ads

Tuesday, 30 July 2013

மங்களம் தரும் மகாலக்ஷ்மி



வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே  ஆகும். செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். 

திருமகள் யாகத்தில் தக்ஷ்ணருபியாகவும், தாமரையில் தேஜோ ருபியாகவும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் சுடராகவும் விளங்குகிறாள். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.

திருமகள் என்றும், அலைமகள் என்றும் , மலர்மகள் என்றும் மகாலட்சுமி பக்திபரவசத்தோடு பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள். 

 இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார். 

நம் இந்து மதத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, காக்கும் கடவுளாக அருள் புரிகிறார். உலக உயிர்களின் தாயாக மகாலட்சுமியும் அவரோடு இணைந்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும், மகாலட்சுமி அவரோடு உடன் அவதாரம் செய்கிறார். 

நாராயணன் என்று விஷ்ணு அழைக்கப்படும் போது நாரயணியாக மகாலட்சுமி அவருடன் இணைந்திருக்கிறார். 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது கமலாவாகவும், பரசுராமனாக விஷ்ணு அவதரிக்கும் போது தாரணியாகவும், ஸ்ரீராமனாக அவதரித்தபோது சீதாவாகவும், கிருஷ்ண அவதாரத்தில் ருக்மணியாகவும்,வெங்கடாஜலபதி என்ற பெயரில் விஷ்ணு வணங்கடும்போது அலமேலுவாகவும், மகாலட்சுமிவிஷ்ணு வுடன் தோன்றுகிறாள். 

விஷ்ணுவின் திருத்தலங்களி லெல்லாம் அவருக்கு இடப்புறம் இடம் பெற்றிருக்குக்கும் மகாலட்சுமிக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டும் வழிபடப்படுகிறார். சில சமயம் விநாயகப் பெருமானுடனும், செல்வ களஞ்சியத்தின் அதிபதியான குபேரனுடனும் காணப்படுகிறார்.

செல்வ தேவதையான மகாலட்சுமியை வழிபட்டு அவரது அருளைப் பெற்று வாழ்வில் செல்வ வளங்களையும், மகிழ்ச்சியையும் பெருக்கிக் கொள்ள, வழிபாட்டு பூஜை முறைகள், மந்திரங்கள் போன்றவை நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுளளன.    

பாற்கடலில் அவதரித்தவர் மகாலட்சுமி. ஒருமுறை அனுசூயா தேவியின் தவத்தால் அத்ரியின் மகனாய் அவதரித்த துர்வாச முனிவர் பராசக்தியை வழிபட்டு வாடாமலர் மாலையை பிரசாதமாய் பெற்று நடந்து வந்து கொண்டிருக்கிறார். 

அவ்வழியே இந்திரன் யானை மீது தேவர்கள் புடைசூழ பவனி வந்து கொண்டிருக்கிறான். துர்வாசர் இந்திரனிடம் தேவியின் பிரசாதத்தை வழங்க, அவன் அம்மாலையை யானையின் மீதிருந்தவாறே அங்குசத்தால் வாங்கி யானையின் மத்தகத்தில்  வைக்க அது தவறி கீழே விழுந்து விடுகிறது. 

அதைகண்ட துர்வாச முனிவர் கோபப்பட்டு, இந்திரனே ..சகல ஐஸ்வர்யங்களும் உன்னிடமிருப்பதால் நீ இறுமாப்புடன் நடந்து கொண்டு தேவியின் பிரசாதத்தை அவமதித்து விட்டாய்.  இக்கணமே செல்வதேவதை உன்னை விட்டு விலகட்டும் என்று சாபம் கொடுக்கிறார். 

இந்திரன் தன் தவறை உணர்ந்து உடனே அவரது பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பை வேண்டுகிறான். மனம் அமைதியடைந்த துர்வாசர் இந்திரனே நீ மகாவிஷ்ணுவை வணங்கி இலட்சுமியின் அருளைப்பெறுவாய் என்று கூறி  சென்றுவிடுகிறார்.

இந்திரன் ஆட்சியும் சக்தியும் நிலைகுலைந்து போக, அரக்கர்கள் ஆதிக்கம் பெற்று, தேவர்களை கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தேவர்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்து, புருஷ சூக்தத்தாலும் அஷ்டாஷர மந்திர ஜபத்தாலும் அவரை துதிக்கின்றனர். 

மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து, தேவர்களே, நீங்கள் அசுரர்களுடன் இணைந்து, பாற்கடலை கடையுங்கள், வேண்டியதைப் பெறுவீர்கள் என்று அருளுகிறார். மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிராக்கி, தேவர்கள் பாற்கடலை கடைகின்றனர்.

இவ்வாறு கடல் கடையப்படும் போது ஆலகால விஷம் முதலில் தோன்றியது. அதை பரமேஸ்வரன் எடுத்து விழுங்கி கண்டத்தில் இருத்திக் கொள்கிறார்.

அதன்பின் பாற்கடல்  கடையப்பட்டபோது காமதேனு என்ற தெய்வீகப் பசு தோன்றியது. அதை ரிஷிகள் எடுத்துக்கொண்டனர். பிறகு உச்சை ச்ரவஸ் என்ற குதிரை வந்தது. அதை பிரஹலாதனின் பேரன் பலி சக்ரவர்த்தி எடுத்து கொண்டான்.

பிறகு ஐராவதம் என்ற வெள்ளை யானை தோன்றியது.    அது இந்திரன் வசம் சென்றது. அதன்பின் கௌஸ்தூபமணி என்ற ரத்தினம் தோன்றியது. அதனை விஷ்ணு தனது ஆபரணமாக்கிக் கொண்டார். 

பிறகு கற்பக விருட்சம், அப்சரஸ் சுந்தரிகள் தோன்றினர் இவர்களை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். 

அதன் பின் செந்தாமரை மலரைத் திருக்கையில் ஏந்தியவளும் மிக அழகிய ஒளி வீசும் திருமுகத்தை உடையவளும், சகல சௌபாக்கியத்தை தருபவளும், சிவன் விஷ்ணு பிரம்மா போன்ற மும்மூர்த்திகளால் போற்றப்படுபவளும், சங்கநிதி பதுமநிதி இவைகளால் சூழப்பட்டவளும் சந்தனம் மற்றும் வாசனை மலர்களை சூடியவளும், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான மூவுலகங்களுக்கும் ஐஸ்வர்யங்களை வழங்கும் மகாலட்சுமி தேவி தோன்றினாள். 

அவளை விஷ்ணு தன் துணைவியாக ஏற்றுக்கொண்டு தன மார்பில் வாசம் செய்யுமாறு இருத்திக் கொண்டார்.



அவருக்குப் பின்  சீதேவி மூதேவி தோன்றினார்கள். சங்கு, வில்வம், துளசி தோன்றின, வாருணிதேவதை தோன்றினாள். அவளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக தன்வந்திரி முனிவர் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்.

மகாலட்சுமியை தேவர்கள் பலவாறு போற்றித் துதிக்க அவர்கள் கோரிய வரத்தை மகாலட்சுமி அருள, தேவர்கள் மீண்டும் இழந்த சக்திகளைப் பெற்று இந்திர லோகத்தை மீட்டு மகிழ்ந்தனர். 

மகாலட்சுமி பூஜை தோன்றிய விதம்

துர்வாச முனிவரின் சாபத்தினால், மகாலட்சுமி இந்திர லோகத்தை விட்டு நீங்க இந்திரனும் தேவர்களும் அதனால் துன்புற்று மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி மாகாலட்சுமியின் அருளைத் திரும்பப் பெற வேண்டி பாற்கடலை கடைகின்றனர். 

மகாலட்சுமி திருப்பாற்கடலில் அவதரித்த நாள் துவாதசியில் சூரியோதய நாள் முதல்நாள் ஏகாதசியில் தேவ அசுரர்கள் பாற்கடலை கடையும் போது ரிஷிகளெல்லாம் உபவாசம் இருந்து ஸ்ரீசூக்த மந்திர ஜபம் , லட்சுமி ஸ்ஹஸ்ரநாமம், லட்சுமி தோத்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்து லட்சுமியைத் தொழுதனர்.

லட்சுமியின் தோற்றம் நிகழ்ந்து அவர் திருமாலின் திருமார்பில் அமர்கிறார். நாரயாணன் மனம் மகிழ்ந்து ரிஷிகளே நீங்கள் மகாலட்சுமியின் தரிசனத்திற்காக உபவாசமிருந்து என்னையும் மாகாலட்சுமியையும் தரிசித்து மகிழ்ந்தீர்கள். 

இதனால் இன்றுமுதல் பிரதி ஏகாதேசியன்று உபவாசமிருந்து மறுநாள் துவாதசி விடியற்காலையில் என்னையும் மகாலட்சுமியையும் பூஜிப்பவர்கள் தாங்கள் விரும்பியதை அடைவார்கள் என்று அருளுகிறார். 

மகாலட்சுமியும் இந்திரனைப் பார்த்து இரண்டு வரங்கள் தருகிறாள். 
 
ஒன்று மூவுலகங்களையும் விட்டு இனிநான் நீங்க மாட்டேன் என்றும். தன்னை பக்தியோடு பூஜிப்பவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய சகல செல்வ வளத்தினையும் வழங்குவேன் என்றும் வாக்குத் தருகிறாள். 

அதன் பிறகு மக்கள் தங்களின் வாழ்க்கைவளத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மகாலட்சுமியை வழிபடத் துவங்கினார்கள்.

மகாலட்சுமியை வழிபட்டே இராவணன் இலங்காபுரியை செல்வ செழிப்பான நகராக மாற்றியமைத்தான் என்று ‘இராவண   சம்ஹிதா’கூறுகிறது. 

துவாரகையில் வாழும்  மக்களும் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி மகாலட்சுமியை வழிபட்டு துவாரகையை செல்வம் கொழிக்கும் நகராக மாற்றியமைத்ததாக  ‘கோரக் சம்ஹிதா’ எனும் நூல் குறிப்பிடுகிறது.

எனவே மகாலட்சுமி வழிபாடு ஒருவருக்கு வாழ்க்கையில் செல்வ வளத்தினை, லட்சுமி கடாட்சத்தை வழங்கும் என்பதை உணரலாம்.

ஸ்ரீசூக்தத்தில் மகாலட்சுமியின் திருப்பெயர்கள்

ரிக்வேதத்தின் ஒரு அம்சமே ஸ்ரீசூக்தம் பாற்கடலை கடையும் போது ரிஷிகள் ஸ்ரீசூக்தம் பாடியே மகாலட்சுமியை வழிபட்டனர் அதில் திருமகள் பல திருநாமகளால் வழிபடப்படுகிறாள். 

ஹரிணி   -பசுமையான மேளியழகைப் பெற்றவள்

சூர்யா   -கதிரவனை நிகர்த்த ஒளி மயமானவள்

ஹிரண்மயி  - பொன்னி

ஈஸ்வரி   - எல்லா உயிர்களிலும் உறைபவள்

ஹிரண் வர்ணா   - பொன்னிற மேளியாள் 

சந்திரா    -   மதிநிகர்த்த முகத்தினள்

அன்பகா முனிம்    - நிலை தவறாதவள்

ஆர்த்திரா    - நீரில் தோன்றியவள்

பத்மே ஸ்திதா   -  தாமரையில் வாசம் செய்பவள்

பத்ம வர்ணா  - சூரிய காந்தி உடையவள்

வருஷோ பில்வ   - கூவளத்தில் தோன்றியவள்

கரிஷிணி   - பெருகும் பசுஞ் செல்வமுடையவள்

புஷ்கரிணி   - யானைகளால் வணங்கப்பட்டவள்

பிங்கள   - செம்மைநிறம் கொண்டவள்

யக்கரிணி  -  தர்ம தேவதை

Monday, 29 July 2013

முதல்தரமான ராஜயோகம்!!


வாழ்க்கையில் யோகம் வேண்டும். அது முதல்தரமான யோகமாக அமைய வேண்டும். அந்த யோகமும் இளமையில் வரவேண்டும். வந்தால் அந்த ஜாதகன் பாக்கியவான்.

சரி... முதல்தரமான ராஜயோகம் என்பது எது?

தாராளமான பணவசதி, கௌரவமான வேலை, உயரிய அந்தஸ்து, மனதுக்கு பிடித்த மாதிரி மணவாழ்க்கை, நல்ல அறிவுள்ள, ஓழுக்கமான குழந்தைகள், நோய்நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாத வாழ்க்கை அமைந்தால் அதை முதல்தரமான ராஜயோகம் என்று சொல்லலாம்.

மேஷலக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் செவ்வாய் குரு சேர்ந்திருபதே என்று சொல்லாம். அதுவும் லக்னம், நான்கு, ஏழு, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் அமையப்பெற்றால் மிக சிறப்பு.

குரு சனி சேர்க்கை என்பது தர்மகர்மாதிபதி யோகத்தை தந்தாலும் நீடித்த ராஜயோகத்தை தருவதில்லை.  காரணம் சனியின் இயற்கை சுபாவம்.

ரிஷப லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெறுவது பெரும் ராஜயோகத்தை தரும். சனி சந்திரன் சேர்க்கை என்பது ராஜயோகமாக குறிப்பிடப்பட்டாலும், அது கொடுத்து கெடுக்கிற அமைப்பாக இருக்குமே தவிர நிலையான யோகத்தை தராது.

மிதுன  லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சுக்கிரன் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்தில் குரு மற்றும் புதன் வருகிறார்கள். சுக்கிரன் ஐந்தாம் இடத்திலோ, பத்தாம் இடத்திலோ இருந்தால் நீடித்த யோகம் இருக்கும்.  மீனத்தில் அமராத புதனும், மகரத்தில் இல்லாத குருவும் சுபப்பலனைத் தருவார்கள்.

கடக லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சந்திரன், செவ்வாய், குரு மூவரும் வருகிறார்கள்.  குருவும் சந்திரனும் கூடி இருந்தால் குருசந்திரயோகம், குருவும்  செவ்வாயும் கூடி இருந்தால் குரு மங்கள யோகம், சந்திரனும் செவ்வாயும் கூடி இருந்தால் சந்திர மங்கள யோகம் என்று பிரபலமான யோகத்தை தரும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் சந்திரன், 5ல் செவ்வாய், 9ல் குரு என்ற அமைப்பில் பிறந்தால் பெரும் பெயரும், புகழும் பெறுவார்கள்.

சிம்ம லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் குருவும் செவ்வாயும் முதன்மையானவர்கள். இரணடாம் இடத்தில் சூரியன் வருகிறார். குரு செவ்வாய் இணைந்து கேந்திரம் அல்லது திரிகோண நிலையில் இருந்தால் பிரபலயோகம்.  சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனால் உயரிய பதவியும், உரிய அங்கீகாரமும் வந்து சேரும்.

கன்னி லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சுக்கிரனே முதன்மை பெறுகிறார்.  இந்த சுக்கிரனோடு புதன் சேர்க்கைப் பெற்றால் தனவான். நல்ல குணவான் என்று சொல்லாம்.  எந்த வகையிலாவது உயரிய வாழ்க்கை அமைந்துவிடும்.

துலாம் லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோக கிரகம் என்று பார்த்தால் சனிதான் வருகிறார். இவர் ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் வரும். அதுவும் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சகயோகம் அல்லது சஸ யோகம் வரும்.

வந்தால்?

வந்தால் வளர்ச்சிதான்.  திடீர் குபேர யோகத்தை தருவார். என்ன நடக்கிறது யூகித்து அறிவதற்குள் ஜாதகர் பிரமாண்டமாக வளர்ந்து விடுவார்.

விருச்சிக லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோக கிரகம் என்று பார்த்தால் சந்திரன், குரு, சூரியன் என்று பெரிய கூட்டணியே வருகிறது.  

ஆவணி மாதத்தில் பிறந்த ஜாதகர் புனர்பூசம் நான்காம் பாதம், பூசம் அல்லது ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் வாழ்க்கைப் பாதை சீராக அமையும்.  பூத்து குலுங்கும் பூஞ்சோலை மாதிரி கவலை இல்லாத மனிதர் பட்டியலில் இணைந்து விடுவார்.

தனுசு லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் சூரியன் வழியாகவும், புதன் வழியாகவும்தான் வரவேண்டும். இவர்கள் இருவரும் ஆட்சி பலம் பெற்று இருந்தாலே போதும், ராஜயோகம் வந்துவிடும்.

மகர லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் தருமாதிபதியான புதனும், கருமாதிபதியான சுக்கிரனும் பெரும் ராஜயோக கிரகங்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தால் பெரும் ராஜயோகம் வந்துவிடும்.

கும்ப லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் புதன், சுக்கிரன், செவ்வாய் மூவரும் ராஜயோக கிரகங்கள்.  இந்த மூவரில் புதன் சுக்கிரன், புதன் செவ்வாய், சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இருந்தால் அந்த ஜாதகருக்கு முதல்தரமான ராஜயோகம் வந்துவிடும்.

மீன லக்னத்திற்கு முதல்தரமான ராஜயோகம் என்று பார்த்தால் குருபகவானும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயும் ஒன்று சேர்ந்தால் ராஜயோகம் வரும். அல்லது சந்திரனோடு குரு சேர்ந்தாலோ, அல்லது சந்திரனோடு செவ்வாய் சேர்ந்தாலே போதும் ராஜயோகம் வரும்.

Sunday, 28 July 2013

ஆட்டி படைப்பது ஆறா எட்டா?


சக்திவேலு ஜாதகம் பார்க்கலாம்னு ஒரு ஜோசியர்கிட்டே போனார்.  ஜாதகத்தை கணித்துப் பார்த்த ஜோசியர், உங்க ஜாதகப்படி ராஜயோக திசை ஆரம்பமாகிடுச்சு.
இனிமே உங்களுக்கு டாப்போ, டாப்புதான்.  பிரமாதம், அமோகம் அப்படின்னு பலன் சொன்னார்.  

சக்திவேலுவுக்கு எப்படி இருக்கும்?

சக்திவேலு ஜோசியரோட பக்திவேலுவாவே மாறிட்டார்.  ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு இப்படி ஜோதிடம் சொன்னால்தான் பிடிக்கிறது.  அதற்குரிய அமைப்பு இருந்தால் நாமும் அப்படியே சொல்லலாம் தப்பில்லை.
சக்தி என்ன செய்தார் தெரியுமா? தன் நண்பர் முத்துவேலுகிட்டே மேற்படி விஷயத்தை சொல்ல, முத்துவேலு தன்னோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டு ஜோசியர்கிட்டே போனார். 
ஜோசியர் ஜாதகத்தை பார்த்துட்டு சொன்னார்.  தம்பி... உனக்கு ஆறாம் வீட்டுக்காரன் திசை நடப்பில் வந்துட்டு.  இனிமே உனக்கு கஷ்டகாலம்தான்.  பகை வரும், தொல்லை வரும் பார்த்து நடந்துக்கோன்னு சொன்னார்.

முத்துவேலுவுக்கு முகம் முந்தாநாள் பறிச்ச கொழுந்து வெத்தலை மாதிரி வாடிப்போச்சு.  

ஏன்? ஜோசியருக்கு என்ன ஓரவஞ்சனை.  முத்துவேலுவுக்கு இதுதான் சிந்தனை. 
ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண் போன்றது.  சரியாக கணித்து உள்ளதை உள்ளபடியே சொன்னால் வாக்கு பலிதம் வரும் இதுதான் உண்மை.
ஐந்துக்குடைய திசை, ஒன்பதுக்குடையவன் திசை என்றால் பிரமாதமான பலன்களை அள்ளி வீசுகிற ஜோதிடர்கள், ஆறும் எட்டும் திசையை நடத்தினால் எட்டிக்காயை கடித்த மாதிரி பலன் சொல்கிறார்கள்.

உண்மை நிலவரம் என்ன? அலசுவோமா?

தீமை தருவதற்கு என்றே வரும் கிரகங்கள் 6,8,12க்குடைய கிரகங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.  நானும் சொல்றேன்.  அதில் மாற்றம் இல்லை.  அதில் 12ம் இடம் விரயம் மட்டுமே.

எந்த மாதிரியான விரயம் என்றாலும் 12ம் வீட்டாரின் பலனாகவே இருக்கும்.  எனக்கு தெரிந்த நண்பர் ஆறுமாதத்திற்கு ஒருமுறை வீடு மாறிக்கொண்டே இருந்தார்.  காரணம் என்ன? அவரின் சுகஸ்தானத்தில் விரயாதிபதி நின்றார்.

ஆனால் இதைத்தவிர பெரிய தீமைகள் வருவதில்லை.  ஆனாலும் பொருள் இழப்பும், மனத்தில் இனம் புரியாத பயத்தையும், கவலையையும் ஏற்படுத்துவதும், 12ம் வீட்டதிபதியின் கைங்கர்யமே. 

அதனால்தான் 12ம் இடமும் தீயவர்களின் கூட்டணியில் இடம் பெறுகிறது.

ஆட்டிப்படைப்பது ஆறாம் இடமா? எட்டாம் இடமா? இது தலைப்பு.  அது என்ன ஆட்டிப்படைப்பது? உச்சியில் இருக்கிற குடுமியை பிடித்து உலுக்குவதா? 

அதில்லை ராசா.  சாண் ஏறினா முழம் சறுக்குவது.  அதோட கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ஆக்கி வைச்சும் பட்டினின்னு சொல்றாங்களே அதுதான்.  

வீட்டிலே சமைச்சு ரெடியா சாப்பாடு இருக்கும்.  ஆனால் டயத்துக்கு போய் சாப்பிட முடியாம, டிராபிக் ஜாம்ல சிக்கிக்கிடுவார்.  

பாரதிராஜா பார்த்தால் படத்தில் நடிக்கிறியான்னு கேட்கிற மாதிரி அழகு மனைவியா இருக்கும்.  கூட இருந்து குடும்பம் நடத்த முடியாம  ஆஸ்திரேலியாவில் வேலை பார்ப்பார்.

யார் காரணம்? மேற்படியார்கள் தான்.  

பக்கத்து வீட்டுக்காரனோட பகை வருது, கூட வேலை பார்க்கிறவன் குழி பறிக்கிறான், எங்க போனாலும் இடர்பாடு வருதுன்னா, ஆறாமிடம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்.  எட்டாம் இடம் நீண்ட நேரம் பற்றி எரிய விடும்.  

இவர்கள்தான் ஜெயில்தண்டனை கிடைக்கவும் சிபாரிசு செய்வது.  ஆறாம் இடத்தின் பட்டியலை பார்த்து சலிச்சு போயிருக்கும்.  இருந்தாலும் இதையும் படியுங்கோ. 

அதாவது எதிரியை குறிப்பதும், கடன் வாங்கி கஷ்டப்பட வைப்பதும், வறுமையில் வாழ வைப்பதும், வறுமையில் வாட வைப்பதும், இந்த ஆறாம்  இடத்தின் பலன்களே. 
அடுத்து எட்டாமிட எஜமான் என்ன செய்வார்  என்று பார்ப்போம்.  ஆயுளை தருவது எட்டாமிடமே.  ஆட்டி வைத்து வேடிக்கை பார்ப்பதும் எட்டாம் இடமே.  திடீர் விபத்து, கண்டம் தந்து கலங்க வைப்பதும், சிறைவாசம், வனவாசம் வழங்கி வேடிக்கைப் பார்ப்பதும் எட்டாமிடத்தின் பலன்கள். 

எட்டாம் இடம் தீயஸ்தானம் என்றாலும் ஒரு வகையில் பணத்தை வழங்குகிற பண்பு பெற்றவர் என்பதை மறந்துவிடக் கூடாது.  அதுமட்டுமல்ல ஒவ்வொறு பிறப்பும் இவ்வளவு காலம்தான் வாழ வேண்டும் என முடிவெடுத்து முத்திரை பதிப்பதும் எட்டாமிடமே.

அதாவது ஆயுளை தருவது.

எட்டாமிடத்தின் பலனால் ஆன்மீகம் வருகிறது.  என்ன காரணம்? சம்மட்டியை எடுத்து நடு மண்டையிலே அடிச்ச மாதிரி, குடைச்சல் கொடுத்தால் யார்தான் குடும்ப வாழ்க்கை நடத்த தயாரா இருப்பாங்க.

அதா... கல்யாணம் ஆனவருக்கு எப்படா வீட்டுக்கு போவோம்னு ஆசையா இருக்கனும்.  அதை விட்டு ஏன்டா வீட்டுக்கு போறோம்னு நினைப்பு வந்தால் நரகம்தான். அப்புறம் என்ன சந்நியாசி ஆக வேண்டியதுதானே?
பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் எட்டாம் இடம்தான்.  அங்கே பாவகிரகம் சூழ்ந்து நின்றால் மாங்கல்ய பலம் குறைந்து விடுகிறது.  ஆனால் ஆறாம் வீட்டுக் கிரகமும், எட்டாம் வீட்டுக்கிரகமும் வீடு மாறி உட்கார்ந்து கொண்டால் பணம் வரும்.

அது எதிர்பாராமல் வரும், அல்லது குறுக்கு வழியில் வரும்.  அதனால்தான் விபரீத ராஜயோகம் என்று சொன்னார்கள். இந்த விபரீத ராஜயோகம் நேர்வழியில் நன்மை தருவதில்லை.  ஆனால்  நீதி, நேர்மை, நியாயம் இவை எல்லாம்?

விடுங்க.... கலியுகத்தில் விபரீதராஜயோகம் ஒரு வரப்பிரசாதமே.  

சரி... ஆட்டிப்படைப்பதில் முதல் பரிசு பெறுவது ஆறாம் இடமா? எட்டாம் இடமா? தீர்ப்பை சொல்லவா?

லக்னாதிபதி ஆறாம் இடத்து சம்பந்தம் பெற்றால் இளமை வாழ்வு போராட்டம் தருகிறது.  நோயின் பிடியில் சிக்கி தவிக்க வைக்கிறது.  எதை செய்தாலும் எதிர்ப்பில் முடிகிறது.  இதுபோல் எந்த ஒரு ஸ்தானமும் ஆறாமிட தொடர்பு பெறும்போது, தேவையில்லாத பிரச்சனைகள் தலைதூக்கவே செய்கின்றன.

அதைப்போல் எட்டாமிடமும் பிரச்சனையை தருவதிலும், இடர்பாடுகளை தருவதிலும் முன்னிலை வகிக்கின்றன.  இதில் யார் வல்லவர் என்றால் இருவருக்கும் சமபரிசு தரலாம்.  

P. D. Jagatheswaran

Wednesday, 10 July 2013

நான் மனிதன்!

கொஞ்சம் நீர் !
கொஞ்சம் மண் !
கொஞ்சம் நெருப்பு !
கொஞ்சம் காற்று !
கொஞ்சம் ஆகாயம் கலந்து
கட்டிய வீடு என் வீடு !
இதில் நான்
குடியிருக்க வந்திருக்கிறேன்!!

எனக்கு பிடித்த
வீடு இதுவென்றாலும்
இதில் நான் நிரந்தரவாசில்லை!
ஆனாலும்
இருக்கும் வரை
வீட்டை பழுத்துப் பார்ப்பேன்!
வாழும்வரை இதைநான்
அலங்கரிப்பேன்!

நான் இருக்கும் வரை
வீட்டில் வெளிச்சம் இருக்கும்!
அதிர்ச்சி வேண்டாம்
போகும்போது வீட்டை
இடித்து விட்டே போவேன்!

நீர்
நீரோடும்!
மண்
மண்ணோடும்!
நெருப்பு
நெருப்போடும்!
காற்று
காற்றோடும்!
ஆகாயம்  
ஆகாயத்தோடும்
கலந்துவிடும்!

மீண்டும்
நான் வரநேர்ந்தால்
ஐம்பூதங்களையும்
இணைத்து
எனக்கொரு அழகிய
வீட்டினை
செய்து கொள்வேன்!

ஏனெனில்
நான் ஆன்மா!
நான் கடவுள் !
நான் தெய்வம்!
நான் இறைவன் !
ஆனாலும்
என் விட்டினுள்
நான் மனிதன்!

- மதிவாணன் 







குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...