கவிதா...
பிறந்ததே ஒரு செல்வ செழிப்பான குடும்பத்தில். அதை விட பலமடங்கு வசதியான இடத்தில் அவளுக்கு வரன் அமைந்தது. கணவனும் மிகவும் அன்பானவன். நியாயமான எந்த ஆசைக்கும் பணம் என்பது குறுக்கே நின்றதே இல்லை. ஆசைப்பட்டால் உடன் அடைந்து விடும் அளவிற்கு வசதிகளுக்கு எந்த குறையும் இல்லை. இருப்பினும் அணிந்திருக்கும் பகட்டான பட்டுப் புடவைக்கு பின்னும், கழுத்து காதில் ஜொலிஜொலிக்கும் தங்கவைர நகைகளுக்கு பின்னும் அவள் முகத்தில் ஒரு வறட்சி. வறட்சி என்பதை விட ஏக்கம் என்று சொல்லலாம்.
ஏன்?
இத்தனை செல்வங்கள் இருந்தும் குழந்தைப் பாக்கியம் மட்டும் இல்லை. இத்தனை கோடி சொத்துக்களை தேடி வைத்தது யாருக்காக என்ற கேள்விதான் கவிதாவை குடைந்து கொண்டிருக்கிறது.
திவாகர்...
அரசு உயர் அதிகாரி. கம்பீரமான நடை, நேர்மைக்கு எடுத்துக்காட்டு. திவாகரைப் பார்த்தாலே பல அதிகாரிகளுக்கு வார்த்தையே வெளியே வராது. அத்தனை பயம். அதோடு மதிப்பு மரியாதை உள்ள மாமனிதன். ஆனால் இந்த கம்பீரமான உருவத்திற்குள் ஒரு ஆன்மா அனுதினம் அழுதுக் கொண்டிருக்கிறது. தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்கிற வருத்தம்.
இன்று நம்மிடையே எத்தனையோ கவிதா மற்றும் திவாகர்கள் இருப்பார்கள். திருமணம் என்பது எப்படி வாழ்க்கையில் மிக முக்கியமானதோ அதைப்போல் புத்திரபாக்கியமும் மிக முக்கியம். சந்ததி விருத்திக்காகவும், தங்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளவும், இறப்புக்கு பின் கர்மம் செய்யவும் பிள்ளைகள் அவசியம். ஆனால் இதில்தான் சிலருக்கு பிரச்சனை.
எந்த மருத்துவ கோளாறுகளும் இல்லாத ஆரோக்கியமான தம்பதிகளுக்கு கூட புத்திரபாக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. மருத்துவர்களும் மண்டை காய்ந்து போய்கிறார்கள். ஏன்? என்ன காரணம் என்பது புரியாமல் போய்கிறது. ஆனால் இதற்கு ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் கிடைக்கும் பதில் பூர்வபுண்ணியம், ஊழ்வினை. இதை புத்திரதோஷம் என்பார்கள். மொத்தம் எட்டுவிதமான புத்திரதோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
பாம்புகளை விஷ ஜந்துக்களாக பார்க்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாம்புகளை தெய்வத்திற்கு சமமாக வைத்தார்கள். இந்த பூமியை தாங்கி நிற்பதே ஆதிசேஷன் என்ற பாம்புதான் என்கிறது புராணங்கள். பாம்பு தீண்டி இறக்க வேண்டும் என்ற விதி அமைப்பு இருந்தால் மட்டும் பாம்பு நம்மை தீண்டுமே தவிர, மற்ற நேரங்களில் மனிதரை கண்டால் அது விலகியே ஓடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருக்கட்டும்.
இந்த பிறவியிலேயோ அல்லது முன் பிறவியிலேயோ பாம்புகளை அடித்துக் கொன்ற பாவம், பாம்பு புற்றுகளை அழித்த பாவம் போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் ஏற்பட்டு புத்திரதோஷம் உண்டாகிறது. ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு கேதுக்கள் இருப்பது தோஷத்தின் ஒரு அடையாளம்.
இந்த இடங்களில் பாம்பு கிரகங்கள் இருந்தாலும், அவரவர் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப குழந்தைப் பாக்கியத்தை பெறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
பித்ருக்கள் என்பது நம் முன்னோர்களை குறிக்கும். இந்த பிறவியிலோ அல்லது சென்ற பிறவியிலோ நம்மை பெற்றவர்களை சரியாக கவனிக்காமலும், அவர்கள் மனம் நோகும்படி செய்ததாலும், உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் உறைவிட வசதிகளை செய்து தராமலும், கடைசிக் காலத்தில் அருகில் இருந்து பராமரிக்காமல் அலட்சியப்படுதியதாலும் வருகிற தோஷமே பித்ருசாபம்.
இறந்தவர்களுக்கு உரிய திதி கடமைகளை செய்யா விட்டாலும் பித்ரு சாபம் பின்தொடரும் என்பார்கள். ஆக இத்தகைய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்ரு சாபத்தால் புத்திர தோஷம் வருகிறது. இதை ஜோதிட ரீதியாக அறிந்து கொள்ள ஒன்பதாம் இடத்தில் ராகு கேது சனி போன்ற கிரகங்கள் இருப்பது, சூரியனோடு இக்கிரகங்கள் சேர்ந்திருப்பது இத்தோஷத்தின் அடையாளம்.
மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்.
மாத்ரு என்பது தாயை குறிக்கும் ஒரு சொல். தாய்வழி உறவினர்களை கொடுமைப்படுத்தியும், அவமானப்படுத்தியும், அடித்து உதைத்து துன்புறுத்துதல், பத்து மாதம் சுமந்து பெற்ற தாயாரை இழித்துப் பழித்து பேசுதல், அவர்களை சரிவர கவனிக்காமல் தனித்து விட்டுவிடுதல் போன்ற காரணங்கால் மாத்ரு சாபம் ஏற்படுகிறது.
ஜோதிட ரீதியாக இத்தோஷத்தை அறிந்து கொள்ள சந்திரனோடு ராகு கேது, சனி சேர்ந்திருப்பது, புதனோடு சனி, கேது சேர்ந்திருப்பது அல்லது புதனோடு சனி ராகு சேர்ந்திருப்பது தோஷத்தின் அடையாளம்.
சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
இப்பிறவியிலோ அல்லது முன்பிறவியிலோ ஏற்படும் சகோதர சாபம் புத்திர தோஷத்திற்கு காரணமாக அமைகிறது. அதாவது ஒன்றாக கூடி பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையே இடையே ஏற்படும் பகை, சொத்துக்களை ஏமாற்றி வஞ்சகம் செய்தல், சொத்துக்களுக்காக கொலை செய்தல், உடன் பிறந்த சகோதரனின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் அணுகுதல் போன்ற காரணங்களால் சகோதர சாபம் ஏற்படுகிறது.
இத்தகைய தோஷத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்ள செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருந்து, சனி ராகு கேதுவோடு இணைந்து இருந்தால் இத்தோஷம் உறுதிபடும்.
மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
மாதுலன் என்பது தாய்மாமனை குறிக்கும். தாய்மாமனுக்கு செய்யும் துரோகம், சொத்து மோசடிகள், நம்பிக்கை துரோகங்கள், மாமன் மகளை திருமணம் செய்து, அப்பெண் சந்தோஷமாக வாழாமல் கண் கலங்குவதால் தாய்மாமனுக்கு ஏற்படும் துரயரங்கள் இந்த வரிசையில் வரும்.
இத்தகைய தோஷத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்ள புதன் மீன ராசியில் இருக்கும் போது, புதனோடு சனி, கேது சேர்ந்திருப்பது அல்லது புதனோடு சனி ராகு சேர்ந்திருப்பது தோஷத்தின் அடையாளம்.
பிராமண சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
வேதங்களின் வழி நடப்பவர்கள் பிராமணர்கள். பொய் களவு சூது என்பது இல்லாமல் நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அவ்வாறு நேர்மையாக தர்மசாஸ்த்திர நியதிப்படி வாழும் பிராமணர்களை தூஷித்தல், அவமானப்படுத்துதல், அவர்களுக்கு துரோகம் செய்தல் போன்ற காரணங்களால் வரும் புத்திரதோஷம் பிராமண தோஷம் என்று பெயர்.
ஜாதகத்தில் இத்தோஷத்தை அறிந்து கொள்ள குருவோடு சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இணைந்து ஐந்து அல்லது ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதே தோஷத்தின் அடையாளம்.
பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் பெண்கள், மனதாலும் உடலாலும் கணவனுக்கு துரோகம் செய்யாதப் பெண்களை பத்தினிகள் என்கிறது வேதங்கள். அத்தகைய பெண்களை தவறான கண்ணோடத்தில் அணுகுவதும், அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதும் குற்றம்.
இத்தகைய பெண்கள் விடும் சாபம் அந்த தலைமுறையோடு அந்த வம்சமே அழிந்து போகும் என்பதுதான் வேதத்தின் வாக்கு.
பத்தினியான சீதையை கவர்ந்து சென்ற இராவணன், சர்வ வல்லமை பெற்றவனாக இருந்தும், தவப் புண்ணியங்கள் சேர்த்திருந்தும் இறக்க நேரிட்டது. சீதையின் சாபத்தால் அவனது வம்சமே இல்லாமல் அழிந்துப் போனது.
பத்தினியான பாஞ்சாலியின் சாபத்தால் துரியோதனன் அழிந்தான். அந்த கௌரவ குலமே ஒருவர் கூட மீதம் இல்லாமல் மண்ணோடு மண்ணாக மறைந்துப் போனது. புராண காலம் என்றில்லை எக்காலத்திலும் பத்தினிகளுக்கு பாதகம் நினைப்பவர்களுக்கு வம்ச விருத்தி இருக்காது.
ஜாதகத்தில் இத்தோஷத்தை அறிந்து கொள்ள நீச்சம் பெற்ற குருவோடு சனிபகவான் இணைந்திருப்பது, அது ஐந்து அல்லது ஒன்பதாம் இடமாக இருப்பது தோஷத்தின் அடையாளம்.
மந்திரசாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
பில்லி சூன்யம் ஏவல் செய்பவர்கள், பில்லி சூன்யத்தால் மற்ற குடும்பத்தை சர்வநாசம் செய்கிறவர்கள், குட்டிச்சாத்தான், மோகினி, யட்சயினி போன்ற தேவதைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்களுக்கு இச்சாபம் ஏற்படும்.
வாரிசு இல்லாமல் வாழும் தம்பதிகளிடம் இருந்து சொத்து சுகங்களை அபகரித்துக் கொண்டு, அவர்கள் இறுதி காலத்தில் அநாதையாக இறந்துப் போனால், அவர்களுக்கு உரிய கர்மாக்களை செய்யாமல் போனால் அவர்கள் சாபமே பிரேதசாபம் என்று பெயர். இறப்புக்கு பிறகு திதிக்கடமைகள் செய்யா விட்டால் ஆத்மா மேலுலகம் செல்லாமல் பிரேத உடலோடு அலைந்து கொண்டிருக்குமாம். அவ்வாறு வேதனைக்கு உள்ளாகும் ஆத்மாக்கள் தரும் சாபமே பிரேத சாபம் என்று பெயர்.
மேலும் சாதுக்கள், ஞானிகளை அவமதித்தல், துன்புறுத்துதல், கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தல், அபகரித்தல், சிவனடியார்களை நிந்தித்தல் போன்ற காரணங்களாலும் புத்திரதோஷம் ஏற்படுவதுண்டு.
தோஷங்கள் என்பது என்ன?
குழந்தை பிறக்காமல் இருப்பது மட்டுமே புத்திர தோஷம் அல்ல. இந்த புத்திர தோஷங்கள் பல வகைப்படும்.
1. குழந்தை பிறந்து ஒன்றிரண்டு வயதில் இறந்து போவதும் புத்திரதோஷம்தான்.
2. மூளை வளர்ச்சி குறைவாக குழந்தைகள் பிறப்பது புத்திரதோஷம்தான்.
3. பருவ வயதை எட்டிய ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ திடீரென அகால மரணம் அடைவதும் புத்திரதோஷம்தான்.
4. காலம் கடந்து திருமணம் நடந்து, அந்த திருமணமும் நிலைக்காமல் தன் பெற்றோர் வீட்டிற்கு பெண் குழந்தைகள் திரும்பி வருவதும் புத்திரதோஷம்தான்.
5. குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தைகளால் எந்த பயனும் இல்லாமல் போவதும், எதிரியாக மாறுவதும் புத்திரதோஷம்தான்.
இத்தோஷங்களை போக்க வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபாடு செய்து வருதல் சிறந்தப் பலனைத்தரும். குலதெய்வ பூஜை செய்வது, பித்ரு காரியங்களை தவறாமல் செய்வதும் சிறப்பு. எந்த கிரகத்தால் புத்திரதோஷம் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, அந்த கிரகத்தின் அதி தேவதைக்கு பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபாடு செய்வது நல்லது.
No comments:
Post a Comment