Follow by Email

Monday, 30 June 2014

ஸ்ரீமத் ராமாயணம்

அத்தியாயம் 1 ராக்ஷஸர்களை வதம் செய்து, ராஜ்யத்தை அடைந்து ராமர் அயோத்தியில் இருந்த பொழுது, முனிவர்கள் வாழ்த்துச் சொல்ல வந்தார்கள். கௌசிகர், யவக்ரீதன், கார்க்யன், காலவர், கண்வர், மேதாதி புத்ரன், இவர்கள் கிழக்கு திசையிலிருந்து வந்தார்கள். ஸ்வஸ்தி வாசகம் சொல்லியபடி ஆத்ரேயர், பகவான் நமுசி, ப்ரமுசி, அகஸ்தியர், அத்ரி பகவான், சுமுக, விமுகர் இவர்கள் அகஸ்தியருடன் தென் திசையிலிருந்து வந்தார்கள். 

ந்ருஷத்ரு, கவஷன், தௌம்யன், ரௌத்ரேயன் என்ற மகான் ரிஷி, இவர்களும் தங்கள் சிஷ்யர்களுடன் மேற்குத் திக்கிலிருந்து வந்து சேர்ந்தார்கள். வசிஷ்டர், காஸ்யபர், அதாத்ரி, விஸ்வாமித்திரர், கௌதமருடன் ஜமதக்னி, பரத்வாஜர், சப்த ரிஷிகள், எப்பொழுதுமே வடக்கில் இருப்பவர்கள், இவர்களும் வந்து சேர்ந்தார்கள். அனைவரும் மகாத்மாவான ராமரைக் கண்டு ஆசீர்வதிக்க வந்தார்கள். 

வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள், எல்லா வித சாஸ்திரங்களையும் அறிந்தவர்கள், தங்கள் தேஜஸால் அக்னிக்கு சமமாக இருந்தவர்கள், வாசலில் இருந்த காவல்காரனைப் பார்த்து அகஸ்தியர் சொன்னார் தாசரதியிடம் போய் சொல். ரிஷிகள் நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல் என்றார். 

அகஸ்தியரை யார் என்று தெரிந்து கொண்ட காவல்காரன் உடனே ஓடிப் போய் ராமரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சென்றான். வாயில் காப்போன் ஆனாலும், நயம் அறிந்தவன், இங்கிதம் அறிந்தவன், சாமர்த்யசாலி. தைரியமும், சமயோசித புத்தியும் உடையவன். தருணம் அறிந்து ராமரிடம் அகஸ்தியர் முதலானோர் வந்திருப்பதை தெரிவித்தான். 

பூர்ண சந்திரன் போன்ற ஒளியுடன் அமர்ந்திருந்த ராகவன், இவர்கள் வந்து காத்திருக்கிறார்கள் என்று கேட்ட மாத்திரத்தில் அவர்களை சௌக்யமாக உள்ளே அழைத்து வா என்று உத்தரவிட்டு, தானும் கை கூப்பியபடி அவர்களை வரவேற்கத் தயாராக வந்து சேர்ந்தார். பாத்3யம் அர்க்4யம் இவைகளைக் கொடுத்து பூஜித்து, அரண்மனைக்குள் மரியாதையாக அழைத்து வந்து தகுந்த ஆசனங்க ளில் அமரச் செய்தார். 

பொன் வேலைப்பாடமைந்த விரிப்புக ளில் சிலர், குசம் என்ற புல்லைப் பரப்பி சிலர், மான் தோல் விரித்து சிலர் என்று தங்கள் சௌகர்யம் போல அமர்ந்தனர். ராமர் குசலம் விசாரித்தார். வந்திருந்த மகரிஷிகள், வேதம் அறிந்த பண்டிதர்களும் ராமரைக் குசலம் விசாரித்தனர். 

ரகு நந்தனா, நாங்கள் நலமே. எங்கும் யாவரும் நலமே. நல்ல வேளையாக உன்னையும் நலமாகக் காண்கிறோம். சத்ருக்களை அழித்து விட்டு வந்திருக்கிறாய். உலகை துன்புறுத்திக் கொண்டு இருந்த ராவணனை அழித்தாய். புத்ர பௌத்ரர்களோடு ராவணன் அழிந்தான். 

ராமா, உனக்கு இது ஒரு பொருட்டல்ல. வில்லைக் கையில் எடுத்தால் நீ மூவுலகையும் வெற்றிக் கொள்ளக் கூடியவனே. உன் கையால் ராக்ஷஸ ராஜா, அவர்கள் தலைவன் ராவணன் மடிந்தான். மிகப் பெரிய வீரனை வென்று வெற்றி வாகை சூடியவனாக உன்னைக் காண்கிறோம். 

சகோதரன் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் சௌக்யமாக திரும்பி வந்தாயே, அதுவே நல்ல காலம் தான். சந்தோஷம். சகோதரர்கள் ஒன்று சேர்ந்தது சந்தோஷம். சொல்லப் போனால், ப்ரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன், மகோதரன், அகம்பனன், துர்தர்ஷோ போன்ற ராக்ஷஸர்கள் அரிய உடலமைப்பு கொண்டவர்கள். 

பெரும் தேகமும் ப3லமும் கொண்டவர்கள். இவர்களே உன்னிடம் தோற்று வீழ்ந்தார்கள் என்பது போற்றக்கூடியதே. கும்பகர்ணனும், த்ரிசிரஸும், அதிகாயனும், நராந்தக, தேவாந்தகர்களும் போரில் மடிந்தார்கள். கும்பனும், நிகும்பனும் கூட நல்ல வீரர்கள். பார்க்கவே பயங்கரமான சரீரம் கொண்டவர்கள். 

கும்பகர்ணன் பிள்ளைகளான இவர்களும் மடிந்தார்கள். யுத்தம் என்றாலே மதம் கொண்டு வரும் காலாந்தக, யமாந்தகர்கள், யக்ஞ கோபன், தூம்ராக்ஷன் – இவர்கள் சாஸ்திரமும் நன்றாக அறிந்தவர்கள். 

காலனுக்கு சமமான பாணங்களால் இவர்களை அடித்து வீழ்த்தினாய். நல்லது. தேவர்களால் ஜயிக்க முடியாத ராக்ஷஸ ராஜனோடு த்வந்த யுத்தம் செய்தாயா? வரங்கள் பெற்றவன், அவனையே ஜயித்து விட்டாய். சந்தோஷம். ராவணியை (இந்திரஜித்) முன்னாலேயே வதம் செய்தது நல்லதாயிற்று. காலம் ஓடுவது போல ஓடி மறையக் கூடியவன். விஜயனாக வந்து நிற்கும் உன்னை நாங்கள் பாராட்டுகிறோம். 

இந்திரஜித் வதம் கேள்விப் பட்டவுடனேயே, இனிக் கவலையில்லை என்று நிம்மதியடைந்தோம். மகா மாயாவி. யாராலும் ஜயிக்க முடியாத படி வர தானம் பெற்றவன், சுயமாகவே பலசாலி. ரகு குல நந்தனா, இந்த ராக்ஷஸர்களை அழித்து விபீஷணனுக்கு அபயம் கொடுத்து நல்லதே செய்தாய். மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று அமோகமாக இருப்பாய். இப்படி உள்ளன்போடு ரிஷிகள் சொல்லி வாழ்த்தி, பாராட்டியதைக் கேட்டு ராமர், பணிவோடு வினவினார். 

எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. கும்பகர்ணனையும், ராவணனையும் விட்டு, நீங்கள் ராவணியை ஏன் இப்படி புகழ்ந்து பேசுகிறீர்கள்? மகோதரன், ப்ரஹஸ்தன், விரூபாக்ஷன் போன்ற ராக்ஷஸர்கள், போரில் மதம் பிடித்தவர்களாக செயல் படும், தேவாந்தக, நராந்தகர்களை விட்டு, நீங்கள் குறிப்பாக இந்திரஜித்தை, ராவணியை புகழ்ந்து பேசுவது ஏன்? அவனுக்கு என்ன விசேஷ தன்மை, பிரபாவம் இருந்தது? அரசனாக நான் கட்டளையிட்டுக் கேட்கவில்லை. சொல்லக் கூடுமானால் சொல்லுங்கள். 

இதில் ரகஸியம் எதுவுமில்லையே? என்றார். இந்திரனையும் அவன் ஜயித்ததாக கேள்விப் பட்டேன். யாரிடம் என்ன வரம் பெற்றான். தந்தையை விட பலசாலியாக எப்படி வளர்ந்தான். ராக்ஷஸனாக பிறந்தவன் ஏன் இந்திரனுடன் மோதினான்? வெற்றி பெற்றதும் பெரிய விஷயமே. விவரமாக சொல்லுங்கள், முனிவர்களே, என்று கேட்டுக் கொண்டார்.

தொடரும் 
நன்றி janakikrishnan.wordpress

No comments:

Post a Comment