தேவர்களின் தாயான அதிதி தேவிக்கு அருளிய வாக்குறுதி படி, தக்க நேரத்தில் அவளது மகனாக அவதரித்தார் பரந்தாமன்.
இரண்டு காதுகளிலும் குண்டலங்கள் அசைந்தாட, புஜங்கள் இரண்டிலும் தோள்வளை, கங்கணம் விளங்க, ஸ்ரீவத்சம் எனப்படும் மச்சம் மார்பிலே பளிச்சிட, தண்டையும் சிலம்பும் கால்களில் இன்னிசை எழுப்ப, மார்பிலே வனமாலை தவழ, சியாமள வண்ணனாக கண் கொள்ளாக் காட்சியாக பகவானின் அவதாரத் தோற்றம் அமைந்திருந்தது.
தேவ துந்துபி முழங்கியது. தேவர்கள் விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தனர். சித்தர்களும், கந்தர்வர்களும் இன்னிசை மூலம் துதித்தனர்.
காசியபரும், அதிதி தேவியும் மெய்மறந்து பக்தி பரவசத்துடன், தங்கள் மகனை பார்த்து மகிழ்ந்தனர்.
குழந்தை உருவில் இருந்த பகவானைக் கைகளால் அள்ளி மார்போடு அணைத்துச் சின்னஞ் சிறு கன்னங்களில் முத்தமழை பொழிந்து மாறி மாறிக் கொஞ்சினர் இருவரும்.
குழந்தைக்கு வாமனர் என்று பெயர் சூட்டினர்.
வாமனர் மற்ற பிள்ளைகளைப் போலவே மகரிஷிகளிடம் சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து ஆன்மிகக் கல்வியில் நிறைகுடமாய் திகழ்ந்தார்.
இதே சமயத்தில் , பலி தனது நாட்டில் பெரிய அளவில் யாகம் ஒன்றை நடத்த தீர்மானித்து, தவ முனிவர்களின் உதவியுடன் யாகத்தை முறைப்படி தொடங்கினான்.
தமது அவதார நோக்கத்தை நிறைவேற்றும் தருணம் வந்தது என வாமனர் தீர்மானித்தார். பெற்றோரிடம் ஆசி பெற்றுக் கொண்டு, மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த யாகசாலையை நோக்கிப் புறப்பட்டார்.
கண்களில் கனிவும் அறிவொளியும் சுடர்விட, மந்தஹாச புன்னகையுடன் ஒரு பிராமணச் சிறுவன் யாக சாலையை நோக்கி வருகிறான் என அறிந்த மகாபலி யாகசாலையின் வாசலுக்கு வந்து நின்றான்.
கமண்டலம் தண்டம் ஆகியவற்றை ஒரு கரத்திலே தாங்கி, பிக்ஷை பாத்திரத்தை ஒரு கரத்திலே ஏந்தி வாமனர் வரும் அற்புதமான காட்சி பலியின் உள்ளத்தை சிலிர்க்க வைத்தது .
வேதியர்களும் தவமுனிவர்களும் ஆச்சரியத்துடனும் மிகுந்த மரியாதையுடனும் வாமனரை வரவேற்று உபசரித்தனர்.
பலி வாமனரை வரவேற்று வணங்கி, ஐயனே! தங்களை இன்று நான் தரிசிக்க நேர்ந்தது என் முன்னோர் செய்த புண்ணியமே.. என்னுடைய மரியாதைக்குரிய அன்பளிப்பாக நான் தரக்கூடியது ஏதாவது இருந்தால் தாங்கள் கட்டளையிடுங்கள், உடனே அதனை நிறைவேற்றித் தருகிறேன் என்று பணிவுடன் கேட்டான்.
அசுரேந்திரா! உன் பரம்பரையே இல்லையெனச் சொல்லாது கேட்டதை வழங்கும் பரம்பரையாகும். அதனால் உன் வேண்டுகோள் என்னை வியப்படையச் செய்யவில்லை.
எனக்கு பெரிதாய் எதுவும் தேவையில்லை. எனக்குத் தற்போது தேவை கொஞ்சம் நிலம். அதுவும் என் காலடியால் அளக்கக்கூடிய மூன்றடி மண் இருந்தால் போதும். அதை நீ தந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார் வாமனர்.
vamanan |
image link http://www.charanamrit.com/gods/vamana_14.html
‘ஐயனே! தங்கள் அடியால் அளக்கக்கூடிய மூன்றடி நிலத்தை வைத்துக் கொண்டு தாங்கள் என்ன செய்ய முடியும்? தாங்கள் ஆசிரம் அமைத்து இறைவனை வழிபடுவதற்கும், பூவனம் உருவாக்கிக் கொள்ளவும் தே¬வான நிலத்தையே தங்களுக்குத் தருகிறேன் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று பலி கேட்டுக் கொண்டான்.
‘அசுர வேந்தா! உன்னுடைய பெருந்தன்மை எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் எனக்கு தேவை மூன்றடி நிலம்தான்.. வேறொன்றும் தேவையில்லை , இதனை அளிப்பதாக உறுதி தந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வாயாக ‘
பலிச்சக்கரவர்த்தி அதற்கு ஒப்புக்கொண்டு, நிலம் தானம் தருவதற்காக தன் கிண்டியிலிருந்த நீரை எடுத்தார்.
இருவரின் உரையாடலையும் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அசுர குருவான சுக்ராச்சாரியாருக்கு சந்தேகம் வந்தது.
இவன் மானிடச் சிறுவனாய் தெரியவில்லை.. சர்வேஸ்வரரான நாராயணனாகத்தான் இருக்க வேண்டும். தேவர்களுக்கு உதவும் பொருட்டு ஏதோ திட்டத்துடன் வந்திருக்கிறார்.. எனவே இந்த இக்கட்டிலிருந்து பலியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.
பலியைத் தனியே அழைத்து, வந்தது யார் என்று கூறி , வாமனரின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டாம்.. என எச்சரித்தார்.
பலி யோசித்தான். ஆசானே! தாங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கலாம் ஆனாலும் கொடுத்த வாக்குறுதியிலிருந்து நான் பின் வாங்குவது சரியாகப்படவில்லை. பலி, வாக்கு தவறினான் என்ற அவச்சொல் எனக்கு வந்து விடக்கூடாது. அதனால் என்ன விளைவு ஏற்பட்டாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றான்.
சுக்கிராச்சாரியாருக்கு சினம் மூண்டது. உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறாய்.. உன்னை காப்பாற்ற முயன்றேன். நீ என் வார்த்தையை மதிக்க வில்லை.. என் விருப்பம் என்கிறாய்.. என்னமோ செய்து கொள்.. உன் விதியை யாரால் மாற்ற முடியும் என்று கூறினார்.
பலி தனது முடிவினை மாற்றிக் கொள்ள வில்லை. கிண்டி நீரை மனைவி வார்க்க வாமனருக்கு அவரது காலடியால் மூன்றடி நிலம் அளந்து கொள்ளலாம் என தானம் தந்தான்.
வாமனர் மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்றார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரது குள்ள உருவம் வானளாவ உயர்ந்தது.
அனைவரும் பிரமித்து நின்றனர். தம்முடைய ஒரு காலினால் பூமியை அளந்தார், மற்றொரு காலினால் ஆகாயத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லை.
பலி! நீ கொடுத்த வாக்குறுதி முற்றிலுமாக நிறைவேறவில்லை .வாக்குதவறியதற்காக நீ நரகத்தில் சென்று வேதனைப் பட வேண்டிவரும். இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்து விட்டேன்.. மூன்றாவது அடிக்கு இடமில்லை இப்போது நான் என்ன செய்யட்டும் சொல் என்று வினவினர்.
பிரபோ! நான் கொடுத்த வாக்குறுதியை எவ்விதத்திலும் நிறைவேற்றியே தீருவேன்.. மூன்றாவது அடியாகத் தங்கள் திருப்பாதத்தை என் சிரசில் தாங்கிக் கொள்கின்றேன் , என்றான் அசுர மன்னன்.
பலி! நீ அசுரர்களின் அதிபதியாக இருந்தாலும் உயர்ந்த மனப்பக்குவம் கொண்டு இருக்கிறாய். உன் வாக்குறுதி படி நடந்து கொள்ள முன்வந்தாய். நீ முன்பு என்ன பாவம் செய்திருந்தாலும் அவையெல்லாம் உன்னை விட்டு நீங்கி, பரிசுத்தம் ஆனவனாகிறாய்.
விசுவ கர்மாவினால் நிர்ணயிக்கப்பட்ட அதல லோகத்தை அடைந்து சகல சம்பத்துக் களோடும் நீ வாழ்ந்து வருவாய் .. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நீ இந்திரப் பதவியை ஏற்பாய், என வாழ்த்தி மறைந்தார்.
வாமன உருவில் வந்த பகவானின் அருளால் பலிச்சக்கரவர்த்தி அதல லோகத்தை ஆளும் பேறு பெற்றான்.
-மதிவாணன்
No comments:
Post a Comment