மலேசியா, வெள்ளைக்காரர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம் ஓன்று, விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்க காரணமாய் இருந்த கதை இது.
சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டு தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் வெள்ளைக்கார துரை என்று வர்ணிக்கப்படும் வாக்னர். முதலில் காவல்துறையில் பணியாற்றி,பின் வழக்கறிஞராக மாறியவர்.
இவரின் கோபத்திற்கு காரணம் என்ன?
ஓயாது ஒலிக்கும் கோவில் மணி ஓசையும், அவர் வீட்டை சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும் தான் காரணம்.
கோவில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே இருக்கும், விநாயகர் கோவில்தான்.
கோவில் என்றதும் விஸ்த்தாரமான கட்டிடம், வானுயர்ந்த கோபுரம் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு சின்ன ஓலை குடிசையில் இருக்கும் விநாயகர்.
இந்த விநாயகரை கூட வெள்ளைக்காரதுரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் தன பக்தி வெளிப்பாட்டின் காரணமாக சிறு சிலையாக வைத்து வழிபட தொடங்கியதுதான்.
ஆலயங்கள் அதிகம் இல்லாத அக்காலத்தில் மக்கள் வரத்தொடங்கியதும், பக்தர்கள் வேண்டியதை அருளிய விநாயகர் விரைவில் பிரபலமானதும் ஒன்றும் ஆச்சரியமில்லை.
குறுகிய இடத்தல் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார்.
அழைத்தார் தன் பணியாளரை. உடனே அந்த ஓலை குடிசையை அப்றப்படுத்து. சாமி பூதம் என்று அங்கே எதையும் செய்யக்கூடாது என்றார் காறாராக.
வெள்ளைக்காரருக்கும் விநாயகருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். வேலைநேரம் போக மற்றநேரமேல்லாம் விநாயகர் தொண்டுழியம் புரியும் தோட்டக்கரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்.
பதறிப்போனார் அந்த தோட்டக்காரர். வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் விக்ன விநாயகரை அகற்றுவதா?
மன்றாடினார் தோட்டக்காரர். மறுத்தார் வாக்னர். கடைசியில் ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை. அதிகாரம் வென்றது.
நாளை அங்கே எதுவும் இருக்கக் கூடாது என்று உத்தரவுயிட்டார். அதற்கு பிறகு நடந்ததுதான் வக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.
மாதங்கள் பல சென்றது. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும் கூட அவருக்கு நோய் குணமாகவில்லை.
கடைசியில் இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ என்று மனதுக்குள் புலம்ப துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கிராராம்.
இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார் என்று உறுதியளித்தார்.
அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியை பூசுகிறார். என்ன ஆச்சரியம். நாளடைவில் பூரண குணமடைகிறார்.
அடுத்து வாக்னர் செய்ததுதான் விநாயகருக்கு அவர் செய்த நன்றிக் கடன். அதன் பிறகு அவர் விநாயக பக்தராக மாறிப்போனது இருக்கட்டும், குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் காங்கரீட் கட்டிடம் கட்டிக் கொடுத்தார்.
இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது.
அதன் பின்னர் கோலாலம்பூர் ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் தேவஸ்த்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961 ஆண்டிலேயே 70 ஆயிரம் மலேசிய வெள்ளி செலவில் ஆலயம் கட்டப்பட்டு, 1963இல் கும்பாபிழேகமும் நடந்தது.
இவ்வாலயத்தில் தான் இன்றும் அதிகாலை 5.30 க்கெல்லாம் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூஜைகள் நடைபெறுகிறது.
இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிழேகம் மிக பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோவில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஓன்று.
அதைவிட நினைத்து நடக்கும், அது நினைத்த மாதிரியே நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.
No comments:
Post a Comment