த்தை இயங்குகிறது? கேட்பதனையும் பார்ப்பதையும் யார் அமைத்தது? என்று கேட்டுவிட்டு.
கேட்பதின் கேட்பது, மனதின் மனது, வார்த்தை கடந்த வார்த்தை, உயிரின் உயிர், பார்வையின் பார்வை இதை தெரிந்தவர்கள் சாவதில்லை என்று தொடரும்போது கேட்பது, பார்ப்பது, சிந்திப்பது இவைகளுக்கெல்லாம் அப்பால் உள்ளதை எண்ணத் தூண்டுகிறது.
அங்கு பார்வை செல்வதில்லை. வார்த்தை செல்வதில்லை, மனமும் செல்வதில்லை. அதை எப்படி அறிந்து போதிப்பது. அது நமக்கு தெரியவில்லை. காரணம் அது தெரிந்ததல்ல. தெரியாததுமல்ல. அதற்கும் மேற்பட்டது. அப்பாற்பட்டது, வார்த்தைகளால் அறியப்படாதது, விவரிக்கப்படாதது, வார்த்தைகளை அறிவது அதுதான் பிரமன்.
கண்ணால் பார்ப்பதல்ல, பார்வையால் பார்ப்பது. காதால் கேளாததல்ல, கேட்பதைக் கேட்பது.
சுவாசத்தைச் செலுத்துவது அதுதான் பிரம்மம். என்கிறது கேனோஉபநிஷத். கடவுள் என்பதை ‘தத்’ அது என்ற ஒரே வார்த்தையில் அதன் குணங்களை யோசித்துப் பார்த்திருக்கின்றனர்.
உளன் எனில் உளன் அவர்
உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன்
அருவம் இவ்வுருவுகள்
உளன் என இலன் என அவை
குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு
ஒழிவிலன் பரந்தே
இறைவன் இல்லை யென்று சொன்னாலும், இருக்கிறான் என்று சொன்னாலும் அவன் இருக்கிறான்.உளன் அலன் என்ற இரண்டு குணங்களையும் உடையவன் என்பதால் அவன் உருவமுள்ளது, உருவமற்றது எல்லாமே அவனது ஸ்தூல சூட்சும சரீரமுமாகும். அவன் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளான் என்கிறார் நம்மாழ்வார்.
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் எவர்கட்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பிணைந்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
ஆமுதம் ஆகித் தித்தித்து என்
ஊனின் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை நான் உணர்ந்தேனே.
வேதம் உபநிஷதம் யாத்த பெரியோர்களும், நம்மாழ்வார் போன்றோர்களும் மிஸ்டிக் என்ற அனுபவத்தின் மூலம் தான் கடவுளை கண்டுணர்ந்தார்கள். இந்த மிஸ்டிக் அனுபவம் வாழ்நாளில் கிடைக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்.
அவர்களுக்கு இந்த அனுபவத்திற்குப் பிறகு எந்த சந்தேகமும் எழுவதில்லை. மற்றவர்கள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகத்தில் வாழ்நாளை கழிக்கின்றனர்.
எனவே அவரவர் அவரவர் தங்களின் அறிவிற்கெட்டியபடி கடவுளைக் காண்கிறார்கள். கடவுளை அடைகிறார்கள்.
எனவே கடவுள் இருக்கிறாரா? என்றக் கேள்விக்கு அறிவியலின் பதில் இருக்கலாம்! ஆன்மிகத்தின் பதில் இருக்கிறார்!!
என் பதில் - கடவுளைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்!
( திரு சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நூலிலிருந்து சுருக்கமாய் தொகுத்தது- Mathivanan)