Follow by Email

Monday, 22 September 2014

உடல் ஆரோக்கியத்திற்கு

‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்கிறார் திருமூலர். உடல் வளர்த்தல் என்பது உடலை பேணுதல்.  உடலை ஆரோக்கியமாய் வைத்திருத்தல். 

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான்  செய்யும் செயல்களில் மனம் ஒருமுகப் படும்.  வெற்றி கிட்டும். 

மனதும் உடலும் ஒன்றுக்கொன்று  இணைந்திருப்பவை.  மனம் உற்சாகமாக இருக்கும் போது, நோய்கள் உடலை தாக்குவதில்லை.  நாம் நோய்வாய்ப்படுவதற்கு மன பலவீனமும் ஒரு காரணம் என்கிறார்கள்.  

 கோபம், பதட்டம்  போன்ற தீவிர மன உணர்வுகள்,   நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது என்கிறார்கள். அதிகப்படியான கவலை, வயிற்றுப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். 

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்துப் பார்த்துக் கொண்டால் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். 

உடல் நிலை சீர் கெடுவதற்கு காரணமாக இருப்பது  பெரும்பாலும் உணவுப் பழக்கம் ஆகும்.  உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடற்பயிற்சி வேண்டும்.  

உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் ஏதோ வயதானவர்களுக்கு மட்டும் என்ற எண்ணம் நம்மில் பெரும்பான்மையோருக்கு இருக்கிறது. 

  அப்படியல்ல.. இவை சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவராலும் கடைபிடிக்க வேண்டிய பழக்கமாகும்.  

அப்படி பழக்கம் இருப்பவர்கள் உடல் பருமன், நீரிழிவு , இரத்தக் கொதிப்பு பிரச்சனைகள் இன்றி இறுதி வரை ஆரோக்கியமாய் வாழ்கிறார்கள்.  சுறுசுறுப்பாய் காரியமாற்றுகிறார்கள்.   நோய்கள் இவர்களை அண்டுவதில்லை. 

 40 வயதிற்கு மேல் , சைவ உணவு பழக்கத்திற்கு மாறிக் கொள்வதும்,  ஆன்மீகத்தின் மேல் முழு ஈடுபாடு காட்டுவதும்  நமது  உடல் மன ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும். 

காய்கறி கீரைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இளமையோடும் இருப்பதற்கு உதவுகின்றன. இது அன்றைய  சித்தர்கள் முதல், இன்றைய  மருத்துவர்கள் வரை கூறும் அறிவுரையாகும்.

அக்காலத்தில் நம் முன்னோர்கள் கோயில்களில் , இறைவனுக்கு சாற்றிய  துளசி, வில்வம், வேப்பிலை, அருகு போன்ற தலங்கள் எல்லாம் உடல் நோயை தீர்க்கும் மூலிகைகள்தான். வீட்டுக் கொல்லைப் புறத்தில் வளர்த்த கீரை வகைகள் உடலுக்கு நல்லதைச் செய்யும் உணவுப் பொருட்கள்தான்.  

இன்று விரைவு உணவு வகைகளுக்கு மாறிய பின், விரைவாக நோய்வாய்ப்பட்டு வெகு விரைவாகவே போய்ச் சேர வேண்டியிருக்கிறது.  சிறுவயதிலேயே எல்லாவித நோய்களின் உறைவிடமாகவும் உடல் மாறிவிட நமது உணவுப் பழக்கமே காரணமாகிறது.  

அடுத்து வயிறு புடைக்க உண்ணுதல் தவறு என்கிறார்கள். முக்கால் வயிறு உணவு  மீதி வயிறு காலியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். 

பசியோடு உணவுக்கு அமர்ந்து, பசியோடு எழுந்திருங்கள் என்கிறார்கள் சித்தர்கள். அதாவது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும் போதே உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  

ஒரு வைத்தியரிடம் சென்ற ஒருவர் ,  ஐயா! உங்களுக்குத் தெரிந்து எல்லா வியாதிகளையும் போக்கும் மருந்து இருக்கிறதா?  என்று கேட்டாராம். 

 அதற்கு வைத்தியர்,  இருக்கிறது! அது வியாதிகளைப் போக்காது. ஆனால் வியாதியே வராமல் பாதுகாக்கும். அதன் பேர் உழைப்பு என்றாராம். 

இன்று உழைப்பதற்கு நேரமில்லாமல், சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள்  சாயங்கால நேரத்தில் நடைபயிற்சியையாவது மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சரியான உணவு, உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, இனிய நினைவுகள், எளியமையான வாழ்க்கை, வழிபாடு இவையெல்லாம் இருந்தால் நோய்கள் நம்மை நெருங்காதவாறு வாழ்க்கையை அருமையாய் அமைத்துக் கொள்ளலாம்.  

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நாம் உயிரோடு இருந்தால்தானே சாதிக்க முடியும்?  நம் தலைமுறைகளை வளர்த்து விட முடியும்.   உடல் நலம் பேணுவோம்.  ஆரோக்கியமாக வாழ்வோம். 

Monday, 1 September 2014

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்!!

பழம் புராணங்களிலும் வரலாறுகளிலும் புராதான இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் குறிப்படப்படுகின்றன. அந்த தேசங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்துக் கொள்ளுங்கள் .

1.குருதேசம்
2.சூரசேனதேசம்
3.குந்திதேசம்
4.குந்தலதேசம்
5.விராடதேசம்
6.மத்சுயதேசம்
7.திரிகர்த்ததேசம்
8.கேகயதேசம்
9.பாஹ்லிகதேசம்
10.கோசலதேசம்
11.பாஞ்சாலதேசம்
12.நிசததேசம்
13.நிசாததேசம்
14.சேதிதேசம்
15.தசார்ணதேசம்
16.விதர்ப்பதேசம்
17.அவந்திதேசம்
18.மாளவதேசம்
19.கொங்கணதேசம்
20.கூர்சரதேசம்
21.ஆபீரதேசம்
22.சால்வதேசம்
23.சிந்துதேசம்
24.சௌவீரதேசம்
25.பாரசீகதேசம்
26.வநாயுதேசம்
27.பர்பரதேசம்
28.கிராததேசம்
29.காந்தாரதேசம்
30.மத்ரதேசம்
31.காசுமீரதேசம்
32. காம்போசதேசம்
33.நேபாளதேசம்
34.ஆரட்டதேசம்
35.விதேகதேசம்
36.பார்வததேசம்
37.சீனதேசம்
38. காமரூபதேசம்
39.பராக்சோதிசதேசம்
40.சிம்மதேசம்
41.உத்கலதேசம்
42.வங்கதேசம்(புராதனம்)
43.அங்கதேசம்
44.மகததேசம்
45.ஹேஹயதேசம்
46.களிங்கதேசம்
47. ஆந்திரதேசம்
48.யவனதேசம்
49.மகாராட்டிரதேசம்
50.குளிந்ததேசம்
51.திராவிடதேசம்
52.சோழதேசம்
53.சிம்மளதேசம்
54.பாண்டியதேசம்
55.கேரளதேசம்
56.கர்னாடகதேசம்