Follow by Email

Wednesday, 4 June 2014

மோடியின் பதவியேற்பு வைபவமும் தென்னாசிய தலைவர்கள் பங்கேற்பும் - முக்கியத்துவம் என்ன?ஆசிய நாடுகளுடன் மட்டுமல்லாது மோடியின் அரசாங்கம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் தனது இராஜீக உறவைப் பேணும். இது கிழக்காசியாவில் தனது வலுவான உறவைப் பேணும் சீனாவுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியாக அமையும். 

இவ்வாறு The Asian Age ஊடகத்தின் செய்தியாளர் எழுதியுள்ள அரசியல் ஆய்வில் தெரிவித்தள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உள்ளிட்ட சார்க் அமைப்பைச் சேர்ந்த ஏழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதென நரேந்திர மோடி தீர்மானித்த போது, பாகிஸ்தானுடனான எந்தவொரு தொடர்பையும் நீண்ட காலமாக எதிர்த்து வரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜான்ந் சிங் நிச்சயமாக அதிர்ச்சியடைந்திருப்பார். 

இவரைப் போல இந்தியாவின் தற்போதைய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங்கிற்கும் இந்தச் செய்தி அதிர்ச்சியை அளித்திருக்கும். இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கும் விழாவுக்கு தெற்காசியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதென மோடி தீர்மானித்தமையானது தனிப்பட்ட ரீதியில் வரவேற்கப்படத்தக்கதாகும். இந்தியாவின் உள்ளக அரசியலைப் பொறுத்தளவில் நவாஸ் செரீப் அழைக்கப்பட்டமையானது விமர்சிக்கப்பட்டாலும் கூட, இது வரவேற்கப்படத்தக்க ஒரு விடயமாகும். 

ஆப்கானின் கெறற் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் மீது நான்கு துப்பாக்கிதாரர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முதல்நாள் திரு.மோடி, பாகிஸ்தான் பிரதமர் செரீப் தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். 

பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்து இரு நாடுகளின் நட்புறவில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்கப்படும் என உறுதியாக நம்பப்பட்ட சூழலில் இத்தாக்குதல் மூலம் இரு நாடுகளுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 

கடலிலிருந்து பாகிஸ்தானால் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை வலுப்பெற்றது. இது இந்தியாவின் 9/11 தாக்குதல் என அழைக்கப்படுகிறது. 

இந்தியாவுடன் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தானியப் பிரதமர் மிகமுக்கிய வழிகாட்டியாக விளங்கவேண்டும். பாகிஸ்தானியச் சிறைகளில் வாடும் 350 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதென பாகிஸ்தானியப் பிரதமர் அறிவித்திருந்தார். 

"இந்தியாவின் புதிய பிரதமருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த முடியும். இந்தியப் பிரதமரின் பொருளாதாரக் கோட்பாடுகளை நான் பாராட்டுகிறேன்" என மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் பாகிஸ்தானியப் பிரதமர் செரீப் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து இவ்விரு நாட்டுத் தலைவர்களும் பதவியேற்பு விழாவுக்கு அடுத்த நாள் ஹைதராபாத் இல்லாத்தில் அரை மணித்தியாலமாக இரு நாட்டு உறவுநிலை தொடர்பாகக் கலந்துரையாடினர். 

தற்போது கெறற் நகரில் இடம்பெற்ற தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு இனிவருங் காலங்களில் இடமளிக்கக்கூடாது எனவும் இவ்வாறு இடமளிக்கும் பட்சத்தில் இது இருநாடுகளின் நல்லுறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்தனர். 

கஸ்மீர் தீவிரவாதிகளிடம் தொடர்பைப் பேணுவதை திரு. செரீப் தவிர்த்து வருகிறார். மும்பாய் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் மீதான விசாரணையைப் பாகிஸ்தான் நீதிமன்றம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

1999ல் அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் திரு.செரீப் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதற்கான முனைப்பைக் காட்டிய போதிலும், இவ்வாறான ஒரு காரியத்தைச் செய்வதை விடச் சொல்வது மிகச் சுலபமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

வன்முறைகள் அதிகம் இடம்பெறும் பாகிஸ்தானுடன் ஜனநாயாக நாடான இந்தியா சமாதான உறவைத் தொடர்வதென்பது கடினமான காரியமாகும். ஏனெனில் பாகிஸ்தான் தனது அயல்நாடான ஆப்கானுடன் நல்லுறவைப் பேணவேண்டும். இவ்வாறான நிலையில் ஆப்கானைப் பகைத்து இந்தியாவுடன் உறவைப் பேணுவதென்பது சவால்களைச் சந்திக்க வேண்டிய நகர்வாகும். 

ஆப்கானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பாகிஸ்தான் தனது பலப்படுத்தலை மேற்கொண்டுள்ளது. இப்பகுதிகளில் அமெரிக்காவின் குறைந்தது 10,000 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மற்றும் தெற்கு ஆப்கானில் பாடசாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள் போன்ற பல்வேறு கட்டுமாணத் திட்டங்களை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. 

அத்துடன் ஆப்கானின் உயர் கனியுப்பு மற்றும் எரிவாயுப் பொருளாதாரத்திலும் பாகிஸ்தான் செல்வாக்குச் செலுத்துகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானுடனான உறவைத் துண்டித்து இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கமைவாக நடந்து கொள்ளும் என்பது நம்பகமற்றது. 

ஹமீட் ஹர்சாய்க்குப் பின்னர் ஆப்கானைத் தலைமை தாங்கக் கூடிய மருத்துவர் அப்துல்லா அப்துல்லா மற்றும் மருத்துவர் அஸ்ராப் கானி ஆகியோர் இந்தியாவின் வர்த்தகம் மீது ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான தலிபான் அமைப்பால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். 

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவை ஆளும் நரேந்திர மோடி சிறிலங்கா அதிபரைத் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்தார். 

சிறிலங்காத் தீவுடன் இராஜதந்திரத் தொடர்பைப் பேணுவதென்பது இந்தியாவுக்கு மிகவும் இக்கட்டான ஒன்றாகக் காணப்படுகிறது. முன்னாள் இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங், அயல்நாடான சிறிலங்காவுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் கூடிய உறவைப் பலப்படுத்த முடியவில்லை. அதாவது சிறிலங்காவின் கடற்பரப்பில் இந்திய தமிழ் மீனவர்கள் உள்நுழைதல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை மன்மோகன் சிங்கால் நீக்கமுடியவில்லை. 

சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கமானது இந்திய மாக்கடலில் தனக்கான கேந்திர முக்கியத்துவ நிலையைக் காரணமாகக் கொண்டு சீனா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேண ஆரம்பித்தது. 

தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்படுவது குறித்து குற்றம்சாட்டிவரும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பை மோடி நிறைவுசெய்ய வேண்டிய நிலையிலுள்ளார். 

ஏனெனில் இந்தியாவின் மாநிலங்களவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான அறுதிப்பெரும்பான்மையை மோடியின் பா.ஜ.க கொண்டிருக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க வின் ஆதரவை மோடி பெறவேண்டும். இதனால் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு நிறைவுசெய்யப்பட வேண்டும். 

இதனால் மோடி, ஜெயலலிதாவிடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தேர்தல் வாக்குறுதிகள் அதிகாரம் செலுத்திவிட முடியாது என்பதை வலியுறுத்த வேண்டும். இதன்மூலம் சிறிலங்காவுடன் இந்தியா உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். 

இதன்மூலம் சிறிலங்காவில் இந்தியா தனது தானியங்கி வாகன உதிரிப்பாகங்களை வாங்குவதற்கான உந்துதலை வழங்க முடியும். இது சிறிலங்கா தனக்குத் தேவையான வாகன உதிரிப்பாகங்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்கு வழிவகுக்கும். இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். 

சிறிலங்கா இராணுவத்தால் புலிகள் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவதில் சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காண்பித்துவருவதே இந்தியத் தரப்பிலுள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். 

தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குகின்ற 13வது திருத்தச் சட்;டத்தை ராஜபக்ச தொடர்ந்தும் நிராகரித்து வரும் நிலையில், மோடி, ராஜபக்சவுடன் நட்புறவை மேற்கொள்வதன் மூலம், ராஜபக்ச 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிக்கலாம். 

மாலைதீவின் அதிபர் அப்துல் ஜமீன் அப்துல் கஜூம் மற்றும் மொரிசியசின் பிரதமர் நவின் றம்கூலம் போன்றோரை மோடி தனது பதவியேற்பு வைபவத்திற்கு அழைத்ததானது, இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளில் இந்தியா தனது செல்வாக்கைச் செலுத்தத் தீர்மானித்துள்ளது என்பதற்கான ஒரு சமிக்கையாகும். 

ஹிந்தித் திரைப்பட இறுவெட்டுக்களை வாங்குவதற்குத் தடைவிதித்து தற்போது வெளிவரும் பொலிவூட் திரைப்படங்களை வாங்குமாறு பணித்த மாலைதீவின் அதிபர் திரு.கஜூம் மற்றும் மொரிசியஸ் பிரதமர் றம்கூலம் ஆகியோரின் குடும்பங்கள் வரலாற்று மற்றும் கலாசார ரீதியாக இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணிவருகின்றனர். இதனைக் கொண்டு இவர்களுடன் உறவைக் கட்டியெழுப்ப மோடி விரும்புவார். 

சீனத் தலைமையுடன் மோடி தொலைபேசியில் உரையாடியதாக செய்திகள் தெரிவிக்கும் அதேவேளையில், மோடி தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஜப்பானுக்கு மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் இந்தியாவுடன் பொருளாதார மற்றும் இராஜீக உறவுகளைக் கட்டியெழுப்புவதில் ஆர்வம் காண்பிக்கின்றமை வெளிப்படையானதாகும். 

மோடியின் புதிய வெளியுறவுக் கோட்பாட்டுக் குழுவுக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் பீஜிங் ஒரு பரீட்சைக் களமாக இருக்கும். அதாவது சீனாவை விட பாகிஸ்தானில் அதிகளவில் எவ்வாறு இந்தியா கால்பதிக்கவுள்ளது என்பதற்கான களமாக இது காணப்படும். 

ஆசிய நாடுகளுடன் மட்டுமல்லாது மோடியின் அரசாங்கம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் தனது இராஜீக உறவைப் பேணும். 

இது கிழக்காசியாவில் தனது வலுவான உறவைப் பேணும் சீனாவுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியாக அமையும். இறுதியில் மோடியால் ஆளப்படும் இந்தியா உலகில் தனக்கெனத் தனியான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒரு சம பங்காளியாக, பிராந்திய வல்லரசாக, பொருளாதார வலுமிக்க சக்தியாகத் தன்னை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகி வருகிறது என்பதையே மோடியின் பதவியேற்பு வைபமும் அவரது வெளியுறவுக் கோட்பாடும் சுட்டிநிற்கிறது.

 புதினப்பலகை -  நித்தியபாரதி. 

No comments:

Post a Comment