ads

Saturday, 15 March 2014

வேதாளம்!!


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.
     
அஹோய் வ்£ரும் பிள்ளாய் வேதியனே! மனம் தளரா உன் முயற்சியைப் பாராட்டுகிறேன். என்னைக் கொண்டுப் போவது அவ்வளவு சுலபமானக் காரியம் இல்லை. பார்ப்போம். 

சரி, எனக்குப் பொழுது போகவும் உனக்கும் சலிக்பில்லாமல் இருக்கவும் ஒரு கதைச் சொல்கிறேன் கேள்.

பொதுவாக எப்போது நன்மைகள் விளையும் போது அதில் ஏதேனும் ஒரு தீமையும், தீமைகள் விளையும்போது அதனால் ஏதேனும் ஒரு நன்மையும் ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு.

அமுதம் விளைந்த பாற்கடலில்தான் ஆலகாலமும் விளைந்தது. குருக்ஷேத்ரப்போர்க்களத்தில்தான் பகவத்கீதையும் மலர்ந்தது. 

அசுர வம்சத்தில் தோன்றி அரசனொருவனின் கூடா ஆசையினால் ஒரு மாபெரும் இதிகாசம் உருவானது. அதைப்பற்றியக் கதைதான் நான் சொல்லப்போவது.



முதல் மன்வந்திரத்தில் பிரம்மாவின் மனதில் தோன்றிய பிரஜாபதிகளில் ஒருவர் புலஸ்தியர். சப்தரிஷிகளில் ஒருவராகவும் பிரகாசிக்கிறார். இவரது மகன் வைஸ்ரவ முனிவர். இவர்கள் சாண்டில்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

தைத்ய குலத்து அரசர் சுமாலி. அவளது மகள் கைகேசி. சுமாலிக்கு, தன் மகளை ஒரு ஆற்றல் மிக்கவனுக்கேத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், அதன் மூலம் இணையில்லாத ஒரு அரசனை தன் அசுர குலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணம். 

உலகில் உள்ள அரசர்கள் கைகேசியை மணக்க விரும்பியபோதெல்லாம் அவர்கள் தங்களைவிட வலிமை குறைந்தவர்கள் என சுமாலி மறுத்துவிடுகிறான். 

எனவே தவமுனிவரான வைஸ்ராவை தேடிப்பிடித்து திருமணம்  செய்து கொள்கிறாள் கைகேசி. வைஸ்ரவ முனிவருக்கு வேறொரு பெண்ணின் பிறந்தவரே  குபேரன்.


ஒரு முறை வைஸ்ரவ முனிவர் தன் பூஜை அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தச் சமயத்தில் மிகுந்த வேட்கையுடன் அவரை நெருங்குகிறாள் கைகேசி. 

முனிவர் எவ்வளவோ எச்சரித்தும் கைகேசியின் மோக வேகம் அடங்கவில்லை. வேறு வழியின்றி மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறறர் வைஸ்ரவ முனிவர். 

இந்த இணைவில் பிறக்கும் குழந்தை ராட்சத குணத்துடன் பிறக்கிறது. அந்தக் குழந்தையே அசுர குலத்திற்கும் பிராமணக் குலத்திற்கும் கலந்து பிறந்த இராணவன். மோகவெறியில் தர்மநெறி தவறி அடுத்தவரின் மேல் ஆசைப்பட்டவன்.



(இராமர் இவனை மகாபிராமணன் என்றே குறிப்பிடுகிறார். போருக்குப்பின் பிராமணனைக் கொன்ற பாவம் தீர யாகமும் செய்கிறார்.)

இராவணன் சுமாலி எதிர்பார்த்தபடியே ஆற்றல் மிகுந்தவனாக இருந்தான். இவனது சகோதரர்கள் விபீஷணன் , கும்பகர்ணன். சகோதரி மீனாட்சி என்ற சூர்ப்பணகை.

இராவணன் பிறந்தபோதே அவனுக்கு நவரத்தினங்களால் ஆன பதக்கத்தை அணிவிக்கிறார் வைஸ்ரவர். இதன் ஒளிக் கதிரினால தோன்றியதே இராவணனது பத்துத் தலைகள் என்று புராணக் கதையொன்றில் கூறப்படுகிறது. 

இராவணன் கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தவனாக இருந்தான். இணையில்லாத ஆற்றல் பெற்றவனாய் இருந்தான்.

நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்து பண்டிதனாய் திகழ்ந்தான். ஆறு சாஸ்திரங்களையும் ஐயமுறக் கற்றான். சத்திரிய போர்முறையில் ஆற்றல் மிக்கவனானான். சாமவேத கானம் இசைப்பதில் ஆற்றல் மிக்கவரானான். அவனது தந்தை வைஸ்ராவே அவனுக்கு குருவாய் இருந்து போதித்தார்.

தைத்ய சடங்கு சம்பிரதாயங்களைப் பொறுத்த மட்டில் அவனது தாயின் தந்தை சுமலி ராவணனை வழிநடத்தினார். 

அது மட்டுமன்றி இராவணன் வீணையை மீட்டுவதில் வித்தகனாய் திகழந்தான். சாமவேத கானம் இசைப்பதில் நிகரற்றவராய் திகழ்ந்தான். மிகச் சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான். 

இத்தவத்தின் போது இராணவன் தன் தலையை சீவி எறிகிறான். உடனே இன்னொரு தலை முளைக்கிறது. இப்படியே தன் நீண்ட தவ காலத்தில் 9 முறை தன் தலையை சீவி எறிகிறான் இராவணன்.

பத்தாவது முறையாக தலையை சீவும் போது அவனது தீவிர தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா அவன் முன் தோன்றுகிறார்.  

“இராவணா!  இவ்வளவு கடும்தவம் புரியக் காரணம் என்ன? உனக்கென்ன வரம் வேண்டும் சொல்”  என்று கேட்கிறார் பிரம்மா.

எக்காலத்தும் இறவாத வரம் வேண்டும் ஸ்வாமி!  கேட்கிறான். 

பிரம்மா யோசிக்கிறார். ‘அந்த வரம் தர இயலாது. இதற்கு பதில் சாகும்வரை முதுமையடையாமலிருக்கும்  அமிர்தசக்தியை தருகிறேன்’ என்கிறார்/

இராவணன் பிரம்மனிடத்தில், எவராலும் காயம்படாத வரமும் தெய்வங்கள், தேவலோக ஆத்மாக்கள், அரக்கர்கள், பாம்புகள், கொடும்விலங்குகள் போன்ற எந்த சக்தியாலும் கட்டுப் படுத்த முடியாத, அவர்களினால் பாதிக்கப்படாத வரமும், இவர்கள் அனைவரையும் வெல்லக்கூடிய ஆற்றலையும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான்.

பிரம்மா இராவணனுக்கு பத்துத் தலைகளையும், அதீத ஆற்றலையும் தருகிறார்.  மந்திரத்தால் ஆயுதங்களைப் பிரயோகிக்கும் சக்தியையும் அருளுகிறார். 

இதன் பின் தன் தாய்வழிப் பாட்டனார் சுமலியின் படைபலங்களைப் பெற்றுக் கொண்டு இலங்களையில் தன் ஆதிக்கத்தை மேற்கொள்ள  வருகிறான்.

அதுவரை இலங்கையை ஆண்டு வந்த குபேரன் தன் தந்தை வைஸ்ரவாவின் ஆலோசனைப் படி ஸ்ரீலங்காவை இராவணனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அளகாபுரிக்குச் சென்று விடுகிறான். 

தேவசிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு இலங்கையை அழகாய் வடிவமைத்திருந்தான் குபேரன். 

இலங்கையை மேலும் செல்வச் செழிப்பான நகராக மாற்றியமைக்கிறான்.  இராவணனின் ஆட்சியில் மக்கள் துன்பங்களின்றி மிகவும் மகிழ்ச்சியாய் வா£ந்தனர். சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய இராவணன், எவராலும் வெற்றி பெறமுடியாத வல்லமையும் பெற்றவனாய் விளங்கினான்.

தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த சிவப் பக்தனாகவும் சிவதாண்டவம் என்கிற நடன வழிபாட்டில் இணையில்லாதவனாகவும் சாம கானம் இசைப்பதில் வல்லவனாகவும் திகழ்ந்த இராவணன் கைலாயம் சென்று சிவனையெண்ணி கடுமையான தவம் இயற்றுகிறான். 

அப்போது செய்த யாகத்தில் தன் தலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி ஆகுதியாய் இடுகிறான். சிவன் இராவணனின் முன் தோன்றி அவனுக்கு வேண்டிய வரம் தருகிறார். அவன் பத்து புஜங்களுக்கும் வலிமை தருகிறார். 

மேலும் வலிமைப் பெற்ற இராவணன் மூவுலகங்களையும் வெல்கிறான். தேவர்கள், ரிஷிகள், நவக்கிரகங்கள், நாகங்கள்  அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். சூரியனும் இராவணனைக் கேட்டே உதிக்கவும் மறையவும் செய்தான். 

ஈடு இணையற்ற சக்திமிக்கவானாய் திகழ்ந்த இராவணன், ஒரு முறை கைலாய மலையையே தன் புஜவலிமையால் தூக்க முயற்சிக்கிறான்.  பார்வதி பயப்படுகிறார்.

சிவன் தன் பாதபெருவிரலால் அழுத்த இராவணனின் கைகள் மலையின் அடியில் மாட்டிக் கொள்கிறது. நாரதரின் வீணையை வாங்கி சாமகானம் இயற்றி சிவபெருமானின் மனதை குளிரவைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான் இராவணன். சிவன் சந்திர ஹாஸா என்ற வாளை இராவணனுக்கு பரிசளிக்கிறார். 

தன் கடுமையான தவத்தால் இராவணன் சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் ‘பெற்றுக் கொண்டு இலங்கைச் சென்று கொண்டிருக்கிறான்.

ஆத்மலிங்கத்தை இராவணன் வழிபாடு செய்வதன் மூலம் சாகாநிலையை பெற்றவனாகி விடுவான், அதனால் அனைத்து உலகங்களும் நீண்ட காலம் அவனுக்கு அடிமையாகவே இருக்க நேரிடுமே’ என்று  நினைத்த நாரதர் அதைத் தடுக்க எண்ணுகிறார். 

விஷ்ணு சூரியனை மறைக்கிறார்.  இராவணன் தன் சாயங்கால அனுஷ்டானங்களைச் செய்ய எண்ணுகிறான்.  ஆத்மலிங்கத்தை கீழே வைத்தால் பிறகு அதை எடுக்க முடியாது என்பதினால் அப்போது அங்கே அந்தணச் சிறுவனாய் வந்த வினாயகரிடம் தந்துவிட்டுச் செல்கிறான். விநாயகர்க லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். அந்த இடமே கோகர்ணம் என்ற இடமாகும். 

இராவணனின் பக்தியினால்   சிவன் அவன் மேல் அன்பு கொண்டவராக இருக்கிறார். எனவே இராவணன் கைலாயத்தை தூக்க முயன்றபோதும், நந்தி பகவானிடம் வாதிட்டு இம்சை செய்த போதும் பெரிய தண்டனை எதையும் இராவணனுக்கு அவர் தரவில்லை.

இது மட்டுமல்லாமல் இராவணனுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதை பாகவத புராணம் கூறுகிறது.  இராவணனும் கும்ப கர்ணனும் கைலாயத்தில் துவாரபாலகராய் இருந்தவர்கள். ஜெய விஜயர்கள் என்று அழைக்கப்ட்டவர்கள். 

ஒருமுறை சனகாதி முனிவர்கள் விஷ்ணுவை சந்திக்க வரும்போது உள்ளே நுழைய விடாமல் அவர்களை தடுத்து வாதம் புரிகின்றனர். இதனால் எழுந்த சத்தத்தில் விஷ்ணு வெளியே வருகிறார். சனகாதி முனிவர்கள் ஜெய விஜயர்களின் மேல் குற்றம் சாட்டுகின்றனர். 

அவர்களின் மனதைப் புண்படுத்தாமலும், தங்கள் கடமையைச் செய்த  ஜெய விஜயர்களுக்கு  பாதக மில்லாமல் தண்டனை கொடுக்கவும் எண்ணுகிறார். ஏழு ªஜ்ன்மங்கள் மண்ணுலகத்தில் அவதரிக்க வேண்டும். அல்லது மூன்று பிறவிகள் அசுர குலத்தில் பிறந்த என்னை எதிர்த்து என்னால் சம்ஹரிக்கப் படவேண்டும் என்று கூறுகிறார்.

இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கின்றனர் துவாரபாலகர்கள். 

சத்ய யுகத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபுவாக தோன்றி விஷ்ணுவை எதிர்த்த துவார பாலகர்களை வராக அவதாரம் எடுத்தும், நரசிம்ம அவதாரம் எடுத்தும் விஷ்ணு சம்ஹாரம் செய்கிறார்.

திரேதாயுகத்தில் இராவண கும்பகர்ணனாக அவதரித்தவர்களை இராம அவதாரம் எடுத்து அழித்து தன்னுடன் சேர்த்துக கொள்கிறார்.  

துவாபர யுகத்தில் சிசுபாலன், தந்தவக்ராவாக அவதரித்தவர்களை கிருஷ்ண அவதாரம் எடுத்த காலத்தில் சம்ஹரிக்கிறார். 

எனவே இராவணன்  சிவ பக்தன் மட்டுமல்லாமல், திருமாலின் சேவகன் என்பது தெரிய வருகிறது. 

இராவணனின் மனைவி மண்டோதரி மாயாசுரன் மற்றும்  ஹோமா என்ற அப்சரஸின் மகளாக கருதப்படுபவள். அயோனிஜா அதாவது  சாதாரண மனிதர்களைப்போல் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பெடுக்காதவள். 

சாகும்வரை சுமங்கலியாக வாழும் வரம் பெற்றவள். எனவேதான் இராவணன் போரில் தோற்று விழுந்த  போதும் இறந்தவர்களின் லோகம் செல்லாமல் பூலோகத்திலேயே இருந்தான். மண்டோதரியின் மறைவுக்குப் பிறகே அவன் தன் மனைவியுடன் மேலுலகம் சென்றான். 

வேதியா! இதுவரை இராவணனின் பிறப்பினையும், சிறப்பினையும் அறிந்து கொண்டாய். 

ஈடு இணையற்ற சிவபக்தனாகவும், மூவுலகங்களையும் ஆள்பவனாகவும், முற்பிறவியில் திருமாலின் மெய்க்காவலனாகவும் இருந்த இராவணன்  சிறந்த பாரம்பரியத்தில் பிறந்தும், வலிமையுள்ள ஏழு புதல்வர்களை பெற்றிருந்தும், ஏன் இறுதியில் துயருற்று இறந்தான்? 

ஏன் இன்றுவரை தீயவனாகவே சித்தரிக்கப்ப்டடு அனைவராலும் வெறுக்கப்படுகிறான்.  இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லா£மல் மௌனம் சாதித்தால் உன் தலை வெடித்து சிதறும்’ என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  நீ ஆரம்பத்திலேயே கூறிவிட்டாய் கூடா ஆசையென்று .. அது இராவணனின் அழிவுக்கு காரணம். அவப் பெயருக்குக் காரணம். 

ஆசைகள் இல்லா மனிதன் இலலை. அவை தர்மநெறிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். தன் தவ வலிமையால் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் இராவணன் அடுத்தவனின் மனைவி மேல் கொண்ட ஆசையில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை.

அடுத்தவன் மனைவி மேல் ஆசைக் கொள்வது பெரிய பாவம் என்பது புராணக்காலத்திலேயே இருந்த நெறியாகும்.  அப்படி ஆசைப்பட்டவர்கள் அடைந்த தண்டனையையும் நாம் காணமுடிகிறது. 

தேவலோகத்திற்கே அதிபதி இந்திரன். கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மேல் ஆசைகொண்டு சாபம் பெற்று உடல் முழுதும்கண்களாக மாறி அவமானப்பட்டு ஓடி ஒளிந்து, இறுதியில் சிவனையெண்ணி தவமிருந்து ஒவ்வொரு கண்ணாக மறையப் பெற்றான் என்பதைப் பார்த்தோம். இதனால்தான் தேலோக அதிபதியான இந்திரனின் புகழ் பெரிய அளவில் போற்றப்படுவதில்லை. 

தன் குருநாதர் பிரகஸ்பதியின் பத்தினியான தாரை என்பவளின் மேல் மோகம் கொள்கிறான் சந்திரன். அதனால் தேய்ந்து அழியும் சாபம் அடைகிறான். 

சிவனை சரணடைந்து பின் சாப விமோசனம் பெறுகிறான். இதனான்தான் ‘இந்திரன்  கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ என்றப் பழமொழியே நிலவுகிறது.

குரங்கினமாக இருந்தாலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த வாலி, முன் ஜென்மத்தில் இந்திரனாக இருந்தவன் என்று கூறப்படுகிறது. சிறந்த சிவபக்தன் , சிறந்த அரசனாக, பராக்கிரமசாலியாக இருந்தான். இருப்பினும் தன் சகோதரன் சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டதால் இராமனால் வதைக்கப்பட்டான்.  சரித்திரத்திலும் அவன் புகழ் மங்கியே சித்தரிக்கப்படுகிறது. 

இவ்வளவு ஏன்? திருமாலே ஒரு முறை சிவனுக்கு உதவும் பொருட்டு ஜலந்திரன் என்ற சமுத்ரராஜனின் மனைவியான பிருந்தையை ஜலந்திரன் வேஷத்தில் அரவணைக்கிறார். 

ஏனென்றால் பிருந்தையின் பதிவிரதாதன்மை  காரணமாக ஜலந்தரனை சிவபெருமானால் அழிக்க இயலவில்லை.  எனவே விஷ்ணு ஜலந்திரன் உருவிலேயே வந்து பிருந்தையின் பதிவிரதத் தன்மையை கலங்கப்படுத்த ஜலந்திரன் கொல்லப்படுகிறான்.  

ஆனால் வந்தது விஷ்ணு என்பதை அறிந்ததும், விஷ்ணு பக்தையாக இருந்தும், தன் பதிவிரதத் தன்மை களையக் காரணமாக விஷ்ணுவின் மேல் சினமுற்று சாபமிடுகிறாள். 

‘போலிவேடத்தில் இன்னொருவனின் மனைவியைக் களங்கப்படுத்தியதால் நீயும், உன் மனைவியை இழந்து அழுது கலங்குவாய் என்று சாபமிடுகிறாள். அதை ஏற்றுக் கொள்கிறார் விஷ்ணு. அதனால்தான் இராம அவதாரத்தில் தன் மனைவியை இழந்து கலங்குகிறார். 

இராவணன் அழகான மனைவிகளைப் பெற்றிருந்தும் குபேரனனின் மகனுக்கா நிச்சயிக்கப்பட்ட ரம்பையை வலிய அபகரிக்கிறார்.’ நான் உன் அண்ணன் மகனின் மனைவியாகப் போகிறவள், உனக்கு மகள் என்ற ஸ்தானத்துக்குரியவளாகிறவள் என்னை விட்டுவிடு’ என்கிறாள் ரம்பை. 

ஆனாலும அவளைக் கவர்ந்து வருகிறான் இராவணன். எனவே கோபமுற்ற குபேரனின் மகன், ‘உன்னை விரும்பாத எந்த பெண்ணையும் நீ வலுக்கட்டாயமாகத் தொட்டாலும் அக்கணமே உன் தலை வெடித்து போகட்டும்’ என்று சபிக்கிறான்.

இவ்வளவு நிகழ்ந்திருந்தும், நான்கு வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும், ஆறு சாஸ்திரங்களில் வல்லவனாக இருந்தும், சிவனின் தீவிரப் பக்தனாயிருந்தும், நவக்கிரங்களையும் தன் படிக்கட்டுகளாய் அமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவனாக இருந்தும், தர்மநெறியை மீறி பஞ்ச பத்தினிகளில் ஒருவரான சீதையைக் கடத்தி வருகிறான் இராவணன். அதானாலேயே அழிவைத் தேடிக்கொள்கிறான். இழிந்தவனாக சித்தரிக்கப்படுகிறான்.  

வேதாளமே! இங்கு நாம்  இரண்டு விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்று தகாத பெண்ணாசை அழிவையேத் தரும். அடுத்து கைகேசி மோக வெறி கொண்டு, இறைவனை வழிபடும நேரத்தில் வைஸ்ரவாவுடன் தாம்பத்ய உறவு கொண்டதால் உதித்தவன் கைகேசியின் முதல் குழந்தையான இராவணன். அவன் மோக வெறியாலேயே அறிவிழக்கிறான். 

இதிலிருந்து தாம்பத்ய உறவு கொள்வதற்கும் நேரம் காலம் இருக்கிறது என்பது தெரிகிறது. எனவேதான் திருமணம்ஆனதும் முதலில் சாந்தி முகூர்த்தம் என்ற நேரத்தை கணிக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது.

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

Thursday, 13 March 2014

தங்கம் வாங்க போறீங்களா..?!



நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். 

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! 

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். 

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். 

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். 

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...

உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? 

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? 

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? 

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? 

ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...

அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

அதுவும் உங்களால் தான் முடியும்...


நன்றி :- முகநூல் நண்பர்கள்


தகவல் திரட்டு: வெங்கட்ராமன்

Thursday, 6 March 2014

கடவுள் இருக்கிறரா?


கடவுள் இருக்கிறரா? 

இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்பதற்கான காரணம்.. கடவுள் இல்லை என்ற அவநம்பிக்கையினால் அல்ல..   கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணரவும் முடிகிறது. 

ஆனால் இந்தக் கேள்வி  எழுவதற்கு  , இருக்கிறார் என்ற உண்மையை யாராவது தேங்காய் உடைத்ததைப் போல் பளிச்சென்று தெளிவாக விளக்கமாட்டார்களா  என்ற ஆசைதான் காரணம். இல்லையென்று நினைப்பவர்களும்  உணர்ந்து கொள்ளட்டுமே என்ற ஆசைதான் காரணம். அந்தத் தேடுதலுடன்  சமீபத்தில் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். 

பிரபஞ்சம் எப்போது?  எப்படித் தோன்றியது?  

ஒன்று தேவும் உலகும் 
அன்று நான்முகன் தன்னோடு 
தேவருலகோடு உயிர் படைத்தான். 

          -நம்மாழ்வார் திருவாய் மொழி

கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதை அறிவியலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அந்தக் கடவுளைப் படைத்தது யார் என்ற கேள்வி அந்தப் பதிலுடனேயே வருவதைத் தவிர்க்க முடியாது. தன்னையும் படைத்து , 

தன் விதிகளையும் படைத்துக் கொண்டது பிரபஞ்சம்  என்ற சித்தாந்தத்திற்கு விளக்கம் ஏதும் இருக்கிறதா? என்பதுதான் அறிவியலின் தேடல்.  கிட்டதிட்ட அறிவியலின் தேடல் என்பது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியுமா என்றத் தேடல்தான். 

 இத்தேடலில் பிரபஞ்சம் எப்படி உருவானது? எப்போது உருவானது என்பதை அறிவியல்    நிரூபித்து விட்டது. 

விஞ்ஞானத்தின்   தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்ட ஆய்வுகளின் வழி, (டிப்ராக்ஸியின் சமன்பாடு, க்வாண்டம் விதிகள், பாலியின் எக்ஸ்ளுஷன் பிரின்சிபல், ஹைசன்பர்க்கின் நிச்சயமற்ற தத்துவம் என்று பலதும் இருக்கின்றன. 

நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன், சந்திரபோஸ், வைன் பார்க்,  ஸ்டீபன் ஹாப்ஃக்கின்ஸ் போன்றோரின் ஆய்வுகளும்  மற்றும் தற்காலத்திய அணுவிஞ்ஞானிகள் அனைவர்களின்  முயற்சிகளும் ) 

 இந்த பிரபஞ்சம் முழுவதும், பிரபஞ்சத்தின் இருக்கும் அனைத்தும்,  திடப்பொருள், சக்தி என்ற இருவகையில் (மாலிக்யூக்கள் எனும் நுண் அணுக்களால்)  ஆனது. திடப்பொருள் என்பதில் கண்ணில் நாம் காணும் அனைத்து விதமான பொருட்களுமே.  நான்  நீங்கள், நாற்காலி, மேஜை , நாய்க்குட்டி, லோரி,கார், கிரகங்கள்  எல்லாமே..

இவைகளின் உருவாக்க ஆதாரங்கள் கார்பன், பாஸ்பரஸ், இரும்பு துத்தநாகம் போன்ற தனிமங்கள். இந்த தனிமங்களைப் பிரித்தால் ப்ரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான்கள், இவற்றையும் பிரித்தால் ஹேட்ரான்கள் லெப்டான்கள்.  

 சக்தி எனும் போது, ஒளிக்கதிர்கள், எக்ஸ்ரே, உஷ்ணம் , ரேடியே அலைகள் போன்றவை . இவை நான்கு விதமான ஆதார ஈர்ப்பு விசைக்குள் வருகின்றன.  அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை, அணுக்கருவுக்கு வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை, மின்காந்த விளைவு, புவி ஈர்ப்பவிசை மொத்தம்  நான்கு சமாச்சாரம். 

இவற்றையும் ஒருமைப் படுத்த இயலும் என்று இயற்பியல் கூறுகிறது.  திடப்பொருள் சக்தி இரண்டுமே ஒன்றுதான் என்பதையும் அறிவியலால் நிரூபிக்க முடிகிறது. 

அறிவில் கண்டுபிடிப்பின் படி,  பிரபஞ்சத்தின் உண்மை என்று சொல்வது கீழ்வரும் 2 விசயங்கள்தான். 
  
1. பௌதிக இயற்பியல் விதிகள்.  இந்த விதிகளின் படி பிரபஞ்சத்தின் அத்தனை திடப்பொருள்களும் சக்திவடிவங்களும் இயங்குகின்றன. இந்த விதிகள் கணித சமன்பாடுகளாக விவரிக்கப்படுகின்றன. 

2. இந்த விதிகள் செயல்பட துவங்கிய போது இருந்த ஆரம்பநிலை. இதை இனிஷியல் கண்டிஷன் என்கிறார்கள், இதை விளக்கி ¤விட்டால் அதற்கு அடுத்த நிலைகளை விதிகளைப் பயன்படுத்திச் சொல்லி விட முடியும். இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கி விட முடியும்.

அந்த ஆரம்பம் நிலை..

 பதினைந்து பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்(ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3,00,000 மைல்கள்  ) ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பகுதியான மில்லி செகண்டில்    சூன்யத்தில் ஒரு  வெடிப்புத் தோன்றியது. 

அந்த வெடிப்பின் போதே  காலமும் நேரமும் தோன்றியது. இயற்பியல் பௌதிக விதிகளும் அப்போதே ஆரம்பமானது.  இந்த ஆரம்பத்தை ஒருமித்த கணமாக (சிங்குலாரிட்டி) அறிவியல் கூறுகிறது.  

வெடித்த  அந்த மில்லி செகண்டில் பிரபஞ்சம் சர சர வென பெரிதாகிக்கொண்டே வளர்ந்து  இப்போதிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது.   நம் பிரபஞ்சம் இப்படித்தான் வெடிப்பில் உருவாகியது. இது தான் பிரபஞ்சம் உருவானதற்கான பிக்பேங்க் தியரி. காஸ்மாலஜி என்னும் பிரபஞ்ச அறிவியல்.

சரி  எப்போது எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பதை அறிவியல் கூறிவிட்டது. எப்படி அதை உறுதிப் படுத்தியது? 

 1960 ல் ராட்சத ரேடியோ டெலஸ்கோப்புகள் வந்து விட்டன. அதன் உதவியால் விண்வெளியின் ஆழத்துக்குள் நுட்பமாக ஆராயும் போது, அதன் ஆரம்ப நாட்களிலிருந்து இப்போதுதான் நம்மை வந்து சேரும் பிரபஞ்சத்தின் சித்திரத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது, திட்டவட்டமாக அப்போதிருந்த பிரபஞ்சமும் இப்போதிருக்கும் பிரபஞ்சமும்வேறு வேறு.  

பிரபஞ்சம் பல மடங்காக விரிவடைந்திருக்கிறது, வலுவிழந்திருக்கிறது என்பது தெளிவாகியது. 1965ல் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லா திசைகளிலும் ஒரு லேசான உஷ்ணம் பரவியிருப்பதை கண்டுபிடித்தார்கள். அது இப்பிரபஞ்சம் ஆதியிலிருந்து இப்படியேத்தான் இருக்கிறது என்ற தத்துவத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது.  

இந்த உஷ்ணம் பிரபஞ்சத்தின் ஆரம்பமான மகாவெடிப்பில் மிச்சமிருக்கும் உஷ்ணம். அதாவது வெடிகுண்டு வெடித்த பின் அந்த இடத்தில் மிச்சமிருக்கும் சூடான புகைபோல. 

ஆக பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரவாரமான ஆரம்பம் இருந்திருக்கிறது. அது வெடித்து பரவி ஒரு தீர்மானமில்லா முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவியல் தெளிவாக இந்த கண்டுபிடிப்புகளின் வழி அறிந்து கொண்டது. 

கணக்குச் சமன்பாடுகள்  விண்வெளியில் மிஞ்சியிருக்கிற உஷ்ணம் இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் அதர்ச்சிகரமான பிறந்த தேதியின் அத்தாட்சிகள் தெரிகின்றன. கருவிகள் மூலம் பார்க்க முடிகிற 15 மில்லியன் ஒளி ஆண்டுகள் என பிரபஞ்சத்தின் வயதும் தெரிகிறது.

பிரபஞ்சத்திற்கு பிறப்புமில்லை அழிவுமில்லை என்பதுதான் மனித இனத்தின் புராதன நம்பிக்கை. இந்த இரண்டும் அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 

அந்த சிங்குலாரிட்டி கணத்தில் பிரபஞ்சமும் அதனுடன் சேர்த்து காலமும் தூரமும் உருவாயின எனும் போது சிருஷ்டி கர்த்தாவை அனுமானிப்பது கஷ்டமாய் இருந்தது. 

இயல்பியல்  ( குவாண்டம் )விதிகள் “அந்த வெடிப்புக்கு முன் காலமில்லை, நேரமில்லை  அந்தவெடிப்பு நிகழுமுன் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. அந்த வெடிப்பு இயல்பாய் நிகழ்ந்த ஒன்று,  அப்படி நிகழும் சாத்தியம் இருக்கிறது,  இயல்பாய் பிரபஞ்சம் தோன்றுவதற்கு குவாண்டம் விதிகளின், ஹைசன்பர்க்கின் தத்துவம் வழி இடம் இருக்கிறது” என்கிறது. 

( விளக்கம் தேவைப்படுபவர்கள் ஃஸ்டீபன் ஹாக்கின்ஸின் தி பிளாக் ஹோல்ஸ் என்ற தொகுப்பில் உள்ள தி ஒரிஜன் ஆப் தி யுனிவர்ஸ் என்றக் கட்டுரையைப் படிக்கவும்) 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த திடப்பொருள், மொத்த சக்தி இரண்டும் ஒன்றுக்கொன்று  ஒன்று சமமாக, எதிராக இருப்பதால் பிரபஞ்சத்தின் ஆரம்பகணம் எனபது குவாண்டம் கிரேவிட்டி தத்துவப்படி  சூன்யத்திலிருந்து உண்டாகியிருக்கலாம் ஃபேய்மன் என்பவர் விளக்கியிருக்கிறார்.  

 குவாண்டம் விதிகள்  

நுட்பான அணுத்துகள்களுக்கானவை அவை எப்படி பிரம்மாண்ட பிரபஞ்சத்திற்குப் பொருந்தும்? என்றொரு கேள்வி எழுகிறது.

 பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் அது மிகச் சிறியதாக மிக அடர்த்தியாக இருந்திருக்கிறது எனவே குவாண்டம் விதிகள் அந்த பிரபஞ்சத்திற்கு செல்லுபடியாகும் என்று  பதில் சொல்லப்பட்டது. 

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ், ஜேம்ஸ் ஹார்ட்டில் போன்றோர் இதை நிரூபித்திருக்கிறார்கள். அந்த ஆரம்ப கணத்தை ப்ளாங்க் கணம் என்கிறார்கள். குவாண்டம் விதிகளைக் கண்டுபிடித்த (விஞ்ஞானி மாக்ஸ் ப்ளாங்கின் பெயரால்) 

எந்த விதியையும் மீறாமல் எந்த விதிக்கும் காரணத்துக்கும் தேவையில்லாமல் பிரபஞ்சம் தோன்றியிருக்கலாம் என்பதே அறிவியலின் முடிவு.

இதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? பரிதோசதனை மூலம் நிரூபணம் இருக்கிறதா என்றால்..  குவாண்டம் உலகில் இன்றும் சக்தி துகள்களாகவும், துகள் சக்திகளாகவும் அவ்வப்போது தன்னிச்சையாக தோன்றுகிறது, மாறுகிறது. இன்றைய பரிசோதனைகளில் வெளிப்படும் வெளிச்சங்கள் ஃபோட்டான்கள் அனைத்தும் இப்படி எதிர்பாராமல் தன்னிச்சையாகத் தோன்றுபவையே. க்வாண்டம் விளைவுகள் அனைத்து இப்படிப்பட்டவையே என்று காரணம் காட்டுகிறார்கள்.

இவ்வாறாக அறிவியலாளர்கள் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் காட்டுகிறார்கள்.  


பிரபஞ்சம் இப்படி ஒரு வெடிப்பில் ஒரு கணத்தில் உருவானது என்பது நீரூபிக்கப்பட்டுவிட்டப் பின்னர் அந்தக் கணத்தை ஏற்படுத்தியவர் கடவுள் என்றால் அவர் பிரபஞ்ச ஆரம்பம் ஒரு வான வேடிக்கை போல் இருக்கட்டும் என்று  வெடியை பற்ற வைத்து விட்டாரா?  

என்றக் கேள்வி எழுகிறது. கடவுள்  நம்பிக்கை கேள்விக்குறியாகி விடுகிறது..

பிரபஞ்சம் ஏன் தோன்றியது?

 இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணம் என்ன?  மனிதனுக்காகவா? 

 இந்த பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையையும் விதிகளையும் உன்னிப்பாய் பார்க்கும் போது    அதில் ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் இருப்பதை காண முடிகிறது. 

எத்தனையோ விதத்தில் இந்த பிரபஞ்சம் ஆரம்பித்திருக்கலாம்.. எத்தனையோ விதத்தில் இதன் விதிகளும் அமைந்திருக்கலாம்.. ஏன் இந்த ஆரம்பமும் ஏன் இந்த விதிகளும்?

இவை எப்படித் தீர்மானிக்கப்பட்டன? ஏன் இவை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன?

 உதாரணத்திற்கு  அணுவுக்குள் இருக்கும் ப்ரோட்டான்கள், நியுட்ரான்களுக்கு இடையே உள்ள எடை வித்தியாசம் இரண்டு எலக்ட்ரான்களுக்குச் சமம்.

இப்படி இல்லாமல் வேறு விதமாக இருந்திருந்தால்  நியூக்கிளியைடுகள் இலலை. அதாவது உயிர்களே உருவாகியிருக்க முடியாது. அதே போல் ப்ரோட்டான் ஈர்ப்பு எடை என்று ஒரு விசயம் இருக்கிறது. இது சற்று வேறாக இருந்திருந்தால் காலக்ஸிகள் இல்லை.. சூரிய சந்திரன்கள் இல்லை.  சூரியனிலிருந்து பிரிந்த பூமி இல்லை. நீங்களும் நானும் இல்லை.

அதே போல் பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத்தில் வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறைவாக இருந்திருந்தால் அது சுருங்கி மடிந்திருக்கும். வேகம் சற்று அதிகமாகியிருந்திருந்தால் நட்சத்திரங்கள் இல்லாமல் போய் சாம்பலாகி உதிர்ந்திருக்கும். 

எல்லாவற்றிற்கும் ஏனிந்த தனித் தன்மை?  கடைசியில் மனிதன் தோன்றி இந்தக¢கேள்வியைக் கேட்பதற்காகத்தான் என்கிறார்கள்.

இந்த பிரபஞ்சம் உருவாக எத்தனையோ  சாத்தியக் கூறுகள் உள்ளன. விதிகள் உள்ளன. ஆனால் இந்த ஆரம்பநிலையும் விதிகளும் வேறுவிதமாக இருந்திருந்தால் புத்திசாலி மனிதன் தோன்றியிருக்க மாட்டான்.. இந்தக் கேள்வியே உருவாகியிருக்காது  என்பதே பதில். ( இதை அன்த்ராபி தத்துவம் என்கிறார்கள்)

 ஆனாலும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் கடுகு போல் இருக்கும் பூமி ஓர் அற்பமான கிரகம். சூரியக்குடும்பமே இந்த ஸ்பைரல் காலக்ஸியில் ஒரு ஓரத்தில் இருக்கிறது. இவ்வளவு அற்பமான   மனிதனுக்காக  கோடானு கோடி காலக்ஸிகள் உடைய பிரபஞ்சம் உண்டாகியிருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக இருக்கிறது.  

ஆறடி உள்ள மனிதனுக்காக கோடிக்கணக்கான கேலக்ஸிகள், நட்சத்திரங்கள்.. நம் கண்களுக்கே புலப்படாத  தூரத்திற்கு வான் வெளியில் நீண்டு பரவியிருக்கின்றன என்பது அதிகப்படியானதாகத் தெரிகிறது. எனவே இந்த அன்த்ராபி தத்துவம் அடிபட்டு போய்விடுகிறது. 

 பிரபஞ்சம் எப்படி ஆரம்பித்தது என்ற கேள்விக்கு விடை அளித்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூட ஏன் பிரபஞ்சம் தன்னை ஆரம்பிக்கத் தீர்மானித்தது? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்று தன் தி ஒரிஜன் ஆப் தி யுனிவர்ஸ்  என்ற கட்டுரையின் முடிவில் கூறுகிறார். 

 பிரபஞ்சத்திற்கு ஒரு  விளக்கம் இருக்கிறது. அதை பிரபஞ்சத்தால் விளக்க முடியாத போது.  பிரபஞ்சத்தை விட மேலான ஒரு தத்துவம் தேவைப்படுகிறது. அதைக் கடவுள் என்று சொல்லலாம் என்றால் அந்தக் கடவுளைப் பற்றி விளக்க முடியாது. 

ஒருவேளை கடவுளே தன்னைத் தானே விளக்கிக்  கொண்டால்தான் உண்டு என்பதே ஒரே வழி. 

கடவுள் நம் அறிவதற்கு அப்பாற்பட்டவராக இருக்கலாம் அல்லவா?  எல்லா காரணத்தையும் கடவுள் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறாரா? 

 பரந்த தெய்வமும் பல் உலகும்
 படைத்து அன்று உடனே விழுங்கி 
 கரந்து உமிழ்ந்தது கடந்து
 இருந்தது கண்டும் தெளிய கில்லீர்

 என்று நம்மாழ்வாரைப் போல், அவ்வளவு உறுதியாய் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.  

நவீன விஞ்ஞானிகள் பிராஸஸ் தியாலஜி என்ற முறையில் சிந்திக்கிறார்கள்.
இந்த பிரபஞ்சம் திடப்பொருளும் சம்பவங்களும் மட்டுமல்ல. ஒரு திசையில் செல்லும் நிகழ்வு என்கிறார்கள். 

இருப்பதை விட ஆவது முக்கியம் என்கிறார்கள். எதிர்காலத்தில் நிகழ்வதை, நிகழ்காலத்தில் தீர்மானிக்கப்படாத உலகை அவர்கள் சொல்கிறார்கள்.  சாத்தியக்கூறுகள் பல உள்ளன. இயற்கை அவைகளை தேர்ந்தெடுக்கிறது. ஒரு மலையோ , ஒரு நதியோ , ஒரு மனிதனோ வெறும் அணுத்துகள்களின் கூட்டம் என்று சொன்னால் மட்டும் போதாது  இவை அனைத்தும் சூழ்நிலையைச் சார்ந்த திறந்த அமைப்புகள் என்கிறார்கள்.

மனிதன் என்பவன் அணுக்கூட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல.. அவன் ஒரு தகப்பன், ஒரு தலைவன், ஒரு தச்சன், ஒரு கொலைகாரன் என்று அவனுக்கு பலவித அடையாளங்கள் சூழ்நிலைக்கேற்ப உள்ளன. 

முழு உலகும் ஒன்றுடன் ஒன்று சார்ந்த கூட்டமைப்பு என்கிறார்கள். கேயாஸ் தியரி, நான் லீனியர் சிஸ்டம்ஸ் போன்றவை அண்மைக் கால விஞ்ஞானிகளை ஈர்க்கின்றன. 

 ஆல்ஃப்ரெட் வெல் நார்த்வைட் ஹெட் என்ற கணிதவியல் தத்துவாதி,

 “கடவுள் என்பவரின் பொறுப்பு உலகை ஒழுங்குப்படுத்துவது, நேரடியாக இல்லாமல் பல சாத்தியக் கூறுகளை அமைப்பதன் மூலம் செய்கிறார். அவைகளில் ஒன்று பிரபஞ்ச இயக்கத்தை இயற்பியல் விதிகளின்படி செயல்படுத்துவது என்கிறார். 

அவருடைய சிருஷ்டி நல்லதை நோக்கிச் செல்லவேண்டும் என்கிற ஒரே குறிக்கோள் மட்டுமே,  கடவுள் என்பவர் பிரபஞ்சத்தைப் படைத்தது மட்டுமல்லாமல் , அதன் இயக்கத்திலும் முன்னேற்றத்திலும் பங்கு கொள்வது, என்ற சித்தாந்தத்தை முன் வைக்கிறார் வைட். நல்லது நடக்கிறது. பிரபஞ்சம் மெல்ல மெல்ல தன்னை ஒழுங்குப்படுத்திக் கொள்கிறது என்கிறார். 

கடவுள் எல்லாம் தெரிந்தவர் என்றில்லாமல், பிரபஞ்சத்தின் மாறுதல்களை உண்டாக்கி அதை நடத்திச் செல்பவர் என்கிறார். 

 மனித உயிர் இவ்வளவு சிறப்பாக பரிணமித்து வந்தருப்பதைப் பார்க்கும் போது இது உண்மையாக இருக்கலாம் என்றுத் தோன்றுகிறது. 

 கடவுள் பற்றிய முழு உண்மையை மனித மனதால் அறிந்து கொள்ளமுடியாது என்றேத் தோன்றுகிறது. காரணம் மனிதனுக்கு எல்லைகள் உள்ளன.

மனிதன் மெல்ல மெல்ல விஞ்ஞான கண்டுபிடிப்பால் மேலேறிக்  கொண்டிருந்தாலும் கண்ணால் பார்க்கக்கூடியவை ஒரு அலை அகலம் மட்டுமே. காதால் கேட்கக்கூடியவை சில ஒலி அலைகளை மட்டுமே. மனதால் எண்ணக்கூடியவை அறிவின் எல்லைகளுக்கு உட்பட்டவை மட்டுமே. 

கடவுள் பார்க்காத காட்சியாக, கேட்காத கானமாக, புரியாத வார்த்தையாக இருக்கலாம் அல்லவா? 

 பிரபஞ்சத்தின் ரகசியத்தை நாம் அறிந்தாலும் அது நம்அறிவிற்குப் புரியாது. ஜேம்ஸ் ஜீன்ஸ் என்னும் பிரிட்டிஷ் வானவியலாளர்,  பிரபஞ்சதில் ஒரு காரணமும், பொறுப்பும், ஒரு நோக்கமும் இருப்பதைப் பார்க்கிறோம் அந்த சக்திக்கு நம் மனித மனம் போல் ஒரு குணம் இருப்பதாகத் தெரிகிறது. 

மனித மனம்  அழகுணர்ச்சி, பாசம், நீதி போன்ற வற்றை எப்படி சிந்திக்கிறதோ அப்படியே கடவுளும் சிந்திருக்கலாம் என்று கூறுகிறார். 

கடவுளுக்கு ஒரு மனம் இருக்கிறது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.  கடவுளே ஒரு மனம் தானோ என்று வியக்கிறார்கள். 
  
நம்மாழ்வார் கூறுவைதைப் போல்
  
அவரவர் தமதமது அறிவளி வகைவகை
அவரவர் இறையவர் என் அடி அடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே..

 அவரவர் தங்கள் தங்கள் அறிவு அறியும் வகையில் கடவுளைக் காண்கிறார்கள். இதில் எதுவும் தப்பில்லை அவரவர் விதிகளின் படி அடைய முடியும். 

இதில் அணுவிஞ்ஞானிகளையும் சேர்க்கமுடியும், கடவுள் இல்லை என்பவர்களையும் சேர்க்க முடியும்.

அறிவியல்  கணிதக் கோட்பாடுகளால் முழு உண்மையை அறிய முடியாது என்பதே உண்மை. 

 மனதால் அறிய முடியாத உண்மைகள் இருக்கலாம். அறிவால் விளக்கமுடியாததாய் , விளக்கம் முழுமைபெறாமல் இருக்கலாம். ஆனால் உணர்ந்து கொள்வது மட்டுமே சாத்தியப்படலாம்.

இதை மிஸ்டிக் நாலெட்ஜ் என்கிறார்கள். விளக்கமில்லாமல் உணர்ந்து கொள்வது. 

 மிகச்சிறந்த சிந்தனையாளர்களான ஐன்ஸ்டீன், பாலி, ஹைஸன் பர்க், ஷ்ரோடிங்கர், எடிங்டன், ஜீன்ஸ் எல்லோரும் உணர்வு பூர்வமாக உண்மை அறிதலைப் பற்றி பேசியிருக்கிறார்கள். 

 அவர்கள் சொல்வதன் சாரம் இதுதான். 

விஞ்ஞானத்தால் ஓரளவுக்கு  விளக்கங்களைச் சொல்ல  முடியும்.

இந்த பிரபஞ்சம் எப்படி எவ்வாறு தோன்றியது என்பதற்கு பதில் கூற முடியும். ஆனால் ஏன் என்ற கேள்விக்கு பதில் கூறமுடியாது. அறிவியலும், தர்க்க சாஸ்திரமும் , கணித சாஸ்திரமும் இங்கே தோற்றுப்போகின்றன. 

அதை வேறுவிதமாகத்தான் உணர முடியும். சிலர்  மனதில் உள்ளே ஏற்படும் வினோத அமைதி என்கிறார்கள். ஐன்ஸ்டீன் அதை காஸ்மிக் ரிலீஜியஸ் ஃபீலிங் என்கிறார். 

இந்த ஆன்மிக அனுபவம் பிரபஞ்சம் முழுவதையும் கடவுளுடன் சேர்ந்து பார்க்கும் ஓர் அனுபவம் என்கிறார்கள். உண்மையுடன் ஏற்படும் ஓர் தொடர்பு. வார்த்கைள், கணித குறியீடுகள், அறிவியல் சூத்திரங்கள் போன்ற இடைத்தரகர்கள் இல்லாமல் ஏற்படும் ஓர் தரிசனம் என்கிறார்கள். 
            
  கடவுள் எப்படி இருப்பார்? 

 அவன் ஆணல்லன் பெண்ணுமல்லன் அல்லா(து) அலியல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லானுமாம்
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே
             
                                                                                                             -  நம்மாழ்வார்

அவன் ஆண் அல்ல, பெண்ணும் அல்ல, நபும்சகனும் அல்ல. காணவும் இயலாதவன், உள்ளவன் அல்ல.. இல்லை யெனவும் முடியாது.  நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறவன்.. அவனை விளக்குவதும் மிகவும் கடினமான நிலையாகும்.  

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலம் 90வது   பாடலில் பத்து மந்திரங்கள் உள்ளன. இதை  புருஷ சூக்தம் என்பர். சில மாறுதல்களுடன் யஜூர் சாம  அதர்வண வேதங்களிலும் உள்ளது.  

இதில் புருஷன் என்பவரைப்பற்றி பேசப்படுகிறது. நம் இந்து மதத்தில் கடவுள் தத்துவங்களின் ஆதாரம் இதுதான். 

 ஆயிரக்கணக்கான தலைகள் உள்ளவர். ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளவர். ஆயிரக்கணக்கான பாதங்கள் உள்ளவர். அவர் பூமியெங்கும் வியாபித்தவர். பத்துவிரல்களால் எண்ணமுடியாத எண்ணிக்கை வடிவில் உள்ளார்.  எது முன்பே இருந்ததோ? எது இனி வரப்போகிறதோ, எது இப்போது காணப்படுகிறதோ எல்லாம் பரமபுருஷனே. 

சாகா நிலைக்கு ஈசனாக இருப்பவரும் பரமபுருஷனே.  எது அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் மறைவிலிருந்து வெளிப்படுகிறதோ அதுவும் புருஷனே. இங்கு காணப்படுபவை எல்லாம் அவருடைய மகாத்மீயமே. இவையனைத்தைக் காட்டிலும் அப்பரமபுருஷனே அதிகமானவர்.  உண்டானவை கால் பாகம். முக்கால்பாகம் அழிவற்றதாய்  அவருடைய பரமபதத்தில்  இருக்கிறது. இவ்வாறாய் நம்முன்னோர்கள் அவரை  விவரிக்க முயன்றிருக்கின்றனர்.  நம்மாழ்வார்..

திடவிசும்பு எரிவளி நீர் நிலம் - இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் 
அவைஅவைதொறும்
உடல்மிசை உயிரெனக்
கரந்தெங்கம் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை 
உண்ட சுரனே.     என்று விளக்குகிறார்.

 விண்வெளி, தீ, காற்று,  நீர், நிலம் இவைகளை ஆதாரமாய் கொண்ட பொருள்களில் மறைந்து, உள்ளேயும், வெளியேயும் வியாபித்து, வேதத்தில் உள்ளவனாவான். இவைகளை உண்டவனும் அவனே. 

  கடவுளைப் பற்றி உபநிஷத்துகளும் சிந்திக்கின்றன.  உபநிஷத்துக்களில் பத்து உபநிஷத்துக்கள் முக்கியமானவை. இவைகள் சிலவற்றில் இன்றைய  விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தைப் பற்றி கேட்கும் கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

யஜூர் வேதத்தில் உள்ள ஈசோப உபசநிஷத், “ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” என்று துவங்குகிறது.  அனைத்தும் ஈசன் வசிப்பதற்கு.   வஸ்யம் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அணிவது.   எல்லாமே ஈசனை அணிந்தது.  

 கேனோபநிஷது சாம வேதத்தைச் சேர்ந்தது.  அது இப்படி ஆரம்பிக்கிறது.

யாரால் விதிக்கப்பட்டு மனம் அதன் இலக்கை அடைகிறது?

யாரால் செலுத்துப்பட்டு வார்த்தை இயங்குகிறது?  கேட்பதனையும் பார்ப்பதையும் யார் அமைத்தது? என்று கேட்டுவிட்டு.

கேட்பதின் கேட்பது, மனதின் மனது, வார்த்தை கடந்த வார்த்தை, உயிரின் உயிர், பார்வையின் பார்வை இதை தெரிந்தவர்கள் சாவதில்லை என்று  தொடரும்போது கேட்பது, பார்ப்பது, சிந்திப்பது இவைகளுக்கெல்லாம் அப்பால் உள்ளதை எண்ணத் தூண்டுகிறது. 

அங்கு பார்வை செல்வதில்லை. வார்த்தை செல்வதில்லை, மனமும் செல்வதில்லை. அதை எப்படி அறிந்து போதிப்பது. அது நமக்கு தெரியவில்லை. காரணம் அது தெரிந்ததல்ல. தெரியாததுமல்ல. அதற்கும் மேற்பட்டது. அப்பாற்பட்டது, வார்த்தைகளால் அறியப்படாதது, விவரிக்கப்படாதது, வார்த்தைகளை அறிவது அதுதான் பிரமன். 

கண்ணால் பார்ப்பதல்ல, பார்வையால் பார்ப்பது. காதால் கேளாததல்ல, கேட்பதைக் கேட்பது. 

சுவாசத்தைச் செலுத்துவது  அதுதான் பிரம்மம்.  என்கிறது கேனோஉபநிஷத். கடவுள் என்பதை ‘தத்’  அது என்ற ஒரே வார்த்தையில் அதன் குணங்களை யோசித்துப் பார்த்திருக்கின்றனர். 

  உளன் எனில் உளன் அவர்
 உருவம் இவ்வுருவுகள்
  உளன் அலன் எனில் அவன்
 அருவம் இவ்வுருவுகள்
 உளன் என இலன் என அவை
 குணம் உடைமையில்
  உளன் இரு தகைமையொடு
 ஒழிவிலன் பரந்தே 

 இறைவன் இல்லை யென்று சொன்னாலும், இருக்கிறான் என்று சொன்னாலும் அவன் இருக்கிறான்.உளன் அலன் என்ற இரண்டு குணங்களையும் உடையவன் என்பதால் அவன்  உருவமுள்ளது, உருவமற்றது  எல்லாமே அவனது ஸ்தூல சூட்சும  சரீரமுமாகும். அவன் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளான்  என்கிறார் நம்மாழ்வார். 

 யானும் தானாய் ஒழிந்தானை
 யாதும் எவர்கட்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பிணைந்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
ஆமுதம் ஆகித் தித்தித்து என்
ஊனின் உயிரில் உணர்வினில் 
நின்ற ஒன்றை நான் உணர்ந்தேனே.

 வேதம் உபநிஷதம் யாத்த பெரியோர்களும், நம்மாழ்வார் போன்றோர்களும் மிஸ்டிக் என்ற அனுபவத்தின் மூலம் தான் கடவுளை கண்டுணர்ந்தார்கள். இந்த மிஸ்டிக் அனுபவம் வாழ்நாளில் கிடைக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்.

அவர்களுக்கு இந்த அனுபவத்திற்குப் பிறகு எந்த சந்தேகமும் எழுவதில்லை. மற்றவர்கள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகத்தில் வாழ்நாளை கழிக்கின்றனர். 

 எனவே அவரவர் அவரவர் தங்களின் அறிவிற்கெட்டியபடி கடவுளைக் காண்கிறார்கள். கடவுளை அடைகிறார்கள். 

  எனவே கடவுள் இருக்கிறாரா? என்றக் கேள்விக்கு அறிவியலின் பதில்  இருக்கலாம்! ஆன்மிகத்தின் பதில் இருக்கிறார்!!

    என் பதில் -  கடவுளைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்! 


( திரு சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நூலிலிருந்து சுருக்கமாய் தொகுத்தது- Mathivanan) 

Wednesday, 5 March 2014

தெரியுமா உங்களுக்கு?

* இல்லத்தில் எந்தெந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். 

அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்னும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னும் விளக்கேற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

 * கன்னி மூலை என்றால் என்ன?

வடக்கிழக்குப் பகுதி கன்னி மூலை எனப்படும். 

* உறங்கும் போது எத்திசை நோக்கி தலை வைக்கக்கூடாது?

வடதிசை நோக்கி  தலை வைத்து உறங்குவது சரியில்லை. இந்த பூமியை வடக்கு தெற்காக ஒரு காந்தவளையும் சுற்றி வருகிறது அது வடக்கில் மையம் கொள்கிறது.   நமது உடலிலும் அவ்வாறே  ஒரு காந்தச் சுழல் இருந்து கொண்டிருக்கிறது அது சிரசில் மையம் கொள்கிறது.  

வடதிசையில் நாம் தலை வைத்துப் படுக்கும் போது இந்த இரு மையங்களும் ஒன்றுக் கொன்று எதிராக  செயல்புரிவதால் மனம் அமைதியற்ற அலைபாயும். உறக்கம் கெடும். உடல் பாதிப்பும் ஏற்படும் இதனால் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

* நித்ய பூஜை என்றால் என்ன?

தினசரி செய்து வரும் பூஜைகளே நித்ய பூஜையாகும். 

* நைமித்திக பூஜை என்றால் என்ன?

சிறப்புத் தினங்களில் செய்யப்படும் சிறப்புப் பூஜை நைமித்திக பூஜை எனப்படும்.

* மலர்களைத் தவிர்த்து எந்தெந்த பத்ரங்களை அர்ச்சனை பூஜைக்குப் பயன்படுத்தலாம்?

துளசி, வில்வம், வேப்பிலை, அருகு.

* ‘துவஜ ஸ்தம்பம்’ என்றால் என்ன?

துவஜ ஸ்தம்பம் என்றால் கொடி மரம்.

* கோபுர தரிசனம் என்றால் என்ன?

ஆலய கர்ப்பகிரகத்திற்கு மேலே இருப்பது கோபுரம். இறைவனின் ஸ்தூல உருவமாக கருதப்படுவது கோயில் அமைப்பு. இதில் சிரசு கர்ப்பக்கிரகததின் மேலுள்ள  கோபுரமாகும். இராஜ கோபுரம் இறைவனின் பாத கமலமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எனவே திருக்கோவில் அருகே வந்ததும் கோபுரத்தை நிமிர்ந்து நோக்கி வணங்குகிறார்கள். 

* நைவேத்யம் என்றால் என்ன?

நைவேத்யம் என்பது திரு அமுது படைத்தல். சமைத்த சைவ உணவு, பொங்கல் வகைகள் , பலகாரங்கள் இவற்றிற்கு நெய் விட்டு இறைவனுக்கு அன்புடன் படைப்பது நெய் வேத்யமாகும்.

* மூலஸ்தான விக்கிரகம் கருங்கல்லில் அமர்ந்திருப்பது ஏன்? 

பிரபஞ்சத்திலுள்ள சக்தியை ஈர்ப்பதற்காகவே மூலஸ்தான விக்கிரகம் கருக்கல்லில் அமைந்துள்ளது. கருங்கல்லில் சிலிகான் எனப்படும் ஒலி அதிர்வுகளை ஈர்க்கும் தாதுப்பொருள் உள்ளது. இவைதான் தற்போது தொலைக்காட்சி, கணிணி, கைபேசி போன்றவற்றில் உபயோகப்படுகிறது. 

ஒலி அதிர்வுகளை ஈர்க்கவும்  அனுப்பவும் இந்த சிலிகான் பயன்படுகிறது.  பிரபஞ்சத்திலுள்ள அதிர்வுகளை ஈர்க்கவும், மந்திர ஒலி அதிர்வுகளை பிரபஞ்ச வெளிகளுக்கு அனுப்பவும் கருங்கல்லுக்கு ஆற்றல் அதிகம் இருப்பதை வெகுகாலத்திற்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால் கருங்கல்லால் மூலஸ்தான விக்ரகத்தை அமைத்தார்கள். 

* இறைவனுக்குத் திரை போடப்படுவதன் காரணம் என்ன?

மாயை என்கிற திரை இறைவனை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை விலக்கினால் இறைவன் காட்சி கிடைக்கிறது. இறைவனை வழிபட முடிகிறது.

மனதின் மாசுகளை விலக்கினால் நம் மாயை விலகி ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. ஆத்ம தரிசனம் ஞானத்தை அளிக்கிறது. 

* இந்து என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது?

பரத கண்டம் என்ற பெயரிலேயே அக்காலத்தில் இந்தியா அழைக்கப்பட்டது. வெளி நாட்டிலிருந்து வருகை புரிந்த அந்நியர்களும் படையெடுப்பாளர்களும் இமய மலையில் உற்பத்தியாகும் ஆங்கிலத்தில் இந்து நதி என்றழைக்கப்பட்ட,  சிந்து நதிக் கரையோரமும், அதற்கு தெற்கேயும் வாழ்ந்த மக்களை குறிக்கும் பொருட்டு இந்துக்கள் என்று அடையாளமிட்டு அழைத்தனர். 

அம்மக்கள் கடைபிடித்த கொள்கைகளே இந்து மதம் என கூறப்படலாயிற்று என்பது ஆய்வார்களின் கருத்தாகும்.  உலகில் பிற மதங்கள் அனைத்தும் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே நம் மக்கள் கடைபிடித்த இறை, மற்றும் நன்னெறிக் கொள்கைகளுக்கு தோற்றம், கால வரம்புத் தெரியவில்லை. இன்று இந்து மதம் என்றே அழைக்கப்படுகிறது. 

நாம் இந்துக்கள் என அழைக்கப்படுகிறோம். நாடு இந்தியா என்று அழைக்கப்படுகிறது. ‘இமய மலைக்கும் இந்து மகாசமுத்ர பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி இந்தியா எனவும் அங்கு வாழும் மக்கள் இந்துக்கள் எனவும், அவர்களின் கலாச்சாரம் இந்து சமயம் எனப்படுகிறது.’ என்று கூறுவோரும் உண்டு.

* இந்து மதம் சனாதன தர்மம் என ஏன் வழங்கப் படுகிறது?

எப்பொழுது யாரால் தொடங்கப்பட்டது என்றறிய  முடியாத அளவு தொன்மை வாய்ந்த,  பழமையான நெறி, சனாதன தர்மம் என வழங்கப்படுகிறது. 

* இந்து மதத்தின் சிறப்பம்சம் என்ன?

1. இறைவன் ஒருவனே, அவனைப் பல உருவங்களில் வழிப்படுகிறோம். எம்முறையில் வழிபட்டாலும் இறையருளைப் பெற முடியும். 

2. இறைவன் உருவமில்லாதவன், நம் மனத்தில் அவனை நிலை நிறுத்த ஒரு அடையாளம் தேவைப்படுவதால் உருவ வழிபாடு ஏற்பட்டது. இறைவனை அடையும் வழியில் முன்னேற்றம் காணக் காண உருவ வழிபாடு தேவையற்றதாகி விடுகிறது. அதை உணர்த்தவே அருவ வழிபாடாகிய ஜோதி வழிபாடு ஏற்பட்டது. 

3. ஆத்மா மனிதனாக பிறவியெடுக்கிறது. பல பிறவிகள் எடுத்தெடுத்து மறைந்தாலும்,  ஆத்மாவிற்கு அழிவில்லை. அது முடிவில் பரம் பொருளோடு ஒன்றிவிடுகிறது. அப்போது பிறவிப் பயணம் முடிவுறுகிறது. 

4. செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒருவனின் அடுத்த ஜென்மம் அமைகிறது. ஒருவனின் உயர்நிலை, தாழ்நிலைகளை அவனது முன் ஜென்ம வினைகளே தீர்மானிக்கிறது. 
5. அன்பே இறைவன். அனைத்துயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னை நேசிப்பது போலவே அனைவரையும் நேசிக்க வேண்டும். இதுவே இறைவனை அடையும் எளிய வழி.

* ரிஷி என்பவர் யார்?

மந்திரங்களை உணர்ந்தவர் ரிஷி எனப்படுவர். வேதங்கள்,  ஒலி ஒளிவடிவமாக  வான் வெளியில் நிறைந்துள்ளது. தவ வலிமையால் அவ் வொலி அலைகளை தரிசித்து ஒலிகளை உணர்ந்து அவற்றை உரைத்தவர்களை ரிஷிகள் என்று அழைக்கிறோம். 

* வேதங்கள் எத்தனை? அவை எதைப்பற்றிக் கூறுகின்றன?

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என நான்காகும். இவை இறைவனால் அருளப்பட்டு, முனிவர்களால் உணரப்பட்டவை. அவற்றில் இறைவன் தன்னைப்பற்றிய உண்மைகளையும், வாழ்வியல்  நெறிகளையும் அறிவுறுத்தியிருக்கிறார். 

ரிக் வேதம் :  இறை துதிப் பாசுரங்கள் எனப் பொருள்படுகிறது. இதில் இந்திரன், வருணன், அக்னி ஆகிய தேவர்களைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்புமிக்க காயத்ரி மந்திரம் இதில் இடம் பெற்றுள்ளது. 

சாம வேதம் : இவை யாகத்தின் போது இறைவனைப்பற்றி உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள் உள்ளன. யாகத்தில் நமக்கு வேண்டியதை கூறி அவற்றை அருளும்படி இறைவனிடம் வேண்டும் படியான மந்திரங்கள், துதிப் பாடல்கள் இதில் அடங்கியுள்ளன. 

யஜுர் வேதம் : யாகங்கள் பூஜைகள் இவைகளை நடத்தும் குருக்கள் எத்தகைய சடங்குகளைச் செய்ய வேண்டும். எந்த சமயத்தில் எந்த மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும்என்று இதில் துறப்பட்டுள்ளன. உரை நடை வடிவிலானது யஜு ர்வேதம்.

அதர்வண வேதம் : மந்திரம், மாந்த்ரீகம், யந்திரம் முதலியனவற்றைப்பற்றியும், இவற்றின் மூலம் ஒருவன் தன் பொருளாதார ஆதாயங்களை அடைய முடியும் என்பது பற்றியும் அதர்வண வேதம் எடுத்துரைக்கிறது. 

* சம்ஸ்காரம் என்றால் என்ன?

ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் , இறந்த பின்னும் கூட உடலில் உறையும் ஆன்மாவின் முன்னேற்றம் கருதி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் செய்யப்படும் சடங்குகள் சம்ஸ்காரங்கள் எனப்படும். முக்கியமான சமஸ்காரங்கள். 

1. காது குத்தல், 2. விவாகம் 3. அந்திமக்கிரியை(உயிர்பிரிந்த பின்) ஆகும். இவை மூன்றும் அக்னி சாட்சியால் செய்யப்பட வேண்டியவை. 

* மத நூல்களின் படி மனித வாழ்வின் நான்கு நிலைகள் என்ன?

1. பிரம்மச்சர்யம் 2. கிருகஸ்தம் 3. வனப்பிரஸ்தம்     4. சன்யாசம்.

* மூன்று குணங்கள் யாவை?

சத்வம், ரஜோ குணம், தமோ குணம்

சத்வம் : அன்பு, அடக்கம், ,சாந்தம், பொறுமை, ஞானம் போன்ற நற்குணங்கள் நிரம்பியது சத்வ குணம் ஆகும். 
ரஜோ : கோபம், பொறாமை, வீண் பெருமை இவையெல்லாம் ராஜஸம் என்ற ரஜோ குணங்களாகும். 

தமோ : தமோ குணம் சோம்பல், து£க்கம் நிறைந்தது. வெட்டியாக பொழுதை போக்குபவர்கள் தாமஸ குணம் மிக்கவராய் இருப்பர்.

மனிதனின் மூன்று உணர்வு நிலைகள்

1. ‘ஜாக்ரத் (விழிப்புநிலை)
2. ஸ்வப்னம் (கனவு நிலை)
3. சுஷுப்தி (து£க்னநிலை)

* ஏழு வகை உயிர்பிறப்புக்கள் யாவை?

1.தேவர்
2. மனிதர்
3. விலங்கு
4. பறவை
5. ஊர்வன 
6. நீர் வாழ்வன 
7. தாவரம்

* ஏழு மேலுலகங்கள் யாவை?

பூலோகம், புவர்லோகம், சவர் லோகம், மஹர் லோகம், ஜனோ லோகம், தபோலோகம், ஸத்ய லோகம். 

* ஏழு கீழுலகங்கள்

அதலம், விதலம், ஸுதலம், தலாதலம், ரஸாதலம், மலாதலம், பாதாளம்.

* ஆறு ஆதாரங்கள் அல்லது சக்கரங்கள் யாவை?

மூலாதரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறும் உடலில் முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருந்து புருவமத்தி வரை ஆறு இடங்களில் உள்ள யோக சூட்சம் சக்கரங்களாகும். 

* கடவுளை அடைய கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம்.

* ராஜயோகத்தின் எட்டு உறுப்புகள் யாவை?

1.இயமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணயாமம்
5. பிரத்யாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இயமம் என்பது - கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, பிரம்மச்சார்யம் இரக்கம். வஞ்சனையின்மை, பொறுமை, து£ய்மை, இவையறிந்து உண்ணல், திட மனம், ஆகிய பத்தும் இயமம் எனப்படும்.

நியமம் எனப்படுவது- 

1. எப்போதும் மகிழ்ச்சியுடனிருத்தல்
2. இறைவனிடம் அசையாத நம்பிக்கை
3. அறத்தினின்று வழுவாமை
4. உயர்ந்தோரை மதித்தல்
5. நன்னு£ல்களை படித்தறிதல்
6. பிறப்பு, செல்வம், அதிகாரம் இம் மூன்றும் இருந்தாலும் அதற்காக கர்வமுறாமல் எளிமையாய் இருத்தல்
7. நன்மை தீமை, பாவ புண்ணியம் 
8. இவற்றை பகுத்துணருதல்
9. அடக்கத்துடன் பொறுமையை கடைபிடித்தல்.
10. மனதை சலனமின்றி வைத்திருத்தல்.
11. புலன்களை தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருத்தல். 
இவை யாவும் நியமங்களாகும்.

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடும் காரணம் என்ன?

இரு காதுகளையும், அதாவது வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து செய்யும் உடற்பயிற்சியே தோப்புக்கரணம் எனப்படுகிறது. 

தலையில் இருபுறமும் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணமிட்டு விநாயகரை வழி படுவதால் சுஷூம்ணா என்ற யோகத் தளம் தட்டப்பட்டு மூலாதாரமாகிய முதுகெலும்பின் அடிப்பாகத்திலுள்ள மூலாதாரத்தில் குண்டலிணி சக்தி விழித் தெழுகிறது என்பர். அகக் கரணங்கள், பிறக்கரணங்கள் அடக்கப்பட்டு அகந்தையும் ஆணவமும் அழிந்து இறைவனைச் சரணடைவதே தோப்புக்கரணத்தின் தத்துவமாகும்.

தோப்புக்கரணம் வந்தக் கதை

மாகத முனிவருக்கும் விபுதை என்பவளுக்கும் பிறந்தவன் கஜமுகாசுரன். இவன் சிவபெருமானை வணங்கி அனைவரையும் வெல்லும் ஆற்றலைப் பெற்றான்.  அதன் பின் தேவர்களையும் , முனிவர்களையும் துன்புறுத்தி  மூன்று வேளையிலும் 1008 தோப்புக் கரணம் போட வைத்தான். 

சிவனின் ஆணைக்கிணங்கி , அசுரனை அடக்கச் சென்ற விநாயகர் தமது வலது தந்தத்தை உடைத்து சிவமந்திரம் கூறி கஜமுகாசுரனை நோக்கி ஏவினார்.  அது அவனை இரண்டாகப் பிளந்து சென்றது

சாகாவரம் பெற்ற அவன் பெருச்சாளியாக மாறி எதிர்த்து வந்தான். தன் கையிலிருந்த பாசத்தால் அடக்கினார்.

மகிழ்ந்த தேவர்களும் முனிவர்களும் விநாயகர் முன் 1008 தோப்புக்கரணம் போட முன்வந்தனர். அவரோ மூன்று முறை போட்டால் போதும் என்று அருள்புரிந்தார்.

மனம் ,சித்தி, புத்தி, அகங்காரம் என்ற நான்கு அகக் கர்ணமும், கை, கால், கண் , மூக்கு என்ற நான்கு புறக் கர்ணமும் கொண்ட தோப்புக் கரணம் இடுவதனால் , (குண்டலினிய சக்தி தூண்டிவிடப்படுகிறது)  அறிவு வளர்ச்சியும் , உடல் ஆரோக்கியமும் உண்டாகும் என்பது யோகிகள் வாக்கு.

குட்டிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டதற்கான கதை.

வடக்கிலிருந்து தென் பொதிகை மலையை நோக்கி அகத்தியர் வரும் காலத்தில்  காவிரியை தன் கமண்டலத்தில்  அடக்கிக்கொண்டார். குடகு மலை வந்ததும் அங்கு சில காலம் தங்கி சிவபூஜை  செய்து கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் சூரபத்மனுக்கு பயந்து இந்திரலோகத்திலிருந்து இந்திராணியுடன் ஓடிவந்த இந்திரன் சீர்காழி எனும் தளத்தில் தங்கி தோணியப்பரை வணங்கி வந்தான்.  சூரபத்மனின்   ஆணைப்படி வருண பகவான்  மழை பொழிவதை நிறுத்திக் கொண்டான். மழை பொய்த்ததால் இறைவனை வணங்க பூக்கள் இல்லாமல் போனது.

நாரதரின் ஆலோசனைப்படி இந்திரன் விநாயகரை எண்ணித் தவம் செய்ய  , இந்திரனுக்கு உதவ விநாயகர் மனம் கொண்டார்.

காகம் வடிவெடுத்த விநாயகர் அகத்தியர் தவம் புரிந்த குடகு மலைக்கு வந்தார். காவிரியிருந்த கமண்டலத்தின் விளிம்பில் அமர்ந்தார்.  கண்விழித்த அகத்தியர் காகத்தை விரட்ட, கமண்டல நீர் கவிழ்ந்து ஆறாகப் பாய்ந்தது. 
  
காகம் அந்தணச் சிறுவனாக மாறியது.  மாயச்சிறுவனின் மேல் கோபம் கொண்ட அகத்தியர் சிறுவன் தலையில் கொட்ட அவனை துரத்தினார். சிறுவன் விநாயகராக மாறி அகத்தியருக்கு அருள்புரிந்தான்.

ஆனைமுகக் கடவுளே! உன்னையேக் கொட்டத் துணிந்தேனே என்று வருந்தி தன்னைத் தானே குட்டிக் கொண்டார்.  அதைத் தடுத்த விநாயகர். அகத்தியரே! உன்னைப் போல் என்னை வழிபடும் பக்தர்கள்  சிரசில் குட்டிக்கொண்டால் அறியாமை நீங்கி அறிவுப் பெறுவார்கள் என்று அருளி மறைந்தார் விநாயகர்.
  
தலையில் குட்டிக் கொள்ளும் போது சூட்சும நரம்புகள் தூண்டிவிடப்படுகின்றன. இதன் மூலம் மூளையில் ஏற்படும் அதிர்வு அதன் செயல் திறனை அதிகப்படுத்துகிறது என்கிறது அறிவியல்.

* எழுத ஆரம்பிக்கும் போது ஏன் பிள்ளையார் சுழி போட்டு எழுதுகிறோம்?

பிள்ளையார் சுழி, ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து ஒரு நேர்க்கோட்டை இழுப்பது. இது பிந்துவிலிருந்து ஆரம்பித்து ஓங்கார நாதம் உண்டானதையும் பின் சிருஷ்டி உண்டானதையும் குறிக்கும். பிரணவ ஸ்வரூபமாக விநாயகர் விளங்குவதால் இது பிள்ளையார் சுழி என வழங்கப் படுகிறது. எடுத்தக் காரியம் தடையின்றி லாபகரமாய் முடிய வேண்டும் என்பதற்காகவும் பிள்ளையார் சுழி போடப்படுகிறது என்றும் விளக்கம் கூறப்படுகிறது. 

* முருகன் கையிலுள்ள வேலின் தத்துவம் என்ன?

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி என்ற மூன்றின் உருவமாக முருகன் வேலாயுதம் தரித்துள்ளார். 

* விபூதி எதைக் குறிக்கிறது?

ஞானம் என்ற நெருப்பில் வினைகளனைத்தும் சுட்டெரிக்கப்பட்டவுடன் எஞ்சி நிற்பது பரிசுத்தமான சிவ தத்துவமே என்பதைக் குறிப்பதே வெண்ணீறு. 

மதிவாணன் 

Monday, 3 March 2014

சீதை சிறையிருந்த மலைக் குகை


பெறுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. 

ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின் நிர்வாகம் சீதாவக்கபுர எனும் பெயர் கொண்ட உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.

சீதாவக்க மற்றும் சீதாவக்கபுரம் எனும் பெயர்கள் அதுவும் சீதையுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்த நகரத்திற்கு வருவதற்கு காரணம் என்ன என ஆராய்த போது பல்வேறு விதமான ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 

இவை யாவும் இப்பகுதியில் வாழும் பிரதேச மக்களின் நம்பிக்கைகளாகவும் உறுதிப் படுத்தப்படாதøவகளாகவுமே காணப்படுகின்றன.

நகரின் மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் அவிசாவளை அரச தங்குவிடுதிக்கும் இடையில் சீதாöலன என்னும் வீதி ஏ4 வீதியில் இருந்து பிரிந்து செல்கின்றது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் போது வீடொன்றில் இந்த வீதி முடிவடைகின்றது. 

வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தையடுத்திருக்கும் படிகளினால் பள்ளத்தாக்ககொன்றினுள் இறங்கிச் சென்றால் சீதை ஒழித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் குகையொன்று காணப்படும். குன்றின் அடிப்பகுதியை அடைய முடியும். 

சாதாரணமாக குகையொன்றை எடுத்துக்கொண்டால் குகையின் மேற்பகுதியின் கற்பாறையிலிருந்து நீர் ஊற்றாக ஓடிக்கொண்டோ அல்லது சொட்டுசொட்டாக ஒழுகிய வண்ணமே இருக்கும். இங்கிருந்து பார்க்கும் போது குகை பற்றைச் செடிகளினால் மறைபட்டிருந்தாலும் தண்ணீர் குகையின் உட்பகுதிக்குள் செல்லாதிருப்பதற்காக பாறையின் மேற்பகுதியில் நீர் குகைக்குள் வருவதை தடைசெய்யும் வகையில் பொழியப்பட்டிருக்கும் பண்டைக் கால வடிகாலமைப்பைக் காணலாம்.

இங்கிருந்து குகையின் உட்பகுதிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே எமக்கு வழிகாட்டியாக வந்த அவிசாவளை நகர இலக்கம் 432  கிராமசேவையாளர் கே. ஏ. டி. கிறிஷ்டி ஜெயந்த என்பவரின் முயற்சியினால் வேறொரு பாதையால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குகையின் உட்பகுதியை சென்றடைய முடிந்தது.

இராவணன் சீதையைக் கவர்ந்து தனது விமானத்தில் கொண்டுவந்து வரக்காபொல என்னுமிடத்தில் தரையிறங்கி (இங்குதான் இராவணனின் விமான நிலையம் இருந்ததாக இப்பகுதி மக்கள் நம்புகின்றார்கள்.) வடகிழக்குப் பக்கத்திலுள்ள வலும்தின மலையைக் கடந்து வந்து இந்த குகையில் சீதையை ஒழித்து வைத்ததாக நம்பிக்கை பிரதேச மக்கள் மத்தியில் வலுவாகக் காணப்படுகின்றது.

குகையின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது. கற்பாறைகள் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் புரட்டிவிடப்பட்டு, காடுமண்டி, விச ஜந்துக்கள் நிறைந்து காணப்பட்டன. 

குகையின் உள்ளளே சிறிய ஆலயம் ஒன்று இருந்ததற்கான சாத்தியம் காணப்பட்டது. ஏனெனில் பீடமொன்று காணப்பட்டது. இங்கு விக்கிரகங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் வழிபாடுகள் நடைபெற்று வந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. 

இக்குகையில் நீண்ட காலமாக ஒரு வயோதிபர் வாழ்ந்து வந்ததாகவும் இவரின் மரணத்தின் பின்னர் சகவிரோதிகளினால் இந்த இடம் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதாகவும் யாருக்கும் சொந்தமில்லாத இந்தக் காணியை மருத்துவர் ஒருவர் கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து இம் முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகவும் அரச அலுவலர் ஒருவர் தெரிதவித்தார். 

குகையின் எழுபத்தைந்து சதவீதமான பகுதிகள் சிதைக்கப்பட்ட போதிலும் இந்தக் குன்றும் அதனுடன் காணப்படும் குகையும் புனரமைக்கப்பட்டு அதன் பழைமையும் பெருமையும் யாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளின் பார்த்துச் செல்லக் கூடியவாறான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது இப்பிரதேச மக்களின் எதிபார்ப்பாகும்.

இராமர் பாதம்

அவிசாவளையிலிருந்து எட்டியாந்தோட்டை செல்லும் ஏ7 வீதியின் ஜி/7 பாலத்திற்கருகில் பிடதெனியா சந்தி வருகின்றது. இந்த சந்தியிலிருந்து திம்பிரிபொல என்ற கிராமத்திற்கு செல்லும் வீதியில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரையில் செல்லும் போது வீதி முடிவடைந்து சீதா கங்கை தென்படுகின்றது. ஆற்றைக் கடந்து செல்வதற்கு தொங்குபாலம் காணப்படகின்றது.

வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத ஒற்றையடிப்பாதை. மனித நடமாட்டமில்லாத ஈரலிப்பான காட்டுப்பகுதி; மனித இரத்தம் உறிஞ்சும் சிறிய அட்டைகள் இப்பகுதியில் நிறைந்திருந்தன. சில இடங்களில் ஒற்றையடிப்பாதையை அடையாளம் காணமுடியாதபடி செடிகொடிகள் நிறைந்திருந்தன. 

கீழ் சீதாகங்கை சலசலத்து அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. சில இடங்களில் கங்கையின் கரைக்கட்டின் விளிம்பில் நடந்துசெல்ல வேண்டிய நிலையும் இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான். 

இத்தனையையும் கடந்து சென்று பார்த்த போது,  சீத்தா கங்கையைத் துருத்திக் கொண்டு ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதில் பாதம் ஒன்று காணப்பட்டது. இப்பாதம், சராசரியாக 48 அங்குல நீளமும், 22 அங்குல அகலமும் கொண்டதாக காணப்பட்டது. 

பாதத்தில் நடு விரலுக்கு நேராக கற்பூரம் ஏற்றுவதற்கு வசதியாக குழி ஒன்றும் காணப்படுகின்றது. பாறையில் பதியப்பட்ட பாத வடிவத்தைச் சுற்றி அல்லது பாதத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு உளியினால் செதுக்கியுள்ளமையையும் காணமுடிகின்றது. பாதத்தின் நடுவில் பௌத்த மத சின்னங்கள் பொழியப்பட்டடுள்ளன.

இப்பிரதேச மக்கள் இராமருடைய பாதம் என இதைக் குறிப்பிட்ட போதிலும் இராமர் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் போன்ற கேள்விகளுக்கான விடைகள் அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தபோதிலும் பண்டைக் காலத்தில் இந்த இடம் மகப்பேற்றிற்கு பிரபல்யமாக விளங்கியதாகவும் இதனாலேயே இந்தக் கிராமம் திம்பிரிபொல என பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகின்றது. 

மாயாதுன்ன மன்னனின் மகன் முதலாம் விஜயசிங்கனின் மøனவிக்கு பிரசவம் பார்ப்பதற்கு இங்கு கொண்டுவரப்பட்டார் எனவும் ஆனால் அரசி, சிவனொளி பாதமலையிலுள்ள பாதத்தைப் பார்க்க விரும்பியதாகவும், பிரசவ காலத்திலிருக்கும் அரசியை சிவனொளிபாதமலைக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு என ஆலோசித்த மன்னன் மேற்குறிப்பிட்ட குன்றில் பாதம் ஒன்றை வரையச் செய்ததாகவும் இதை அரசிக்கு காட்டியதாகவும் சிங்கள நூல்களில் தகவல்கள் காணக்கிடைக்கின்றன. 

பண்டைய சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கும் அரசிற்கும் உண்டு. கலாசார திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இங்கு உல்லாசப் பயணிகள் விஜயம் செய்து, அருமையான சின்னமொன்றை காண்பதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 

வாகனம் பயணிக்க முடியாத பழுதடைந்த வீதியும், புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளும் இங்கு காணப்படுவதினால் பயணிகள் எவரும் இப்பகுதிக்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி : கலைக்கேசரி

Monday, 24 February 2014

சனி நல்லவரா கெட்டவரா?

வேதாளமும் வேதியனும்
     
 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக்கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

“அ ஹோய்.. வாரும் பிள்ளாய் வேதியனே!   உன்னைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!   எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காத உன் திடமனதை பாராட்டி, உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கேட்டுக் கொண்டே வா.! 

நான் முன்பே சொன்னது போல் சூரியனுக்கு பிள்ளைகளாக பிறந்தவர்கள் யமனும் சனிபகவானும் . இதில் யமன் நேரில் வந்து நின்றாலும் பயப்படாதவர்கள் கூட சனிபகவான் என்றால் பயப்படுவார்கள். ஒன்பது கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறார்.

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற பட்டப்பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் பெருமை பெற்றவர் சனி பகவான் ஒருவரே. 

சனி பகவானுக்கு ஒரு கால் ஊனம். அது எப்படி வந்தது என்றால்..
  
ஒரு முறை கயிலாயத்தில் ஒரு விழா. விநாயகருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ் வைபவத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்திருந்தனர். அப்போது விநாயகருக்கு வேழ முகம் இல்லை. முருகனைப் போன்ற முகம். 

அவ்விழாவிற்கு தானும் செல்ல வேண்டும்¢ என ஒரு குழந்தை  அடம் பிடித்தது. தாயார் சாயா தேவியோ குழந்தையின் மகிமையை அறிந்தவள். குழந்தைக்கு சமாதானம் சொல்லி போக விடாமல் தடுத்தாள். 

அம்மா நான் யாரையும் அருகில் சென்று பார்க்கவில்லை. தூரத்தில் ஒரு ஓராமாய் நின்று பிறந்த நாள் விழாவைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கெஞ்சியது.

இரக்கப்பட்ட தாய் அனுமதியளிக்கிறாள்.

கயிலை மலையின் மீது குழந்தை மெல்ல மெல்ல ஏறி வருகிறது.  உமையொருபாகன் தனது ஞானக் கண்ணால் கண்டு கொள்கிறார். உடனே உமையிடம், தேவி கயிலை மலை மீது ஒரு குழந்தை தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது, அதன் பார்வை பொல்லாதது, என்வே விநாயகன் மீது அக்குழந்தையின் பார்வை படாதவாறு விநாயகரைப் பாதுகாத்துக் கொள் என்கிறார்.

பார்வதிக்கு உடனே ரோஷம் வந்து விட்டது.  “என் மடியில் உட்கார்ந்திருக்கும் போது என் குழந்தைக்கு எந்த தீங்கும் வராது. அந்தக் குழந்தையால்  என் மகனுக்கு எந்த பாதிப்பும் வராது’  என்று பதில் சொல்கிறாள்.

தவழ்ந்து வந்த குழந்தை விழா நடக்கும் மேடைக்கருகே வந்து விட்டது.  எல்லோர் பார்வையும் அக்குழந்தையின் மீது பட்டது. தேவர்கள் அனைவரும் , என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினர்.  

அக்குழந்தையின் பார்வையோ விநாயகர் மீதே இருந்தது.  அணிமணிகள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் சிரித்த முகமாய் இருக்கும்  கணேசரது முகத்தை குழந்தை கூர்ந்து கவனித்தது.

அந்த நொடியில் அச்சம்பவம் நடந்தது. விநாயகர் மயங்கி விழுந்தார் அவரது தலை குழைந்து காணாமல் போய்விட்டது. 

பார்வதி பதறிப்போனாள்.  கணேசனின் நிலையைக் கண்டு கதறினார்.  அய்யோ ஈஸ்வரர் சொன்னதை கேட்காமல் போய்விட்டேனே என்று கலங்கினார். அவரது சோகம் கோபமாய் மாறியது . இதற்கு காரணமான குழந்தையை கோபத்துடன் பார்த்தாள். 

‘நீ இங்கே வந்ததால்தானே என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது.  நீ இனி எங்கும் செல்ல முடியாதவாறு உன் கால்கள்  முடமாகட்டும் என்று சபித்தாள்’

ஈசன் , பைரவரை அழைத்தார். பைரவா ‘நீ வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருப்பவர் யாராயிருந்தாலும் அவரது தலையைக் கொய்து வா’  என்று ஆணையிட்டார்.

பைரவன் வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருந்த யானைக் குட்டியின் தலையை வெட்டி வந்து ஈசனிடம் கொடுத்தார். 

ஈசன் அத்தலையை விநாயகரின் உடலோடு ஒட்டினார்.

இதற்கிடையில் கால்கள் பாதிக்கப்பட்ட குழந்தை விந்தி விந்தி நடந்து கொண்டே தன் இருப்பிடம் திரும்பியது.

சாயாதேவி நடந்ததை உணர்ந்து கொ£ண்டாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது.   

விழாவுக்கு வந்த மகனுக்கு உணவுக் கூட கொடுக்காமல்   சாபமிட்ட, அவளது மகனின் வயிறு பெருத்துப் போகட்டும் என்று சாபமிடுகிறாள். விநாயகரின் வயிறு பெருத்துப் போகிறது.

விநாயகரின் அழகிய முகம் மறைவதற்கும், பானை வயிறு ஏற்பட்டதற்கும் சனி பகவானே காரணமாகும். 
  
சனி பகவானி¢ன் பார்வை பட்டு தொல்லைப்பட்டவர்கள் ஏராளம். 

இலங்கை வேந்தன் இராவணனின் கதை முடிவதற்கும் சனியின் பார்வையே காரணமாகும்.

பரமேஸ்வரனிடம் , யாரும் தன்னை வெல்ல முடியாத அளவில் வரம் பெற்ற இரவாணன் தேவர்களை அடிமைப்படுத்தினான் , நவக்கிரகங்களையும் கொண்டு வந்து தன் சிம்மாசனத்திற்கு செல்லும் படிக்கட்டுகளாக அமைத்து வைத்து அவர்கள் மீதேறி நடந்து சென்றான். 

நரரதர் ராவணனைச் சந்திக்க   வருகிறார்.  அவரிடம் தன் பெருமையைப் பற்றி பேசி கர்வப்படுகிறான் ராவணன்.

ராவணா!  உன் புகழினை , வலிமையை இந்த உலகே அறியும். நவக்கிரகங்களையும் வென்று படிக்கட்டுக்களாய் அமைத்துக் கொண்டாய்.  உனது படிக்கட்டுகளில் படுத்திருப்பவர்களி¢ல் சனி பகவான் ஈஸ்வரன் பட்டம் பெற்றவன், உனது புகழை அவன் பார்க்க வேண்டும், அவனைத் திருப்பிப் போடு என்கிறார் நாரதர்.

சனி பகவானைத் திருப்பிப் போடுகிறான் இராவணன்.  இராவணனின் முகத்தை உற்றுக் கவனிக்கிறார் சனி. 

அப்போது அண்ணா! என்று   ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கிறான் இரவாணன். மூக்கறுபட்டு இரத்தம் வழிய சூர்ப்பனகை வந்து கொண்டிருக்கிறாள்.

சனியின் பார்வை சரியாக வேலைச் செய்கிறது என்று எண்ணிக்கொள்கிறார் நாரதர்.

இப்படி வலிமைமிக்க இராவணனின் அழிவிற்கு காரணமாகிறார் சனிபகவான்.
வேதியா! அரிச்சந்திரன் கதை தெரியுமா உனக்கு ?   காசி நகரத்து அரசனாய் இருந்தவன்.  நேர்மைக்குப் பெயர் போனவன்.   மக்களுக்கு நல்லாட்சி தந்தவன்.  அவன் ஜாதகத்தில் சனியின் பார்வைபடுகிறது.  

விதி மாமுனி விஸ்வாமித்திரர் உருவத்தில் வந்து சேர்கிறது   சொன்ன  சொல் காத்திட வேண்டும்  என்பதற்காக , விஸ்வாமித்திரரிடம் நாடுநகரத்தையும், இழந்து கொடுக்க வேண்டிய பணத்திற்காக , தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனையும் அடிமையாய் விற்று, தானும் ஒரு ஒரு புலையனிடம் வெட்டியானாய் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதல்லாமல். தன்மனைவியையே வெட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.  சொல்லொண்ணா துன்பம் அடைகிறான். அவன் இத்துன்பம் அடைய சனி பகவானே காரணமாகிறார்.

நளன் தமயந்தி கதை தெரியுமா?

நிடத நாட்டு மன்னன் நளன் . அவனிடம்  குடும்பினி தேசத்து அரசிளங்குமரியான தமயந்தியின் அழகினைப் பற்றி ஹம்சப் பறவை சொல்கிறது. அதே ஹமசம் தமயந்தியிடமும் ,உனக்கு ஏற்ற ஆணழகன் நளன்தான் என்று கூறுகிறது.

தமயந்தின் மேல் எமன், சனி போன்ற இந்திரன் , கலிபுருஷன், துவாப்பரன் தெய்வங்களும் ஆசைகொள்கின்றனர். 

ஆனால் நளனும் தமயந்தியும் திருமணம் புரிந்து கொள்கின்றனர்.  நளனைப் பற்ற சரியான சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருக்கிறார் சனி.

ஒரு முறை இறைவழிபாட்டிற்கு சென்ற நளன் தன் குதிகால்கள் சரியாக நனையாமல்  குளித்துவிட்டு ,வழிபாட்டிற்குச் சென்று விடுகிறான். இதுவே சரியான காரணம் என்று  உடனே நளனை பிடித்துக் கொள்கிறார் சனி.

நளனுக்கு கெடுதல்கள் நேருகின்றன. புஷ்கரனுடனான ,சூதாட்டத்தில் தன் இராச்சியத்தை இழந்து தன் மனைவியுடன¢  கானகத்திற்குச் செல்கிறான்.  அங்கே தமயந்தியைப் பிரிகிறான்.  பிறகு அவன் காப்பாற்றிய கார்க்கோடகன் என்ற  அரவமே அவனைத்  தீண்ட  உருவம் கறுமையடைந்து மாறிப்போகிறான். கோசல அரசன் ரிதுபாலன் என்பவனிம் சமையற்காரனாக பணிபுரிகிறான்.  

இறுதியில் தமயந்தியுடன் இணைந்தாலும், நேர்மையான அரசன் துன்புறுவதற்கு சனிபகவான் காரணமாக இருக்கிறார்.

சனி ஒரு முறை சிவபெருமானையே  பீடிப்பதற்காக செல்லும் போது அவர் ஒரு குளத்தின் தாமரைத் தண்டில் மறைந்து கொள்ள நேரிடுகிறது. அதே போல் திருமாலும் சனிக்கு பயந்து மறைந்து கொள்கிறார். 

குழந்தையாய் இருந்த காலத்தில் சனியால் அவதிப்பட்டார் விநாயகர். ஆனால்  அதன்பின் விநாயகரைப் பிடிக்க முடியவில்லை. அதே போல் ஆஞ்சநேயரையும் சனியால் பிடிக்க முடியவில்லை என்று கதைகள் கூறுகின்றன.  

‘வேதியா!  சூரியனின் குமாரனும், நவக்கிரகங்களில் ஒருவனாகவும் விளங்குகின்ற சனிபகவான் ஏனிப்படி அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார்.  சனி பகவான் நல்லவரா கெட்டவரா?   இந்தக் கேள்விக்குறிய பதில் உனக்குத் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனமாக இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்’, என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  

ஒரு மனிதனின் இப்பிறவியை நிர்ணயம் செய்வது சென்ற பிறப்பில் அவன் செய்த நல்வினையும் தீவினையும் என்கிறது இந்து மதம்.

சென்ற பிறவியின் வினைகளின்படி இப்பிறவியில் அவன் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப , அமைந்திருக்கும் கிரக நிலையில், அந்த நேரத்தில், அதற்கேற்ற குடும்பப் பின்னணியில்  பிறவி யெடுக்கிறது   உயிர்.   

மனிதப் பிறவி மட்டுமன்றி கீழான பிறவியும் எடுக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களை கிரகங்களோ, ஏனையவரோ முடிவு செய்வதில்லை . அவனே முடிவு செய்து கொள்கிறான். 

தீதும் நன்றும் பிறர் தர வாரா’  என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

கிரகங்கள் எப்போதும் அதற்குடைய இயற்கைத் தன்மையில் இருக்கின்றன. நம்முடைய நேரப்படியே பலன்கள்  நடைபெறுகின்றன.

கடலோரத்தில் பிறந்தால் மீன்பிடிப்போம், வனத்தில் பிறந்தால் வேட்டையாடுவோம்,  சமவெளியில் பிறந்தால் விவசாயம் செய்வோம், பாலைவனத்தில் பிறந்தால் ஒட்டகம் மேய்ப்போம். நிலங்கள் அதன் இயற்கைத் தன்மையுடன்  எப்போதும் இருக்கின்றன. நாம் எங்கே பிறக்கிறோமோ அதன்படி நம் தொழில் அமைவதைப் போல     நமது வினைகளை அனுபவிக்கும் சூழநிலைக்கேற்பவே நம்  பிறவி அமைகிறது.   

 நம் பிறந்த நேரத்தில்  நிலவுகின்ற கிரகங்களின்   அமைப்புப்படி , பலன்கள்  விளைகிறது. 

கஜமுகாசுரன் என்ற அசுரன் தவமிருந்து, தான் மனிதர்களாலும், தெய்வங்களாலும், விலங்குகளாலும், கொல்லப்படக்கூடாது என்றும், எந்த ஆயுதங்களும் தன் உயிரை பறிக்கக்கூடாது  என்று இறைவனிடம் வரம் வாங்குகிறான்.  

எனவே அவனை அழிக்க ஒரு படைப்பு தேவைப்பட்டது. அதற்காக அவதரத்தவர் விநாயகர்.  யானைமுகமுடைய விநாயகர் , தன் தந்தததை உடைத்து கஜமுகாசுரனை அழிக்கிறார்.

எனவே எனவே விநாயகருக்கு  வேழ முகம் அமைவதற்கு காரணமாகி,  கஜமுகாசுரனின் அழிவிற்கு முக்கிய காரணகர்த்தா ஆகிறார் சனி பகவான் என்பது நமக்கு விளங்குகிறது.  இதில் சனி மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் நல்லதையே செய்துள்ளார் என்பது தெரிகிறது.

அரிச்சந்திரனின் விதிப்படி அரிச்சந்திரனின் குடும்பத்திற்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் ,விளைவு அவர்களுக்கு நன்மையாகவே முடிகிறது.  அரிச்சந்திரனின் புகழ் காலங்கள் கடந்தும் பேசப்படுவதற்கும்  அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களும் ,உறுதியான மன நிலை¬யும் காரணமாகும் , இதன் பிறகு இழந்த நாடு நகரத்தையும்  சனி பகவானின் அருளால் பெற்று மகிழ்கிறார்.

நளன் தமயந்தியின் பிறப்புக்கும் அவர்களின் முன் ஜென்மமே காரணமாகும்.  முற்பிறவியில் காட்டுவாசிகளின் தலைவனாக வாழ்ந்த நளனும், அவன் மனைவியும் வழிதவறிவந்த ஒரு சிவனடியாரின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்தவர்களாவர்.

அதனாலேயே  அரசகுடுமபத்தில் பிறக்க நேர்ந்தது. இருப்பினும் அவர்களின் ஊழ்வினையின் காரணமாய்  சனி பகவானின் பார்வையில்  படநேர்ந்தது. இருப்பினும் சனி அவர்களுக்கு நல்லதையே செய்தார் என்பது  முடிவு சுபமாய¢ அமைவதி¤லிருந்து புரிகிறது. பரத்வாஜரின்  அருளாசிபடி, நளன் சனி பகவானுக்கு திருநள்ளாறில் ஒரு குளம் வெட்டி வழிபட்டு  இழந்த செல்வங்களையெல்லாம் பெற்று மகிழ்ந்தார் என்று  புராணக்கதையொன்று  கூறுகிறது.
 சனி பகவான்  12 ராசிகளையும் சுற்றிவர  முப்பது ஆண்டுகள் ஆகிறது.  எனவே  மனிதனுடைய வாழ்நாள் காலத்தில்  சனிபகவானுடைய பார்வையிலிருந்து  யாரும்   தப்ப முடியாது என்பது மட்டும் உண்மை. ஆனாலும் அவரை வணங்கி வழிபடும் போது   அவர் மனமிறங்கி தன் பார்வையை தணித்துக் கொள்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

  தனக்கு உண்டான கடமையைச் செய்யும் ஒருவரை அந்தக் கடமையின் தன்மை எதுவாகயிருந்தாலும்,   சாஸ்திரங்கள் குறை கூறுவதில்லை.

இந்தக் கருத்தையே  “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”  என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் வலியுறுத்துகிறார்.

வாழ்க்கை இன்பமாகவே அமைந்து விட்டால் ஒரு மனிதன் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லை.  அவன் ஆன்மா தெளிவடைவதுமில்லை. இன்ப துன்பத்தை அனுபவித்து, அதிலிருந்து  விடுபடும்போதே , இந்த வாழ்க்கையைப் பற்றிய  தெளிவான சிந்தனை ஒரு மனிதனுக்கு உண்டாகிறது. அவன் மனம் பக்குவமடைகிறது. 

‘எனவே வேதாளமே!

மனித மனம் பக்குவப்பட்டு, பரம்பொருளை நெருங்க காரணமாய் இருக்கும் சனீஸ்வரன் நல்லவரே! என்பதே உன் கேள்விக்கான என் பதிலாகும்.  

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.
   

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...