Salagiramam |
இறைவனின் இன்னொறு பெயர் இயற்கை. இந்த இயற்கை என்பது நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்னும் பஞ்சபூதங்களை குறிப்பது. பஞ்சபூதங்களால் ஆன உலகை குறிப்பது. அண்டவெளிகளை குறிப்பது.
அதற்கு...அதற்கு...அதற்கு அப்பாலும் இயங்கும் கோடான கோடி நட்சத்திர மண்டலங்களை குறிப்பது, ஈரேழு பதினான்கு லோகங்களை குறிப்பது, அதனால்தான் ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டான். இயற்கையாய் தோன்றும் சில பொருட்களை வழிபட்டான். அந்த வகையில் வருவதுதான் சாளகிராமம்.
சாலகிராமம் என்றால் என்ன?
மாலவன், மாதவன், மாயவன், மதுசூதனன் என்றெல்லாம் போற்றப்படும் மகாவிஷ்ணுவின் நிறம் கொண்ட கல்.
மகாவிஷ்ணுவின் இயற்கை நிறங்களை பிரதிபலிக்கும் கல்.
பொன்னிறம் கொண்ட திருமால்.
பச்சை நிறம் கொண்ட ராமர்.
நீலநிறம் கொண்ட கண்ணன்.
கருமை நிறம் கொண்ட பரசுராமன்.
சாம்பல் நிறம் கொண்ட கூர்மம் என்று அவர் தோன்றிய அவதார நிறங்களை பிரதிபலிப்பதுதான் சாளகிராமம்.
வேல் என்றால் முருகன்.
சூலம் என்றால் சக்தி.
சங்கு என்றால் திருமகள்.
சக்கரம் என்றால் சுதர்சனம் என்பது போல், சாளகிராமம் என்றால் திருமாலைக் குறிக்கும்.
திருமாலின் பெருமையைக் குறிக்கும், அவரின் மகிமையை குறிக்கும். இயற்கையும் இறைவன் என்பதால், பொதுவாக இந்துக்கள் முதலில் இயற்கையை வழிபாடு செய்தனர். பின்னர் உருவ வழிபாடுகள் தோன்றியது.
என்றாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவது போல், வைணவர்கள் திருமாலை சாளகிராம கற்கள் வடிவில் வழிபாடு செய்கிறார்கள்.
இன்று.... நீங்களும் நானும் சாளகிராமத்தின் பெருமையை உணர முடிகிறது, அறிய முடிகிறது, அதைப் பற்றி பேச முடிகிறது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சாளகிராமம் என்பது ஆலயங்களில் இருந்தது, மடங்களில் இருந்தது, அதை தவிர்த்து சர்வ வல்லமை பொருந்திய அரசன் வாழும் அரண்மனைகளில் மட்டுமே இருந்தது. நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு கிடைக்கவில்லை.
ஜோதிடமும் அப்படித்தான். அனைத்தும் அறிந்த ஜோதிடர்கள் இருந்தார்கள். அவர்கள் அரண்மனையில் மட்டுமே இருந்தார்கள் ஆஸ்தான ஜோதிடர்களாக.
மன்னனுக்கு ஆரூடங்கள் சொல்வதும், கோள்ச்சார நிலைகளை அறிந்து தினப்பலன்கள் சொல்வதும்தான் அவர்கள் கடமை. பின்னாளில் எப்படி ஜோதிடம் சாமான்னியர்களுக்கு வந்து சேர்ந்ததோ அதைப் போலவே சாளகிராமமும் வந்தது.
பண்டைய இந்தியாவில் சீரும் சிறப்போடும், செல்வ செழிப்போடும் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசம்தான் இன்றைய நேபாளம். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
உலகின் மிக உயரமான மலை இமயமலை என்று புவியியல் ரீதியாக சொன்னாலும், இந்துக்களை பொருத்தவரை இமயமலையில்தான் சிவன் வசிக்கும் திருக்கயிலாயம் அமைந்துள்ளது. இந்த இமயமலையின் அடிவாரத்தை ஒட்டினார்போல் உள்ளதுதான் ஹரிபர்வதம்.
ஹரிபர்வத மலைக் குன்றில்தான் கண்டகிநதி உற்பத்தியாகிறது. இந்த கண்டகிநதியில்தான், விஷ்ணுவின் சகல அம்சங்களும் பொருந்திய சாளகிராம மூர்த்திகள் ஒரு இயற்கையான புண்ணிய காலத்தில் தோன்றுகிறது.
சாளகிராமங்கள் நத்தைக்கூடு, சங்கு, விசிறி போன்ற பல வடிவங்களில், பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவமெடுத்து சாளகிராமத்தை குடைந்து உள்ளே நுழைகிறார் என்கிறது புராணங்கள்.
இக்கற்களில் இயற்கையாகவே சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் தோன்றுகின்றன. அதனால்தான் இதை மகாவிஷ்ணுவின் சொரூபம் என்பார்கள்.
மரணத்தை தொடும் அந்த கடைசி நிமிஷங்களில் எவன் ஒருவன் தன் சுயநினைவுடன் சாளகிராமத்தை மனதால் வணங்குகிறானோ, அவன் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்கிறது கருட புராணம்.
ஒருவர் தன் இறுதி மூச்சை சுவாசிக்கும் தருணங்களில் பால் ஊற்றும் பழக்கம் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆனால் சாளகிராமத்தை அபிஷேகித்த தீர்த்த தண்ணீரை அருந்தி உயிர் பிரியுமேயானால் அவர் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் மன்னிக்கப்படுகிறார்.
பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப விதவிதமான தண்டனைகள் தரும் யமராஜ பட்டினத்தில், யமதர்மனால் மரியாதை செய்யப்பட்டு வைவஸ்வதம் என்று புண்ணிய உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கருட புராணம் மேலும் சொல்கிறது.
No comments:
Post a Comment