குழந்தைக்கு ஒரு வயதாச்சு, காது குத்தனும். எதுக்கும் மாமனை ஒரு வார்த்தை கேட்கனும் என்கிறார் தகப்பனார்.
ஏம்பா... பொண்ணு பெரிய மனுஷியாயிட்டா. மாமனுக்கு சொல்லி அனுப்பியாச்சா? என்று பெற்றோரை கேட்கிறார் இன்னொருவர்.
பொண்ணு ஜாதகம் கொடுக்கனும்னா, மாமன் கையாலே கொடுக்கிறதுதானே முறை என்று தயங்குகிறார் பெண்ணைப் பெற்றவர். இப்படி வாழ்க்கையின் ஒவ்வொறு சுபநிகழ்வுகளிலும் முக்கிய பாத்திரமாக திகழும் உறவுதான் தாய்மாமன். தமிழர் பண்பாட்டில் தனித்துவமான உறவு.
ஒரு குழந்தை பிறந்து தொட்டிலில் இடுவதில் துவங்கி, திருமணம் வரை முக்கியத்துவம் பெறுகிறது. எத்தனை உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளிலும் மேன்மையாக மதிக்கப்படுவதுதான் இந்த உறவு.
அம்மாவின் தம்பி என்றோ, அம்மாவின் அண்ணன் என்றோ அந்நியப்பட்டுப் போகாமல், பாசம் காட்டுவதில், நேசத்தை வெளிப்படுத்துவதில், அன்பை உணர்த்துவதில், அரவணைத்துச் செல்வதில் அம்மாவின் ஆண் வடிவமாக திகழ்பவர்தான் தாய்மாமன்.
காலமாற்றம், நாகரீக முதிர்ச்சியின் காரணமாக முக்கியத்தவம் குறைகிற மாதிரி தோன்றினாலும், பழமை இன்னும் மாறவில்லை என்பதுதான் உண்மை.
தொட்டிலிடுதல், காது குத்துதல், பெண் குழந்தைகளுக்கு பூப்புச் சடங்கு, பட்டம் கட்டுதல் என பல்வேறு சங்குகளில் தாய்மாமனின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டே வருகிறது.
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார், என்று தேனிசை நம் காதில் விழக் கேட்டிருப்போம்.
தொட்டிலில் படுத்துறங்கும் குழந்தைக்கு மாமனின் உறவை சொல்லும் விதமாக அமைந்த இந்த பாடல் வரிகள் இது. தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி வைரமுத்து வரிகளில் ஓங்கி ஒலிப்பதும் மாமன் உறவின் மகிமைதான்.
குழந்தைகள் தந்தையிடம் கூட மரியாதையாக பேச வேண்டிய நிர்பந்தம் உண்டு. ஆனால் மாமாவிடம் பேசும் போது ஒறுமையில் வா... போ.. என்று செல்லமாக பேசும் உரிமை கொண்ட உறவு.
தாயின் அரவணைப்பு வீட்டிற்குள் என்றால் ...வீட்டிற்கு வெளியே சென்று வேடிக்கை காட்டி சந்தோசப்படுத்தி அரவனைக்கும் உறவு
தொட்டிலிடுதல்இன்றும் கூட இது நடைமுறையில் உள்ளது.
குழந்தைப் பிறந்ததும் யார்யார் வந்தார்கள், பார்த்தார்கள் என்பதை விட, மாமன் வந்து விட்டாரா என்று கேட்பது வழக்கம். காரணம் இல்லாமல் இல்லை. குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் இருப்பதால்தான். இது மாறாத சடங்கு.
காது குத்துதல்
குழந்தைகளுக்கு அதிகப்பட்சம் ஐந்து வயதிற்குள்ளாக காது குத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. காது குத்துதல் என்பது அக்குபஞ்சர் சிகிச்சை முறையின் ஓர் வடிவம்தான். ஆனாலும் காதுகளில் ஆபரணங்களை அணிந்து கொள்வதற்காகவும் நடைமுறையில் உள்ளது.
காது குத்தும் குழந்தையை தாய்மாமன் மடியில் அமரவைத்து தான் காது குத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் காது குத்துதல் என்பது பாரம்பர்ய பழக்கம்.
பூப்புச் சடங்கு
நம்நாட்டில் இப்பழக்கங்கள் மறைந்திருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். தமிழகத்தில் இன்னும் மாறாமல் இருக்கும் பழக்கமிது. பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால், முதல் செய்தி தாய் மாமனுக்குத்தான் போகும். தாய்மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டுவது வழக்கம்.
சீர் செய்தல் என்பது பெரும் செலவினங்களை இழுத்து வந்து நிறுத்தினாலும், இந்த உரிமையை விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இருப்பதில்லை.
நவீன யுகத்தில் வேண்டாம் என்று பெண் வீட்டார் விலகிச் சென்றாலும் மாமனும், மாமம் வீட்டாரும் இதை கௌரவ பிரச்சனையாக கையாள்வதை பார்க்க முடியும். உரிமையை நிலை நாட்டுவதற்காக பெரிய விவாதங்களும், பூசல்களும், சண்டைகளும் கூட நடந்திருக்கின்றன.
மாமன் பட்டம்
உடன் பிறந்த சகோதரிகளின் பெண்குழந்தைகள் தாய்மாமனுக்கு முறைப் பெண்களாக வருகிறார்கள். திருமணம் செய்யும் முதல் உரிமை பெற்றவர் என்று பொருள்.
வயது வித்தியாசம் அல்லது வேறு ஏதோ காரணங்களால், திருமணம் செய்வது தடைப்பட்டுப் போனாலும், வேண்டாம் என்று விலக்கி விட்டாலும் கூட, இந்த உரிமையை விட்டுக் கொடுக்கும் ஒரு சடங்குதான் மாமன் பட்டம்.
திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது மணம் செய்ய மற்றவருக்கு உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சம்பிரதாயம். இத்துடன் முடிந்து விடவில்லை தாய்மாமன் உறவு. திருமணமாகி குழந்தை பிறந்தால் மீண்டும் துவக்கமாகிறது தாய்மாமன் உறவு.
No comments:
Post a Comment