பாட்டுக்களால் திரைப் பாட்டுக்களால்- பல
பாடங்கள் சொல்லியப் பாவலன்
மெட்டுக்களால் மன மொட்டுக்களை -மெல்ல
மலர்ந்திடச் செய்திட்ட மாயவன்
கன்னித்தமிழ் அவன் கைவண்ணத்தில் -மணப்
பெண்ணினைப் போலவே மிளிரும்
வண்ணத்திரைப் பாட்டு வரிகளெல்லாம்- மேக
மின்னலாய் உள்ளத்தில் ஒளிரும்
ஏட்டினிலும் திரைப் பாட்டினிலும் - அவன்
தீட்டியச் செந்தமிழ் கோலங்கள்
பாட்டல்லவே வெறும் பாட்டல்லவே -அவை
பாட்டாளி மக்களின் வேதங்கள்
பழச்சாறெடுத்து மலைத் தேனெடுத்து- காதல்
பாட்டென்று கலந்து கொடுத்தான்
இளம்உள்ளங்களை மெல்லக்கிள்ளிவிட்டு- அவர்
இராத்திரித் தூக்கத்தைக் கெடுத்தான்
சங்கத்தமிழ் நல் முத்தெடுத்து- திரைச்
சங்கதிக்குள் சொல்லிப் படித்தான்
தங்கத்தமிழ் சொற் பூக்களினால் - பா
மாலைகள் பலவும் தொடுத்தான்
தெய்வப்பக்தியினை தேசப் பற்றுதனை - தன்
பாட்டுக் களின்வழி விதைத்தான்
தாய்ப்பாசத்தினை தந்தை நேசத்தினை -நம்
பிள்ளைகள் உணர்ந்திட வைத்தான்
‘ ‘ ‘
எட்டைய புரத்துப் பாரதிபோலவே- வாலி
ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தான்
பட்டையைக் கிளப்பும் பாட்டுத்தீயினால்- சாதிக்
குப்பைகளைக் கூட்டி எரித்தான்
எண்பதுவயதினை தாண்டிய போதிலும் - புதுச்
சிந்தனை பூத்திடும் இளைஞன்
கற்பனைஊற்றுகள் வற்றாத கலைஞன் - வாலி
காலத்தை வென்றிட்டக் கவிஞன்
கொட்டும்மழையென கவிக் கொட்டியவாலி- விடை
பெற்றே வேறூர் சென்றும்விட்டான்
சுற்றும்பூமியிது சுற்றும் காலம்வரை- தமிழ்
உள்ளங்களில் வாலி வாழ்ந்திருப்பான்.
எண்பதுவயது ஆனபின்னரும்- வாலி
என்றுமே வாலிபக் கவிஞன்
வார்த்தைக்குள் வசியம் வைக்கும் - புதுச்
சூத்திரம் அறிந்த முனிவன்
மதிவாணன்
சூப்பர்... பாராட்டுக்கள்...
ReplyDelete