Follow by Email

Monday, 24 June 2013

இலங்கையிடம் தோற்ற இந்தியா!!தன் வாழ்நாளின் இறுதி அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது மன்மோகன்சிங் அரசு. அதன் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தியாவின் கஷ்ட  காலம் என்று வர்ணிக்கிற அளவிற்கு அதன் செயல்பாடுகள் செல்லரித்துப் போயிருக்கிறது. 

சாட்டையை சுழட்டும் எதிர்கட்சிகள், கேள்விகளால் துளைத்தெடுக்கும் நீதிமன்றம், நெருங்க முடியாத நெருப்பாக தகிக்கும் மக்கள் மன்றம், இவற்றிற்கு இடையே, அடிக்கடி காணாமல் போகும் மரியாதை மகுடத்தை கண்டுபிடித்து, மீண்டும் மீண்டும் மன்னராக துடிக்கும் பொம்மை ராசாவாக காட்சியளிக்கிறார் மன்மோகன்சிங்.

இன்று உலகளவில் அதிகாரம் பெற்றவர்கள் பட்டியலில் மன்மோகன்சிங் பெயரும் இருக்கிறது. ஆனால் அதே  உலகளவில் பெருமைமிக்க நாடாக திகழ்ந்த இந்தியாவை அந்த பெருமையை இழக்க வைத்த பெருமையும் அவரையே சாரும். 

அணுஆயுத வல்லரசாக, படைபலம் மிகுந்த நாடாக, ஆசிய துணை கண்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த இந்தியா, குட்டி நாடுகள் கூட குட்டிப் பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்த பெருமை திருவாளர் மன்மோகனையே சாரும்.

வெளிக்கிளம்பி விட்ட ஊழல் பூதங்களை முக்காடிட்டு மறைக்க ரூம் போட்டு யோசிக்கும் அவரது அமைச்சரவை சகாக்கள்,  ஆக்க பூர்வமாக அணுக வேண்டிய வெளியுறவுக் கொள்கையில் பூஜ்யம்   என்று நிறுபித்திருக்கிறார்கள்.  அதற்கு சரியான உதாரணம் இலங்கை.

ஒரு காலத்தில் இந்தியாவின் எண்ணங்களுக்கு ஏற்ப, தன் வண்ணங்களை மாற்றிக் கொண்டது இலங்கை.  இன்றோ முரண்டு பிடிக்கும் முரட்டு   பிள்ளையாகி இருக்கிறது. ராஜபக்ஷே என்று ஆட்சிப் பிடத்தில் அமர்ந்தாரோ, அப்போதே வேறு ஒரு முகமுடியும் அணிந்து கொண்டார். 

ஒரு புறம் இந்தியாவோடு இணக்கமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், இன்னொருபுறம் சீனாவோடு தேன்நிலவுக்கு தயாரானார் ராஜபக்ஷே. இருவேடம் போடும் இலங்கையை இனம்காண தவறியது இந்தியா.

அரசியல் சதுரங்கத்தில் சமார்த்தியமாக காய்களை நகர்த்தினார் ராஜபக்ஷே.  ஒருபுறம் பயிற்சிகளை பெற்றுக் கொண்டது ராணுவம். 

இந்தியாவால் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில், ரகசிய தகவல்களையும், ராடார் சாதங்களையும் வாங்கிக்  கொண்டது அவர் ராஜதந்திரம். 

புலிகளை அழிக்கிறார்கள் என்ற புல்லரிப்பில், தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலையை கண்டும் காணாமல் இருந்தது இந்தியா. 

அதே சமயத்தில் தன் புது ஜோடியான சீனாவுக்கு இரண்டு  கதவையும் திறந்து விட்டது இலங்கை.

நிலைமை கைமீறிய போதுதான் ஆட்சியாளர்களுக்கே அதிர்ச்சி. தற்போதைய சூழலில் கொஞ்சம் பிடியை இருக்கினாலும் சீனாவின் ஜோதியில் ஐக்கியமாகி விடும் இலங்கை என்ற உண்மையை, முள்ளுமேல் உட்கார்ந்த மாதிரி உணரத் தொடங்கி இருக்கிறது இந்தியா.

அதுமட்டுமல்ல, இந்தியாவின் பகையாளி பாகிஸ்தானை தனது பங்காளியாக்கிக் கொண்டது இலங்கை. உளுத்துப் போன இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையால், தீர்க்கப்படவேண்டிய தமிழர் பிரச்சனை தெருவில் கிடக்கிறது.

இன்று இந்தியாவின் பேச்சை கேட்கும் நிலையில் இலங்கை இல்லை. பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் ஆயுத உதவி, சீனாவிடம் இருந்து கிடைக்கும் நிதியுதவி மற்றும் தளவாடங்கள் தரும் தைரியம், இந்தியாவை கை கழுவ தயாராகிவிட்டது இலங்கை.

மேலும் மூக்கருப்பு வேலையையும் முனைப்புடன் செய்கிறது. அதில் ஒன்றுதான் இந்திய பொருள்களுக்கு பலமுனை வரிவிதிப்பு. இதனால் இந்திய தயாரிப்பு பொருள்களை  வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்து விட்டது.

கப்பல் கட்டுமான தளத்திற்குள் சீனாவிற்கு அனுமதி அளித்த மர்மம், இந்திய பொறியாளர்களை வெளியேற்றும் திட்டம்.  அதுமட்டுமல்ல. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தரம் குறைந்த எரிபொருளை விநியோகிப்பதாக கடந்த மாதம்  இலங்கை  குற்றம் சாட்டியது. இந்த குற்றசாட்டின் பின்னணியில் இருந்த பூனை இப்போது வெளியே வந்திருக்கிறது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை கழட்டிவிட்டு இலங்கை, சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முனைப்புடன் இருக்கிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், இந்தியன் ஆயில் இலங்கையில் இயக்கும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்படும் நிலை ஏற்படும்.

 இது விஷயத்தில் இந்தியா இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் கும்பகர்ண தூக்கம்தான்.   

இலங்கை இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளில் இன்னும் ஓன்று மட்டும் மீதமுள்ளது. இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கொண்டுவரப்பட்ட 13வது சட்டத்திருத்தம். இச்சட்டத்தின் வாயிலாக வடக்கு தமிழர் பகுதிகளுக்கு தேர்தலை நடத்தி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியும்.அதற்கும் இப்போது ஆபத்து. ஹெல உறுமய கடுமையாக எதிர்க்கிறது. தமிழர்களை அதிகாரமற்ற அநாதைகளாக்கும் நோக்கத்துடன் வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கும் உறுமயாவிற்கு இலங்கை துணைப் போனால், இந்தியாவின் முகத்தில் கரி பூசிய மாதிரி ஆகிவிடும். 

அப்படி ஓன்று நடந்தாலும் இந்தியா அமைதி காக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் அமைதி காப்பது என்பது மௌன பிரதமர்  மன்மோகன்சிங் அரசின் கொள்கை. வாழ்க பாரதம்.

1 comment:

  1. இந்தியா தோற்று நீண்ட நாட்களாகி விட்டன.

    ReplyDelete