கவின் மலர் |
மதராஸ் கஃபே பற்றிய பேச்சு வந்துவிட்டது. இப்போது தலைவா வெளியாகப் போகிறது. எதற்கு இப்போது இந்தக் கட்டுரை என்று கேட்கலாம். ஆனால் தலைவா குறித்து எழுதவேண்டிய தேவை இருக்கிறது.
சினிமாவிலிருந்து ஆட்சியதிகாரம் செலுத்த வந்த காலம் போய் சினிமாவை ஆட்சி செய்வதாக ஆட்சியதிகாரம் மாறியிருக்கிறது.
தற்போது தலைவா 20ம் தேதி வெளியாகும் என்று செய்தி வந்துவிட்டது. விஜய் முதல்வருக்கு நன்றி கூறியிருக்கிறார். எதற்கு நன்றி கூறியிருக்கிறார்? இந்த நன்றியின் பின்னணி என்ன?
தலைவா – எப்போது வரும் என்கிற கேள்வியைவிட எல்லோர் மனதில் தொக்கி நினறது பின்வரும் கேள்விகள்தான். ஏன் அந்தப் படத்துக்கு இத்தனை சிக்கல்கள்? என்ன காரணம்? யார் காரணம்? தலைவா அரசியல் படமா? அதில் வரும் வசனங்கள் காரணமா? அல்லது படத்தின் கேப்ஷனாக வரும் ‘டைம் டு லீட்’ என்கிற வார்த்தைகள் காரணமா? அல்லது உண்மையில் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? அதனால்தான் பயந்து திரையரங்க உரிமையாளர்கள் அரசு பாதுகாப்பு அளித்தால்தான் படத்தை திரையிடுவோம் என்று பின்வாங்கினார்களா?
என்ன தான் நடந்தது? வெள்ளித்திரைக்குப் பின்னால் நடக்கும் திரைமறைவு வேலைகள் தான் என்ன? இவை எதுவும் சாமான்யர்களுக்கு தெரியவில்லை. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் எந்த சக்திக்கு அடிபணிந்து இந்தப் படத்தை திரையிட மாட்டோம் என்றார்கள்? உண்மையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? அப்படி மிரட்டல் வந்திருந்தால் காவல்துறைக்கு விஷயம் சென்றிருக்கவேண்டும். அல்லது உளவுத்துறை எச்சரித்திருக்கவேண்டும்.
காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் ‘’திரையரங்கங்களில் தலைவா படத்தை திரையிடாமல் இருப்பதற்கும் காவல்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்று அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பு நமக்குச் சொல்வது என்ன? ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தால் முதலில் போக வேண்டிய இடம் காவல்துறைதானே? காவல்துறைதானே இந்த விஷயத்தில் அறிவுரை கூறி படத்தை திரையிட வேண்டாம். ஒருவேளை அப்படி திரையிட்டால் உங்கள் சொந்த ரிஸ்க் அது என்று கூறியிருக்கவேண்டும். ஆனால் காவல்துறை தனக்குத் தொடர்பில்லை என்று கையை விரித்துவிட்டதால், இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது உண்மையில் வந்ததா என்கிற சந்தேகம் எழுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் உண்மையிலேயே வந்திருந்தால் அதில் தொடர்புடைய இயக்கம் எது? அல்லது எந்த தனிநபர் இதில் தொடர்புடையவர்? அல்லது அது அனாமதேய மிரட்டலா? தொடர்புடைய இயக்கம் இதுதான் என்று கூறாமல், தொடர்புடைய நபரின் பெயரையும் கூறாமல், அனாமதேய மிரட்டல் என்றும்கூட கூறாமல், வெறுமனே மிரட்டல் மிரட்டல் என்று திரையரங்க உரிமையாளர்கள் மிரண்டுபோய் கூறுவது ஏன்? ஒரு அனாமதேய மிரட்டலுக்கு பயந்து ஒரு பெரிய படத்தை திரையிட மறுக்கும் அளவுக்குத்தான் நம் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கிறார்களா? தனக்குப் பிடிக்காத நடிகர் ஒருவரின் படத்தை திரையிடாமல் செய்ய ஒரு அனாமதேய மிரட்டல் போதுமே அப்படியெனில்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாத முட்டாள்கள் அல்ல தமிழக மக்கள். கடந்த பல ஆண்டுகளாக அரசியலையும் சினிமாவையும் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் பின்னே உள்ள அரசியலை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இவ்விஷயத்தில் நிலவும் அமைதிதான் சகித்துக்கொள்ள முடியாதது. விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தடைக்கான சூழல் வேறு.
அந்தத் தடையை இஸ்லாமிய இயக்கங்கள் விரும்பின. ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் தலைவா படத்துக்கு எந்த இயக்கமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தடை கோரவில்லை. சொல்லப்போனால் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதை சுட்டிக்காண்பித்தபின் காட்சிகள் சில வெட்டப்பட்டு, சில வசனங்கள் வெட்டப்பட்டு படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ஆக படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்கின்றன என்றால் அதை வெட்டவும் தயங்காதவர்தான் விஜய். அப்படி இருக்கையில் இந்தப் படத்தின் காட்சிகளுக்காகவே இந்த மறைமுகத் தடை என்பது நகைச்சுவையே. சொன்னால் அவற்றை வெட்டிவிட்டு படத்தைத் திரையிடவே இயக்குநர் விஜய்யாக இருந்தாலும் நடிகர் விஜய்யாக இருந்தாலும் செய்வார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. துப்பாக்கி விவகாரத்துக்குப் பின் அதற்கு பிராயச்சித்தமாக விஜய் ஒரு படத்தில் இஸ்லாமியராக நடிப்பார் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வேறு உறுதிமொழி அளித்தார். அதே எஸ்.ஏ. சந்திரசேகரால்தான் இப்போது விஜய் படத்துக்கும் பிரச்சனை நேர்ந்ததாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற ரீதியில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதும், விஜய்யின் பிறந்தநாள் விழா ஒரு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு ஷோபா திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டபோது அவர் பேசியவை ஆட்சியாளர்களின் காதுகளை எட்டி கோபத்தைக் கிளப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக திரையரங்கங்களை மிரட்டியதாக திரைப்படத் துறையில் பேச்சு இருக்கிறது. மேலிடத்திலிருந்து நேரடியாக தலைவாவுக்கு நெருக்கடி தரும்படியான உத்தரவு வந்ததாகவே சினிமாத் துறையில் பேசப்படுகிறது.
திரைத்துறையினர் இதுகுறித்து பெயர் குறிப்பிட்டு வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். எதுதான் உண்மை என்பதை அறிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாலர் திருச்சி ஸ்ரீதரை தொடர்புகொண்டபோது ‘’தலைவா 23ம் தேதி நிச்சயமாக வெளிவரும். தமிழக முதல்வரின் நல்லாசியுடனும், அரசின் ஒத்துழைப்புடனும் வரும்’’ என்று மட்டும் கூறினார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இதுகுறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர்.
படத்துக்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு நியமித்திருக்கும் குழுவோ திரைப்படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், ‘யூ’சான்றிதழ் பெற்றிருந்தாலும், தமிழ் இளைஞர்களைப் பாதிக்கும் வகையில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளதாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழிக் கலப்பு உள்ளதாலும், இத்திரைப்படம் வரி விலக்கிற்குத் தகுதியானது அல்ல என பரிந்துரை செய்துள்ளது. அப்படியெனில் எப்படி சென்சார் போர்ட் யூ சான்றிதழ் கொடுத்தது? இதில் தமிழக அரசின் குழு கூறுவது சரியா? அல்லது சென்சார் போர்ட் அதிகாரிகளின் தீர்ப்பு சரியா?
விஜய் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் திரும்பத் திரும்ப அரசும் தமிழக முதல்வரும் படம் வெளியாக உதவவேண்டும் என்று கோரிக்கை வைப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா வெடிகுண்டு மிரட்டல் என்கிற விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று.? ஒரு நேரடி பகைக்காக ஒரு படத்தை முடக்குவது என்பது எந்த வகையில் சரி? யாரும் தடைகோராத ஒரு படத்தை சொந்த பகை அல்லது ஈகோவுக்காக வெளியாகவிடாமல் தடுப்பதை ஒரு படைப்புக்கு விடப்படும் சவால் எனலாம்.
தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த தலைவா பட விவகாரம். அந்தப் படம் ஒரு மசாலா படமாகவே இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் அந்தப் படம் என்ன காரணத்துக்காக வெளிவரவிடாமல் காரியங்கள் நடக்கின்றன என்று யோசித்தால் ஒரு படைப்பாக அது வெளிவருவதற்குரிய உரிமையை யாரும் தடுக்க முடியாது என்கிற வகையில் தமிழக அறிவுஜீவிகள் மத்தியில் இது குறித்த கவலைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை வெகுஜன மக்கள் ரசிக்கும் விஜய்யின் படம்தானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். ஆனால் கமல்ஹாசனுக்காக கருத்துச் சுதந்திரம் பேசியவர்கள்கூட இயக்குநர் விஜய்யின் கருத்துச் சுதந்திரத்துக்காக பேசவில்லை.
விஸ்வரூபம் பிரச்சனையில் கமலுக்காக திரண்ட கலையுலகம் விஜய்க்காக திரளவில்லை. ஆங்காங்கே சிம்பு, தனுஷ், நயன் தாரா, உதயநிதி என்று ஒரு சில குரல்கள் மட்டுமே இணையத்தில் கேட்டன. தேசிய ஊடகங்களில் இது குறித்து விவாதங்கள் இல்லை. ‘India’s shame’ என்றோ ‘கலாசார பயங்கரவாதம்’ என்றோ சொல்லாடல்கள் இல்லை. கருத்துரிமை குறித்த பேச்சே எழவில்லை. ஏனெனில் கமலுக்கு எதிராக இருந்தவை சிறுபான்மையான இஸ்லாமிய அமைப்புகள் இருந்தன. இப்போது ‘ம்தரஸ் கஃபே’ படத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பையும் இதனுடன் ஒப்பிட முடியாது. எந்த எதிர்ப்பும் வராத யாரும் தடை கோராத ஒரு படத்துடன் விஸ்வரூபத்தையும் மதராஸ் கஃபேயையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடக் கூடாது.
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அப்போது இஸ்லாமியர்கள் பக்கம் இருந்தாலும், பெரும்பான்மைவாதம் பலர் மனங்களில் வேலை செய்தது. ஆனால் இப்போது தலைவா படத்துக்கு எதிராக நிற்பது யார்? சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்பதால் பலர் வாய்திறக்காமல் இருக்கின்றனர். இந்த மௌனம் அல்லது கண்டுகொள்ளாமை அல்லது பயம் அதிகாரத்தைப் பார்த்து வருகிறது. ஆக, அதிகாரமோ ஆட்சியோ இருந்தால் எவர் வாயையும் மௌனிக்க வைக்க முடியும் என்கிற உண்மை மிக மிக கசப்பாக கண்முன் நிற்கிறது. இன்றைக்கு தலைவா என்கிற படமாக இருக்கலாம். நாளைக்கு வேறு ஒரு படமாக இருக்கலாம். அல்லது ஒரு புத்தகமாக இருக்கலாம். ஒரு கட்டடமாக இருக்கலாம். அதிகார தீவிரவாதம் எவர் மீது வேண்டுமானாலும் பாயலாம். இப்போது அமைதியாய் இருந்ததுபோலவே அப்போதும் எல்லோரும் அமைதியாய் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு அமைதியும் எதில் போய் முடியும்?
ஊரறிந்த ரகசியமொன்றை ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பதை விட்டுவிட்டு உரக்க அரசுக்கு எதிராக குரல்கொடுக்க முனைபவர்கள் வெகு சிலரே.
தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இந்த நிலை மிக மிக ஆபத்தானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
விஜய் என்கிற கலைஞர் மசாலா படத்தை தரக்கூடியவராகவே இருக்கட்டும். ஆனால் ஆட்சியதிகாரத்தின் பெயரால் அவருக்கு இழைக்கப்படும் அநீதியை அறிவுலகம் பார்த்துக்கொண்டிருக்குமானால் அது மிகப்பெரிய தவறு.
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துவது என்பது அழிவின் ஆரம்பம்.
அரசுக்கு எதிரான குரல்கள் எழுவதை அரசு விரும்புகிறதோ இல்லையோ அப்படி குரல் கொடுத்துவிடாமல் ஜாக்கிரதையாக அடக்கிவாசிக்க நினைக்கும் நாம் ஜனநாயகமான சுதந்திர நாட்டின் அடிமைகள்தானோ?
No comments:
Post a Comment