வீட்டை விட்டு வெளியில் ஒருவாரம் வேலை விசயமாகத் தங்கியிருந்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
எப்போதடா மனைவி பிள்ளைகளைப் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வத்துடன் இருக்கும். வீட்டில் வந்து நுழையும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் மனம் இருக்கும்.எல்லோருக்குமே அப்படித்தான்.
காதலியைச் சந்திக்கச் செல்லும் போது காதலனின் மனம் அப்படித்தான் மகிழ்ச்சியில் துள்ளும்.
ஆனால் நமக்கு அன்பானவர், மிகவும் இனிமையானவர் ஒருவர் இருக்கிறார்.. அவரைப் பார்க்கும் போது மட்டும் உள்ளுக்குள் அழுது வடிந்து கொண்டு , நெஞ்சில் கவலையைச் சுமந்து கொண்டு செல்கிறோமோ ஏன்?
இறைவனைத் தான் சொல்கிறேன். கோயிலுக்குப் போகும் போது நாம் கொண்டுபோவதைத்தான் சொல்கிறேன்.
சிலருக்கு ஒரு குணம் உண்டு.. எப்போது கஷ்டம் வருகிறதோ அப்போதுதான் கோயிலுக்குச் செல்வார்கள்.. போய் ‘ஏப்பா எனக்கு மட்டும் இப்படி கஷ்டத்தைத் தந்து கொண்டிருக்கிறாய்’ என்று குற்றம் சாட்டுவார்கள்..
சிலர் கவலைகளை மூட்டையாய் கொண்டு வந்து கடவுளின் காலடியில் இறக்கி வைத்துவிடுவார்கள். அப்படிக் கொட்டப்படும் கவலைகளுக்கு மட்டும் உருவம் இருந்தால் , கடவுள் அக்கவலை மூட்டைகளுக்குள் புதைந்து போய் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பார்.
கடவுளிடம் போய் கவலையைச் சொல்லாமல் பின் யாரிடம் சொல்வது? உங்களிடமா ? என்றக் கேள்வி உங்களுக்கு எழும்.
யாருக்குக் கவலை இல்லை?
வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் இன்பமாய் இருந்து விடுவதில்லை.
வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் துன்பமாயும் இருந்துவிடுவதில்லை. அவற்றின் அளவு வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசப் படலாம்.
ஒரு மிதிவண்டியை இறக்கத்தில் ஓட்டும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதையே சமதளத்தில் ஓட்டினாலும் அதிக வருத்தம் இருப்பதில்லை. ஆனால் உயரமான மேட்டில் ஏறும் போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் அதற்காக பயணிக்காமல் நாம் ஒரு போதும் திரும்புவதில்லை.
சிரமப்பட்டாலும் நம் முயற்சியை , சக்தியைத் திரட்டி போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுகிறோம். எனவே முயன்றால் கவலைகளை நாம் விரட்டிவிடலாம்.
கடவுள் அத்தகைய ஆற்றலை மனிதனுக்குத் தந்திருக்கிறார். மனிதனால் தன்னை விட வலுவான மிருகங்களை அடக்கி ஆளமுடிகிறது. பறவைகள் போல் பறக்க முடிகிறது. மீன் போல் கடலில் அலைய முடிகிறது. பூமியில் மனிதனால் முயன்றால் முடியாததொன்றும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார்.
ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களைப் பார்த்துக்கூறினார்.
‘வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை அறுவடை செய்வதும் இல்லை. ஆனாலும் அவை மகிழ்வோடு பறக்கின்றன’ என்றார்.
நாளை என்ன நடக்குமென்று தெரியாவிட்டாலும், நாளைக்கு வேண்டிய உணவை சேமித்து வைக்க வேண்டிய கவலையின்றி அவை சந்தோஷமாக அக்கணத்தில் வாழ்கின்றன. நாளைக்கு மட்டுமல்ல பல மாதங்களுக்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேமிக்கும் ஆற்றல் மிக்க மனிதனோ எப்போதும் கவலைகளுடனே வாழ்கிறான்.
எப்போதும் மகிழ்ச்சியோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாய் மாறிவிடும்.
உங்கள¢ நண்பரை பார்க்கச் செல்லும் போது எப்போது நீங்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தால்.. ஒரு நாள் உங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்வார்.
உங்கள் உறவினர் வீட்டிற்கு போகிறீர்கள் போகும் போதெல்லாம் கவலைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்தால், தூரத்தில் உங்களைப் பார்க்கும் போதே வீட்டைப் பூட்டிவிட்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்துக் கொள்வார்கள்.
அழுது வடியும் குழந்தையை விட சிரிக்கின்ற குழந்தையை தூக்கத்தான் மனம் ஆசைப்படுகிறது.
சோகமான முகத்தை விட சந்தோஷமான முகமே நமக்குப் பிடிக்கிறது.
கோயிலுக்குச் செல்லும் போது இறைவனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் செல்லுங்கள். அங்கு நிலவுகின்ற அதிர்வுகள்.. நற் சக்திகள் மகிழ்ச்சி நிறைந்த உங்களுக்குள் ஊடுருவி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி வைத்துவிடும். உங்கள் கவலைகள் தானாகவே மறைந்து விடும்.
செல்லும் போதெல்லாம் இறைவனை மகிழ்வுடன் வழிபாடு செய்யுங்கள். கவலைகள் இதயத்தின் ஓரத்தில் மறைந்திருக்கட்டும். வழிபாட்டில் கவனம் இருக்கட்டும்.
வழிபாடு செய்து விட்டு அமைதியாய் , தெளிவான மனதுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து வாருங்கள். என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் இறைவா உனக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்.
மதிவாணன்
No comments:
Post a Comment