பெண்மையின் மென்மையைப் பறைசாற்றி, அவர்களின் அழகினை மெருகேற்றும் வெண்மையானதோர் அணிகலன், நவரத்தினமணிகளில் எளிமையானதும், விலை மலிவானதும், அதேசமயம் ஒப்புயர்வற்ற மிடுக்கினைத் தரக்கூடிய அணிகலன் இந்த முத்து மணிகளால் செய்திட்ட அணிகலன்தான் .
பெண்களின் முகத்தினை நிலவுக்கு ஒப்பிடும் கவிஞர்கள், அவர்களின் புன்னகையை சந்திரனுக்குரிய வெண்முத்தினுக்கு ஒப்பிடுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் கவிஞர்களின் கற்பனையில் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வுப்பூர்வமாகவும் இந்த முத்துக்கள் பெண்களுக்கு ஏற்றதோர் அணிகலன்தான்.
அழகினை அதிகரிக்கச் செய்யும் ரத்தினம்தான். பெண்களின் உடலுக்கு, உணர்வுக்குப் பொருத்தமான மணிவகைதான்.
பெண்மையின் மென்மைக்கும் , அழகின் மேன்மைக்கும், சரும பொலிவிற்கும் இந்த முத்துமணிகள் சாதகமாய் அமைகின்றன.
முத்து என்றால் முழுமை என்றும் அழகு என்றும் நாம் பேச்சு வழக்கில் குறிக்கிறோம். எழுத்துக்கள் முத்து முத்தாக இருக்கின்றன என்றும் பேசும் வார்த்தைகள் முத்துமணி போல் அருமையாய் விழுகின்றன என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
முத்து அழகுக்கு இலக்கணமாய் சொல்லப்படுகிறது. இலக்கியத்தில் அழகின் ஒப்பீடாய் மொழியப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் ஒரு பெண்மணியின் கழுத்தினில் இந்த வெண்மணிமாலை இருக்குமானால் அது அழகின் அணிகலனாகிறது. அழகுக்கு அழகு சேர்க்கிறது.
பனித்துளி ஒன்று சிப்பிக்குள் விழுந்து, விளைந்து முத்தாகிறது என்கிறது இலக்கியம்.
கால்சியம் கார்பனேட் , கார்பன் மற்றும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற தாதுக்கள் இணைந்தே முத்தாகிறது என்கிறது அறிவியல்.
கடலில் சிப்பிகள் நிறைய இருந்தாலும் எல்லாச் சிப்பிகளிலும் முத்துக்கள் விளைவதில்லை. அதே போல் கடலில் மட்டுமல்ல, ஆற்றில் வாழும் சிப்பிகளிலும் முத்துக்கள் விளைகின்றன.
அறிவியல் ஆய்வுப்படி முத்துக்களின் வளர்ச்சி என்பது கடலின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து, சிப்பியின் தரத்தை பொறுத்தும் அமைகிறது.
சிப்பிக்குள் மட்டுமல்ல, சங்கிற்குள்ளும் நத்தைக்குள்ளும் கூட முத்துக்கள் விளைகின்றனவாம். இவை கரீபியன் கடலில் கிடைக்கின்றன. இவை இளஞ்சிவப்பு வண்ணத்திலும், செம்மஞ்சள் நிறத்திலும் இருக்கின்றன.
யானை, பன்றி, பாம்பு, நாரையின் கழுத்து, திமிங்கலத்தின் தலை, மூங்கில் போன்றவற்றிலும் முத்துக்கள் கிடைக்கின்றன என்ற இரத்தின சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
ஆனால் இவை சாதாரணமாய் கிடைக்காது. தேவர்கள், முனிவர்கள் போன்றவர்களே இதை பெறும் தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது.
சாதாரண மனிதர்கள் சிப்பியிலிருந்து விளையும் முத்தினையே பெறுகிறார்கள்.
தற்போது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் வளர்ப்பு சிப்பிகள் மூலம் முத்துக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இது போன்ற செயற்கை முத்துக்கள் அதிக அளவில் பசிபிக் பெருங்கடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அந்தக் காலத்திய அரசிகளிலிருந்து இந்தக் காலத்தில் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர்களின் மனைவிகள் வரை பலரும் இந்த முத்தினை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கிளியோபாட்ரா, இத்தாலிய மகாராணி மார்கரிட்டா, விக்டோரியா மகாராணி, போன்றோரெல்லாம் விலை உயர்ந்த முத்து நகைகளை அணிந்திருந்தனர் என்று வரலாற்று நூல்களில் குறிப்புகள் உள்ளன. விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் 273 முத்துக்கள் இருந்தனவாம்.
பண்டைய தமிழகத்தில் கொற்கை என்ற பாண்டியர்களின் துறைமுகம் முத்துக்குளிக்கும் துறைமுகமாகவும், உலகிற்கெல்லாம் முத்தினை விற்பனை செய்யும் துறைமுகமாகவும் இருந்ததாக வரலாற்று, இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.
கிரேக்கர், அராபியர், ரோமானியர், வெனிஸ் நாட்டு வியாபாரிகள் அனைவரும் கொற்கை துறைமுகம் வந்து முத்துக்களை வாங்கிச் சென்றனராம்.
நம் இந்து மதத்தில் சந்திரனுக்குரிய ரத்தினமாக முத்து அமைந்திருக்கிறது. சந்திரனின் கதிரலைகளை ஈர்த்துக் கொடுப்பதில் முத்து பெரும் பங்காற்றுகிறது.
ஆண்கள் அணிந்தாலும், பெண்களுக்கே உரிய பிரத்யேகமான ரத்தினமாகவே முத்து கருதப்படுகிறது. பெண்களுக்கு உடலியல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், கர்ப்பப்பை, கருத்தரிப்பு, மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வினை தரக்கூடியதாய் இந்த முத்துமணி அமைகிறது என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சந்திர கிரகத்தினால் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் முத்து மாலை அணிவது சிறந்தப் பரிகாரமாகும்.
மன படபடப்பு , நிம்மதியற்ற சூழ்நிலை, மன உளைச்சல் போன்ற சூழலில் அடிக்கடி மனம் பதறும் பெண்கள் முத்துமாலையினை அணிவதினால் மனம் அமைதியடைகிறது. செயல்களில் நிதானம் உண்டாகிறது. தெளிவான சிந்தனை ஏற்படுகிறது.
வயதான பெண்மணிகள் முத்துமாலையினை அணிவதால் அவர்கள் மனதில் நிம்மதி பிறக்கிறது. தியானம் செய்பவர்களாயின் அவர்கள் மனம் விரையில் அமைதியுற்று ஒருநிலைப்படுகிறது.
ஆழ்கடலில் விளைகின்ற முத்துக்களுக்கு ஈர்ப்புத் தன்மை அதிகம். ரத்தினங்களில் வைரம் விலை உயர்ந்த ரத்தினமாகக் கருதப்படுகிறது. முத்து விலை மலிவானதாக இருக்கிறது. இருப்பினும் முத்துமாலை என்பது விலை மலிவாக இருந்தாலும் அதிக அளவில் நன்மைகளைச் செய்கிறது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
தன்னம்பிக்கையையும், மிடுக்கினையும் ,அறிவினையும், பொறுமையினையும் தரக்கூடிய ரத்தினமாய் இருப்பதால் மிக உயரிய அரசாங்கப் பதவிகளில், நிறுவனத்தில் பொறுப்பு மிக்க அதிகாரிகளாய் இருக்கும் பெண்கள் முத்துமாலைகளையே தேர்ந்தெடுத்து அணிகின்றனர்.
வெளிநாட்டு தூதர்களின் மனைவிகள், ஜனாதிபதிகளின் மனைவிகள், உயரதிகாரிகளின் மனைவிகள் யாவரும் முத்துமாலைகளையே விரும்பி அணிகின்றனர். அவர்கள் மட்டுமன்றி மாடல் அழகிகள், நடிகைகள் போன்றோர்களும் இந்த முத்துமாலைகளையும் , தோடுகள், வளையல்கள் போன்றவற்றையும் முத்துக்களினால் செய்து அணிந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
பெண்களின் உடல் நலம் ,மனநலத்திற்கு மட்டுமன்றி , அழகினை மிகைப் படுத்திக் காண்பிப்பதற்கும் முத்து ஏற்றதொரு ரத்தினமாகவே திகழ்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இலக்கியங்கள் கூறுவதைப் போல், பெண்களுக்கு முத்தினைப் போன்றதொரு சிறந்த ரத்தினம் வேறொன்றும் இருக்க முடியாதுதான்.
தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி...
ReplyDelete