Follow by Email

Monday, 5 May 2014

குரு பகவான் தரும் யோகம்

தன்னை உணர என்ன வழி?

ஒன்னு தவம் செய்யனும் அல்லது அவர் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருக்கணும்.  இருந்தால்,  ஜாதகருக்கு தன் அந்தஸ்தைப் பற்றிய அக்கறை அதிகம் இருக்கும்.  எங்கேயும் எதிலேயும் அவமரியாதையை சந்தித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

நாலுபேர் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது, வாழ்வார், வாழ்ந்து காட்டுவார்.  அதில் ஒன்றும் சந்தேகம் தேவையில்லை. 

இது இப்படியே இருக்கட்டும்.  சோமபானம் சுராபானம் தெரியுமா? தெரியாதா?.. 

அதுசரி... இது இந்திரன் காலத்து போதை வஸ்து.  அல்லது இந்திரன் காலத்து பெயர்.  இப்போதைய பெயர் பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், வோட்கா. 

நம்மை சுற்றி இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவோர் ஏராளம். அப்படி பயன்படுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தாதவர்கள் சொல்லும் செல்லப் பெயர் என்ன?

குடிகாரன்.

சரி... குடிகாரர்களிலேயே மூன்றுவகை இருக்கு.  முதல்வகை மர்மக்குடி.  அதாவது யாருக்கும் தெரியாமல் எங்காவது தொலை தூரத்திற்குபோய் குடித்துவிட்டு, போதை இறங்கியதும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி வந்து விடுவது.

அடுத்தது... கவுரவக்குடி. 

ரகசியமாக வாங்கிட்டுபோய் வீட்டிலே வச்சு குடிச்சிட்டு, வீட்டு உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பது.

மூன்றாவது..... மானங்கெட்ட குடி.

வீட்டில் இருந்து கிளம்பும்போது பக்காவா டிரஸ் பண்ணிக்கிட்டு போறது.  போற இடத்திலே தண்ணியை குடிச்சிட்டு நடு ரோட்டுல அளப்பறையை பண்றது.  எங்காவது ஒரு பிளாட்பாரத்தில் விழுந்து கிடக்கிறது.  

முதல் இரண்டுக்கு குருவும் காரணம்.  மூன்றாவது குடிக்கு குரு மட்டும்தான் காரணம்.  இப்படி குருவை குற்றம் சொல்ல ஒரே காரணம், அவர் சமூக அந்தஸ்தை குறிக்கிற கிரகம்.   

நாம் எப்படிபட்ட குடும்பத்திலே பிறந்திருக்கிறோம்.  நம்ம கவுரவம் என்ன, பாரம்பரியம் என்ன, என்கிற சிந்தனையை தரவேண்டிய குரு பலம் இழந்து போனால் அப்புறம் களேபரம்தான். 

அதோடு நீதி, நேர்மை, ஆன்மிக உணர்வு, விட்டுக் கொடுத்தல் இவற்றிற்கும் குருதான் காரணம்.  

சரி... இந்த குருவால் வரும் யோகங்கள் என்ன? ஒரு ரவுண்ட் பார்ப்போமா. 

சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து  4,7,10ம் இடங்களில் குரு இருந்தால் கஜகேசரி யோகம் என்று பெயர்.  

சிங்கத்தை கண்ட யானைகள் கூட்டம் எப்படி சிதறி ஓடுமோ, அதைப்போல்  துன்பங்கள் எல்லாம் விலகி ஒடும்.  தோஷங்கள் எல்லாம் சூரியனை கண்ட பனிபோல் மறைந்து போகும்.  ஆண்டாண்டு காலமாக இதற்கு விளக்கம் சொல்லும் பெரியோர்கள் சொல்வது இது.  

அதோடு ஜாதகர் புகழ் பெறுவார்.  நல்ல பதவியில் இருப்பார்.  பெரியோர்களின் உதவிகளை பெறுவார்.  செல்வத்தை சேர்த்து உயர்ந்த மனிதராக இருப்பார்.  

சந்திரன் இருக்கும் ராசியிலோ, சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து 5,9ம் இடங்களில் குரு இருந்தால் குருசந்திர யோகம் என்று பெயர்.  

இதுவும் சிறந்த யோகம்தான்.  சாதாரண குடியில் பிறந்தவர்கள்கூட சாதனை மனிதர்களாக மாற இந்த யோகமும் ஒரு காரணம்.  வாழ்வாங்கு வாழவைக்கும்.  

வையகத்தில் புகழ்பெற உதவும்.  சீரிய சிந்தனையும், சிறப்பான வாழ்வும் அமையும்.  கள்ள கபடம் இல்லாத உள்ளம் படைத்தவர்களாக, பெரியயோர்களின் ஆசிபெற்று வளமோடு வாழ்வார்கள். 

லக்னத்திற்கு 4,7,10ம் இடங்களில் குரு இருந்தால் ஹம்ஸ யோகம் என்று பெயர்.  இதுவும் பிரபல யோகம்தான்.  மற்ற கிரகங்களின் பலத்தை பொருத்து யோகநிலையை தரும்.  

தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்கள்.  தன்னலமனம் இல்லாதவர்கள்.  தயவு தாட்சன்யம் நிறைந்தவர்கள்.  தரும சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

குருவும் செவ்வாயும் கூடி இருந்தாலும், குருவுக்கு 4,7,10ல் செவ்வாய் இருந்தாலும் குரு மங்கள யோகம் என்று பெயர்.  

இது கொஞ்சம் அதிரடியாக செயல்பட வைக்கும்.  அதிகார தோரணையைத் தரும்.  எதிர்ப்பவர்களை, எதிரிகளை பயிர்களுக்கு இடையே இருக்கும் களைகளை களைந்து எரிவது மாதிரி தயவு தாட்சண்யம் இல்லாமல் களைவார்.

பொதுவாக குருவால் ஏற்படும் யோகம் நல்ல பலன்களையே தருகிறது.  உங்கள் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கும் வளமான வாழ்க்கை காத்திருக்கிறது. 

இன்னும் உங்கள் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது? நல்ல காலம் எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். அழைத்தால் பதிலோடு வருவேன்

உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment