Follow by Email

Sunday, 27 April 2014

திருமணப் பொருத்தம்


சங்கீதா. 

அழகி என்று ஒரு வரியில் சொல்வதை விட, பேரழகி என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்.  பாரதிராஜா பார்த்தால் படத்தில் நடிக்கிறாயா என்று கேட்கிற மாதிரி அழகு ராட்சஸி.

கடந்த வருடம்தான் கல்யாணமேடை ஏறினாள். கைப்பிடித்தவன் பெயர் மாதவன்.  அழகிக்கேற்ற அழகன். அச்சு அசல் ஆணழகன் அரவிந்தசாமி மாதிரி ஒரு லுக். புலவர்கள் வர்ணிக்கும் ஆணின் உடல் கட்டமைப்பை பெற்றவன். 

இவர்களை ஜோடியாக பார்ப்பவர்கள் மனதார ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் ஜோடிப் பொருத்தம் சூப்பர். அதற்கு தகுந்த மாதிரி நல்ல வேலை, கை நிறைய சம்பளம். வசதி குறையாத வாழ்க்கை. 

இப்படியான நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து இனிய இல்லறத்தை நடத்துவார்கள் என்று நீங்கள் நம்பினால் ஏமாந்து போவீர்கள்.

ஏன் என்னாச்சு?

ஒருவரை ஒருவர் அனுசரித்து போவதில்லையா?

அதில் கூட பிரச்சனை இல்லை.

அப்புறம்? 

மாமனார் மாமியார் கொடுமையா?

அச்சச்சோ... அதெல்லாம் இல்லை. 

வேற என்னதான் பிரச்சனை?பொருத்தம் உடலிலும் வேண்டும். 
புரிந்தவன் துணையாக வேண்டும். 
கணவனின் துணையோடு தானே - காமனை வென்றாக வேண்டும்.

புரியுது. அந்த பொருத்தம் இல்லையாக்கும்.

எஸ்..எஸ்... அதுதான் இருவருக்குள் மனவேறுபாடு. ஒற்றுமைக் குறைவு. வெறுப்பு, கசப்பு. நாம ஜோதிடத்திற்கு வருவோம்.

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதுதான், இப்பொருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. சரசோதிமாலை, சேகரமாலை, முகூர்த்த தருபணம், காலமிருதம், சூடாமணி உள்ளமுடையான் என்பதெல்லாம் பழங்கால ஜோதிட நூல்கள். 

இந்த நூல்கள்தான் பத்து பொருத்தம் முதல் 21 பொருத்தங்கள் வரை பார்க்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் பத்து பொருத்தங்கள் பார்க்கும் விதமே பரவலாக நடைமுறையில் உள்ளது.  இதில் திணம், கணம், யோனி, ராசி, ரச்சு இவ்வைந்து பொருத்தங்கள் கூடி வந்தால் திருமணம் செய்ய உத்தமம். 

அதிலும் பிராமணர்களுக்கு திணமும், சத்திரியர்களுக்கு கணமும், வைசியர்களுக்கு ராசியும், சூத்திரர்களுக்கு யோனியும், அனைத்து தரப்பினருக்கும் ரச்சும் அவசியம் என்பதுதான் ஜோதிட வாக்கு. 

நாம் இதைப் பற்றி அலசப்போவதில்லை. இப்போதைக்கு வேறு விஷயம். அது யோனிப் பொருத்தம்.

ஆணோப் பெண்ணோ அசுவனியில் பிறந்தால் குதிரை, பூரட்டாதியில் பிறந்தால் சிங்கம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆணோ பெண்ணோ நல்ல நண்பர்களாக இருக்கலாம். ஆனால் தம்பதிகளாக மாறினால் தகராறு என்கிறது ஜோதிடம்.

ஏன்?

 இரண்டும் பகை மிருகம். யோனி பொருத்தமில்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள் ஜோதிடர்கள். மனிதர்களை பிறந்த நட்சத்திற்கு ஏற்றாற் போல் குதிரை என்றும், சிங்கமென்றும், பூனை என்றும், புலி என்றும், எலி என்றும், மான் என்றும் ஞானிகள் வகைபடுத்தியதற்கும் காரணம் இருக்கிறது. 

குதிரைக்கு ஒரு குணம், சிங்கத்திற்கு வேறு குணம். பூனையை எடுத்துக் கொண்டால் ஒரு குணம், எலியும் அப்படித்தான். ஆக மிருகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு குணம், பழக்க வழக்கங்கள் கொண்டது. அதைப் போல்தான் மனிதனும். பிறந்த நட்சத்திரத்திற்கு எற்றாற்போல் குணமும் மனோநிலையும் மாறுபடுகிறது.மிருகங்கள் தன்னுடைய துணையோடு இணையும் போது காட்டும் ஈடுபாடு, காலஅளவு, லயிப்பு நிலை இவற்றை கணக்கிட்டுப் பார்த்த ஞானிகள் மனிதனையும் வரிசைப்படுத்தினார்கள். இதைத்தான் யோனிப் பொருத்தம் என்றார்கள்.

அப்படியானால் யோனிப் பொருத்தம் மிக மிக அவசியம் அப்படித்தானே?

கொஞ்சம் பொருங்க. பரணியில் பிறந்த சங்கீதாவிற்கு, ரேவதியில் பிறந்த மாதவனை திருமணம் செய்து வைத்தார்கள். இருவரும் மிருகங்கள் வரிசையில் ஆண் யானை பெண் யானை. பகை மிருகங்கள் கூட இல்லை. ஆனாலும் வாழ்க்கையில் அந்த சுகம் இல்லை. 

ஏன்?

அதைத்தான் கண்டுபிடிக்கனும்.

நண்பர் ராமசாமிக்கு கல்யாணம். 11 பொருத்தம் இருப்பதாகவும், இந்த ஆணுக்கு இந்த பெண்ணே மனைவி. இதைவிட சிறந்த பொருத்தம் இல்லை என்றும் அடித்துச் சொன்னார்கள் ஜோதிடர்கள். 

இது பூர்வபுண்ணிய பொருத்தம், விட்டக்குறை தொட்டகுறை என்றெல்லாம் மெருகேற்றினார்கள். 

நாள் திதி நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்து, வேதமந்திரங்கள் ஒலிக்க அக்னிசாட்சியாக இனிதே நடந்தேறியது திருமணம். மூன்றே மாதம்தான் பாலும் கசந்தது, படுக்கையும் நொந்தது. ஆணும் பெண்ணும் அவரவரர் வீட்டில். ஏன்? எங்கே தவறு நிகழ்ந்தது.

நண்பர் கண்ணனின் கதையோ வேறு. இல்லறத்துணையை பஸ்ஸில் பார்த்தார். கவிஞர்கள் சொல்வது போல், மின்னல் அடித்தது. ஹோட்டல், சினிமா, பீச்,கோவில் என்று நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது காதல். இருவருக்கும் ஜாதக பொருத்தம் இருக்கிறதா?

அப்போது அவர்களுக்கு தெரியவே தெரியாது. இப்போது கூட இருவரும் நட்சத்திர பொருத்தமற்ற ஜோடி. 

போகட்டும்.  எல்லா காதல் ஜோடிக்கும் வரும் சங்கடம் இருவருக்கும் வந்தது. ஊரார் எதிர்ப்பு, உற்றார் எதிர்ப்பு, காதல் வெற்றிப் பெற கல்யாணம் ஒன்றே தீர்வு. நான்கு நண்பர்கள் உதவியுடன் கொழுத்த ராகுகாலத்தில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தார்கள். 

இதோ இன்றோடு பதினைந்து வருடங்கள் கடந்து விட்டது. காதலில் இருவர் கருத்தொருமித்து உல்லாச வாழ்வில் உலா வருகிறார்கள். இரண்டு மழலை செல்வங்களும் உண்டு. எப்படி?

இது விதி என்பதை விட கிரக பலம் என்பதுதான் உண்மை. திருமண பொருத்தத்தில் மிருகங்களின் குணத்தை கொண்டு ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும் லக்னம், ராசி, மூன்றாமிடம், பனிரெண்டாமிடம், சுக்கிரன், செவ்வாய், சந்திரன், சனி, ராகு, போன்ற கிரகங்களின் வலிமைமிக்க கூட்டணி அல்லது பார்வை இந்த ஆய்வை மாற்றி அமைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. 

அதனால் வெறும் நட்சத்திர பொருத்தத்தை மட்டுமே நம்பி கல்யாண களத்தில் குதிக்காமல், கிரக நிலவரத்தை ஆராய்ந்து இறங்கினால் இல்லறம் நல்லறமாகும். கட்டில் இனிக்கும். 


நான் தினமணி இணைய தளத்தின் மூலமாக ஜோதிடம் சொல்லி வருகிறேன். என்னிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள் 

( பிரத்யேகக் கேள்விகள் என்ற ) 

இந்த லிங்கை கிளிக் செய்து கேள்விகளை தேர்வு செய்து பதில் பெறலாம். இங்கே குறிப்பிட்ட கேள்விகள் தவிர வேறு  கேள்விகள் கேட்க விரும்பினாலும் ஏதாவது ஒரு கேள்வியை கிளிக் செய்து உங்கள் கேள்வியை டைப் செய்து அனுப்பலாம்.

நன்றி 

1 comment:

  1. புலிகளின் இன்னொரு முகம் -- Contiune...

    ReplyDelete