Follow by Email

Friday, 11 September 2015

வேதியனும் வேதாளமும்

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது’ என்பது பற்றி வேதாளம் கேள்வி எழுப்ப, வேதியன் அதற்கான பதிலைச் சொல்லிக் கொண்டே வருகிறான். சிறிது ஓய்வுக்குப் பின்னர் வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக¢கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். 

வேதியா!  விவேகானந்தர், மனிதனின் உண்மை இயல்பு பற்றி கூறியுள்ளக் கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.. இன்னும் தொடர்ந்து அவர் கூறியுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .. சொல்வாயா?  

வேதாளம் கேட்க வேதியன் சொல்லத் தொடங்குகிறான்..

வேதாளமே, பரம்பொருள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் கருத்துக்களை இப்போது நாம் பார்ப்போம்.  

“ எல்லையற்றப் பரம்பொருள் எல்லைக்கு உட்பட்டதாக மாறியது எப்படி? இக்கேள்வியே வேதாந்தத்தில் மிகவும் புரிந்து கொள்ள முடியாத கஷ்டமான கேள்வியும் அடிக்கடி கேட்கப்படுகிற கேள்வியும் ஆகும். 

பரம்பொருளானது காலம் ,இடம், நிமித்தம் எனப்படும் காரண காரியங்களுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டதன் மூலம் பிரபஞ்சமாக ஆகியிருக்கிறது. இது அத்வைத தத்துவத்தின் மையக்கருத்து ஆகும்.

பிரபஞ்சம் என்றால்   பொருளாலான உலகம் மட்டுமன்றி, மனம், ஆத்மா, என்பது போன்றவைகளும், சொர்க்கங்கள், பூமிகள் என எங்கும் பரவி இருக்கின்ற அனைத்துமே பிரபஞ்சத்திற்குள் அடங்கும். 

ஆனால் பரம்பொருள் என்பது இந்த காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது.  வேறொன்றையும் சாராமல் தனித்து நிற்கும் தத்துவம் அது.  பரிபூரண சுதந்திரமாக இருக்கும் பரம்பொருள் தத்துவத்திற்கு எந்தப் பின்னணியும் இருக்க முடியாது.

அந்தப் பரம்பொருளை அறிய முடியாது  . அவர் நம் அறிவு நிலைக்கு மேலானவர். அதாவது நாம் அறியக்கூடியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவரே அவர். 

ஆனால் அவர் எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவர் மூலமாகத்தான் அறிய முடியும். நம் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக இருப்பவர் அவரே.

நம் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக அவரே இருப்பதால் அவரைத் தனியே வெளியேக் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்க முடியாது.

வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்து ஒன்று இதோ..

“சுவேத கேதுவே, அவர்தான் உன்னுடைய ஆன்மாவின் உட்பொருளாக இருக்கிறார். அவரே மெய்ப்பொருள். அவரே உன் ஆன்மாவின் ஆன்மா. நீயே அவர்.” நீயே கடவுள்(தத்வமஸி)    இதுதான் பொருள்.  வேறு எப்படியும் பரம்பொருளை விளக்க முடியாது.

ஒன்றே ஆன பரம்பொருளை, மொழியாலோ, உறவாலோ உருவகப்படுத்த முயல்வது முடியாத காரியம். எல்லாவற்றிற்குள்ளும் நிலையாக இருப்பவர் அவரே ஆவார்.

நம் ஆன்மாவின் உட்பொருளாகவும், மெய்பொருளாகவும் இருப்பவரை நம்மிலிருந்து நாமே எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?  எனவே பரம்பொருள் என்பவர் அறியப்படுபவரோ, அறியப் படாதவரோ அல்லர். அவர் இந்த இரண்டு நிலைகளையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்.  அவரே நம் அந்தராத்மாவாக இருப்பவர்.

ஆகவே நாம் அறிந்தோ அறியாமலோ பரம்பொருளிலேயே வாழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால் நாம் பரம்பொருளை நம் அறிவினால் அறிய முடியாது. நாம் எதையுமே பரம்பொருளின் மூலமாகத்தான் செய்ய முடியும்.  

மாயை

பரம்பொருள் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தை ஆரம்பத்தில் பார்த்தோம். அதாவது காலம், இடம் , காரண காரியங்கள் என்பதற்குள் தன்னை உட்படுத்திக்கொள்வதன் மூலம். 

இந்த காலம் இடம் காரண காரியங்கள் என்பது என்ன? என்பதைப் பற்றி ஆராய்வோம். 

இங்கே இரண்டு தத்துவங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பரம்பொருள் இன்னொன்று மாயை.  காலம் இடம் காரண காரியங்கள் என்பது மாயை.

காலம் -  காலம் நம் மனதின் மாறுதலுக்கு ஏற்ப அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது.  சில சமயங்களில் சிறிது நேரத்துக்குள்ளேயே பல வருடங்கள் வாழ்ந்ததாக கனவு காண்கிறோம். சில சமயங்களில் பல மாதங்கள் ஒரே கணத்தில் ஓடிவிட்டதாக நமக்குத் தோன்றும். காலம் என்ற கருத்தே சில சமயம் முழுவதுமாக மறைந்தே விடுகிறது. 

காலம் என்பதை தனியே நினைத்துப் பார்க்க முடியாது. நாம் இரண்டு நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முன்னால் நடந்தது மற்றொன்று அதைத் தொடர்ந்து நடப்பது இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வருவது காலம். 

இடத்தின் தன்மையும் இதே போல்தான் .. இடம் என்பது என்ன என்பதை நம்மால் அறிய முடியாது. ஆனாலும் அது இருக்கிறது.  நிறம்,எல்லைகள், திசைகள் என்ற எந்த சார்புமே இல்லாத இடத்தைப் பற்றி நினைத்துப் பாருஙகள் அது முடியாது. இரண்டு எல்லைகளுக்கோ ,மூன்று பொருட்களுக்கோ உட்பட்டதாகத்தான் இடத்தை நாம் நினைக்க முடியும். வேறு ஒரு பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இடம் என்பது இருப்பதாக நாம் சொல்ல முடியும். 

இப்படி காலமும் இடமும் இரண்டு நிகழ்ச்சிகளை சார்ந்தே இருக்கிறது. 

காரண காரியக் கருத்து காலம் இடம் இவற்றிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது.   காலத்துக்கும் இடத்துக்கும் இருப்பு கிடையாது. இவை இரண்டும் எல்லாவற்றையும் நிழல் போல் சூழ்ந்திருக்கின்றன. அந்த நிழல் நம் கைக்கு அகப்படாது. 

ஏனென்றால் உண்மையான இருப்பு அவைக்கு இல்லை. ஆனாலும் அவை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லாமே காலம் இடம் ஆகிய இரண்டின் மூலமாகத்தான் பிரபஞ்சமாக வெளிப்படுகின்றன. 

எனவே காலம் இடம் காரண காரியம் இவற்றின் சேர்க்கையை இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது என்றுத் தெரிகிறது.

  உதாரணத்திற்கு நாம் கடலில் உள்ள அலை ஒன்றை எடுத்துக் கொள்வோம். அலையும் கடலும் ஒன்றுதான் என்று நமக்குத் தெரியும் என்றாலும் அவற்றை அலை, கடல் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்கவும் முடிகிறது. இது எப்படி சாத்தியம்?  அவற்றின் உருவமும் மனதில் அவற்றைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துமே ஆகும்.

நாம் கடலை நினைக்காமல் அலை என்ற உருவத்தை மட்டும் நினைத்துப் பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. கடலோடு சேர்த்துத்தான் நாம் அலையைப்பற்றி நினைக்க முடியும். அலை அடங்கும் போது அதன் உருவம் கண நேரத்தில் மறைந்து விடுகிறது. ஆனாலும் நாம் கண்ட அலை உருவம் பொய்த்தோற்ற மல்ல.. அலை இருந்த வரையில் அலை உருவமும் இருந்தது. நாம் அலை உருவத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தோம். 

   இதுதான் மாயை.  

ஆகவே இந்தப் பிரபஞ்சத்துக்கு அதற்கே உரித்தான தனி உருவம் இருக்கிறது. பரம்பொருளே கடல். நாமும் மற்றும், சூரியன் நட்சத்திரங்கள் போன்ற எல்லாமே அந்தக் கடலில் தோன்றும் அலைகள்தாம். அலைகளை வேறுபடுத்துவது நாம ரூபமே. 

அலை என்பது மறைந்தவுடன் அதன் உருவமும் மறைந்து கடலோடு ஒன்றிவிடுகிறது. ஒவ்வொருவனும் மாயையைக் கடந்தவுடன் மாயை மறைந்து அவன் விடுதலையடைகிறான். அதாவது தானும் பரம்பொருளே என்பதை உணர்கின்றான்.

இந்த மாயை என்கிற கால இட காரண காரியங்கள் நாம் பரம்பொருளை அடைவதற்கு ,  தடையாக இருக்கின்றன. பரம்பொருளுக்கும் நமக்கும் இடையில் திரை போட்டு விடுகின்றன. இவற்றை நாம் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் இவற்றிலிருந்து விடுபடத்தான் நம் போராடிக்  கொண்டிருக்கிறோம். 
ஆன்மிக ரீதியில் இதைப் பார்ப்போம்.  

எல்லையற்ற தத்துவத்தின் எல்லைக்குட்பட்ட வெளிப்பாடே இயற்கையாகும் அதாவது பிரபஞ்சமும் அனைத்தும் என்று பார்த்தோம். 

இந்த மாயை என்ற இயற்கை சூழலை நாம் வெற்றிக் கொள்ள,  நம் உண்மையான நிலையை அடைய முயற்சிகளை எடுத்துப் போராடுகிறோம். 
உதாரணத்திற்கு ஒழுக்கம் என்பது   என்ன? நம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது. 

அதாவது இயற்கையாய் எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது. அதாவது இயற்கை நம்மீது கொள்ளும் ஆதிக்கத்தை நீக்கிக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சியே ஒழுக்கம் ஆகும். ஒரு கட்டத்தில் அவற்றை நாம் வென்று விட முடியும் என்பதே உண்மை. 

எல்லக்குட்பட்ட இந்த மாயை என்ற  இயற்கைச் சூழலை எப்படி நாம் வெல்வது? 

பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது எல்லா உயிர்களுமே தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்
.
ஒரு சிறு மீன் நீரிலுள்ள தன் விரோதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள பறக்க விரும்புகிறது . அது எப்படி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? 

இறக்கைகளை வளர்த்து பறவையாவதன் மூலம் அது தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. அதாவது அது நீரையோ காற்றையோ மாற்றவில்லை.  

மாற்றம் அதனிடம் உருவானது.  வெற்றி பெறுவதற்கான மாற்றம் தன்னிடத்திலேயே உருவாக வேண்டும் என்பது இதில் தெரிகிறது. ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே தீமையை வெல்ல முடியும்.

ஆகவே இயற்கையை வெற்றியடைவதற்கு அதாவது மாயையை வெற்றியடைவதற்கு இதுதான் வழி.. நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வது. மாற்றம் அடைவது. 

அத்வைதத்தின்   இந்தக் கருத்துத்தான் இன்றைய பௌதிக விஞ்ஞானக் கோட்பாடுகள் மற்றும் தற்கால  ஆராய்ச்சியோடு ஒத்துப்போகின்றன. 

எல்லாப் பொருள்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் சொல்லும் போது,  அது உங்களுக்கு உபநிஷதங்களிலுள்ள பரம்பொருள் தத்துவத்தை நினைவுப் படுத்த வில்லையா? 

ஒரு நெருப்பு பல உருவங்களாத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப் போல், பரம்பொருளானது ஒவ்வொரு ஆத்மாவின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு இன்னும் பல மடங்கு உயர்ந்த நிலையிலும் இருக்கிறது என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. 

இந்துக்கள் மனத் தத்துவ ஆராய்ச்சியின் மூலமாகவும், ஆன்மிகத் தத்துவ ஆராய்ச்சி மூலமும், அறிவு பூர்வமான தத்துவ ஆராய்ச்சி மூலமும் முன்னேறினார்கள்.

ஐரோப்பியர்கள் வெளி இயற்கையிலிருந்து ஆராய்ச்சியை ஆரம்பித்து , அத்வைதத்தின் முடிவுக்குத்தான் வந்து கொண்டிருக்கின்றனர்.

மனத்தின் மூலம் தேடுவதால் கடைசியில் அந்த ஒரே பரம்பொருள் தத்துவத்தை நாம் உணர்கிறோம். 

அந்த பரம்பொருள் ஆத்மாவிற்கு ஆத்மாவாகவும், எல்லாவற்றிற்கும் உட்பொருளாகவும், மெய்ப்பொருளாகவும், சச்சிதானந்த சொரூபமாகவும் இருக்கிறது.

எல்லாமாகவும் இருக்கும் அந்த ஒரே¢ பரம்பொருளைப்பற்றித்தான் அத்வைதம் போதிக்கிறது. 

‘ஆன்மிக முன்னேற்றம் அடையுங்கள், உண்மைத் தன்மையை உணர்ந்து அதனுடன் இரண்டறக் கலந்து ஒன்றி விடுங்கள்’ என்று கூறுகிறது.   

‘வேதாளமே, சிறிது ஓய்வுக்குப்பின் தொடர்ந்து விவேகானந்தர் கூறியுள்ள கருத்துக்களை பார்ப்போம்’

வேதியன் கூறி முடித்ததும் அவனிடமிருந்து விடுபட்ட வேதாளம் அருகிலிருந்த மரத்தின் கிளையைப்பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 

soundarya lahari in tamilஇந்த சௌந்தர்ய லஹரீ பாடல்கள் கைலாய மலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்தாக ஒரு தகவல் சொல்கிறது. இதை மேருமலையில் புஷ்பதந்தர் என்பவர் எழுதி வைததார் என்றும், அதைப் படித்த கௌடபாதர் என்ற முனிவர்  ஸ்ரீஆதிசங்கருக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

லிங்கபுராணத்தில் விநாயகர் துதியில், சௌந்தர்ய லஹரீ, மாகமேருமலையில் விநாயகப் பெருமானால் எழுபட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு கதை.

   ஸ்ரீ ஆதிசங்கரர் கைலாயம் சென்றிருந்தபோது சிவபெருமானிடமிருந்து இந்த ஸௌந்தர்ய லஹரீ பாடல்களை பெற்று வந்ததாகவும், வரும் வழியில் நந்திதேவர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம் பாடல்களின் ஒரு பகுதியைப் பிடுங்கிக் கொள்ள எஞ்சிய முதல் பாகத்தில்  41 செய்யுட்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆதிசங்கரர்  சிவபெருமானிடம் வேண்ட, எஞ்சியவற்றை நீயே பாடிக்கொள் என்று சிவபெருமான் கூற, 59 பாக்களை  ஆதிசங்கரரே பாடி முழுமையான நூலாக்கினார்  என்று கூறப்படுகிறது. 

எப்படி இருப்பினும் இதை பாடி நூலாய் தொகுத்தவர் ஆதிசங்கரபெருமானே என்பதை எல்லோரும் பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர். 

தேவி ஸ்தோத்திரங்களில் தலை சிறந்த ஸ்தோத்திரமாக கருதப்படுகிறது ஸௌந்தர்ய லஹரீ.  நமஸ்கரித்தல், ஆசி கூறுதல், சித்தாந்தை எடுத்துரைத்தல், பராக்கிரமத்தைப் புகழ்தல், பெருமைகளை விளக்குதல், பிரார்த்தனை செய்தல்  என்ற அறுவகைப்பட்ட அனைத்து லக்ஷணங்களும் ஸௌந்தர்ய லஹரியில் உள்ளன.

 1. ஆனந்த லஹரீ
             
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதிசக்த: ப்ரபவிதும்
நசேதேவம் தேவோ நகலு குசல: ஸ்பந்திதிது- மபி
அதஸ்-த்வா மாராத்தயாம் ஹரிஹர-விரிஞச்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத- புண்ய : ப்ரபவதி

பலன்: சுபம், கார்ய ஸித்தி 

கருத்து: சிவன் உலகைப் படைக்கிறார். அதற்கான திறமை அவருக்கு வேண்டும். அவர் சக்தியுடன் சேர்ந்திருப்பதாலேயே அத்திறமை அவருக்கு கைவருகிறது. திருமால், சிவன், பிரம்மா இம்மூவர்களாலும் ஆராதிக்கப்படுகிற உன்னை வணங்கவோ, துதிக்கவோ புண்ணிம் செய்திருந்தால் மட்டுமே முடியும்.

யந்திரம்- ஸ்ரீசக்ரம், மாமேரு. தினமும் 1001 முறை 12 நாட்கள். கிழக்கு முகமாக இருந்து ஜபிக்க வேண்டும். சிவப்பு மலர்கள்- நைவேத்யம்- வெல்லம் நெய்கலவை, அன்னம்.

2.  பாத தூளி மகிமை

தனீயாம்ஸம் பாம்ஸும் தவசரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகோ- னவிகலம்
வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப்ஜதி பஸிதோத்தூளன விதிம்.

பலன்: உலகம் உன் வசம்

கருத்து: பிரம்மா உன் திருவடித் தாமரை தூசுகளிலிருந்து சிறு அணு கிடைக்கப்பெற்று அதைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார். அப்படிப் படைக்கப்பட்ட உலகினை ஆதிசேஷனும்( விஷ்ணுவும்) தன் ஆயிரம் தலைகளால் தாங்கிநிற்கிறார். சிவனும் அத்துளிகளையே விபூதியாக அணிந்து கொள்கிறார்.

யந்திரம்- ஸ்ரீசக்ரம்/மகாமேரு.  பாராயணம் தினம் 1000 முறை, 45 தினங்கள். வடக்குமுகம் அமர்ந்து, குங்கும அர்ச்சனை. நைவேத்யம், தேங்காய் பழம், பால் பாயாசம்.

3. முக்தி தரும் பாதக் கமலம்

அவித்யானா- மந்தஸ்திமிர- மிஹிர- த்வீபநகரீ
ஜடானாம் சைதன்ய- ஸ்தபக- மகரந்த- ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி- குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு -வராஹடஸய பவதி

பலன்: சகல கலையும் அமையும்

கருத்து:  உன் பாதத்தூளி, அறிவிலிகளின் மன  இருளை அகற்றும் சூரியத்தீவின் நகரம் போல் ஒளிபொருந்தியது. மூடர்களுக்கு, கற்பகத் தருவிலிருந்து வழிகின்ற  அறிவெனும் தேன் போன்றது.  

ஏழைகளுக்கு நினைத்தை கொடுக்கவல்ல சிந்தாமணி  இரத்தினமாகவும், பிறவிக் கடலில் மூழகிக்கிடப்பவர்களுக்கு, பூமியை கடலிலிருந்து மீட்டு வந்த விஷ்ணுவின் வராக அவதாரத்தின் கோரைப்பற்களைப் போன்றதாகவும் இருக்கிறது. 

யந்திரம் ஸ்ரீ சக்ரம்/ மகாமேரு.தினமும்1008முறை, 45 நாட்கள்.வடகிழக்கு முகமாய் அமர்ந்து, வெள்ளைமலர்கள்.  நைவேத்யம்  உளுந்து வடை, தேன்  அன்னம், வெற்றிலை பாக்கு.

4.பாத கமலங்களின் அளவற்ற சக்தி.

த்வ- தன்ய: பாணிப்ப்யா- மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித- வராபீத்ய பிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபிச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானம்  தவ ஹி சரணாவேவ நிபுணௌ

பலன்: பயநிவர்த்தி ரோக நிவர்த்தி

கருத்து: மற்ற தேவர்கள் தங்களது இருகரங்களால் பக்தர்களுக்கு அபய வரமளிக்கின்றனர். நீ  அவ்வாறு செய்யாமல் அவர்களை காத்துக் கருணைப் புரிகிறாய்.  பக்தர்களின் வேண்டுதல்களுக்கு மேலாகவே பலனை அளிக்கிறாய். உன்னுடைய பாதங்களே பயத்திலிருந்து காக்கவும், வேண்டியதை வழங்கவும் செய்ய வல்லது.

யந்திரம் ஸ்ரீசக்ரம்/மகாமேரு. தினசரி 1000முறை.36 நாட்கள் வடகிழக்கு முகமாய் அமர்ந்து. குங்கும அர்ச்சனை. நைவேத்யம்- கரும்பு துண்டுகள், எலுமிச்சை பழச்சாறு பால், அன்னம்.
        
5.தேவி பூஜையின் மகிமை

ஹரீஸ்-த்வா- மாராத்த்யா ஜன ஸௌபாக்ய- ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப- மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன- லேஹ்யேன வபுஷா
முனீன- மப்- யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

பலன்: குடும்ப ஒற்றுமை நிலவும், ¢கணவனின் அன்பு பெருகும்

கருத்து:  துதிக்கும் பக்தர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் தந்தருளும் தேவியே, மகாவிஷ்ணு உன்னைத் துதித்து, மோகினி வடிவத்தை எடுத்து ,  சிவனையே மனம் மயங்கச் செய்தார். 

உன்னைத்  துதித்த மன்மதன் ரதியின் கண்களுக்கு மட்டும் அழகிய வடிவுடன் காட்சியளிக்கிறான். அருந்தவ முனிவர்களின் மனங்களையும் மயங்க வைக்கும் சக்திப் பெற்றுத் திகழ்கிறான்.

யந்திரம் ஸ்ரீசக்கரம்/மகாமேரு . படத்தில் உள்ள யந்திரம் செய்து கையில் கட்டிக் கொள்ள வேண்டும். தினசரி 2000 முறை 30 நாட்கள் ஐபம். கிழக்கு முகமாய் அமர்ந்து.  சிவப்பு மலர்கள், நைவேத்யம்- பாசிபருப்பு பொங்கல்  
                                                                                                                              
                                                                                                                                 தொடரும் ...


Sunday, 16 August 2015

ருத்ராட்சம் உருவான கதை.

தாரகாசுரனைத் தெரியுமா?

முருக வதத்தில் முக்கிய கதாபாத்திரம். போர் முனையில் வேர் அறுந்த மரம் போல் விழுந்த பிறகு, அவன் வம்சத்தில் வந்த அம்சங்களே தாரகாஷன், கமலாஷன், விதியுன்மாலி.

மூவரும், அப்பன் அழிவுக்குக் காரணமானவர்களை எப்போது அழிப்பது என யோசிக்கலானார்கள்.

விளைவு!  கடுந்தவம்!
யாரை நோக்கி?

பிரம்மாவை நோக்கி!

ஒற்றைக்காலில் நின்னு, காற்றையே உணவாக தின்னு கடுந்தவம். வருடங்கள் பல கடந்தது.

மெய்வருத்தி செய்த தவத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. நான்முகன் பிரம்மா, வான் மார்க்கத்தைக் கடந்து இவர்கள் முன் ஆஜரானார். 

“குழந்தைகளே உங்கள் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும்?”

“ஐயனே, நரை, திரை, மூப்பில்லாத வாழ்வு, அதுவும் மரணமில்லா பெருவாழ்வு தர வேண்டும்.”

“குழந்தைகளே பிறப்பெய்த அனைத்து உயிரினத்திற்கும் இறப்பு என்பது உண்டு. அது மாற்றமில்லாதது. அதனால் அவ்வரத்தை என்னால் அளிக்க முடியாது. வேறு வரம் கேளுங்கள்.”

“ஒப்பில்லா உயர்வைப் பெற்றவரே, எமை பெற்றவரே, எங்கள் மூவருக்கும் மூன்று கோட்டைகள் வேண்டும். எண்ணிய கணமே விண்ணில் பறக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். அவை ஒன்றாக இணையும் போது ஆயிரம் வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 

“ஒரு வேளை எங்களுக்குக் காலன் வரும் காலமாக இருந்தால் அப்போது ஒப்பில்லா சக்தி பெற்ற ஒருவரால்தான் எங்களுக்கு மரணம் வேண்டும். இதுதான் எங்களுக்குத் தேவை.”

“சரி... தந்தோம் வரம். உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், இருப்பிடமான கோட்டைகளை நிர்மாணிக்கவும் அசுரர் குல சிற்பியான மயனை அனுப்பி வைக்கிறேன். 

“அவர் தங்கத்தாலான கோட்டை, வெள்ளியிலான கோட்டை, இரும்பு கோட்டை என முறையே மூன்று கோட்டைகளை உருவாக்கித் தருவார். அதில் அமர்ந்து அரசாட்சி செய்யலாம்” என வரத்தைத் தந்துவிட்டு வானுலகம் திரும்பினார் பிரம்மா.

மயனின் கை வண்ணத்தில் கோட்டைகள் உருவானது. அப்புறம் என்ன? சேட்டைகள் அரங்கேறியது. குறிப்பாக தேவர்கள் ஜாதகத்தில் எல்லாம் ஒரே சமயத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி என்று ஒட்டுமொத்த சனியின் பார்வை பட்ட மாதிரி கெட்ட காலம் கிட்டே வந்தது.

தேவர்கள் முதலில் செய்வதறியாது திகைத்தார்கள். சாகா வரம் பெற்றிருந்தும், சாவின் விளிம்புவரை சென்று திரும்பினார்கள். அல்லலுறும் வாழ்க்கைக்கு அறவே பழக்கப்படாத தேவர்களுக்கு, அரக்கர் அணியை அழிப்பதற்கான யுக்தி என்ன என்று திட்டம் தீட்டினார்கள்.

அது மூவர்களில் ஒருவரான முக்கண்ணன், சிவபெருமானே சிறந்தவர். அவரால்தான் மூவர் அணியின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என எண்ணினார்கள்.

எண்ணம் முடிவானது, முடிவு செயலானது. நேராக கைலாய பயணம். நிஷ்டையில் இருந்த சிவனுக்கு முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள். தாங்கள் வந்ததின் நோக்கத்தைச் சொன்னார்கள்.

நித்திரை கலைந்த சிவன் சித்திரை மாதத்து வெயில் மாதிரி சூடானார். தீமைகளை அழிப்பதும், தீயவர்களை ஒழிப்பதும், இறையருளின் ஒரு கடமை என்பதை உணர்ந்தார்.

அதோடு அரக்கர்களின் அழிவுக்கான அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்பதும் அவருக்குத் தெரியும். 

அரக்கர்கள் யார்? பலம் பெற்றவர்கள் என்பது இருக்கட்டும், வரம் பெற்றவர்கள். வரம் பெறும் வரலாற்றை ஆராய்ந்தால், சாகா வரத்திற்குச் சமமாக வரத்தைப் பெற்றிருப்பார்கள். அதனால் பலம் பெற்ற அரக்கர்களை வதம் செய்ய முறையான ஆயுத பிரயோகமே சிறந்தது என நினைத்தார்.

உடன் தியானத்தில் ஆழ்ந்தார். 

அதுவும் எப்படி? 

கண்களை மூடாமல் உற்று நோக்கியபடியே.

எத்தனை ஆண்டுகள்?

ஆயிரம் ஆண்டுகள்.

தியானத்தின் இறுதியில் உருவானதுதான் அகோராஸ்திரம். 

அதன் பின்புதான் அரக்கர்களின் அழிவுக்கு வித்திட்டது என்பது புராணக் கதை. ஆனால், அப்படி ஆயிரம் ஆண்டுகள் தவத்தின் பலனால் சிவனின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த் துளிதான் ருத்ராட்ச மரங்களுக்கு வித்திட்டது.

மூன்று கண்ணில் இருந்து மூன்று துளி கண்ணீர். இதுதான் ருத்ராட்சம் உருவான கதை.

alangudi guru

ஓம் ப்ரும் பிரகஸ்பதையே நமஹா  

Sunday, 2 August 2015

whatsapp vedio

abdul kalam

whatsapp vedio