நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் முதன்முறையாக 49ஓ எனப்படும் முறை கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி வரிசையில், மேலேயுள்ள யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய ஒரு பொத்தான் வைக்கப்பட்டது.
நாட்டில் கட்சிக்கொடிகள் பல பறக்கும் நிலையில், இந்த பட்டனுக்கு அவ்வளவாக வேலை இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான்.
ஏனெனில் சில தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்குதான் அதிகம் பேர் 'வாக்களித்துள்ளனர்'.
அந்த சாதனையில் முதலிடம் தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான். இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர்.
இதைப்போல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. எல்லா கட்சிக்கும் நாங்கள்தான் மாற்று என்று கூறிய ஆம் ஆத்மிக்கு பதிலாக, நோட்டாவுக்கு மக்கள் வாக்களித்துள்ளதை வைத்துப் பார்த்தால், ஆம் ஆத்மியை மக்கள் ஒரு மாற்றாக நினைக்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
ஏனெனில் மேற்கண்ட மூன்று தொகுதிகளிலுமே நோட்டாவை விட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment