அனைத்துக்கும் காரணமாகி, அனைத்தும் ஆகி, எங்கும் நிறைந்திருக்கின்ற, ஆதியும் அந்தமுமில்லா பரம்பொருளின் பேருண்மைப் பற்றி எண்ணற்ற ஞானிகளும் ரிஷிமார்களும் எவ்வளவோ சொல்லி வைத்திருக்கின்றனர்
.
பரமாத்மாவே நம்முள்ளும் ஆத்மனாக இருக்கிறார், ஜீவனாக ஒளிர்கிறார் என்பதை ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்கள் வாயிலாக தாம் அறிந்த தம் ஆத்ம அனுபவத்தையும் நமக்குச் சொல்லியிருக்கின்றனர்.
நாம் அறிந்த அண்மைகால ஞானிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் போன்றோர்களும் இன்னும் பல ஞானிகளும் இந்த ஆத்ம அனுபவத்தை உணர்ந்து உலகுக்கு உரைத்தவர்கள்.
ரமண மகரிஷி
தமிழகத்தின் ரமணர் என்கிற மகரிஷி, ஜீவிதத்தை மட்டுமன்றி, மரணத்தையும் தம் அனுபவத்தால் உணர்ந்து அனுபவித்து உரைத்த ஞானி ஆவார். ஞானியாக மலர்ந்த பின் அல்ல , வெங்கட்ராமனாக வாழ்ந்த காலத்திலேயே இந்த அனுபவத்தை அவர் அடைந்திருக்கிறார்.
ஆத்மாவை உணர்ந்து , அல்லது தான் யார் என்பதை உணர்ந்து, ஜீவன் என்கிற பேருண்மையை அறிந்த சாட்சியமாக வாழ்ந்திருக்கிறார்.
1896ம் வருடத்தில் மதுரையில் தன் சித்தப்பா வீட்டில் முதல் மாடியில் அறை ஒன்றினில் அவர் தனித்திருந்தபோது, தான் இப்போது மரணம் அடையப் போகிறோம் என்ற மிகப்பெரிய உணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்.
ஆரம்ப பய உணர்வு மறைந்து, பதற்றமினறி , அமைதியாய் இப்போது என்ன செய்வது என்று யோசித்து, அவருக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறார்,
‘இப்போது மரணம் என்னை நெருங்குகிறது. மரணித்தல் என்றால் என்ன? இந்த உடல் இறந்து போகப்போகிறதா?’ கவனித்துப்பார்ப்போம்..’ மனதில் நினைத்த அந்த நொடியில் அவர் தன் உடலை சாய்த்து , தளர்த்திக் கொண்டு, கைகால்களை நேராக வைத்துக் கொண்டு, மரணம் சம்பவிப்பதை உணர ஆரம்பித்தார். அவர் உடலை விட்டு வெளியில் தனியாக தன்னை உணர ஆரம்பித்தார்.
“நல்லது இப்போது இந்த உடல் இறந்து விட்டது. இனி இது சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, எரியூட்டப்பட்டு சாம்பலாகப் போகப் போகிறது. சரி, இந்த உடல் இறந்து விட்டது. ஆனால் நான் இறந்து விட்டேனா?
இந்த உடல் செயலற்றதாகிவிட்டது. ஆனால் என் நினைவுகள், நான் என்கின்ற இந்தத் தன்மை எனக்கிருக்கின்றனவே?.. அப்படியானால் ‘இந்த நான்’ இவ்வளவு நாள் இந்த உடலில் ஜீவனாக வாழந்திருக்கின்றேன். மரணம் இந்த நானாகிய ஜீவனை எதுவும் செய்யவில்லை.. அப்படியென்றால் மரணமில்லாத ஆத்மாவே நான்”.
பகவான், ரமண மகரிஷி என்று தன் பக்தர்களால் அழைக்கப்படுகிற அந்த மகாஞானி, தன் உடலுக்கு ஏற்பட்ட அந்த இறப்பு என்கிற தன்மையை உணர்ந்திருக்கிறார்.. ஆனால் உண்மையில் இறக்கவில்லை.. அவர் உடலுக்கு ஏற்பட்ட இறப்பு என்ற அனுபவத்தை அடைந்திருக்கிறார்.. உடலுக்கு வெளியே ஒதுங்கி நின்ற தன் ஆத்ம அனுபவத்தையும் வெளிப்படையாக விவரித்திருக்கிறார்.
இதைப் போலவே வேதகால முனிவர்களும் ஆத்ம ஞானத்தை அடைந்திருக்கின்றனர். எல்லோருமே இதை உணர முடியும் என்றும் அறிவித்திருக்கின்றனர். பகவத் கீதையிலும், பதஞ்சலி யோக சூத்திரத்திலும், ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களிலும் இந்த உண்மையை உணர்வதற்குண்டான அடிப்படை ஆன்மிக சாதகங்கள் (பயிற்சிகள்) கூறப்பட்டுள்ளன.
மரணத்தை பற்றிய எண்ணம்
நம் ஒவ்வொருவரின் அடையாளமும் நாம் உண்மையான ஆத்மா என்பதுதான். அந்த ஆத்மாவை ஆயுதங்களால் அழிக்க முடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, நீராலும் நனைக்க முடியாது, காற்றாலும் உலர்த்த முடியாது.
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சீடர் கேட்கிறார்.. ‘ஸ்வாமி இந்த உண்மையை நான் எப்போது உணர்வேன்?’
குரு கூறுகிறார்.. ‘அதை அறிய நீ முயற்சிக்க வேண்டும். உனக்குள் தேடல் வேண்டும்.’
ரமண மகரிஷியின் வாழ்க்கையில் இந்தத் தேடுதலே நிகழ்ந்தது. தன்னை உணர்தல் என்கிற அந்த ஆன்மிக அனுபவப்பெருக்கில் அவரது அகங்காரங்கள் (ஈகோ)யாவும் அடித்துச் செல்லப்பட்டது.
தனது சொந்த மரணத்தை உணர்ந்த தருணத்தில் வெங்கட்ராமன் என்கிற சிறுவன் ஞானியாய், ரிஷியாய் மலர்ந்து பரிணமிக்கிறான்.
‘மரணம்’ என்கிற நிகழ்வின் தாக்கம் நெஞ்சத்தில் மோதும்போது ஒவ்வொரு மனிதனும் தன்னை கொஞ்சமாவது மேன்மைப் படுத்தக்கொள்ளவே விரும்புவான். ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வான்.. ஈர இதயம் உள்ளவனாய் திகழ்வான்.
இதைத்தான் விவேகாநந்தர் தன் சீடர்களிடம் கூறுகிறார், ‘மரணத்தை பற்றிய எண்ணங்கள் வரும்போது, அங்கே ஒரு புதிய வாழ்க்கை உதயமாகிறது.’
சீடன் கேட்கிறான்.. ‘ மரணத்தை பற்றி எண்ணுகிற போது ஆத்மா அதிர்ந்து போகாதா, அந்த நினைவே நெஞ்சத்தை இருளில் மூழ்கடித்து விடாதா?’
ஞானி கூறுகிறார்... ‘ஆம் ஆரம்பத்தில் இதயம் அதிர்ந்துதான் போகும்.. ஆனால் மரணத்தை பற்றி தொடர்ந்து எண்ணும் போது அதுவே ஒருவன் புதிய உயர் வாழ்க்கையை வாழக் காரணமாய் அமைகிறது.. அதிகம் சிந்திக்க வைத்து அவன் எண்ணத்தை மேம்படுத்துகிறது.’
இங்கு எல்லாமே அழிந்து போகும்.. மாயை, மாயை எல்லாம் மாயை என்பதை உணரவைக்கும் மந்திரச்சாவிதான் மரணம்.
மாயை: எல்லாம் மாயைகள்! என்ன ஒரு ஆணித்தரமான அறிவிப்பு?! ஆனால் அதுதான் உண்மை. புத்தியில் அறைந்து சொல்லும் உண்மை.
நான் எனது என்பதெல்லாம் மாயை. நான் என்ற அகந்தையை அழித்து பண்பட்ட மனிதனாக மாற்றுவதால் மரணம் ஒரு நல்ல சிநேகிதனாகிறது.
மரணம், வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் விலைமதிப்பற்றதாக நினைக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாய் அமைத்துக் கொள்ள வைக்கிறது.
எப்போது வேண்டுமானாலும் மரணம் நம்மை அணுகும் என்பதை உணர்ந்து கொள்ளும் போது, அங்கே கோபப்பட நேரமில்லாமல் போகிறது, வெறுப்பதற்கும் எண்ணங்கள் எழாமல் போகிறது. நாம் அன்புசெலுத்தும் உறவுகளிடம் சண்டை போடும் காரணங்கள் இல்லாமல் போகிறது.
மனித வாழ்வின் லட்சியத்தை நோக்கிய பயணத்தை துவக்கி வைக்கிறது, அதாவது அழிவில்லா ஆத்மனை உணரும் உந்துதல் ஏற்படுகிறது. அது நம் பிறப்புரிமை ,முன்னுரிமை என்பதை நினைவுப்படுத்துகிறது.
நாம் அழிவற்ற ஆத்மா என்கிற எண்ணம் நம்முள் அன்பையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்க வைக்கிறது.
இறக்கும் கலை
மரணத்தைப்பற்றிய எண்ணம் மரணத்தைப் பற்றிய பயத்தினை போக்குகிறது என்பது மட்டுமல்ல, நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது மரணிப்பது எப்படி என்பதைப்பற்றியும்தான். மரணத்தை எதிர்கொள்ளலும், மரணித்தலும், ஒரு கலைதான்.
எப்படி இறக்க வேண்டும் என்ற ரகசியத்தை பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார்.(8 : 12-13)
கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்..
“மரண வேளையில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். புலன்களின் கதவுகளை முழுமையாக மூடி விட்டு, மனதை இதயத்தில் மையப் படுத்துங்கள். தியான நிலையில் மனதை குவித்து எல்லா சக்திகளையும் சிரசிடம் கொண்டு செல்லுங்கள். இந்த நிலையில் பரம்பொருளைக் குறிக்கின்ற ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரியுங்கள். நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைவீர்கள்.”
‘மரணம் சம்பவிக்கும் காலத்தில் நம்முடைய புலன்களின் கதவுகள் முழுமையாய் சாத்தப்படுகின்றன என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
நாம் சுய ஆத்ம உணர்வுடன் இருக்க வேண்டும் என விரும்பினால் அந்த ஒரு முகப்படும் உணர்விலிருந்து நம்மை எதுவும் பிரித்து விட முடியாது. ஏனெனில் அப்போது பார்ப்பதோ, கேட்பதோ, அல்லது அப்படி முயற்சிசெய்தாலும் அதுமுடியாது. நம் மனம் முழுமையாக ‘நான்’ ‘சுயம்’ என்றெல்லாம் கூறப்படுகிற ஆத்மனிடத்தில் மையப்பட்டு லயித்திருக்கும்.
நம்மில் பலர் இறக்கும் தறுவாயில் இருப்பவரைச் சுற்றி நின்றுகொண்டு அவர்களது புலன்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு, இறை நினைவுடன், ஆத்மனுடன¢ ஒன்றியிருக்க முயலும் அவர்களின் மனதினை அதிலிருந்து விலக்கும் முயற்சியை செய்கின்றோம். அது தவறு.
மரண காலத்தில், எல்லா சிந்தனைகளையும் நிறுத்தி விட்டு , தெளிந்த மனதுடன், மனம் முழுவதும் இறை சிந்தனையை நிரப்பிக் கொண்டு, மிகுந்த அன்புடன் இறைவனையும், சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும் பார்க்க வேண்டும். அப்போது மரணம் நிகழும் தருணத்தில் இதயத்தில் இறைவனைத் தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
சமீப காலத்திய சம்பவங்கள்
பொதுவாகவே ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஆன்மிக விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் வெளிதோற்றத்தில் மற்றவர் போலவே காட்சியளித்தாலும், அவர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் சதா மந்திரங்கள் விழிப்புணர்வுடன் ஓடிக் கொண்டேயிருக்கும். இதயத்தின் ஆழத்தில் இறைவனின் நாமங்களே சுடர்விட்டுக் கொண்டிருக்கும்.
அத்தகைய ஞானிகள் மூவரின் இறுதி கால நடவடிக்கைகளை பார்ப்போம்.
நாராயண மகராஜ்
புனித அன்னை சாரதா தேவியின் சீடராக இருந்து ஆன்மிக மேன்மை அடைந்தவர்.
ஸ்வாமிக்கு வயதாகிவிட்டது.. ஏறக்குறைய 89 அல்லது 90 வயது இருக்கலாம். நோயினால் உடல்நிலை பலவீனம் அடைந்திருந்தார். இறுதி நாட்களில் கல்கத்தாவிலிருக்கும் மருத்துவ மனையில் அவரைச் சேர்த்திருந்தார்கள்.
சகதுறவிகள் துறவிகள் ஒவ்வொருவராக தினசரி தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் வந்து அவருடன் தங்கியிருந்து கவனித்துவிட்டுச் செல்வார்கள். மகராஜின் உடல் பலவீனப்பட்டிருந்ததால் பெரும்பாலும் படுக்கையில் சாய்ந்தபடிதான் இருப்பார்.
அந்த அறையில் அவரோடு மூன்று அல்லது நான்கு நோயாளிகளின் படுக்கைகள் இருந்தன. ஆனாலும் அவர்களுடன் மகராஜ் பேசுவதில்லை. பேசினாலும் ஓரிரு சொற்கள் அவ்வளவுதான்.
ஒரு நாள் , சக துறவிகள் சந்திக்க வரும் நேரத்திற்கு சற்று முன்பாக அவர் தனது அறையில், மற்ற படுக்கைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி அழைத்து, எனது சகோதரத் துறவிகள் இன்னும் சிறிது நேரத்தில் என்னைச் சந்திக்க வருவார்கள்.. அவர்களிடம் , என் அன்னை வந்துவிட்டார் ( புனித அன்னை) நான் அவருடன் புறப்பட்டுச் செல்கிறேன் என்று தெரிவித்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டு அமைதியாய் படுக்கையில் சாய்ந்து விட்டார்.
உடலை உகுத்துவிட்டுச் செல்லுமுன் இறுதியாய் அவர் பேசிய வார்த்தைகள் இவைதான். இவ்வாறு ஸ்வாமி நாராயண மகராஜ் , புனித அன்னையுடன் அவரது உலகிற்குச் சென்று, அழிவில்லாத நிலை அடைந்தார்.
தன் வாழ்நாள் முழுதும் மனிதநேயத்தை தன் அகத்துள் கொண்டிருந்த அவரது வாழ்க்கை, அதிலிருந்து வெளிப்பட்ட அவரது ஆன்மிக மேன்மை இவற்றை அவரது மரணம் நமக்கு உணர்த்துகிறது. முழு விழிப்புணர்வுடன் புனித அன்னையின் நினைவுடன் அவர் தன் மரணத்தை நிகழ்த்திக் கொண்டார்.
சங்கரரின் ‘காலடி’யிலிருந்து -ஒரு துறவி-
இன்னொரு நிகழ்வு, ஆதி சங்கரர் பிறந்த காலடியிலிருந்து வந்த 35 வயதுடைய துறவியைப் பற்றியது. 1963ம் வருடம் சுவாமி விவேகானந்தரின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கல்கத்தாவின் அருகிலிருக்கும் பேலூர் மடத்திற்கு இத்துறவி வருகை புரிந்தார்.
திரும்பும் வழியில் நாக்பூர் ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஸ்வாமி சிவானந்தா அவர்களின் சீடரான ஸ்வாமி பாஸ்கரேஸ்வரானந்தா. ஒரு நாள் காலடி துறவி, ஸ்வாமி பாஸ்கரேஸ்வரானந்தாவுடன் கோயிலுக்குச் சென்றார்.. அது ஆஸ்ரமத்தை விட சற்று உயரமான இடத்தில் இருந்தது.
உயர ஏறும்போது கால் தவறி துறவி தவறி விழுந்து விட்டார். தலையில் பலத்த அடியுடன் நினைவிழந்துவிட்டார்.
ஒன்பது நாட்கள் ஆகியும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. நினைவில்லாத அந்த நிலையிலும் அவர் எப்போதும் உச்சரிக்கும் ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தார். இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும் இந்த முறையை அஜபஜபம் என்பார்கள்.
சதா உச்சரிக்கும் இந்த ஜபமானது ஒருவரின் மூச்சுக் காற்றுடன் இணைந்தே ஒடிக்கொண்டிருக்கும். அப்படியே ஒன்பது நாட்களும் நினைவற்ற நிலையிலும் அவரது உதடுகள் அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் உள்ள மனிதன் தான் எங்கே சென்றாலும்,என்ன செய்தாலும் இறைவனை எப்போதும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருப்பான்.
ஒன்பது நாட்களுக்குப் பிறகு காலடியிலிருந்து வந்த அந்தத் துறவி மரணம் அடைந்தார். ஆஸ்ரமத்திலிருந்த துறவிகள், அவரை கவனித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஏனையோரும் முற்றிலுமாய் நினைவிழந்த மனிதன் தொடர்ந்து மந்திரங்கள் உச்சரித்தது கண்டு மிகுந்த ஆச்சரியப்பட்டு போயினர். அவர் சாதாரண மனிதர் அல்ல.. இறைவனின் பெயரை உச்சரித்த படி உயிர் துறந்த உன்னதத் துறவி.
இராமகிருஷ்ணா மடத்தின் அனைத்து துறவிகளும் பக்தர்களும் இணைந்து அவரது இறுதி காரியத்தை நிறைவேற்றி வைத்தனர்.
புவனேஸ்வரில் ஒரு சமையற்காரர்
மூன்றாவது நிகழ்வு உதி என்ற சமையற்காரரைப் பற்றியது.
புவனேஸ்வர் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரும், ராமகிருஷ்ண மடங்களின் முதல் தலைவருமான ஸ்வாமி பிரமானந்தா அவர்கள் அடிக்கடி வருகை தருவது வழக்கம். ஆஸ்ரமத்தில் சமையற்காரராக பணிபுரிந்த உதி என்பவர் ஸ்வாமி அவர்களின் சீடர்.
வயதான பின் தன் ஆசிரமப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற உதி அருகிலிருந்த தனது கிராமத்திற்கு சென்று தங்கி விட்டார். ஆனாலும் தன் குருநாதரின் பிறந்த நாளின் போது ஆசிரமத்திற்கு தவறாமல் வந்து விடுவார்.
ஒரு முறை ஸ்வாமிஜியின் பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே அவர் ஆசிரமத்திற்கு வந்தார். பஞ்சாங்கம் தாருங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டார். அதைக் கவனமாகப் பார்த்து விட்டு தன் கிராமத்திற்கு திரும்பிவிட்டார்.
ஸ்வாமிஜின் பிறந்த நாள் வந்தது. உதி கலந்து கொள்ள வில்லை. அனைவருக்கும் ஆச்சரியம்.. ஏன் உதி வரவில்லை என்று விசாரித்த போது.. ஸ்வாமிஜியின் பிறந்தநாளன்று அவர் மரணம் நிகழ்ந்திருப்பது தெரிந்தது.
தன் குருவின் பிறந்த நாளன்று அவர் தன்னுடைய மரணநாளை தேர்ந்தெடுத்திருப்பது அனைவருக்கும் அப்போதுதான் தெரிந்தது. தன் குருவின் முழு உணர்வுடன் அவர் பிறந்த புனித நாளில் குருநாமத்தை உச்சரித்தபடி, உதி தன் மரணத்தை நிகழ்த்திக் கொண்டார். அவரது ஆன்மா உயர்ந்த ஆன்மா, ஒளிபொருந்திய ஆன்மா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒருவரின் ஆன்மா ஒளிபெற்றிருப்பது என்பது அவரின் கல்வி மற்றும் அறிவினைப் பொறுத்தல்ல.
கடவுளை நினைப்பதாலேயே ஒருவர் தன் ஆன்மாவை ஒளிபெறச் செய்து கொள்ளமுடியும். நம் தற்காலத்திய கண்ணோட்டத்தின் படி பார்த்தாலும் இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்வியறிவு பெற்றவர் அல்ல. படித்த பல அறிஞர்களுடன் கலந்துறையாடியிருக்கிறார். ஆனால் அவர்களில் பலரின் ஆன்மா சுடர் ஒளிகுன்றியே யிருந்திருக்கிறது.
ஒருவன் பண்டிதனா, பாமரனா, துறவியா என்பதைப் பொருத்தல்ல.. அவன் தூய இதயம் உள்ளவனா, தன்னைப் போலவே பிறரையும், பிறருக்குள் தன்னையும் காண்பவனா என்பதைப் பொருத்தே அவன் ஆன்மா ஒளிபெறுகிறது.
ஆன்மிகப் பயிற்சி என்பது கடவுளே ஒருவரே பெரியவர், அவரே அனைத்துக்கும் உடைமையானவர் என்ற எண்ணத்துடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் அறிவுரையாகும்.
அப்படி நினைக்கும் போதே நான் , எனது என்ற அகங்காரம் நம்மை விட்டு விலகிவிடும்.. நம் ஆன்மிக நிலை வளர்ச்சியுறும், ஆன்மா ஒளிபெறும்.
கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்..(8:16)
இந்த பிரபஞ்சத்தில் என்னோடு இணைந்து கொள்பவரைத் தவிர, எல்லா உயிர்களுக்கும் மறுபிறவி உண்டு.
* *
மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் மனித வாழ்க்கையை செம்மையாக்குகிறது. சுயநலம் தொலைந்து போகிறது.. சுய நலம் தொலையும் போது ஆன்மிக முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒருவனின் ஆன்மா ஒளிபெறுகிறது.
மரண காலத்தில் இறைவனைப் பற்றிய எண்ணம் மறுபிறப்பற்ற உன்னத உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
இதுவே .. மனித வாழ்க்கையை உன்னதமாய் நிறைவு செய்யும் இறக்கும் கலை.
* * *
இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை.. தினசரி இறைவனின் நினைவோடு செயல்படுங்கள். பிடித்த மந்திரத்தை அல்லது நாமாவளியை எப்போதும் மனதிற்குள் ஜபித்துக் கொண்டிருங்கள்.. உங்கள் சுவாசத்தோடு அது இரண்டறக் கலந்திருக்கட்டும்.. ஆன்மா ஒளிபெறட்டும்.
‘ஓம் க்லீம் ஸ்ரீகிருஷ்ணாய நமஹ’
-மதிவாணன்
ஆழ்ந்த கருத்துக்கள் .
ReplyDeleteசிறந்த வழிகாட்டுதல்கள்.
அறிந்து கொள்ள வேண்டியவை
ஆயிரம், ஆயிரம் !
சிறப்பான பதிவு.