ads

Thursday, 19 April 2018

தசப் பொருத்தம் என்றால் என்ன?




திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப்படுகிறது என்பார்கள்.  இன்னாருக்கு இன்னார் என்று பிறக்கும்போதே பிரம்மன் எழுதி விடுகிறான்.  அது யாரென்று தேடிக் கண்டுபிடிப்பது மட்டும்தான் நம்வேலை. 

இன்னமும் ஜோதிடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே திருமணங்கள் செய்யப்படுகிறது.  ஒன்னிரண்டு திருமணங்கள் காதலின் பெயரால், நம்பிக்கை குறைவின் பெயரால் பொருத்தம் பார்ப்பதை தவிர்த்து விட்டு போனாலும் மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் திருமணப் பொருத்தம் பார்க்கப் போகும்போது ஜோதிடர்கள் சொல்லும் பத்து பொருத்தங்கள் என்ன என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

1. தினப் பொருத்தம் : 

இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : 

இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : 

திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : 

இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : 

இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : 

இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : 

குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : 

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : 

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : 

திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக-துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். 

Tuesday, 20 February 2018

தாய் மாமன்


குழந்தைக்கு ஒரு வயதாச்சு, காது குத்தனும். எதுக்கும் மாமனை ஒரு வார்த்தை கேட்கனும் என்கிறார் தகப்பனார்.  
   
ஏம்பா... பொண்ணு பெரிய மனுஷியாயிட்டா.  மாமனுக்கு சொல்லி அனுப்பியாச்சா? என்று பெற்றோரை கேட்கிறார் இன்னொருவர்.

பொண்ணு ஜாதகம் கொடுக்கனும்னா, மாமன் கையாலே கொடுக்கிறதுதானே முறை என்று தயங்குகிறார் பெண்ணைப் பெற்றவர்.  இப்படி வாழ்க்கையின் ஒவ்வொறு சுபநிகழ்வுகளிலும் முக்கிய பாத்திரமாக திகழும் உறவுதான் தாய்மாமன். தமிழர் பண்பாட்டில் தனித்துவமான உறவு.  

ஒரு குழந்தை பிறந்து தொட்டிலில் இடுவதில் துவங்கி, திருமணம் வரை முக்கியத்துவம் பெறுகிறது.  எத்தனை உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளிலும் மேன்மையாக மதிக்கப்படுவதுதான் இந்த உறவு. 

அம்மாவின் தம்பி என்றோ, அம்மாவின் அண்ணன் என்றோ அந்நியப்பட்டுப் போகாமல், பாசம் காட்டுவதில், நேசத்தை வெளிப்படுத்துவதில், அன்பை உணர்த்துவதில், அரவணைத்துச் செல்வதில் அம்மாவின் ஆண் வடிவமாக திகழ்பவர்தான் தாய்மாமன்.  

காலமாற்றம், நாகரீக முதிர்ச்சியின் காரணமாக முக்கியத்தவம் குறைகிற மாதிரி தோன்றினாலும், பழமை இன்னும் மாறவில்லை என்பதுதான் உண்மை. 

தொட்டிலிடுதல், காது குத்துதல், பெண் குழந்தைகளுக்கு பூப்புச் சடங்கு, பட்டம் கட்டுதல் என பல்வேறு சங்குகளில் தாய்மாமனின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டே வருகிறது.

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார், என்று தேனிசை நம் காதில் விழக் கேட்டிருப்போம்.

தொட்டிலில் படுத்துறங்கும் குழந்தைக்கு மாமனின் உறவை சொல்லும் விதமாக அமைந்த இந்த பாடல் வரிகள் இது.   தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி வைரமுத்து வரிகளில் ஓங்கி ஒலிப்பதும் மாமன் உறவின் மகிமைதான்.

குழந்தைகள் தந்தையிடம் கூட மரியாதையாக பேச வேண்டிய நிர்பந்தம் உண்டு. ஆனால் மாமாவிடம் பேசும் போது ஒறுமையில் வா... போ.. என்று செல்லமாக பேசும் உரிமை கொண்ட உறவு.  

தாயின் அரவணைப்பு வீட்டிற்குள் என்றால் ...வீட்டிற்கு வெளியே சென்று வேடிக்கை காட்டி சந்தோசப்படுத்தி அரவனைக்கும் உறவு
தொட்டிலிடுதல்இன்றும் கூட இது நடைமுறையில் உள்ளது.  

குழந்தைப் பிறந்ததும் யார்யார் வந்தார்கள், பார்த்தார்கள் என்பதை விட, மாமன் வந்து விட்டாரா என்று கேட்பது வழக்கம்.  காரணம் இல்லாமல் இல்லை.  குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் இருப்பதால்தான்.  இது மாறாத சடங்கு.

காது குத்துதல்

குழந்தைகளுக்கு அதிகப்பட்சம் ஐந்து வயதிற்குள்ளாக காது குத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.  காது குத்துதல் என்பது அக்குபஞ்சர் சிகிச்சை முறையின் ஓர் வடிவம்தான்.  ஆனாலும் காதுகளில் ஆபரணங்களை அணிந்து கொள்வதற்காகவும் நடைமுறையில் உள்ளது. 

காது குத்தும் குழந்தையை தாய்மாமன் மடியில் அமரவைத்து தான் காது குத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.  அது ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் காது குத்துதல் என்பது பாரம்பர்ய பழக்கம்.

பூப்புச் சடங்கு

நம்நாட்டில் இப்பழக்கங்கள் மறைந்திருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம்.  தமிழகத்தில் இன்னும் மாறாமல் இருக்கும் பழக்கமிது.  பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால், முதல் செய்தி தாய் மாமனுக்குத்தான் போகும்.  தாய்மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டுவது வழக்கம்.  

சீர் செய்தல் என்பது பெரும் செலவினங்களை இழுத்து வந்து நிறுத்தினாலும், இந்த உரிமையை விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இருப்பதில்லை.  

நவீன யுகத்தில் வேண்டாம் என்று பெண் வீட்டார் விலகிச் சென்றாலும்  மாமனும், மாமம் வீட்டாரும் இதை கௌரவ பிரச்சனையாக கையாள்வதை பார்க்க முடியும்.  உரிமையை நிலை நாட்டுவதற்காக பெரிய விவாதங்களும், பூசல்களும், சண்டைகளும் கூட நடந்திருக்கின்றன.

மாமன் பட்டம்

உடன் பிறந்த சகோதரிகளின் பெண்குழந்தைகள் தாய்மாமனுக்கு முறைப் பெண்களாக வருகிறார்கள்.  திருமணம் செய்யும் முதல் உரிமை பெற்றவர் என்று பொருள்.  

வயது வித்தியாசம் அல்லது வேறு ஏதோ காரணங்களால், திருமணம் செய்வது தடைப்பட்டுப் போனாலும், வேண்டாம் என்று விலக்கி விட்டாலும் கூட, இந்த உரிமையை விட்டுக் கொடுக்கும் ஒரு சடங்குதான் மாமன் பட்டம்.

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது மணம் செய்ய மற்றவருக்கு உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சம்பிரதாயம்.  இத்துடன் முடிந்து விடவில்லை தாய்மாமன் உறவு.  திருமணமாகி குழந்தை பிறந்தால் மீண்டும் துவக்கமாகிறது தாய்மாமன் உறவு.

Sunday, 18 February 2018

ரோகிணி நட்சத்திரப் பலன்கள் | Rohini Natchatra Palangal


இருப்தேழு நட்சத்திரங்களில் அசுவனி பரணி கார்த்திகைக்கு அடுத்து நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரம். இதன் அதிபதி சந்திர பகவான். சந்திரன் ஜோதிடத்தில் பெண் கிரகமாக இருந்தாலும் அவரின் ஆளுமைக்க உட்பட்ட ரோகினி ஆண் நட்சத்திரம்.

தோஷ நட்சத்திர வரிசையில் முதலிடத்தை ரோகிணி பெறுகிறது.  தாய்க்கும், தாய்மாமனுக்கும் ஆகாத நட்சத்திரம் என்பார்கள். ரோகிணியில் ஆண் பிறந்தால் தாய்மாமனுக்கு அதிர்ஷ்டம் அளிப்பதையும், ரோகிணியில் பெண் பிறந்தால் தாய் மாமன் அதிக அளவில் அந்த பெண்ணுக்கு ஒத்தாசையாக இருப்பதையும் அனுபவத்தில் பார்க்க முடிகிறது.

எனது குருநாதர் சொல்லிக் கொடுத்த பரிகார முறையை இங்கே தருகிறேன்.  ரோகிணியில் ஆணோ பெண்ணோ பிறந்தால் தாய்மாமன் அந்த குழந்தையை முதலில் நேரடியாக பார்க்கக் கூடாது.  மாறாக குழந்தைக்கு அறைதீட்டு கழித்த பிறகு, சாஸ்திரபடி 11ம் நாள், பல இடங்களில் 16நாட்கள் கழித்து, பிரசவ தீட்டு கழிப்பார்கள். 

அப்படி தீட்டு கழித்தபிறகு  ஒரு மண் சட்டி அல்லது இரும்பு எண்ணெய் சட்டியில் நெய், நல்லெண்ணை, விளக்கெண்ணை மூன்றையும் கலந்து எண்ணை சட்டியில் ஊற்ற வேண்டும்.

  முன்னதாக பொற்கொல்லரிடம் சொல்லி வெள்ளிக் கம்பி அடித்து வாங்கிக் கொள்ள வேண்டும்.  வெள்ளிக் கம்பியின் ஒரு முனையை எண்ணை சட்டியில் கட்டி, மறு முனையை குழந்தையின் இடுப்பை சுற்றி கட்டுவார்கள்.  பின்னர் குழந்தையை கையில் தூக்கி எண்ணையில் முகம் தெரிகிற மாதிரி காட்ட வேண்டும்.

  தாய்மாமன் குழந்தையின் முகத்தை எண்ணையில்தான் முதலில் பார்க்க வேண்டும் அவ்வாறு பார்த்தால் நட்சத்திர தோஷம் விலகிவிடும் என்பார்கள். 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகள். சுதந்திர பிரியர்கள். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்கள்.  அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்காதவர்கள்.  பிடிவாதக்காரகள். தாங்கள் நினைத்ததை அடையும் வரை போராடுவார்கள். 

இளகிய குணம் படைத்தவராக இருந்தாலும், தங்களுக்கு எதிரானவர்களிடம் இரக்கம் காட்டுவதில்லை. எந்த காரியத்தை செய்தாலும் திருத்தமாக செய்வார்கள். முற்றும் செய்யக் கற்றவர்கள். மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள்.

விரும்பியவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள். விரும்பாதவரை கடைசிவரை ஒதுக்கித் தள்ளுவார்கள். தாய் வழி நன்மைகள் அதிகம். சிற்றின்ப பிரியர்கள்.  எண்ணியதை பெற இயன்றவரை போராடுவார்கள.

சில சமயம் தங்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளுவார்கள்.  பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. இரக்கம் குணம் உள்ளவர்கள். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காதவர்கள்.   

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.


நட்சத்திர அதிதேவதை            -: பிரம்மா
பரிகார தெய்வம்                -: அம்மன்
நட்சத்திர கணம்(குணம்)        :- மனுஷகணம்
விருட்சம்                                -: நாவல்
மிருகம்                               -: நல்ல பாம்பு
பட்சி                                       -: ஆந்தை
கோத்திரம்                                :- ஆங்கரீசர்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ,வ,வி, வு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வா, வீ ஆகியவை.

உஷாரம்மா உஷாறு... சக்கரை நோயி உஷாறு!

ஒரு காலத்தில் பணக்காரர்களின் வியாதியாக பார்க்கப்பட்டது.  அப்படியெல்லாம் இல்லை... எனக்கு பாமரனும் ஒகே என்று மூட்டை முடிச்சுகளோடு சமானியர்கள் பக்கமும் குடிவந்து விட்டது சக்கரை நோய்.  

இன்று  உலகையே உருட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. நாற்பதை தொட்டு விட்டாலே வந்து விடலாம் என்று ஆரூடம் சொல்கிற அளவிற்குத்தான் இருக்கிறது.

உலகம் முழுவதிலும் சுமார் 20 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2025ம் ஆண்டுவாக்கில் இது இரண்டு மடங்காக உயரக்கூடும். அதிலும் குறிப்பாக, மூன்றாவது உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் அதிர்ச்சிகரமான புள்ளிவிபரத்தை தருகிறது.  

மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் நோயாக மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி, கிடுகிடு வளர்ச்சி என்று எல்லா வளர்ச்சியும் பெற்றுள்ளது. உணவு பழக்கம், சுற்றுசூழல், மரபு வழி, பயன்படுத்தும் பொருட்கள் என்று ஒருவருக்கு நோய் தோன்ற பல காரணங்கள் இருக்கலாம். 

சக்கரை வியாதி வர இரண்டே காரணங்கள்தான் இருக்கின்றன என்கிறது ஆய்வுகள்.  அதாவது திட்டமிடாத உணவுப்பழக்கம், மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கிற தூங்கும் நேரம் இவையிரண்டும் ஒருவருக்கு இருந்தால் கண்டிப்பாக சக்கரை வியாதி வந்துவிடுமாம்.

முதலில் உணவு.  நாம் உண்ணும் உணவில் புரதம் என்னும் மாவுசத்து, விட்டமின்கள், கொழுப்பு முதலான சத்துக்கள் அடங்கியுள்ளன.  
நாம் உணவை உட்கொண்டவுடன், மறுபடியும் வேலை வந்துடுச்சா என்று சோம்பல் முறித்துக் கொண்டு செரிமான உறுப்புகள் செயல்பட தொடங்குகின்றன. திருப்பதி உண்டியலில் நாணயத்தை பிரிப்பதை போல் புரதம், விட்டமின்கள், கொழுப்பு என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு, உடற் செல்கள் உற்சாகமாக செயல்பட அனுப்பி வைக்கப்படுகிறது. 

 அதை அவ்வப்போது ஒரு ரவுண்ட் ஏற்றிக் கொண்டுதான் கோடிக்கணக்கான செல்கள் வளர்கின்றன, செயல்படுகின்றன.  இந்த குளுக்கோஸ் புரதம் என்கிற மாவுசத்தில் இருந்துதான் பெறப்படுகிறது.  அதாவது குளுக்கோஸின் மூலப்பொருள் புரதம்.  மற்ற விட்டமின்கள், கொழுப்புப் பொருட்கள் இரத்தம் மூலம் பரவி வரும்போது எந்த உறுப்புக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளும்.

இச்செயலானது எந்த தடையும் இல்லாமல் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.  திடீரென குளுக்கோஸ் உற்பத்தி அதிகரித்து, அதை அதை உடல் செல்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு பெயர்தான் சர்க்கரை நோய்.

சக்கரை நோய் வருவதற்கு நேரம் தவறி உண்பது, கண்ட நேரத்திலும் எதையாவது கொறித்துக் கொண்டிருப்பது, அளவுக்கு அதிகமாக திண்பது என்று பல காரணங்கள் இருக்கிறது.

அடுத்து தூக்கம்.  என்றோ ஒருநாள் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு சினிமா பார்க்கலாம், ஊர் சுற்றலாம், நண்பர்களோடு கதையடிக்கலாம் தவறில்லை.  ஆனால் இதையே தொடர் பழக்கமாக கொண்டு தூங்கும் நேரம் மாறிக் கொண்டிருந்தால் உடல் சுரபிகள் தாறுமாறாக செயல்பட்டு உடல் பருமன் அல்லது மெலிவு, சக்கரை வியாதி என்று எந்த பிரச்சனையாவது நம்மை சந்திக்கலாம் என்கிறார்கள் மருத்தவர்கள்.

இதை இன்னும் விளக்கமாக சொல்வதானால் உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந்தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே உணர்ந்து அதனால் தடுக்க முடியும். அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் செயல்கள் தடைபட்டு வேண்டாத விருந்தாளியாக நோய்கள் வந்து உள்ளேன் டீச்சர் என்று உட்கார்ந்து கொள்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவு  பகல் என்று மாறி மாறி வேலை செய்யும் போது சர்க்கரை நோய்  தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என  மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவுப் பணியில் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையால்  பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல் பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால்  இன்சுலின் ஹார் மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. தேநீர், காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில்  சாப்பிடுவதால் உடல்  எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

வருமுன் காப்போம் என்கிற அடிப்படையில் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.  வேலை நேரத்தால் ஏற்படும் தூக்கமின்மையை போக்க, அல்லது பகல் இரவு என்று மாறி மாறி தூங்கும் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும்.  அதற்கு தகுந்த மாதிரியான வேலைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

குறிப்பாக சக்கரை நோயாளிகள் ஒரே வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் இரவு பகல் என்று மாறி மாறி வேலை பார்க்கும் சூழல் அமைந்து விட்டால் கட்டாயம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிக்கு உகந்த நேரமாக காலையும், மாலையும் இருக்கிறது.  தினம் தோறும் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அதற்காக நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்து வந்தால், தீண்ட நினைக்கும் சக்கரை நோய்க்கு தடையுத்தரவு போட முடியும்.  


குறிப்பு:-

கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்யும் மாஸ்டர்கள் கவனத்திற்கு.  நானும் அட்சென்ஸ் அபபுருவலுக்காக காத்திருக்கிறேன். தேவையில்லாமல் இங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்தால், எந்த கருணையும் இல்லாமல் கூகுளுக்கு புகார் செய்வேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதற்கு முன் இந்த தளத்தில் இருந்து காப்பி செய்து போட்டிருப்பவர்கள், தங்கள் பதிவுகளை நீக்கிக் கொண்டால் நல்லது. 

இந்த தளத்தில் இருந்து மேட்டரை அப்படியே சுட்டு, வீடியோ போட்டிருக்கும் அதிபுத்திசாலிகளே... நீங்களும் விழித்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் என் தளத்தில் இருந்து கட்டுரைகளை சுட்டு வீடியோ போட்டிருக்கீங்க என்று எனக்கு தெரியும்.  

மேட்டர் டூ வீடியோ என்பதற்கு புகார் அளிக்க முடியுமா, இந்த அட்சென்ஸ் அப்புருவலுக்கு பிறகு என்று காத்திருக்கிறேன். முடியும் என்றால் எந்த தயக்கமும் இல்லாமல் புகார் அளிப்பேன். அப்புறம் எந்த சமாதத்திற்கும் நான் வரமாட்டேன். புத்திசாலியாக நடத்துக்கோங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது. 

Thursday, 15 February 2018

மேஷம்ராசி, ரிஷபம்ராசி கார்த்திகை நட்சத்திரப் பலன்கள் | Karthigai natchatra palangal

இதன் வீடியோ வடிவம் காண : https://youtu.be/22kdz95VTe8

கார்த்திகை மேஷ ராசியில் அமைந்த மூன்றாவது நட்சத்திரம். ரிஷபத்தில் உள்ள 2,3,4ம் பாதங்களையும் சேர்ந்தே பாக்கப்போகிறோம். 

சிலேத்தும நாடி நட்சத்திரம்.  ஒரு பாதம் மட்டும் இதில் இருக்கும்.  சூரியனின் நட்சத்திரம். பெண் நட்சத்திரம்.  கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகள்.  எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றல்மிக்கவர்கள்.  சுயகவுரவம் பார்ப்பவர்கள்.  

தாய்ப்பாசம் மிக்கவர்கள். சுயமுயற்சியல் வாழ்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.  பழமையில் நம்பிக்கை உண்டு.

சுறுசுறுப்பாக செயல்படுவார்கள், ஒளிவு மறைவில்லாமல் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. சூரியனின் ஆதிக்கம் பெற்றதாலோ என்னவோ முன் கோபமும் அதிகமிருக்கும்.  விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் குறைவாக இருக்கும். 

கறார் குணம் கொண்டவர்கள். ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்ய நினைப்பாகள். ஆசிரியர்கள், வக்கீல், மருத்துவ துறைகளில் இருப்பார்கள்.  இதயம் தொடர்பான நோய்கள் வரலாம், ஒற்றை தலைவலி உஷ்ண நோய்கள் வரலாம், கண்ணாடி அணியும் சூழல் வரலாம்.

கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களாக இருந்தால் உழைப்பாளிகள். முதல் பாதத்திற்கு சொல்லியதுபோல் காந்திய எளிமை எல்லாம் எடுபடாது. ஆடம்பரமாகவே இருக்க பிரியப்படுவார்கள். தன்னை அழகுப்படுத்தக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

கலைத்துறை நாட்டமிருக்கும். சிலர் அத்துறையில் புகழ் பெற்றவர்களாக திகழலாம். முன்யோசனை நிறைந்தவர்கள். முன் ஜாக்கிரதை உள்ளவர்கள்.  பொதுவாக இவர்களை வெல்வது கடினம்.  

அன்பானவர்களாக இருந்தாலும் தேவைப்பட்டால் கொட்டவும், குட்டவும் துணிந்தவர்கள்.  இவர்களிடம் வார்த்தைகளை அளந்து தான் விடனும். இல்லா விட்டால் வம்பை விலை கொடுத்து வாங்கியது போல் ஆகிவிடும்.

நட்சத்திர அதிதேவதை -: அக்னி
பரிகார தெய்வம் -: சிவன்
நட்சத்திர கணம்(குணம்)                          -:    ராட்சஸகணம்
விருட்சம் -: அத்தி
மிருகம் -: பெண் ஆடு
பட்சி -: மயில்
கோத்திரம் -: அத்திரி

கருப்பு கருநீலம், நீங்கலாக மற்ற நிறங்கள் பொருத்தனமானவை. ஜாதகத்தில் சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலோ, வேறு திசையில் சூரிய புக்தி நடப்பில் இருந்தாலே மாணிக்கம் பரிகார கல்லாக மாணிக்கம் அணியலாம்.

இந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், நட்சத்திரப்படி பெயர் வைப்பதாக இருந்தால் அ, இ, உ ,எ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகிய எழுத்துக்களில் பெயர் வைக்கலாம்.


மேஷ ராசி பரணி நட்சத்திர பலன்கள்

இதன் வீடியோ வடிவம் காண : https://youtu.be/iVm5Kq-M8L8

மேஷராசியில் அமைந்த இரண்டாவது நட்சத்திரம் இது. சுக்கிரனின் முதலாவது நட்சத்திரம்.  பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வாள்வார்கள் என்பழமொழி. 

இது ஒரு பெண் நட்சத்திரம். பித்த நாடி நட்சத்திரம்.  உண்மையில் பரணியில் பிறப்பவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை போராட்டமாகவும், வாலிபம் கடந்த பிறகு வசதியான வாழ்க்கை வாழ்வதையும் அனுபவத்தில் பார்க்க முடிகிறது. 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள். தங்கள் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக வெளியிடும் குணமிக்கவர்கள்.  மனசாட்சிக்கு விரோதமாக நடக்கமாட்டார்கள்.

ஆடம்பர பிரியம் அதிகம் இருக்கும்.  கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். எப்போதும் மற்றவர்களை வசீகரிக்கும் விதமாக பேசுவார்கள்.  நேசிப்பவர்களை மறப்பதில்லை. 

உயர் பதவிகளில் இருந்தாலும் அதிகார தோரணை இருக்காது. அதட்டல் உருட்டல் இருக்காது. அன்பால் பணிய வைப்பார்கள்.  

பொதுவாக இவர்கள் வாழ்க்கை வாலிபத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.  செல்வ செழிப்போடும், சீரும் சிறப்போடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.  தொப்புளில் எள் வடிவில் சிறு மச்சமிருக்குமாம். சக்கரை வியாதி வரலாம். 

நட்சத்திர அதிதேவதை -: துர்க்கை
பரிகார தெய்வம் -: துர்க்கை
நட்சத்திர கணம் -: மனுஷகணம்
விருட்சம்                 -: நெல்லி (பாலில்லா மரம் )
மிருகம்                -: ஆண் யானை
பட்சி                        -: காக்கை
கோத்திரம்       -: வசிஷ்டர்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்  லீ, லு, லே, லோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் சொ, சௌ ஆகியவை.

Tuesday, 13 February 2018

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்


இதன் வீடியோ வடிவம் காண : https://youtu.be/AGrzL8ncjw4

ராசி மண்டலத்தில் முதல் ராசி மேஷம். முதல் நட்சத்திரம் அசுவினி.  இதன் அதிபதி கேது. இது ஒரு ஆண் நட்சத்திரம். தாமஸ குணமுள்ள நட்சத்திரம். வாதநாடி நட்சத்திரம்.

அமைதியாக இருந்தாலும், தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  நினைத்த காரியத்தை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். பிடிவாத குணமிக்கவர்கள். அளவுக்கு அதிகமான துணிச்சலும் அசாத்திய தன்னம்பிக்கையும் தங்கள் சொத்தாக கொண்டவர்கள்.

சில சமயம் தங்கள் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு அதனால் பெரும் துன்பங்களை சந்திப்பதும் உண்டு.  வாலிப வயதில் வளம் பெறுவார்கள் என்பது ஜோதிட வாக்கு. இவர்களின் தனித்த யோகம் என்பது இருபத்து ஐந்து வயதில் இருந்து துவங்கும்.

அசுவினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம்.  கேது ஒரு ஆன்மீக கிரகமாக இருப்பதால்  இயற்கையாகவே இவர்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகம் இருக்கும்.  மருத்துவர்களை உருவாக்கும் நட்சத்திரமாக சொல்லப்படுகிறது. ஆளுமை திறன்மிக்க துறைகள்,

அறிவால் வழிநடத்தும் துறைகளில் அதிகம் பிரகாசிப்பார்கள். குடும்ப அமைப்பை பொறுத்தவரை உண்மையாக நேசிப்பவர்கள்.  சிக்கனவாதிகள். தாம்பூலப் பிரியர்கள். சிலருக்கு இடுப்பில் மச்சமிருக்கும்.  பொதுவாக சுறுசுறுப்பு குறைவாக இருக்கும். மூலம், முதுகு தண்டு பிரச்சனை, கைகால் வலி, ஒற்றை தலை வலி போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பது ஜோதிட குறிப்பு. 

நட்சத்திர அதிதேவதை -:  சரஸ்வதி
பரிகார தெய்வம்                        -: விநாயகர்
நட்சத்திர கணம் (குணம்)- -: தேவகணம்
விருட்சம்                                        -: எட்டி  (பாலில்லா மரம்)
மிருகம்                                           -:  ஆண் குதிரை
பட்சி                                                -:  ராஜாளி
கோத்திரம்                                    -:  அகத்தியர்

ராசியான நிறம் சிகப்பு. இளமஞ்சள், வெள்ளை நிறங்கள் இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,சே, சோ, ல ஆகியவை. தொடர் எழுத்துக்கள் செ சை முதலியவை ஆகும்.



Sunday, 11 February 2018

நீர் அருந்தா விட்டால் வரும் ஆபத்து




சருமத்தில் சுருக்கம், கன்னத்தில் வெடிப்பு, கருப்பு புள்ளிகள், தோல்சிவந்து காணப்படுதல், முட்டி, மூட்டு எலும்பு இணைப்புகளுக்கு உரிய இடத்தில் தோல் கருத்து, நிறம் மாறுதல் ஏற்படுகிறதா? அல்லது ஏற்பட்டு இருக்கிறதா? 

திடீரென நாக்கு உலந்து போச்சா, கடுமையான தாகத்தை உணர்றீங்களா? 

லேசாய மயக்கம் வர்ற மாதிரி இருக்கா? கூடவே தலைவலியும் ஆரம்பமாகுதா? அப்படியானால் உங்கள் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு விட்டது. உடனடியாக தண்ணீர் பருக வேண்டும் என்பது அவசியம். 

ஒரு நாள் ஒன்றுக்கு 8கிளாசுக்கு குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையும் அறிவுருத்துகிறது. 

ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டால், கூட்டம் சேராதீங்க, காற்று வரட்டும் விலகி நின்னுங்கப்பா என்று சொல்வதும், உடனடியாக அவர் முகத்தில் பளிச் பளிச்சென தண்ணீரை தெளித்து, அவர் கண் விழித்ததும்,  அருந்த நீர் கொடுப்பதும் இயல்பான ஒன்று. அதாவது மனிதன் உயிர்வாழ பிராண வாயும், தண்ணீரும் அவசியம். பொதுவாக மனித உடல் என்பது தசை எலும்பு, ரத்தத்தால் ஆனது என்று சொல்லப்பட்டாலும், அது அத்தனைக்கும் மூலப்பொருள் தண்ணீர்தான்.  தாயின் வயிற்றில் இருக்கும்போதே பனிக்குடத்தில் தண்ணீரில்தான் மிதக்கிறோம். பிறந்து வந்த பிறகும் உடலில் 60சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது என்கிறது மருத்துவம். 

மனித உடலில் மூளை 75 சதவீதம் நீர் சத்து கொண்டதாம், ரத்தத்தில்  92 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. வலிமையான எலும்புகள் கூட 22 சதவீதம் தண்ணீரால் ஆனதாம். தசைகள், தசைநார்கள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இன்னொரு வியப்பூட்டும் செய்தி தெரியுமா?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. ரத்தத்தில் ரத்தசிவப்பனுக்கள், வெள்ளை அனுக்கள், பிளேட்லட்டுக்கள் என மூன்று வகையான அனுக்களும், திரவ நிலையில் பிளாஸ்மாவும் இருக்கிறது. 100 மில்லி ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் அதாவது தண்ணீர் திரவமும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் கலந்து இருக்கும். 

இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் து?ரம் எவ்வளவு தெரியுமா, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீட்டராம்., ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். ஆக அந்த ரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால், கெட்டியானால் எவ்வவு பெரிய விபரீதத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

உண்ணும் உணவு ஜீரனமாக, கழிவுகளை வெளியேற்ற இன்னும் பல வேலைகளுக்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் அளவு உடலில் குறைவு ஏற்படும்போது உடல் சோர்வு, நீர் குறைவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உடல் இயக்கத்தை இயல்பான நிலைக்கு வைத்துக் கொள்ள முயலும் போது ஆக்ஸிஜன் குறைபாடு, நீர்தேவையை பூர்த்தி செய்து கொள்ள தேவையில்லாமல் கொழுப்பை உற்பத்தி செய்தல், உடலில் உள்ள நீர்ம கழிவுகள் வியர்வை வழியே வெளியேற முடியாமல் தேங்குவதால் அமிலத்தன்மை அதிகமாதல், அதனால் கிருமிகள் உருவாதல், சிறுநீரகம் பாதிக்கப்படுதல், நீர்சத்து குறைவதால் கழிவுகள் பெருங்குடலுக்கு செல்லாமல் தங்கி மலச்சிக்கல் உருவாதல், எலும்பு மூட்டுகள் பாதிப்புக்கு உள்ளாதல், இதைவிட முக்கியமாக புறத்தோற்றத்தில், தோல்களில் சுருக்கம், கரும்புள்ளிகள், படர்தாமரை போன்று தோல் மாற்றமடைதல் என்று ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன. 

சுவாச இழப்பு, ரத்த இழப்பு எப்படி மரணத்தை நோக்கி அழைத்து செல்கிறதோ, அதைப்போல் நீர் இழப்பும் ஆபத்தானது. அதனால் தினந்தோறும் 2லிட்டருக்கு குறையாமல் நீர் அருந்துவோம்.  தாகம் எடுக்கா விட்டாலும் தண்ணிர் அருந்த வேண்டும். 


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...