ads

Sunday, 28 July 2013

ஆட்டி படைப்பது ஆறா எட்டா?


சக்திவேலு ஜாதகம் பார்க்கலாம்னு ஒரு ஜோசியர்கிட்டே போனார்.  ஜாதகத்தை கணித்துப் பார்த்த ஜோசியர், உங்க ஜாதகப்படி ராஜயோக திசை ஆரம்பமாகிடுச்சு.
இனிமே உங்களுக்கு டாப்போ, டாப்புதான்.  பிரமாதம், அமோகம் அப்படின்னு பலன் சொன்னார்.  

சக்திவேலுவுக்கு எப்படி இருக்கும்?

சக்திவேலு ஜோசியரோட பக்திவேலுவாவே மாறிட்டார்.  ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு இப்படி ஜோதிடம் சொன்னால்தான் பிடிக்கிறது.  அதற்குரிய அமைப்பு இருந்தால் நாமும் அப்படியே சொல்லலாம் தப்பில்லை.
சக்தி என்ன செய்தார் தெரியுமா? தன் நண்பர் முத்துவேலுகிட்டே மேற்படி விஷயத்தை சொல்ல, முத்துவேலு தன்னோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டு ஜோசியர்கிட்டே போனார். 
ஜோசியர் ஜாதகத்தை பார்த்துட்டு சொன்னார்.  தம்பி... உனக்கு ஆறாம் வீட்டுக்காரன் திசை நடப்பில் வந்துட்டு.  இனிமே உனக்கு கஷ்டகாலம்தான்.  பகை வரும், தொல்லை வரும் பார்த்து நடந்துக்கோன்னு சொன்னார்.

முத்துவேலுவுக்கு முகம் முந்தாநாள் பறிச்ச கொழுந்து வெத்தலை மாதிரி வாடிப்போச்சு.  

ஏன்? ஜோசியருக்கு என்ன ஓரவஞ்சனை.  முத்துவேலுவுக்கு இதுதான் சிந்தனை. 
ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண் போன்றது.  சரியாக கணித்து உள்ளதை உள்ளபடியே சொன்னால் வாக்கு பலிதம் வரும் இதுதான் உண்மை.
ஐந்துக்குடைய திசை, ஒன்பதுக்குடையவன் திசை என்றால் பிரமாதமான பலன்களை அள்ளி வீசுகிற ஜோதிடர்கள், ஆறும் எட்டும் திசையை நடத்தினால் எட்டிக்காயை கடித்த மாதிரி பலன் சொல்கிறார்கள்.

உண்மை நிலவரம் என்ன? அலசுவோமா?

தீமை தருவதற்கு என்றே வரும் கிரகங்கள் 6,8,12க்குடைய கிரகங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.  நானும் சொல்றேன்.  அதில் மாற்றம் இல்லை.  அதில் 12ம் இடம் விரயம் மட்டுமே.

எந்த மாதிரியான விரயம் என்றாலும் 12ம் வீட்டாரின் பலனாகவே இருக்கும்.  எனக்கு தெரிந்த நண்பர் ஆறுமாதத்திற்கு ஒருமுறை வீடு மாறிக்கொண்டே இருந்தார்.  காரணம் என்ன? அவரின் சுகஸ்தானத்தில் விரயாதிபதி நின்றார்.

ஆனால் இதைத்தவிர பெரிய தீமைகள் வருவதில்லை.  ஆனாலும் பொருள் இழப்பும், மனத்தில் இனம் புரியாத பயத்தையும், கவலையையும் ஏற்படுத்துவதும், 12ம் வீட்டதிபதியின் கைங்கர்யமே. 

அதனால்தான் 12ம் இடமும் தீயவர்களின் கூட்டணியில் இடம் பெறுகிறது.

ஆட்டிப்படைப்பது ஆறாம் இடமா? எட்டாம் இடமா? இது தலைப்பு.  அது என்ன ஆட்டிப்படைப்பது? உச்சியில் இருக்கிற குடுமியை பிடித்து உலுக்குவதா? 

அதில்லை ராசா.  சாண் ஏறினா முழம் சறுக்குவது.  அதோட கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ஆக்கி வைச்சும் பட்டினின்னு சொல்றாங்களே அதுதான்.  

வீட்டிலே சமைச்சு ரெடியா சாப்பாடு இருக்கும்.  ஆனால் டயத்துக்கு போய் சாப்பிட முடியாம, டிராபிக் ஜாம்ல சிக்கிக்கிடுவார்.  

பாரதிராஜா பார்த்தால் படத்தில் நடிக்கிறியான்னு கேட்கிற மாதிரி அழகு மனைவியா இருக்கும்.  கூட இருந்து குடும்பம் நடத்த முடியாம  ஆஸ்திரேலியாவில் வேலை பார்ப்பார்.

யார் காரணம்? மேற்படியார்கள் தான்.  

பக்கத்து வீட்டுக்காரனோட பகை வருது, கூட வேலை பார்க்கிறவன் குழி பறிக்கிறான், எங்க போனாலும் இடர்பாடு வருதுன்னா, ஆறாமிடம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்.  எட்டாம் இடம் நீண்ட நேரம் பற்றி எரிய விடும்.  

இவர்கள்தான் ஜெயில்தண்டனை கிடைக்கவும் சிபாரிசு செய்வது.  ஆறாம் இடத்தின் பட்டியலை பார்த்து சலிச்சு போயிருக்கும்.  இருந்தாலும் இதையும் படியுங்கோ. 

அதாவது எதிரியை குறிப்பதும், கடன் வாங்கி கஷ்டப்பட வைப்பதும், வறுமையில் வாழ வைப்பதும், வறுமையில் வாட வைப்பதும், இந்த ஆறாம்  இடத்தின் பலன்களே. 
அடுத்து எட்டாமிட எஜமான் என்ன செய்வார்  என்று பார்ப்போம்.  ஆயுளை தருவது எட்டாமிடமே.  ஆட்டி வைத்து வேடிக்கை பார்ப்பதும் எட்டாம் இடமே.  திடீர் விபத்து, கண்டம் தந்து கலங்க வைப்பதும், சிறைவாசம், வனவாசம் வழங்கி வேடிக்கைப் பார்ப்பதும் எட்டாமிடத்தின் பலன்கள். 

எட்டாம் இடம் தீயஸ்தானம் என்றாலும் ஒரு வகையில் பணத்தை வழங்குகிற பண்பு பெற்றவர் என்பதை மறந்துவிடக் கூடாது.  அதுமட்டுமல்ல ஒவ்வொறு பிறப்பும் இவ்வளவு காலம்தான் வாழ வேண்டும் என முடிவெடுத்து முத்திரை பதிப்பதும் எட்டாமிடமே.

அதாவது ஆயுளை தருவது.

எட்டாமிடத்தின் பலனால் ஆன்மீகம் வருகிறது.  என்ன காரணம்? சம்மட்டியை எடுத்து நடு மண்டையிலே அடிச்ச மாதிரி, குடைச்சல் கொடுத்தால் யார்தான் குடும்ப வாழ்க்கை நடத்த தயாரா இருப்பாங்க.

அதா... கல்யாணம் ஆனவருக்கு எப்படா வீட்டுக்கு போவோம்னு ஆசையா இருக்கனும்.  அதை விட்டு ஏன்டா வீட்டுக்கு போறோம்னு நினைப்பு வந்தால் நரகம்தான். அப்புறம் என்ன சந்நியாசி ஆக வேண்டியதுதானே?
பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் எட்டாம் இடம்தான்.  அங்கே பாவகிரகம் சூழ்ந்து நின்றால் மாங்கல்ய பலம் குறைந்து விடுகிறது.  ஆனால் ஆறாம் வீட்டுக் கிரகமும், எட்டாம் வீட்டுக்கிரகமும் வீடு மாறி உட்கார்ந்து கொண்டால் பணம் வரும்.

அது எதிர்பாராமல் வரும், அல்லது குறுக்கு வழியில் வரும்.  அதனால்தான் விபரீத ராஜயோகம் என்று சொன்னார்கள். இந்த விபரீத ராஜயோகம் நேர்வழியில் நன்மை தருவதில்லை.  ஆனால்  நீதி, நேர்மை, நியாயம் இவை எல்லாம்?

விடுங்க.... கலியுகத்தில் விபரீதராஜயோகம் ஒரு வரப்பிரசாதமே.  

சரி... ஆட்டிப்படைப்பதில் முதல் பரிசு பெறுவது ஆறாம் இடமா? எட்டாம் இடமா? தீர்ப்பை சொல்லவா?

லக்னாதிபதி ஆறாம் இடத்து சம்பந்தம் பெற்றால் இளமை வாழ்வு போராட்டம் தருகிறது.  நோயின் பிடியில் சிக்கி தவிக்க வைக்கிறது.  எதை செய்தாலும் எதிர்ப்பில் முடிகிறது.  இதுபோல் எந்த ஒரு ஸ்தானமும் ஆறாமிட தொடர்பு பெறும்போது, தேவையில்லாத பிரச்சனைகள் தலைதூக்கவே செய்கின்றன.

அதைப்போல் எட்டாமிடமும் பிரச்சனையை தருவதிலும், இடர்பாடுகளை தருவதிலும் முன்னிலை வகிக்கின்றன.  இதில் யார் வல்லவர் என்றால் இருவருக்கும் சமபரிசு தரலாம்.  

P. D. Jagatheswaran

2 comments:

  1. நல்ல விளக்கம்... நன்றி...

    ReplyDelete
  2. பிரச்சனையே அதிக வருமானத்துடன் இல்லாம சந்தோசமா இருப்பது எந்த இடத்தில் ?

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...