Follow by Email

Saturday, 28 June 2014

புலிகளின் இன்னொரு முகம் -33

ன்னைப் புலிகள் கடத்தி மூன்று கிழமைகளுக்கு மேலாகிவிட்ட போதிலும், என்ன காரணத்துக்காக என்னைத் தாங்கள் கடத்தினோம் என்பதை இதுவரை புலிகள் தெரிவிக்கவில்லை. 

குறிப்பான காரணங்கள் எதுவும் இல்லாமல் தங்களுடைய அரசியல் எதிரி என்ற காரணத்துக்காகக் கடத்துவதானால், அவர்கள் என்னை எப்பொழுதோ கடத்தியிருக்க வேண்டும். 

அன்ரனை (விவேகானந்தன்) புலிகள் கடத்தியவுடன் அப்படி ஒரு எதிர்பார்ப்பில் நான் இருந்தேன். பின்னர் செல்வி, தில்லை போன்றோரைக் கடத்திய நேரத்திலும் நான் அதனை எதிர்பார்த்தேன். அப்படியில்லாமல் இதுநாள்வரை விட்டு வைத்துவிட்டு, இப்பொழுது திடீரெனக் கடத்துவதானால் நிச்சயமாக ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

கடந்து இந்த மூன்று வாரங்களிலும் வதை முகாம் வாழ்க்கையில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஒரேயொரு மாற்றம், துணுக்காய் வதை முகாமில் வைக்கப்பட்ட நாலாயிரம் பேரும் பெரிய விசாரணைகள் எதுவும் இல்லாமல் கொல்லப்பட்டது போல இல்லாமல், இங்கு விசாரித்து விசாரித்துக் கொல்கிறார்கள். அவ்வளவுதான். 

அந்த கெட்ட நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு கைதியும் நடுக்கத்தில் தவித்தனர். புலிகள் பார்வையில் மிகக் குறைந்த குற்றங்கள் செய்தவர்கள் என்று புலிகளால் கருதப்படுவோரை மட்டும் தாம் நடாத்தி வந்த ‘பண்ணை’ (திறந்தவெளிச் சிறைச்சாலை) ஒன்றுக்கு அனுப்பி கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாக சிறைக்குள் இருந்த சில புலி உறுப்பினர்கள் மூலம் அறிய முடிந்தது.

சாப்பாட்டைப் பொறுத்த வரையிலும், குளிப்பு முழுக்கைப் பொறுத்த வரையிலும் பழைய பல்லவிதான். அதே வெள்ளைப் பச்சரிசி சீனிப் பொங்கல்தான் மூன்று வேளை உணவு. சில வேளைகளில் அதுவும் இரண்டு வேளைகளாகக் குறைந்துவிடும். 

குளிக்கும் போது பாவிப்பதற்கென அங்கிருந்த அவ்வளவு பேருக்குமாக மாதத்துக்கு ஒரேயொரு ‘லைப்போய்’ சோப் வழங்கப்படும். தண்ணீர் வந்தால்தானே குளிக்க முடியும்! எனவே புலிகள் கருதியது போல அந்த ஒரு சவர்க்காரம் ஒரு மாதத்துக்குத் தாராளமாகப் போதும்!!

நான் இரவில் தூக்கத்தைத் தொலைத்து வெகுநாட்களாகிவிட்டன. வீட்டாரைப் பற்றிய கவலை ஒருபுறம். இன்னொருபுறம் அடுத்த நாள் விசாரணையில் என்ன கேட்கப்போகிறார்கள் என்ற யோசனையே மேலோங்கி நிற்கும். அந்த மன உளைச்சலால் நான் மட்டுமின்றி விசாரணையில் இருக்கும் கைதிகள் அனைவரும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்காமல்தான் இருப்பார்கள். 

நித்திரை கொள்ளும் சிலர் கூட பயங்கரக் கனவுகளைக் கண்டுவிட்டு நள்ளிரவில் வீரிட்டுக் கத்துவது சர்வசாதாரணம். அதில் “ஐயோ அடிக்காதையுங்கோ” என்று கத்திக் குளறுவது தான் நான் அங்கிருந்த காலத்தில் பல தடவைகள் கேட்ட ஒர் ஓலம். இரவின் அந்தகாரத்தில் இந்த கெட்ட கனவுகளின் ஓங்காரம் மரண தேவதையை பக்கத்தில் நிறுத்தி வைப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும்.

எனது விசாரணை இன்னமும் முடிவடையாத படியால், என்னுடன் பெரும்பாலான கைதிகள் மனம் விட்டுப் பழகப் பயந்தனர். இருப்பினும் அவர்கள் என்னுடன் கதைப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறார்கள் என்பது, அவர்கள் என்னைப் பார்த்து அன்புடனும் வாஞ்சையுடனும் புன்னகைப்பதிலிருந்து புரிந்தது. சிலர் பட்டும் படாமல் சாதாரண விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

நான் அங்கிருந்த எல்லோருடனும் கதைத்திருக்காவிட்டாலும், அங்கிருந்தவர்களில் முக்கியமானவர்களில் சிலரைப்பற்றி படிப்படியாக அறிந்து கொண்டேன். அப்படி அறிந்த நேரத்தில் தான் ‘புளொட்’ இயக்கத்தில் இருந்து பிரிந்து ‘தீப்பொறி’ இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும், சந்ததியாரின் மரணத்தின் பின்னர் அந்த இயக்கத்தை தலைமைதாங்கி நடாத்தியவருமான நோபேர்ட் (கேசவன், கோவிந்தன் என்பது அவரது ஏனைய பெயர்கள்) அங்கிருப்பதை அறிந்தேன். முதல்நாளே அவர் என்னைப் பார்த்து புன்னகைத்ததின் மர்மம் பின்னர்தான் தெரிந்தது.

நோபேர்ட்டை அதற்கு முன்னர் நான் ஒருபோதும் நேரடியாகச் சந்தித்திருக்கவில்லை. ஆனால் அவர் கண்டியிலிருந்து எமது தோழர்கள் சிலரால் சிறிது காலம் வெளியிடப்பட்ட ‘தீர்த்தக்கரை’ என்ற தரம் வாய்ந்த இலக்கிய சஞ்சிகைக் குழுவில் இருந்த போது கேள்விப்பட்டிருந்தேன். 

அவர் திரிகோணமலையில் அரச சேவையில் (கல்வி இலாகா என்று நினைவு) கடமையாற்றிய காலத்தில், அங்கு நீர்ப்பாசன இலாகாவில் கடமையாற்றிய எமது தோழர் ஒருவருடன் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தது.

அந்த நெருக்கமான தொடர்புகள் காரணமாக அவர் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டு, என்னைச் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். நான் ஒருமுறை அரசியல் கூட்டமொன்றுக்காக திரிகோணமலை சென்றிருந்த சமயம் சந்திக்க முயன்றும் அவர் கொழும்பு சென்றிருந்தபடியால் சந்திக்க இயலாமல் போய்விட்டது. 

பின்னர் ஒருமுறை திரிகோணமலையில் கடமையாற்றிய எமது தோழர் யாழ்ப்பாணம் வந்திருந்த நேரத்தில் நோபேர்ட்டும் அங்கு வந்திருந்தபடியால், யாழ்.கலட்டியிலிருந்த அந்தத் தோழரின் வீட்டில் நோபேர்ட்டை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக நான் அந்தத் தோழரின் வீட்டிற்குச் சென்று நீணட நேரம் காத்திருந்த போதும் அன்று அவர் வரவில்லை. ஏதோ சில வசதியீனங்களால் வரமுடியாமல் போய்விட்டதாகப் பின்னர் தகவல் அனுப்பியிருந்தார்.

எனவே இப்பொழுதுதான் எதிர்பாராத இடத்தில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம். சந்தித்தாலும் கண்களால் ஒருவரையொருவர் பார்த்தோமேயொழிய கதைக்கும் சூழல் இன்னமும் உருவாகியிருக்கவில்லை. நான் அவரை முதன்முதலில் கண்ட பொழுது, அவரின் முதுகு முழுவதும் புலிகளால் நடாத்திய அடி காயங்களின் தழும்புகள் நிறைய இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன். அதேநேரத்தில் எனது முறையும் இனி வரத்தானே போகிறது என எண்ணி கவலை அடைந்தேன்.

இந்த தோழர் நோபேர்ட், கோவிந்தன் என்ற புனைபெயரில் எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் அன்றைய காலகட்டத்தில் பலராலும் வாசிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த நாவல் புளொட் இயக்கத்தின் உள் முரண்பாடுகள் குறித்தும், இயக்கத்துக்குள் நிகழ்ந்த வேண்டத்தகாத பல்வேறு சம்பவங்கள் குறித்தும் பேசியதால், அந்த நாவலை புலிகள் உட்பட மற்றைய இயக்கத்தவர்கள் மட்டுமின்றி, புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வாங்கி வாசித்தது எனக்குத் தெரியும். 

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்த எனது கடையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான அந்த நாவலின் பிரதிகளை நான் விற்பனை செய்திருக்கிறேன். புளொட் இயக்கத்தினர் அந்த நாவலை விரும்பாத போதிலும், நான் அதை விற்பனை செய்ததைத் தடுக்க முற்படவில்லை. (இந்த நாவலின் இரண்டாவது பதிப்பு நோபேர்ட் புலிகளால் கொல்லப்பட்ட பின்பு இந்தியாவில் வெளிவந்துள்ளது)

நோபேர்ட் புலிகளால் கடத்தப்பட்ட பொழுது நான் வெளியில் இருந்தேன். உண்மையில் அவரது கடத்தல், தமது பாதுகாப்பு சம்பந்தமாக அவர்கள் கொண்டிருந்த அசட்டையின் ஒரு விளைவு என்று அப்பொழுது கேள்விப்பட்டிருந்தேன். 

அவரது இயக்கத்தைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவனான கைதடியைச் சேர்ந்த தர்மலிங்கம், சுந்தரம் மருந்துக்கடை உரிமையாளரின் மகன் யோகசுந்தரம் (யோகன்) ஆகியோர் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர், புலிகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் மிகவும் இறுக்கமாக இருந்த ஒரு சூழலில், மிகவும் பிரயத்தனம் எடுத்து தமது இயக்கத்தவர்களைச் சந்தித்து நிலைமையை ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த போதே நோபேர்ட் கடத்தப்பட்டார்.

நோபேர்ட் கொக்குவிலில் தங்கியிருந்த வீட்டினைச் சேர்ந்த ஒரு சிறுவன் புலிகளுக்குக் கொடுத்த தகவலின் பேரிலேயே நோபேர்ட் கடத்தப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் ஆட்களை அழைத்து சந்திப்புகள் நடாத்தியது அந்தச் சிறுவனுக்கு வித்தியாசமாக இருந்ததால், அவன் அதைப் புலிகளுக்குத் தெரியப்படுத்தியதால் இந்த விபரீதம் நடந்துள்ளது. 

அந்தச் சிறுவன் அதை திட்டமிட்டுச் செய்தானா அல்லது எதேச்சையாகச் செய்தானா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் புலிகள் சிறுவர்களை போராளிகளாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அவர்களை தமது உளவாளிகளாகவும் பல இடங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு பல சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன.

நோபேர்ட்டின் கடத்தல் எனக்கு சேகுவேராவின் கைதைத்தான் அந்த நேரத்தில் ஞாபகப்படுத்தியது. சே கியூபாவை விட்டு வெளியேறி பொலிவியப் புரட்சிவாதிகளுடன் இணைந்து அந்நாட்டில் புரட்சியை உண்டு பண்ணுவதற்காகத் தங்கியிருந்த போதுதான் கைதுசெய்யப்பட்டார். அவரையும் அங்கிருந்த சாதாரண மக்களில் ஒருவன்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

நோபேர்ட்டுடன் அந்த நேரத்தில் கதைக்க முடியாவிட்டாலும், பின்னர் நாம் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. குறிப்பாக, நாம் வைக்கப்பட்டிருந்த அந்த ஆனைக்கோட்டைச் சிறையிலிருந்து பின்னர் நாவற்குழி பகுதியிலிருந்த கோவிலாக்கண்டியில் புலிகள் அமைத்திருந்த திறந்தவெளிச் சிறைச்சாலையில் இருந்த ஓராண்டு காலத்தில் நாம் மிக நெருக்கமாகப் பழகவும், பல்வேறு விடயங்களையிட்டுக் கலந்துரையாடவும் முடிந்தது. இறுதியில் அவருக்கு நடந்த சோக முடிவு குறித்து சந்தர்ப்பம் வரும் பொழுது எழுதுவேன்.

அந்தச் சிறைச்சாலையில் நான் கண்ட இன்னொருவர், ஒரு காலத்தில் எம்மால் மிகவும் வெறுக்கப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை ஆகும். 

பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய தமோதரம்பிள்ளை, முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை புலிகள் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்து சுட்டுப்படுகொலை செய்தது சம்பந்தமாக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டவர்களில் ஒருவராவார். 

அந்தக் கொலைச் சம்பவத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் பங்குபற்றியிருந்தார். (பிரபாகரன் பங்குபற்றியிருந்தாலும், அவர் சுடவில்லை என்றும், தனது கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோடா பெட்டிகளின் மறைவில் நடுங்கும் கரங்களுடன் கையில் ஒரு பிஸ்டலுடன் அவர் நின்றிருந்தார் என்றும், அந்தக் கோவிலின் அருகே தேநீர்க்கடை வைத்திருந்த ஒருவர் சொன்னதாக பின்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன)

துரையப்பா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கில் தங்கள் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்வதற்கு தாமோதரம்பிள்ளை அதீத முயற்சி எடுத்தமையே அவர் புலிகளால் கடத்தப்பட்டமைக்கான காரணமாகும். நான் அவரைச் சிறைக்குள் கண்டபொழுது அடையாளம் பிடிக்க முடியவில்லை. 

ஏனையவர்கள் சொல்லித்தான் ஓரளவு ஊகிக்க முடிந்தது. பொலிஸ் சேவையிலிருந்த போது மிகவும் கம்பீரமாக இருந்து பலரைப் ‘பதம்’ பார்த்த தமோதரம்பிள்ளை, அவரின் அப்பனுக்கும் அப்பனான புலிகளின் பிடியில் சிக்கிய பின்னர், புலிகளால் ‘துவைக்கப்பட்டு’ சிதிலமாகிப் போய் இருந்தார். 

அங்கு நான் அவரைக் கண்டபொழுது அவர் மனம் பிறழ்ந்த நிலையிலேயே இருந்தார். யாருடனும் பேசமாட்டார். அநேகமான நேரங்களில் அந்தச் சிறிய ஹோலுக்குள் முன்பக்கமிருந்து பின்னுக்கு நடந்த வண்ணம் இருப்பார்.

இந்த இன்ஸ்பெக்டர் தமோதரம்பிள்ளையுடனான எமது கணக்கு வழக்கு புலிகள் தோன்றுவதற்கு முன்னரானது. அது 1960களில் தோன்றிய ஒன்றாகும். அப்பொழுது எமது கட்சி ஆரம்பித்த வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் 1966 – 70 காலப்பகுதியில் வடபகுதி முழுவதும் தீண்டாமைக்கும் சாதி அமைப்புக்கும் எதிரான போராட்டத்தை பெரிய அளவிலும் எழுச்சியுடனும் முன்னெடுத்து வந்தது. 

ஆலயப் பிரவேசம், தேநீர்க்கடைப் பிரவேசம், பொது இடங்களிலுள்ள கிணறுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் அள்ளுதல் என, அந்தப் போராட்டம் வட பகுதியெங்கும் தீச்சுவாலையாகசக் கொழுந்துவிட்டுச் சுழன்றடித்தது. 

அந்தப் போராட்டத்துக்கு எதிராக அந்த நேரத்தில் இரண்டு ‘வில்லன்கள்’ தோன்றினார்கள். ஒருவர் பிரசித்தி பெற்ற மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டத்துக்கு எதிராகச் சாதி வெறியர்களையும், குண்டர்களையும் திரட்டி வைத்துக்கொண்டு, மாவிட்டபுரம் கந்தசாமி கோவிவில் நின்று ஆலயப் பிரவேசம் செய்ய வந்த தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி அட்டகாசம் செய்த முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், அடங்காத் தமிழர் முன்னணியின் தலைவரும், ஓய்வுபெற்ற கணிதப் பேராசிரியருமான சி.சுந்தரலிங்கம்.

மற்றையவர் அப்பொழுது சங்கானை பொலிஸ் நிலையத்தில் சார்ஜனாகப் பணியாற்றிய தாமோதரம்பிள்ளை. அவர் தடித்த சாதி வெள்ளாளரும் சாதி வெறியருமாக இருந்தார். 

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் சங்கானைப் பகுதியிலிருந்த நிச்சாமம் கிராமம் ஆரம்பம் முதல் முன்னணியில் நின்றதால், அங்கு சாதி வெறியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் பல மோதல்கள் நிகழ்ந்ததுடன், சில உயிர்ச்சேதங்களும் கூட இரு பகுதியிலும் ஏற்பட்டன. அதனால் அங்கு எப்பொழுதும் ஒரு பதட்ட நிலை இருந்து வந்தது.

ஆனால் பதட்டத்தைத் தணித்து சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவேண்டிய பொலிஸார், சாதி வெறியர்களின் பக்கம் நின்றுகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல துன்புறுத்தல்களைச் செய்தனர். சில பொலிஸ் நிலையங்களில் சிங்களவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக இருந்த போதிலும், அங்கு இரண்டாம் நிலையில் கடமையாற்றிய தமோதரம்பிள்ளை போன்றவர்கள் சிங்களப் பொறுப்பதிகாரிகளையும் மீறி தாம் நினைத்தபாட்டுக்குச் செயற்படும் ஒரு சூழல் இருந்தது. 

அந்த நிலைமைக்கு ஒரு காரணம், அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் பங்காளிகளாக இருந்தமையாகும். வட பகுதியின் உயர்சாதி மேட்டுக்குழாமினரின் பிரதிநிதிகளாக அன்றும் இன்றும் இருந்து வரும் இவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்ங்களை ஒடுக்குவதில் அர இயந்திரத்தின் ஒரு பகுதியான பொலிஸாரை – குறிப்பாக தமிழ் பொலிஸாரை அந்த நேரத்தில் பயன்படுத்திக் கொண்டனர். 

அதிலும் நிச்சாமம் கிராமமும், தமோதரம்பிள்ளை பணியாற்றிய சங்கானை பொலிஸ் நிலையமும் தமிழரசுக் கட்சியின் பெரும் தூண்களில் ஒருவரான வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் தொகுதியில் இருந்ததால், அதே கட்சியின் தீவிர ஆதரவாளரான தமோதரம்பிள்ளை போன்றவர்கள் தாம் நினைத்தபடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக வெறியாட்டம் ஆட முடிந்தது.

தமோதரம்பிள்ளை அந்த நேரத்தில் தான் கைதுசெய்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்து விரும்பியவாறு அடித்து நொருக்கினார். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது வழங்க வேண்டிய உணவோ தேநீரோ கூட வழங்காமல் பார்த்துக் கொண்டார். தண்ணீர் தாகத்தால் தவித்த அந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் கேட்ட பொழுது, தமோதரம்பிள்ளை செய்த ஈனச்செயல் அங்கு பணியாற்றிய சிங்களப் பொலிசாரையே வெட்கித் தலைகுனிய வைத்தது. 

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment