தாரகாசுரனைத் தெரியுமா?
முருக வதத்தில் முக்கிய கதாபாத்திரம். போர் முனையில் வேர் அறுந்த மரம் போல் விழுந்த பிறகு, அவன் வம்சத்தில் வந்த அம்சங்களே தாரகாஷன், கமலாஷன், விதியுன்மாலி.
மூவரும், அப்பன் அழிவுக்குக் காரணமானவர்களை எப்போது அழிப்பது என யோசிக்கலானார்கள்.
விளைவு! கடுந்தவம்!
யாரை நோக்கி?
பிரம்மாவை நோக்கி!
ஒற்றைக்காலில் நின்னு, காற்றையே உணவாக தின்னு கடுந்தவம். வருடங்கள் பல கடந்தது.
மெய்வருத்தி செய்த தவத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. நான்முகன் பிரம்மா, வான் மார்க்கத்தைக் கடந்து இவர்கள் முன் ஆஜரானார்.
“குழந்தைகளே உங்கள் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும்?”
“ஐயனே, நரை, திரை, மூப்பில்லாத வாழ்வு, அதுவும் மரணமில்லா பெருவாழ்வு தர வேண்டும்.”
“குழந்தைகளே பிறப்பெய்த அனைத்து உயிரினத்திற்கும் இறப்பு என்பது உண்டு. அது மாற்றமில்லாதது. அதனால் அவ்வரத்தை என்னால் அளிக்க முடியாது. வேறு வரம் கேளுங்கள்.”
“ஒப்பில்லா உயர்வைப் பெற்றவரே, எமை பெற்றவரே, எங்கள் மூவருக்கும் மூன்று கோட்டைகள் வேண்டும். எண்ணிய கணமே விண்ணில் பறக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். அவை ஒன்றாக இணையும் போது ஆயிரம் வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
“ஒரு வேளை எங்களுக்குக் காலன் வரும் காலமாக இருந்தால் அப்போது ஒப்பில்லா சக்தி பெற்ற ஒருவரால்தான் எங்களுக்கு மரணம் வேண்டும். இதுதான் எங்களுக்குத் தேவை.”
“சரி... தந்தோம் வரம். உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், இருப்பிடமான கோட்டைகளை நிர்மாணிக்கவும் அசுரர் குல சிற்பியான மயனை அனுப்பி வைக்கிறேன்.
“அவர் தங்கத்தாலான கோட்டை, வெள்ளியிலான கோட்டை, இரும்பு கோட்டை என முறையே மூன்று கோட்டைகளை உருவாக்கித் தருவார். அதில் அமர்ந்து அரசாட்சி செய்யலாம்” என வரத்தைத் தந்துவிட்டு வானுலகம் திரும்பினார் பிரம்மா.
மயனின் கை வண்ணத்தில் கோட்டைகள் உருவானது. அப்புறம் என்ன? சேட்டைகள் அரங்கேறியது. குறிப்பாக தேவர்கள் ஜாதகத்தில் எல்லாம் ஒரே சமயத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி என்று ஒட்டுமொத்த சனியின் பார்வை பட்ட மாதிரி கெட்ட காலம் கிட்டே வந்தது.
தேவர்கள் முதலில் செய்வதறியாது திகைத்தார்கள். சாகா வரம் பெற்றிருந்தும், சாவின் விளிம்புவரை சென்று திரும்பினார்கள். அல்லலுறும் வாழ்க்கைக்கு அறவே பழக்கப்படாத தேவர்களுக்கு, அரக்கர் அணியை அழிப்பதற்கான யுக்தி என்ன என்று திட்டம் தீட்டினார்கள்.
அது மூவர்களில் ஒருவரான முக்கண்ணன், சிவபெருமானே சிறந்தவர். அவரால்தான் மூவர் அணியின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என எண்ணினார்கள்.
எண்ணம் முடிவானது, முடிவு செயலானது. நேராக கைலாய பயணம். நிஷ்டையில் இருந்த சிவனுக்கு முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள். தாங்கள் வந்ததின் நோக்கத்தைச் சொன்னார்கள்.
நித்திரை கலைந்த சிவன் சித்திரை மாதத்து வெயில் மாதிரி சூடானார். தீமைகளை அழிப்பதும், தீயவர்களை ஒழிப்பதும், இறையருளின் ஒரு கடமை என்பதை உணர்ந்தார்.
அதோடு அரக்கர்களின் அழிவுக்கான அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்பதும் அவருக்குத் தெரியும்.
அரக்கர்கள் யார்? பலம் பெற்றவர்கள் என்பது இருக்கட்டும், வரம் பெற்றவர்கள். வரம் பெறும் வரலாற்றை ஆராய்ந்தால், சாகா வரத்திற்குச் சமமாக வரத்தைப் பெற்றிருப்பார்கள். அதனால் பலம் பெற்ற அரக்கர்களை வதம் செய்ய முறையான ஆயுத பிரயோகமே சிறந்தது என நினைத்தார்.
உடன் தியானத்தில் ஆழ்ந்தார்.
அதுவும் எப்படி?
கண்களை மூடாமல் உற்று நோக்கியபடியே.
எத்தனை ஆண்டுகள்?
ஆயிரம் ஆண்டுகள்.
தியானத்தின் இறுதியில் உருவானதுதான் அகோராஸ்திரம்.
அதன் பின்புதான் அரக்கர்களின் அழிவுக்கு வித்திட்டது என்பது புராணக் கதை. ஆனால், அப்படி ஆயிரம் ஆண்டுகள் தவத்தின் பலனால் சிவனின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த் துளிதான் ருத்ராட்ச மரங்களுக்கு வித்திட்டது.
மூன்று கண்ணில் இருந்து மூன்று துளி கண்ணீர். இதுதான் ருத்ராட்சம் உருவான கதை.
No comments:
Post a Comment