Follow by Email

Friday, 11 September 2015

வேதியனும் வேதாளமும்

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது’ என்பது பற்றி வேதாளம் கேள்வி எழுப்ப, வேதியன் அதற்கான பதிலைச் சொல்லிக் கொண்டே வருகிறான். சிறிது ஓய்வுக்குப் பின்னர் வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக¢கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். 

வேதியா!  விவேகானந்தர், மனிதனின் உண்மை இயல்பு பற்றி கூறியுள்ளக் கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.. இன்னும் தொடர்ந்து அவர் கூறியுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .. சொல்வாயா?  

வேதாளம் கேட்க வேதியன் சொல்லத் தொடங்குகிறான்..

வேதாளமே, பரம்பொருள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் கருத்துக்களை இப்போது நாம் பார்ப்போம்.  

“ எல்லையற்றப் பரம்பொருள் எல்லைக்கு உட்பட்டதாக மாறியது எப்படி? இக்கேள்வியே வேதாந்தத்தில் மிகவும் புரிந்து கொள்ள முடியாத கஷ்டமான கேள்வியும் அடிக்கடி கேட்கப்படுகிற கேள்வியும் ஆகும். 

பரம்பொருளானது காலம் ,இடம், நிமித்தம் எனப்படும் காரண காரியங்களுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டதன் மூலம் பிரபஞ்சமாக ஆகியிருக்கிறது. இது அத்வைத தத்துவத்தின் மையக்கருத்து ஆகும்.

பிரபஞ்சம் என்றால்   பொருளாலான உலகம் மட்டுமன்றி, மனம், ஆத்மா, என்பது போன்றவைகளும், சொர்க்கங்கள், பூமிகள் என எங்கும் பரவி இருக்கின்ற அனைத்துமே பிரபஞ்சத்திற்குள் அடங்கும். 

ஆனால் பரம்பொருள் என்பது இந்த காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது.  வேறொன்றையும் சாராமல் தனித்து நிற்கும் தத்துவம் அது.  பரிபூரண சுதந்திரமாக இருக்கும் பரம்பொருள் தத்துவத்திற்கு எந்தப் பின்னணியும் இருக்க முடியாது.

அந்தப் பரம்பொருளை அறிய முடியாது  . அவர் நம் அறிவு நிலைக்கு மேலானவர். அதாவது நாம் அறியக்கூடியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவரே அவர். 

ஆனால் அவர் எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவர் மூலமாகத்தான் அறிய முடியும். நம் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக இருப்பவர் அவரே.

நம் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக அவரே இருப்பதால் அவரைத் தனியே வெளியேக் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்க முடியாது.

வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்து ஒன்று இதோ..

“சுவேத கேதுவே, அவர்தான் உன்னுடைய ஆன்மாவின் உட்பொருளாக இருக்கிறார். அவரே மெய்ப்பொருள். அவரே உன் ஆன்மாவின் ஆன்மா. நீயே அவர்.” நீயே கடவுள்(தத்வமஸி)    இதுதான் பொருள்.  வேறு எப்படியும் பரம்பொருளை விளக்க முடியாது.

ஒன்றே ஆன பரம்பொருளை, மொழியாலோ, உறவாலோ உருவகப்படுத்த முயல்வது முடியாத காரியம். எல்லாவற்றிற்குள்ளும் நிலையாக இருப்பவர் அவரே ஆவார்.

நம் ஆன்மாவின் உட்பொருளாகவும், மெய்பொருளாகவும் இருப்பவரை நம்மிலிருந்து நாமே எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?  எனவே பரம்பொருள் என்பவர் அறியப்படுபவரோ, அறியப் படாதவரோ அல்லர். அவர் இந்த இரண்டு நிலைகளையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்.  அவரே நம் அந்தராத்மாவாக இருப்பவர்.

ஆகவே நாம் அறிந்தோ அறியாமலோ பரம்பொருளிலேயே வாழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால் நாம் பரம்பொருளை நம் அறிவினால் அறிய முடியாது. நாம் எதையுமே பரம்பொருளின் மூலமாகத்தான் செய்ய முடியும்.  

மாயை

பரம்பொருள் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தை ஆரம்பத்தில் பார்த்தோம். அதாவது காலம், இடம் , காரண காரியங்கள் என்பதற்குள் தன்னை உட்படுத்திக்கொள்வதன் மூலம். 

இந்த காலம் இடம் காரண காரியங்கள் என்பது என்ன? என்பதைப் பற்றி ஆராய்வோம். 

இங்கே இரண்டு தத்துவங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பரம்பொருள் இன்னொன்று மாயை.  காலம் இடம் காரண காரியங்கள் என்பது மாயை.

காலம் -  காலம் நம் மனதின் மாறுதலுக்கு ஏற்ப அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது.  சில சமயங்களில் சிறிது நேரத்துக்குள்ளேயே பல வருடங்கள் வாழ்ந்ததாக கனவு காண்கிறோம். சில சமயங்களில் பல மாதங்கள் ஒரே கணத்தில் ஓடிவிட்டதாக நமக்குத் தோன்றும். காலம் என்ற கருத்தே சில சமயம் முழுவதுமாக மறைந்தே விடுகிறது. 

காலம் என்பதை தனியே நினைத்துப் பார்க்க முடியாது. நாம் இரண்டு நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முன்னால் நடந்தது மற்றொன்று அதைத் தொடர்ந்து நடப்பது இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வருவது காலம். 

இடத்தின் தன்மையும் இதே போல்தான் .. இடம் என்பது என்ன என்பதை நம்மால் அறிய முடியாது. ஆனாலும் அது இருக்கிறது.  நிறம்,எல்லைகள், திசைகள் என்ற எந்த சார்புமே இல்லாத இடத்தைப் பற்றி நினைத்துப் பாருஙகள் அது முடியாது. இரண்டு எல்லைகளுக்கோ ,மூன்று பொருட்களுக்கோ உட்பட்டதாகத்தான் இடத்தை நாம் நினைக்க முடியும். வேறு ஒரு பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இடம் என்பது இருப்பதாக நாம் சொல்ல முடியும். 

இப்படி காலமும் இடமும் இரண்டு நிகழ்ச்சிகளை சார்ந்தே இருக்கிறது. 

காரண காரியக் கருத்து காலம் இடம் இவற்றிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது.   காலத்துக்கும் இடத்துக்கும் இருப்பு கிடையாது. இவை இரண்டும் எல்லாவற்றையும் நிழல் போல் சூழ்ந்திருக்கின்றன. அந்த நிழல் நம் கைக்கு அகப்படாது. 

ஏனென்றால் உண்மையான இருப்பு அவைக்கு இல்லை. ஆனாலும் அவை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லாமே காலம் இடம் ஆகிய இரண்டின் மூலமாகத்தான் பிரபஞ்சமாக வெளிப்படுகின்றன. 

எனவே காலம் இடம் காரண காரியம் இவற்றின் சேர்க்கையை இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது என்றுத் தெரிகிறது.

  உதாரணத்திற்கு நாம் கடலில் உள்ள அலை ஒன்றை எடுத்துக் கொள்வோம். அலையும் கடலும் ஒன்றுதான் என்று நமக்குத் தெரியும் என்றாலும் அவற்றை அலை, கடல் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்கவும் முடிகிறது. இது எப்படி சாத்தியம்?  அவற்றின் உருவமும் மனதில் அவற்றைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துமே ஆகும்.

நாம் கடலை நினைக்காமல் அலை என்ற உருவத்தை மட்டும் நினைத்துப் பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. கடலோடு சேர்த்துத்தான் நாம் அலையைப்பற்றி நினைக்க முடியும். அலை அடங்கும் போது அதன் உருவம் கண நேரத்தில் மறைந்து விடுகிறது. ஆனாலும் நாம் கண்ட அலை உருவம் பொய்த்தோற்ற மல்ல.. அலை இருந்த வரையில் அலை உருவமும் இருந்தது. நாம் அலை உருவத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தோம். 

   இதுதான் மாயை.  

ஆகவே இந்தப் பிரபஞ்சத்துக்கு அதற்கே உரித்தான தனி உருவம் இருக்கிறது. பரம்பொருளே கடல். நாமும் மற்றும், சூரியன் நட்சத்திரங்கள் போன்ற எல்லாமே அந்தக் கடலில் தோன்றும் அலைகள்தாம். அலைகளை வேறுபடுத்துவது நாம ரூபமே. 

அலை என்பது மறைந்தவுடன் அதன் உருவமும் மறைந்து கடலோடு ஒன்றிவிடுகிறது. ஒவ்வொருவனும் மாயையைக் கடந்தவுடன் மாயை மறைந்து அவன் விடுதலையடைகிறான். அதாவது தானும் பரம்பொருளே என்பதை உணர்கின்றான்.

இந்த மாயை என்கிற கால இட காரண காரியங்கள் நாம் பரம்பொருளை அடைவதற்கு ,  தடையாக இருக்கின்றன. பரம்பொருளுக்கும் நமக்கும் இடையில் திரை போட்டு விடுகின்றன. இவற்றை நாம் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் இவற்றிலிருந்து விடுபடத்தான் நம் போராடிக்  கொண்டிருக்கிறோம். 
ஆன்மிக ரீதியில் இதைப் பார்ப்போம்.  

எல்லையற்ற தத்துவத்தின் எல்லைக்குட்பட்ட வெளிப்பாடே இயற்கையாகும் அதாவது பிரபஞ்சமும் அனைத்தும் என்று பார்த்தோம். 

இந்த மாயை என்ற இயற்கை சூழலை நாம் வெற்றிக் கொள்ள,  நம் உண்மையான நிலையை அடைய முயற்சிகளை எடுத்துப் போராடுகிறோம். 
உதாரணத்திற்கு ஒழுக்கம் என்பது   என்ன? நம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது. 

அதாவது இயற்கையாய் எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது. அதாவது இயற்கை நம்மீது கொள்ளும் ஆதிக்கத்தை நீக்கிக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சியே ஒழுக்கம் ஆகும். ஒரு கட்டத்தில் அவற்றை நாம் வென்று விட முடியும் என்பதே உண்மை. 

எல்லக்குட்பட்ட இந்த மாயை என்ற  இயற்கைச் சூழலை எப்படி நாம் வெல்வது? 

பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது எல்லா உயிர்களுமே தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்
.
ஒரு சிறு மீன் நீரிலுள்ள தன் விரோதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள பறக்க விரும்புகிறது . அது எப்படி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? 

இறக்கைகளை வளர்த்து பறவையாவதன் மூலம் அது தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. அதாவது அது நீரையோ காற்றையோ மாற்றவில்லை.  

மாற்றம் அதனிடம் உருவானது.  வெற்றி பெறுவதற்கான மாற்றம் தன்னிடத்திலேயே உருவாக வேண்டும் என்பது இதில் தெரிகிறது. ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே தீமையை வெல்ல முடியும்.

ஆகவே இயற்கையை வெற்றியடைவதற்கு அதாவது மாயையை வெற்றியடைவதற்கு இதுதான் வழி.. நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வது. மாற்றம் அடைவது. 

அத்வைதத்தின்   இந்தக் கருத்துத்தான் இன்றைய பௌதிக விஞ்ஞானக் கோட்பாடுகள் மற்றும் தற்கால  ஆராய்ச்சியோடு ஒத்துப்போகின்றன. 

எல்லாப் பொருள்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் சொல்லும் போது,  அது உங்களுக்கு உபநிஷதங்களிலுள்ள பரம்பொருள் தத்துவத்தை நினைவுப் படுத்த வில்லையா? 

ஒரு நெருப்பு பல உருவங்களாத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப் போல், பரம்பொருளானது ஒவ்வொரு ஆத்மாவின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு இன்னும் பல மடங்கு உயர்ந்த நிலையிலும் இருக்கிறது என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. 

இந்துக்கள் மனத் தத்துவ ஆராய்ச்சியின் மூலமாகவும், ஆன்மிகத் தத்துவ ஆராய்ச்சி மூலமும், அறிவு பூர்வமான தத்துவ ஆராய்ச்சி மூலமும் முன்னேறினார்கள்.

ஐரோப்பியர்கள் வெளி இயற்கையிலிருந்து ஆராய்ச்சியை ஆரம்பித்து , அத்வைதத்தின் முடிவுக்குத்தான் வந்து கொண்டிருக்கின்றனர்.

மனத்தின் மூலம் தேடுவதால் கடைசியில் அந்த ஒரே பரம்பொருள் தத்துவத்தை நாம் உணர்கிறோம். 

அந்த பரம்பொருள் ஆத்மாவிற்கு ஆத்மாவாகவும், எல்லாவற்றிற்கும் உட்பொருளாகவும், மெய்ப்பொருளாகவும், சச்சிதானந்த சொரூபமாகவும் இருக்கிறது.

எல்லாமாகவும் இருக்கும் அந்த ஒரே¢ பரம்பொருளைப்பற்றித்தான் அத்வைதம் போதிக்கிறது. 

‘ஆன்மிக முன்னேற்றம் அடையுங்கள், உண்மைத் தன்மையை உணர்ந்து அதனுடன் இரண்டறக் கலந்து ஒன்றி விடுங்கள்’ என்று கூறுகிறது.   

‘வேதாளமே, சிறிது ஓய்வுக்குப்பின் தொடர்ந்து விவேகானந்தர் கூறியுள்ள கருத்துக்களை பார்ப்போம்’

வேதியன் கூறி முடித்ததும் அவனிடமிருந்து விடுபட்ட வேதாளம் அருகிலிருந்த மரத்தின் கிளையைப்பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 

No comments:

Post a Comment