ஆசாராம் சாமியார் இந்தூர் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் போலீசார் இந்தூர் ஆசிரமம் வந்துள்ளனர்,
ஆசிரமம் உள்ளே நுழைந்து கைது செய்யப்படலாம் என தகவல் பரவியுள்ளதால் இங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு தவறானது:
மகன்; ஆசாராம் சாமியார் மீதான குற்றம் தவறானது என்று அவரது மகன் நாராயண்சாய் இன்று மாலை 5 மணியளில் நிருபர்களை சந்தித்து பேசுகையில் கூறினார்..
இவர் மேலும் கூறுகையில்; ஆசாராம் மீதான குற்றச்சாட்டு தவறானது. அவர் குற்றமற்றவர், ஆசாராமுக்கு எதிராக சதி நடந்து வருகிறது. அவர் எங்கும் மறைந்து ஒளியவில்லை. இவருக்கு நரம்பியல் , ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னை இருக்கிறது. இவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். நிலைமை சீரான பின்னர் போலீசாரை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
வட இந்தியாவில் 350 க்கும் மேற்பட்ட இடங்களில ஆசிரமம் கொண்டுள்ள ஆசாராம் சாமியார் மீது இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள செக்ஸ் புகார் காரணமாக இவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் பல குழுக்கள் அமைத்துள்ளனர்.
நேற்று வரை எங்கு இருக்கிறார், எங்கு செல்கிறார் என தெரிந்து இருந்த நேரத்தில் இன்று முதல் இவர் எங்கே இருக்கிறார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயுள்ளனர்.
இதற்கிடையில் மத்திய பிரதேசம் இந்தூரில் சாமியார் இருக்கலாம் என கருதி ஆசிரமம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி., எஸ் எஸ். பி., மற்றும் எஸ். பி., தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவுக்குள் இவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனையொட்டி ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை சமாளிக்க போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் , குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமம் நடத்தி வரும் புகழ் பெற்ற சாமியார் ,ஆசாராம் . பல தொண்டர்களை கொண்டவராக இந்த ஆசிரம சாமியார் ஆசாராம் இருந்து வருகிறார் என்றால் அவரை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இவரது பேச்சை கேட்க திரளானவர்கள் ஆர்வமாக கூடுவதை பார்க்க முடியும். சமீப காலமாக சில புகார்கள் வந்தாலும் இவர் மீது பெரும் அளவில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக கொலை , நில அபகரிப்பு, மோசடியாளர்களுக்கு தஞ்சம் புக இடம் கொடுத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன. ஆனால் இவர் எதிலும் இதுவரை சிக்கவில்லை.
16 வயது இளம்பெண்:
இந்நிலையில் இவர் மீது 16 வயது இளம்பெண் ஒருவர் தன்னை செக்ஸ் தொந்தரவு செய்ததாக புகார் கூறியிருந்தார். டில்லியை சேர்ந்த இவரது பெற்றோர்கள் இந்த சாமியாரின் வழி செல்பவர்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் ஆசிரமத்திற்கு சாமியாரின் பிரசாரம் கேட்க வந்த போது சாமியாரின் தனி அறைக்கு வரவழைக்கப்பட்டதாகவும், இந்நேரத்தில் சாமியார் தவறாக நடந்து கொண்டதாகவும் அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
போதிய ஆதாரம் உள்ளது :
இந்த புகாரை விசாரித்த ஜோத்பூர் போலீசார் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது குறித்து நேரில் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் கமிஷனர் தெரிவித்திருந்தார்.
இவருக்கு நேற்று வரை ஆஜராக அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் சாமியார் தரப்பில் அவரது வக்கீல்கள் கால அவகாசம் கேட்டனர். இதற்கு போலீசார் மறுத்து விட்டனர். இதனையடுத்து இவர் சார்பில் குஜராத் கோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். இதனால் இவர் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: இதற்கிடையில் இவர் தற்போது எந்த ஆசிரமத்தில் இருக்கிறார் என தெரியவில்லை. ஜோத்பூர் ஆசிரமம் முன்பு பத்திரிகையாளர்கள் , போட்டோகிராபர்கள் குவிந்தனர். இதனை பார்த்து ஆவேசமுற்ற சாமியாரின் ஆதரவாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆங்கில செய்தி சேனல் நிருபர்கள் சிலருக்கு இதில் மண்டை உடைந்தது. நிருபர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் மணீஷ்திவாரி, ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் கிடையாது. போலீசார் தனது பணியை செய்வர். அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். என்றார் முதல்வர் .
சாமியார் குறித்து மத்திய பிரதேச இந்தூர் எஸ்.பி., கோவித்ராவத் கூறுகையில் ஆசாராம் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இவரை விரைவில் கைது செய்வோம் என்றார்.
ஜோத்பூர் ஆசிரமத்திற்கு சீல்: இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து பக்தர்கள் வெளியேறுமாறு கேட்டுகொள்ளப்பட்டள்ளனர். இதனையடுத்து ஆசிரமத்தை போலீசார் சீல்வைக்கும் பணியில் ஈடுபடுவர் என தெரிகிறது.
சிறுமி தந்தை உண்ணாவிரதம்: சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் தந்தை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார். இந்த போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர் .
நன்றி : தினமலர் செய்தி
No comments:
Post a Comment