Follow by Email

Tuesday, 29 April 2014

மாமியாரை கொல்வாளா மருமகள்?காலம் இருக்கிற இருப்புக்கு சூரியனுக்கே ராக்கெட் விட்டுறலாம். அது ஒரு மேட்டரே அல்ல. 

ஆனால் வரன் தேடி அலைந்து அந்த வரனும் மனதுக்குப் பிடித்த மாதிரி அமைவது இருக்கே?

 குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதைதான்.

இதில் பெண்ணை பெற்வர்கள் படுகிற பாடு இருக்கே. அடடா சொன்னாலும் ஆறாது, எழுதினாலும் தீராது. 

என்ன செய்ய? குத்த வச்ச பொண்ணுக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடாமல், ஒருத்தன் கையிலே பிடிச்சு கொடுத்திட்டா நிம்மதி இது பெற்றோர் தரப்பு சிந்தனை.

நியாயம்தான்.

சிலருக்கு இளமையில் திருமணம் நடந்துவிடும். கொடுத்து வைத்தவர்கள்.

சிலருக்கு எல்லா வளமும் கிட்டும் இந்தக் கல்யாணம் மட்டும் கைகூடாமல் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருக்கும். என்னன்னு தோண்டி துடுப்பெடுத்து ஆராய்ந்து பார்த்தால், காரணம் இப்படி இருக்கும்.

 தோஷம்.

தோஷங்கள் பலவகை. செவ்வாய் தோஷம், இது ஊர் அறிந்த ரகசியம். இன்னொன்று இருக்கிறது புனர்பூ தோஷம். தாமத திருமணத்திற்கு உரிய காரணிகள் என்றாலும் பிரபலம் இல்லை.

பிரபலம் பெயரில் தான் இல்லையே தவிர, தருகிற பலன் சூப்பர் வில்லன். அடுத்து நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம்.

1, 7 மற்றும் 2, 8ல் ராகு கேது அமர்வதால் ஏற்படுவது. இந்த கிரக நிலையைப் பார்த்தாலே  ஜோதிடர்கள் சொல்லாமல் விடுவதில்லை.

அதுவும் தெரிந்த விஷயம்தான். இதுதவிர்த்து இருக்கிறது நட்சத்திர தோஷம். இதுவும் ரொம்பப் பிரபலம்.

அது என்ன?

ஆயில்ய தோஷம்.

மாமியாருக்கு ஆகாது. ஆயி இல்லாத இடமா பார்க்கணும்.

மூல நட்சத்திர தோஷம்.

மாமனாரை மூலையில் முடக்கிப்போடும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்,,

கேட்டை நட்சத்திர தோஷம்.

மூத்த கொழுந்தனாருக்கு ஆகாது.

விசாக நட்சத்திர தோஷம்.

இளைய கொழுந்தனுக்கு ஆகாது என்று கட்டம் கட்டி விடுவார்கள்.

ஒரு வகையில் இவர்களும் பாவம் செய்தவர்கள்தான் போலும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியாக வருகிற கிரகம் எவ்வளவுதான் வலுத்தாலும், ஐந்தாம் அதிபதியாக வருகிற கிரகம் வலுகுன்றி காணப்பட்டால் ஜோசியர் இப்படிச் சொல்வார்.

ஐயா... உங்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுகுன்றி விட்டது. அதனால் காலம் முழுவதும் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். குறுக்கு வழியில் சென்றால் கூட சந்து பொந்து வழியில் சென்றுதான்  முன்னேற முடியும்.

சரி... ஆனால் மேற்படி நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டு ஜனிப்பவர்களுக்கு எந்த பாவம் வலுகுன்றி இருக்கும்?

 எதற்கிந்த  அலைச்சல்?

எதற்கிந்த  அலைக்கழிப்பு?

முதலில் தகுதியான வரன்கள் அமைவதே கஷ்டம் .

துப்பறியும் புலி 007 ரேஞ்சுக்கு அலைந்து திரிந்து, தேடி சலித்து அழகு, அந்தஸ்து, கவுரவம், உத்தியோகம், பையனின் நடை உடை பாவனை, அடிப்படை வசதிவாய்ப்புகள் இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, ஆகா நம்ம பொண்ணையே கொடுக்கலாம் போலிருக்கே என்று முடிவு செய்தால் முற்றுப்புள்ளி இப்படி வரும்.

பொண்ணு கேட்டையாச்சே, பையனுக்கு அண்ணன் இருக்காரே?

போச்சு... அத்தனை கனவுகளும் அந்த கணமே தவிடுபொடி.

சரி... உண்மையில் இந்த நட்சத்திரங்கள் தோஷமா?

ஆராய்வோம்.

பொதுவாக ஜோதிடத்தின் பெயரால் உலா வரும் பழமொழிகள் ஏராளம். இதற்கு கால் முளைத்த இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமம்.

ஆனால் இன்று முளைத்திருப்பது கால் அல்ல ரெக்கை.

உதாரணமாக...

பூரடாத்தில் பெண் பிறந்தால் நூலாடாது என்றும், உறவாடாது என்றும் சொல்கிறார்கள்.

அது என்னவாம்?

அதா... கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு அந்த பெண்கள் லாயக்கற்றவர்கள். தான் தன் சுகம் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.

தலையனை மந்திரத்தை ஓதுவதில் படுகெட்டியான இவர்கள், கட்டிய கணவனை கைக்குள் போட்டுக் கொண்டு மாமனார் மாமியாரை விட்டுத் தனிக்குடித்தனம் போவார்கள்.

அப்படியா?

அப்படித்தான் சொல்றாங்க, இது ஒன்னு  .

அப்போ இரண்டு எது?

கேட்டையிலே பிறந்த பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? கோட்டையை அழிச்சாலும் அழிப்பா .

அடடா அப்புறம்.

அவிட்டத்தில் பிள்ளை பிறந்தா தவிட்டு பானை எல்லாம் தங்கம்.

பலே... பலே... மேலே சொல்லுங்க.

பரணி தரணி ஆளும்.

அது சரி... அப்புறம்.

நாலாவது பொண்ணுடா... நாதாங்கி முளைகூட மிஞ்சாது - ஒரு அங்கலாய்ப்பு.

இது எட்டாவது பிறப்பு குட்டிச்சுவர் - ஒரு குதர்க்கம்.

ஒரு பிள்ளையை பெத்தா உரியிலே சோறு, நாலு பிள்ளையை பெத்தா நாயோட்டில் சோறு - ஒரு கண்டுபிடிப்பு.

இப்படி வழக்கில் சொல்லிக்கொண்ட வார்த்தையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏக களேபரம்.

ஏன் ஜோசியரே? கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்த மாதிரி. ஆயில்யத்தில் பெண் பிறந்தா ஆயுதத்தோட பிறக்குமா? கொலை ஆயுதத்தை சேலைக்குள் மறைத்து வைத்து, புகுந்த வீடு போனதும் மாமியாரே வெளியே வா... ஹா... ஹா... என்று கத்தியை எடுத்து சதக்கென்று குத்துமா?

நல்ல கதைகாரரு நீங்க. இருக்கட்டும்.

ஒரு ஜாதகத்தில் இருந்து எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 
ஜோதிடரிடம் போய், நான் வீடு கட்டுவேனா? வண்டி வாகனம் வாங்குவேனா? மாடு கன்னு பாக்கியம் எப்படி? எதிரிகள் தொல்லை எப்போது ஒழியும்? உத்தியோக சிறப்புக்கு உகந்த காலம் எது? செய்தொழில் முன்னேற்றம் எப்படி?

இப்படி சரம் சரமாய் கேள்விக் கணையை தொடுகிறார்கள். ஜோதிடரும் தன் பங்குக்கு நல்லதாய் நாலு வார்த்தை சொல்லாமல் இல்லை. அனுபவத்தில் பார்க்கிறோம்.

ஆனால் இந்த தோஷ நட்சத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ள யாரும் அக்கறை காட்டுவதில்லையே ஏன்?

அது சரி... குண்டு போடுறதே ஜோசியர்தானே?

ஓ.... கதை அப்படி வருதா? சரி... இந்த கதையை கேளுங்க. எனக்குத் தெரிந்த பெரியவர் தன் மகனுக்கு வரன் தேடினார். தன் பால்ய சிநேகிதனின் பெண்ணே பரவாயில்லை என்று தோன்றியது.

காரணம் பெண் குணசாலி மட்டுமல்ல அறிவாளியும் கூட.  அழகுக்கு மட்டும் பஞ்சமா என்ன, விருப்பத்தைத் தன் குடும்பத்தாரிடம் வெளிப்படுத்தினார்.
சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பின்னர் தன் பால்ய சிநேகிதனிடம் பகிர்ந்து கொண்டார். சங்கடம் ஆரம்பமானது.

சங்கடம் பெண் கொடுப்பதில் அல்ல. பெண்ணின் நட்சத்திரம் மூலம். காலம் காலமாக சொல்லி வைத்த பாலபாடமே மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பதுதானே?

பெண்ணை கொடுக்கிறோம் என்கிற பெயரில், முப்பது வருட நட்பிற்குத் தப்புக் கணக்குப் போட தயாராக இல்லை பெண்ணின் தோப்பனாருக்கு.

 விளைவு மறுத்தார்.

விடவில்லை நண்பர். நான் என்ன சின்னஞ்சிறுசா? ஆண்டு அனுபவித்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் நாராயணனிடம் போக.

பெற்ற பிள்ளைக்கு ஒரு நல்ல காரியமா, கல்யாணத்தைச் செய்து வைச்சுட்டா போதும்.

கட்டையிலே போறதா இருந்தாலும் ரெட்டை சந்தோஷம். இந்தக் கருத்தில் உறுதியாக இருந்தார்... நண்பர்.

பிடிவாதத்திற்கு முன்பு மற்ற பிடிகள் தளர்ந்தன. கடைசியில் மணமக்கள் மணவறைக்குச் சென்றார்கள்.கடந்த ஜனவரியோடு அது ஆச்சு பத்து வருஷம்.  இப்பவும் கிழவன் புள்ளி மான் மாதிரி துள்ளிக்கிட்டு இருக்கார்.

மூலம் என்ன செய்தது.

இதோ இன்னுமொரு சம்பவம்.

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். ஆனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே அனுதினமும் புகைச்சல். பாகப்பிரிவினையில் ஏற்பட்ட தகராறு ஊருக்குள் ஏக பிரபலம்.

அண்ணனைப் பழிவாங்க ஆயத்தமானான் தம்பி. பழி வாங்குறது சரி.. தடயம் இல்லாமல் தப்பிக்க உபாயம் வேண்டும்.

என்ன செய்யலாம்?

சிந்தனையின் முடிவில் சிக்கியது வழி.

கேட்டை நட்சத்திர பெண்ணை கட்டிக்கிட்டா, ஜாதகமே போட்டுத் தள்ளிடும் அண்ணனை.

முடிவு செயலானது, முகூர்த்தம் முடிவானது, அது ஆச்சு வருஷம் 6. அண்ணன் இன்னம் கின்னுன்னுதான் இருக்கார்.

கேட்டைக்கு என்ன கேடு?

உண்மை நிலவும் இதுதான். வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒன்றுக்கும் மற்ற விஷயங்களக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முடிவுகளும் இப்படித்தான் இருக்கும்.இதில் தோஷ நட்சத்திரங்களைப் பாதங்களாகப் பிரித்துக் கொண்டு பலன் சொல்வோரும் உண்டு.

அப்படிப் பிரித்துக் காட்டிய மூல நூல்கள் கூட தந்தைக்கு ஆகாது, தாயாருக்கு ஆகாது, தமையனுக்கு ஆகாது, தனக்கே ஆகாது என்று பட்டியல் போடுகிறதே தவிர. இந்தக் காட்சிகளுக்கு ஏற்ற கதாபாத்திரமான மாமனாரோ, மாமியாரோ, கொழுந்தனாரோ வரவில்லை.

பின் எப்படி வந்தது?

யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது.

இது என் யூகம்தான். அன்றைய காலகட்டத்தில் பால்ய திருமணம் என்பது பரவலாக இருந்தது.

வீட்டுக்கு  வந்த மருமகளிடம் வேற்றுமை காட்டும் குணம் வேர் விடாத காலகட்டம். விளக்கேத்த வந்த பொண்ணு வில்லங்கமும் இல்லாமல் ஒட்டி உறவாடி இருக்கிறது.

மேற்படி நட்சத்திரங்கள் தாயாருக்கும், தந்தையாருக்கும் ஆகாது என்று சொல்லப்பட்ட சூழலில் திருமணம் ஆகி மறுவீடு போன பன்பு, தாயாக  கவனிக்கும் மாமியாரையும், தந்தையாக கவனிக்கும்  மாமனாரையும், பாதிக்கும் என்ற கோணத்தில் பலன் எழுந்திருக்கலாம் இது என் ஐயப்பாடுதான். அறுதியிட்டு சொல்லவில்லை நிற்க.

இனி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரை குறிக்கும் இடம் பத்து.

அந்த வீட்டில் ராகு கேது அல்லது சனி இருந்து அந்த வீட்டுக்கு உரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசமாகவோ, அல்லது வக்கிரம் பெற்ற நிலையிலோ இருந்தால் மாமியார் ஸ்தானம் வலுகுன்ற வாய்ப்புண்டு.

அதேசமயம் மாமியாரின் ஆயுள் பலத்தைச் சொல்ல மாமியாரின் ஜாதகத்தைப் பார்ப்பதுதான் நல்லது. பார்க்க தேவையில்லாதது ஆயில்ய நட்சத்திரத்தை.

அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமனாரை குறிக்கும் இடம் 3ம் பாவம்.

இவ்விடத்தில் முன் சொல்லியது போல் சனி அல்லது ராகு கேது இருந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசம் அல்லது வக்கிரம் பெற்று காணப்பட்டால் மாமனார் ஸ்தானம் வலுகுன்றும்.

மற்றபடி ஆயுளை நிர்ணயிப்பது மாமனார் ஜாதகமே என்று கூறி நிறைவு செய்கிறேன். வணக்கம்.

நான் தினமணி இணைய தளத்தின் மூலமாக ஜோதிடம் சொல்லி வருகிறேன். என்னிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள்

( பிரத்யேகக் கேள்விகள் என்ற ) 

இந்த லிங்கை கிளிக் செய்து கேள்விகளை தேர்வு செய்து பதில் பெறலாம். இங்கே குறிப்பிட்ட கேள்விகள் தவிர வேறு  கேள்விகள் கேட்க விரும்பினாலும் ஏதாவது ஒரு கேள்வியை கிளிக் செய்து உங்கள் கேள்வியை டைப் செய்து அனுப்பலாம்.

நன்றி 

No comments:

Post a Comment