ஒரு காலத்தில் பணக்காரர்களின் வியாதியாக பார்க்கப்பட்டது. அப்படியெல்லாம் இல்லை... எனக்கு பாமரனும் ஒகே என்று மூட்டை முடிச்சுகளோடு சமானியர்கள் பக்கமும் குடிவந்து விட்டது சக்கரை நோய்.
இன்று உலகையே உருட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. நாற்பதை தொட்டு விட்டாலே வந்து விடலாம் என்று ஆரூடம் சொல்கிற அளவிற்குத்தான் இருக்கிறது.
உலகம் முழுவதிலும் சுமார் 20 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2025ம் ஆண்டுவாக்கில் இது இரண்டு மடங்காக உயரக்கூடும். அதிலும் குறிப்பாக, மூன்றாவது உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் அதிர்ச்சிகரமான புள்ளிவிபரத்தை தருகிறது.
மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் நோயாக மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி, கிடுகிடு வளர்ச்சி என்று எல்லா வளர்ச்சியும் பெற்றுள்ளது. உணவு பழக்கம், சுற்றுசூழல், மரபு வழி, பயன்படுத்தும் பொருட்கள் என்று ஒருவருக்கு நோய் தோன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
சக்கரை வியாதி வர இரண்டே காரணங்கள்தான் இருக்கின்றன என்கிறது ஆய்வுகள். அதாவது திட்டமிடாத உணவுப்பழக்கம், மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கிற தூங்கும் நேரம் இவையிரண்டும் ஒருவருக்கு இருந்தால் கண்டிப்பாக சக்கரை வியாதி வந்துவிடுமாம்.
முதலில் உணவு. நாம் உண்ணும் உணவில் புரதம் என்னும் மாவுசத்து, விட்டமின்கள், கொழுப்பு முதலான சத்துக்கள் அடங்கியுள்ளன.
நாம் உணவை உட்கொண்டவுடன், மறுபடியும் வேலை வந்துடுச்சா என்று சோம்பல் முறித்துக் கொண்டு செரிமான உறுப்புகள் செயல்பட தொடங்குகின்றன. திருப்பதி உண்டியலில் நாணயத்தை பிரிப்பதை போல் புரதம், விட்டமின்கள், கொழுப்பு என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு, உடற் செல்கள் உற்சாகமாக செயல்பட அனுப்பி வைக்கப்படுகிறது.
அதை அவ்வப்போது ஒரு ரவுண்ட் ஏற்றிக் கொண்டுதான் கோடிக்கணக்கான செல்கள் வளர்கின்றன, செயல்படுகின்றன. இந்த குளுக்கோஸ் புரதம் என்கிற மாவுசத்தில் இருந்துதான் பெறப்படுகிறது. அதாவது குளுக்கோஸின் மூலப்பொருள் புரதம். மற்ற விட்டமின்கள், கொழுப்புப் பொருட்கள் இரத்தம் மூலம் பரவி வரும்போது எந்த உறுப்புக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளும்.
இச்செயலானது எந்த தடையும் இல்லாமல் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. திடீரென குளுக்கோஸ் உற்பத்தி அதிகரித்து, அதை அதை உடல் செல்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு பெயர்தான் சர்க்கரை நோய்.
சக்கரை நோய் வருவதற்கு நேரம் தவறி உண்பது, கண்ட நேரத்திலும் எதையாவது கொறித்துக் கொண்டிருப்பது, அளவுக்கு அதிகமாக திண்பது என்று பல காரணங்கள் இருக்கிறது.
அடுத்து தூக்கம். என்றோ ஒருநாள் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு சினிமா பார்க்கலாம், ஊர் சுற்றலாம், நண்பர்களோடு கதையடிக்கலாம் தவறில்லை. ஆனால் இதையே தொடர் பழக்கமாக கொண்டு தூங்கும் நேரம் மாறிக் கொண்டிருந்தால் உடல் சுரபிகள் தாறுமாறாக செயல்பட்டு உடல் பருமன் அல்லது மெலிவு, சக்கரை வியாதி என்று எந்த பிரச்சனையாவது நம்மை சந்திக்கலாம் என்கிறார்கள் மருத்தவர்கள்.
இதை இன்னும் விளக்கமாக சொல்வதானால் உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந்தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே உணர்ந்து அதனால் தடுக்க முடியும். அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் செயல்கள் தடைபட்டு வேண்டாத விருந்தாளியாக நோய்கள் வந்து உள்ளேன் டீச்சர் என்று உட்கார்ந்து கொள்கிறது.
இது தொடர்பாக அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவு பகல் என்று மாறி மாறி வேலை செய்யும் போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவுப் பணியில் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல் பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் ஹார் மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. தேநீர், காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.
வருமுன் காப்போம் என்கிற அடிப்படையில் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வேலை நேரத்தால் ஏற்படும் தூக்கமின்மையை போக்க, அல்லது பகல் இரவு என்று மாறி மாறி தூங்கும் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு தகுந்த மாதிரியான வேலைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
குறிப்பாக சக்கரை நோயாளிகள் ஒரே வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் இரவு பகல் என்று மாறி மாறி வேலை பார்க்கும் சூழல் அமைந்து விட்டால் கட்டாயம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிக்கு உகந்த நேரமாக காலையும், மாலையும் இருக்கிறது. தினம் தோறும் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அதற்காக நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்து வந்தால், தீண்ட நினைக்கும் சக்கரை நோய்க்கு தடையுத்தரவு போட முடியும்.
குறிப்பு:-
கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்யும் மாஸ்டர்கள் கவனத்திற்கு. நானும் அட்சென்ஸ் அபபுருவலுக்காக காத்திருக்கிறேன். தேவையில்லாமல் இங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்தால், எந்த கருணையும் இல்லாமல் கூகுளுக்கு புகார் செய்வேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன் இந்த தளத்தில் இருந்து காப்பி செய்து போட்டிருப்பவர்கள், தங்கள் பதிவுகளை நீக்கிக் கொண்டால் நல்லது.
இந்த தளத்தில் இருந்து மேட்டரை அப்படியே சுட்டு, வீடியோ போட்டிருக்கும் அதிபுத்திசாலிகளே... நீங்களும் விழித்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் என் தளத்தில் இருந்து கட்டுரைகளை சுட்டு வீடியோ போட்டிருக்கீங்க என்று எனக்கு தெரியும்.
மேட்டர் டூ வீடியோ என்பதற்கு புகார் அளிக்க முடியுமா, இந்த அட்சென்ஸ் அப்புருவலுக்கு பிறகு என்று காத்திருக்கிறேன். முடியும் என்றால் எந்த தயக்கமும் இல்லாமல் புகார் அளிப்பேன். அப்புறம் எந்த சமாதத்திற்கும் நான் வரமாட்டேன். புத்திசாலியாக நடத்துக்கோங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது.