Follow by Email

Friday, 20 June 2014

நரேந்திர மோடி அரசுடன் நெருக்கம் உருவாகுமா?இந்தியாவில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் எத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பது இப்போது பெரிதும் அலசப்படுகின்ற ஒரு விடயமாக மாறியுள்ளது. 

புதுடெல்லியில் ஒரு தசாப்தமாக நீடித்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சியும் - நரேந்திர மோடியின் வெற்றியும் இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் சக்திகளான அரசதரப்பினராலும், தமிழர் தரப்பினராலும் வெவ்வேறு கண்ணோட்டங்களுடனேயே பார்க்கப்படுகிறது. 

மேலெழுந்த வாரியாக நோக்கும் தமிழர் தரப்பினர், காங்கிரசின் வீழ்ச்சியையும், பாஜகவினது பெருவெற்றியையும் கொண்டாடுகின்றனர். சற்று உள்நோக்கி ஆராய்ந்து நோக்குபவர்களோ, பாஜகவினது பெருவெற்றி குறித்தும் அவர்களின் எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பத் தவறவில்லை. 

அதுபோலவே, இலங்கை அரசதரப்பும், தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்குப் பணியாத - தனிப் பெரும்பான்மை பலம் பெற்ற ஒரு அரசாங்கம் புதுடெல்லியில், நிறுவப்படுவதையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.  

அத்துடன், நரேந்திர மோடி அரசின் அசுர வெற்றியும், அது கையாளப் போகும் அரசியல், இராஜதந்திர மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் குறித்தும் இலங்கை அரசாங்கத்துக்கு நிச்சயம் அச்சத்தைக் கொடுக்கவே செய்யும். 

ஏனென்றால், கிட்டத்தட்ட இந்தியாவில் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், தனிக்கட்சி ஆட்சியொன்றை நிறுவும் அளவுக்கு வல்லமை பெற்ற அரசாக நரேந்திர மோடி அரசாங்கம் அமைந்துள்ளது. 

இந்திய - இலங்கை உறவுகள் ஒருவித நெருடலுக்குள்ளாகியுள்ள சூழலில் – இந்தியாவை விடவும், பாகிஸ்தான், சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கை ஆர்வம் கொண்டுள்ள சூழலில், சீனாவின் எல்லாத் திட்டங்களுக்கும் தலையாட்டும் ஒரு பொம்மையாக இலங்கை மாறிவிட்ட நிலையில், இவ்வாறானதொரு பலம்வாய்ந்த அரசாங்கம் புதுடெல்லியில் அமைவது ஒன்றும் இலங்கையைப் பொறுத்தவரையில் நல்லதொரு சகுனமாக இருக்க முடியாது. 

ஆனாலும், நரேந்திர மோடி அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சிக்கிறது என்றால், அதற்குப் புதுடெல்லி மீது ஒரு பயம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்று தான் அர்த்தம். 

நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்ததில் தொடங்கி, அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது, பதவியேற்பு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை உடனடியாகவே ஏற்றுக் கொண்டது எல்லாமே, புதுடெல்லியுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்பும் செயலாக மட்டும் கருத முடியாது. 

நரேந்திர மோடி அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் கடும் போக்கில் நடந்து கொள்ளக் கூடும் என்று ஆய்வாளர்கள் பலரும் எதிர்வு கூறியுள்ள நிலையில், இலங்கையும் தமது அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது. 

இந்தியாவுடன் தேடிச் சென்று ஒட்டிக் கொள்ளும் இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறை, தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள தமிழர் தரப்புக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனால், தேர்தல் முடிவினால் மகிழ்ச்சியில் குதித்த இலங்கைத் தமிழர் தரப்புக்கு ஒருவித அச்சம் தொற்றிக் கொண்டுள்ளதையும் காண முடிகிறது.  

காங்கிரஸ் அரசாங்கத்தைப் போலவே, நரேந்திர மோடி அரசாங்கமும், இலங்கை அரசாங்கத்துடன், நெருக்கமாகி விட்டால், அது இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கலக்கம் தான் அதற்குக் காரணம். 

தமிழ்நாட்டில், பாஜகவுடன், ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளான மதிமுக, பாமக போன்றவை வைத்த கூட்டணியை பலரும் தவறாக எடை போட்டதுண்டு. அதாவது இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றே தீர்வு என்ற நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொண்டதால், பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழருக்காக தனிநாடு அமையப் பாடுபடும் என்று சிலர் தப்பான கருத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளுடன் பாஜக வைத்துக் கொண்டது வெறும் தேர்தல் கூட்டணியேயாகும். 

இதில் ஒரு கட்சியின் கொள்கை, இன்னொரு கட்சியின் மீது திணிக்கப்பட வாய்ப்பில்லை. தேர்தலுக்கு முன்னரே, இலங்கைத் தமிழருக்குத் தனிநாடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை பாஜக ஆதரிக்காது என்று உறுதியாக அறிவித்து விட்டது. ஆனால், இலங்கைத் தமிழர் நலனில் தமக்குள்ள அக்கறையை அது ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. 

நரேந்திர மோடி அரசாங்கம் தமிழருக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்து விடும் என்ற கவலை இலங்கைக்கு ஒருபோதும் இல்லை. ஆனால், 13வது திருத்தச்சட்ட விவகாரத்திலும், சீனா, பாகிஸ்தான் நம்புறவு விவகாரத்திலும், மீனவர் பிரச்சினையிலும், இந்த அரசாங்கத்தினால் இலங்கைக்கு தலைவலிகள் ஏற்படவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. 

ஏனென்றால், மன்மோகன்சிங் அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், புதுடெல்லியின் விருப்புக்கேற்றவாறு இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை. அது இருதரப்பு உறவுகளில் ஒருவித வெளியை ஏற்படுத்தி விட்டது. ஆனால், அந்த வெளியைத் தொடர்ந்தும் பேண அரசாங்கம் விரும்பவில்லை. ஏனென்றால், அந்த வெளி தமக்கு ஆபத்தானதாகி விடும் என்றுணர்வதால் தான், இப்போது நெருக்கத்தை ஏற்படுத்த முனைகிறது. 

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதற்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்ற புதுடெல்லியின் கருத்து கடந்த காலங்களில் வெறும் வாய்ப் பேச்சாகவே முடிந்து போனது. வெளிநாட்டு உறவுகளில், வெறும் வாய்ப்பேச்சு அணுகுமுறை என்பது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கு இந்த விவகாரமே சிறந்த உதாரணம். 

தேவைப்படும் போது அழுத்தங்களைப் பிரயோகிப்பதும், பொருத்தமான இடத்தில் இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வதும், அவசியமான இடங்களில் அமைதி காப்பதும், தேவையான இடங்களில் கொந்தளிப்பதும் இராஜதந்திரத்தின் முக்கிய அம்சங்கள்.. 

எப்போதுமே, மென்போக்கு இராஜதந்திரம் பலவீனமானதாகவே எடை போடப்படும்.  மன்மோகன்சிங் அரசாங்கம் அவ்வாறு தான் எடை போடப்பட்டது. அதனால் தான், இந்தியாவின் சொல் அம்பலமேறவில்லை. ஆனால் அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்திக் கொள்ள நரேந்திர மோடி அரசாங்கம் தயாராக இல்லை. 

இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளெல்லாம் இந்தியாவுக்கு வாலாட்டுவதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையே காரணம் என்று தேர்தல் பிரசாரங்களில் முழங்கியவர் தான் மோடி. எனவே அவரும் மன்மோகன்சிங் அரசின் மென்மையான இராஜதந்திரத்தை கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. 

போர் முடிவுக்கு வந்தவுடன், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. 

போருக்குப் பின்னர் கூட, இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஸ்ணா, பாஜக தலைவர் சுஸ்மா சுவராஜ் போன்றோரிடம் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13 பிளஸ் குறித்து வாக்குறுதி கொடுத்து விட்டு, அப்படி எதுவும் அவர் கூறவில்லை என்று கூறியது இந்த அரசாங்கம். இதுபோன்ற ஏமாற்றுத்தனங்களோ, 13வது திருத்தச்சட்ட அமுலாக்கம் தொடர்பான இழுத்தடிப்புகளோ நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் சீனா விடயத்தில், இலங்கை கொண்டுள்ள உறவுகள், புதிய இந்திய அரசாங்கத்தினால் சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கருத முடியாது. பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் பாதுகாப்பு நெருக்கம் இந்தியாவை ஏற்கனவே சந்தேகம் கொள்ள வைத்து விட்டது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பையும் மீறி இராணுவ ஆதிக்கம் அரசாங்கத்தில் உள்ளது. 

நவாஸ் ஷெரீப் போன்ற அரசியல் தலைவர்கள் இந்தியாவுடன் உறவை ஏற்படுத்த விரும்பினாலும், இத்தகைய இராணுவ சக்திகள் அதற்கு இடம்கொடா. எனவே, கொழும்புக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவை இந்தியா அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளாது. 

மேலும் சீனா விவகாரத்தில், இலங்கை கிட்டத்தட்ட அதன் பொறிக்குள் வீழ்ந்தே விட்டது. இனிமேல் சீனாவின் பொருளாதாரப் பொறியில் இருந்து இலங்கை வெளியேறி வருவது முடியாத காரியம். 

இதனால், இப்போது சீனா எந்த திட்டத்தை முன்வைத்தாலும், அதற்குத் தலையாட்டத் தொடங்கி விட்டது இலங்கை.அண்மைக்காலங்களில், சீனா முன்வைத்துள்ள கடல்வழிப் பட்டுப் பாதை திட்டம், ஆசிய பாதுகாப்புக்கான பொறிமுறைத் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு மாற்றான, ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி உருவாக்கம் என்பனவற்றுக்கெல்லாம் இலங்கை தலையாட்டி நிற்கிறது

.இவை இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சவால் விடக்கூடிய சீனாவின் திட்டங்களாகும்.இவற்றுக்கு இலங்கையும் துணை நிற்பதை புதுடெல்லி எந்த வகையிலும், சாதகமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் என்று தோன்றவில்லை.அதேவேளை இந்தியாவின் புதிய அரசுக்காக, சீனாவையோ பாகிஸ்தானையோ கைவிட்டு வரக்கூடிய நிலையில் இலங்கையும் இல்லை. 

இது இலங்கைக்கு மிகப்பெரிய சிக்கலைக் கொடுக்கப் போகின்றது. 

என்றாலும், புதுடெல்லி மீது தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்தும் நிலை இல்லாமல் போய் விட்டதாக இலங்கை தப்புக் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டை ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தமிழ்நாட்டின் 37 ஆசனங்களைப் பிடித்துள்ள அதிமுகவுடன் நட்பு பாராட்டவே நரேந்திர மோடி அரசாங்கம் விரும்பும். 

ஏனென்றால், ராஜ்யசபையில், பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது. அதை பெறுவதற்கு பிராந்தியக் கட்சிகளின் தயவு பாஜகவுக்குத் தேவை. எனவே, புதுடெல்லி மீது முழுமையான கடிவாளம் நீங்கி விட்டதாக எவரும் கருத முடியாது. 

அதைவிட, இலங்கை அரசாங்கத்துடன் நட்புறவு கொள்வதற்காக, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களைப் புறக்கணிக்க பாஜக முனையாது. ஏனென்றால், ஏனைய வடமாநிலங்களில் பாஜகவின் ஆதிக்கம் வளர்ந்துள்ள போதிலும், தமிழ்நாடு, கேரளா போன்றவற்றில் கட்சியை வளர்க்க வேண்டிய தேவை அதற்கு உள்ளது. எனவே தமிழ்நாட்டின் உணர்வுகளை புதுடெல்லி புறக்கணிக்கும் என்ற இலங்கை அரசின் குதூகலம் நீண்டகாலத்துக்கு நிலைக்குமா என்பது சந்தேகம் தான். 

பாஜக அரசாங்கம் இலங்கைத் தமிழர்களுக்கு பெரிதாக அள்ளிக் கொடுத்து விடப் போகிறது என்று எதிர்பார்ப்பதற்கும் இல்லை, அதேவேளை மோசம் செய்து விடும் என்று அச்சுவதற்குமில்லை. ஆனால், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி அரசாங்கத்தையிட்டு நித்திய கண்டமாகவே காலத்தை கழிக்க வேண்டியிருக்கும்.


நன்றி *அகரம் ஜேர்மனி

No comments:

Post a Comment