Follow by Email

Monday, 2 June 2014

புலிகளின் இன்னொரு முகம் -32

நான் இங்கு குறிப்பிடும் செல்லத்துரை என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு முன்னால் நான் வைத்திருந்த கடைக்கு வந்த நேரத்தில் அறிமுகமானவர். 

மிகவும் தோழமையுடனும் அந்நியோன்யமாகவும் பழகுபவர். பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற செல்வி, தில்லை உட்பட பல்வேறு இயக்க சார்பானவர்களுடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். 

நான் அவருடன் அறிமுகமான சமயத்தில் அவர் ஈரோஸ் இயக்கத்துடனா அல்லது புளொட் அமைப்புடனா வேலை செய்து கொண்டிருந்தார் என்பது இப்பொழுது எனக்கு சரியாக ஞாபகமில்லை.

அந்தக் காலகட்டத்தில் செல்லத்துரை தனது தனிப்பட்ட முயற்சியால் ‘வழி’ என்றொரு சஞ்சிகையை வெளியிட்டார். இரண்டு இதழ்கள் மட்டுமே அது வந்தது என்று நினைக்கிறேன். இரண்டு இதழ்கள் என்றாலும் காத்திரமான கருத்துக்களை அது தாங்கி வெளிவந்தது. 

குறிப்பாக புலிகள் இயக்கத்தை தயவு தாட்சணியமில்லாமலும், துணிவாகவும் விமர்சனம் செய்தது. குறிப்பாக புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறை கடத்தல்கார மாபியாக்களின் பின்னணியில் உருவான இயக்கம் என்ற அர்த்தத்தில் அந்தக்காலத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது. இவ்வாறு வெளிப்படையாக ஆரம்பத்திலேயே விமர்சித்த பத்திரிகை அதுதான் என்று நினைக்கிறேன்.

அந்தப் பத்திரிகையை அவ்வாறான ஒரு தொனியில் வெளியிட்டமைக்காக செல்லத்துரைக்கு புலிகளால் நிச்சயமாக நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இந்த நிலைமையில் அடிக்கடி யாழ்.பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் காணப்படும் செல்லத்துரையை சிறிது நாட்களாகக் காண முடியவில்லை. நான் பலரிடம் விசாரித்தும் அவர் எங்கு போனார் என்பதை அறிய முடியவில்லை. புலிகளால் அவருக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சம் எம்மில் சிலருக்கு இருந்ததே எமது கவலைக்குக் காரணம்.

இந்த நிலைமையில் சில மாதங்கள் கழித்து, பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்த எனது கடை முகவரிக்கு (முகவரி சரியாக எழுதப்படவில்லையென்ற போதிலும் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் உள்ள புத்தகக்கடை எனப் போட்டதால் அது எனது கைக்கு வந்து சேர்ந்துவிட்டது) ஒரு கடிதம் வந்தது. 

அது கனடாவிலிருந்து வந்தபடியால், யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மலையகம் தெல்தோட்டையைச் சேர்ந்த தோழர் சி. இராதாகிருஸ்ணனின் கடிதமாக இருக்கும் என நினைத்தேன். 

அதற்குக் காரணம், தோழர் இராதாகிருஸ்ணன் யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்ற காலத்தில் என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி, எமது கட்சியின் ஒர் ஆதரவாளராக மாறியவர். அவர் மட்டுமின்றி ஜே.வி.பியின் 1988 – 89 இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் கொழும்பில் வைத்துக் காணாமல் போன இராதாகிருஸணனின் அண்ணன் வெள்ளாந்துரையும் எம்முடன் நெருக்கமாக இருந்த ஒருவர். எனக்குத் தெரிந்தவரை தோழர் இராதாகிருஸ்ணனே அப்பொழுது கனடாவிலிருந்து என்னுடன் தொடர்பில் இருந்த ஒரே நபர்.

ஆனால் கடிதத்தைத் திறந்து படித்துப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன். மிகவும் சுருக்கமான அந்தக் கடிதத்தில், ‘அண்ணை நான் கனடா வந்து சேர்ந்துவிட்டேன். 

இங்கு உங்களுக்கு என்ன உதவி தேவையென்றாலும் எனக்கு அறியத் தரவும்’ என்ற சாரப்பட அந்தக் கடிதத்தில் செல்லத்துரை எழுதியிருந்தார். நண்பர் செல்லத்துரையின் இந்தக் கடிதத்தில் எனக்கு ஆச்சரியமானதும், பிடித்துப் போனதுமான விடயமென்னவெனில், எனது பல வருட அரசியல் வாழ்க்கையிலும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் கடை நடாத்திய காலத்திலும் பல்லாயிரக்கணக்கானோருடன் நான் பழகியிருக்கிறேன். அவர்களில் சிலருடன் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். 

சிலர் திருநெல்வேலியில் நான் எடுத்து வைத்திருந்த வீட்டில் நாள் கணக்காகத் தங்கிக்கூட இருந்துள்ளனர். (யாழ்ப்பாணத்தில் அன்ன சத்திர ஒழுங்கை என்றொரு வீதி இருக்கிறது. எனது வீடு உண்மையில் ஒரு அன்னசத்திரமாக இருந்ததையிட்டு இப்பொழுது நினைத்துப் பெருமைப்படுகிறேன்) ஆனால் பிற்காலத்தில் அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்களில் எமது கட்சி ஆதரவாளர்கள் ஒருசிலரைத் தவிர வேறு எவரும் என்னுடன் தொடர்பு கொண்டது கிடையாது. அப்படியிருக்க எமது கட்சியல்லாத, என்னுடன் நட்புடன் பழகிய ‘தோசத்துக்காக’ இந்த செல்லத்துரை என்னை நினைத்து கடிதம் எழுதியதுடன், ‘என்ன உதவி வேண்டும்’ என்றும் கேட்டு எழுதியதை நினைக்க இன்றும் எனது மனம் நெகிழ்ந்து போகிறது.

செல்லத்துரை எழுதிய அந்தக் கடிதமும் நான் தில்லையிடம் பாதுகாப்புக்காகக் கொடுத்த ‘பொக்கிசத்தில்’ அடங்கியிருந்தது. இப்பொழுது அது சிவரஞ்சித்தின் கடிதத்துடன் சேர்ந்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கைகளில் இருக்கிறது. 

பின்னர் சொல்லவும் வேண்டுமா, புலிகளது கொண்டாட்டத்துக்கு. மேற்படி இரு நண்பர்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள அந்தரங்கத் தொடர்புகளின் முடிச்சுகளை அவிழ்க்கும்படி, காந்தி பல நாட்களாக என்னை சொல்லாலும் பொல்லாலும் வாட்டி எடுத்துவிட்டான். 

எனக்கு உண்மையில் அவர்கள் இருவருடனும் வேறு எந்தப் பிரத்தியேகத் தொடர்புகளும் இல்லாதபடியால், நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனது ஒரே பதிலால் எரிச்சலும் ஆத்திரமும் அடைந்த காந்தி, “என்னடா எங்களுக்குச் சுத்திறியா?” என்ற ஒரே வசனத்தையே அவனும் திரும்பத் திரும்பச் சொல்லி ‘பின்னி’ எடுத்துவிட்டான். அந்தக் கண்டத்திலிருந்து தப்பவும், அதனால் ஏற்பட்ட ‘வீரத்தழும்பு’களிலிருந்தும் ‘செழும்பு’களிலிருந்தும் நான் விடுபட சில நாட்கள் ஆகிவிட்டன. இத்தனைக்கும் அந்த இரண்டு நண்பர்களினதும் கடிதங்களுக்கு நான் அந்தக்காலகட்டத்தில் நிலவிய அச்சம் காரணமாகப் பதில்கூட எழுதவில்லை.

இதுதவிர, இன்னொரு விடயத்தையும் புலிகள் தில்லையிடமிருந்து எடுத்து வைத்திருந்தனர். வடக்கில் இடதுசாரிக் கட்சிகளும் ஸ்தம்பித்து, மாற்று இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டு சூனியமாகிப்போன ஒரு சூழலில், புலிகளின் பாசிச அடக்குமுறையின் கீழ் எவ்வாறு புரட்சிகர இயக்கத்தையும், மக்கள் அமைப்புகளையும் உருவாக்கி வேலை செய்வது என எம்மில் சிலர் அடிக்கடி கூடி ஆராய்ந்து வந்தோம். 

அதற்காக ஒரு கல்வி வட்டத்தை உருவாக்கியிருந்தோம். அந்தக் கல்வி வட்டத்தில் மிகவும் நம்பிக்கையான நால்வர் மட்டும் இணைந்திருந்தோம். அவர்களில் ஒருவர் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உதவி விரிவுரையாளராக இருந்தார். இன்னொருவர் ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மற்றவர் புங்குடுதீவில் பாடசாலை ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். மற்றது நான்.

நாங்கள் ருஸ்ய புரட்சிக் காலத்தில் லெனின், ஸ்டாலின் போன்றோர் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் எவ்வாறு இரகசியக் கட்சி அமைப்புகளை உருவாக்கியதுடன், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் போராட்டத்துக்கு அணி திரட்டினார்கள் என்பதை முதலில் ஆராய்ந்தோம். 

அத்துடன் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரின் நாஜிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எவ்வாறு தலைமறைவு இயக்கங்கள் அவர்களுக்கு எதிராக வேலை செய்தார்கள் என்பதையும் பல நூல்களில் தேடிப் படித்தோம்.

எமது கருத்தின்படி இனிமேல் இடதுசாரி அரசியல் என்றாலும் சரி, தமிழ் தேசிய அரசியல் என்றாலும் சரி, இலங்கை அரசு என்ற அரைச் சர்வாதிகார ஆட்சியை மட்டுமின்றி (அந்த நேரத்தில் பாசிசப் போக்குள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐ.தே.கவின் ஆட்சியின் தொடர்ச்சியாக இன்னொரு சர்வாதிகாரப் போக்குள்ள பிரேமதாசவின் ஆட்சி வந்திருந்தது), முழுப் பாசிச அமைப்பான புலிகளை எதிர் கொள்வது (அதுவும் எமது சொந்தப் பிரதேசத்தில்) பெரும் பிரச்சினையாக இருந்தது.

எனவே வெளிநாடுகளில் பாசிச – சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக எப்படி வேலை செய்தார்கள் என்ற அனுபவம் எமக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. 

எல்லாவற்றையும் திரும்பப் புதிதாக ‘அ’விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என நாம் கருதினோம். நாம் இருந்த சூழலில் அறுபதுகள் எழுபதுகளில் கிராமப்புற விவசாயிகளிடம் சென்று வேலை செய்தது போன்று செய்ய முடியாத நிலை இருந்ததாலும், எங்களில் மூவர் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பவர்களாக இருந்த காரணத்தாலும், மாணவர்களிடமிருந்தே எமது வேலையை ஆரம்பிப்பது எனத் தீர்மானித்தோம். 

மாணவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு வசதியாக புலிகள் சந்தேகப்படாத வகையில், விஞ்ஞானம், அறிவியல், கலை இலக்கியம் சார்ந்து ஒரு சஞ்சிகையை மாதாமாதம் வெளியிடுவது என்று தீர்மானித்தோம். 

அந்தச் சஞ்சிகைக்கு ‘துளிர்’ எனப் பெயரிடுவது எனவும் தீர்மானித்துக் கொண்டோம். (இவ்வாறான ஒரு சஞ்சிகையை ‘அறிவொளி’ என்ற பெயரில் பல்கலைக்கழகங்களிலிருந்த எமது கட்சிக்குச் சார்பான விரிவுரையாளர்கள் 1960களில் வெளியிட்டதுடன், அது எமது மாணவப் பருவத்தில் எம்மை மிகவும் ஆகர்சித்த ஒரு சஞ்சிகையாகவும் இருந்தது)

எமது இந்தத் திட்டங்கள் அனைத்தும் எமது சந்திப்பு சம்பந்தமான நிகழ்ச்சிக் குறிப்பேட்டில் பதியப்பட்டு, தில்லையின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதையும் புலிகள் கைப்பற்றிவிட்டார்கள். 

புலிகளைப் பொறுத்தவரை, புலிகளது ஆட்சியதிகாரத்தின் கீழ் உள்ள பகுதியில் நாம் இரகசியமாகக் கூட்டம் கூடியது முதல் தவறு. அதுமட்டுமின்றி அக்கூட்டத்தில் ஒர் அமைப்பை (கல்வி வட்டத்தை – கல்விக்கும் தேசியத் தலைவருக்கம் உள்ள எட்டாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்ததுதான்) உருவாக்கியது மகா குற்றம். அதில் மாணவர்களைக் குறி வைத்தது மகர்மகா குற்றம். 

எனவே இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் லாகூர் சதி வழக்கு, மீரத் சதி வழக்கு என பல சதி வழக்குகளை தேசபக்தர்களுக்கு எதிராக பிரித்தானிய வெள்ளை ஏகாதிபத்தியம் சோடித்து நடாத்தியது போல, எமது கல்வி வட்ட விவகாரத்தையும் புலிகள் தமக்கு எதிரான ஒரு சதியாகவே பார்த்தார்கள். பார்த்தார்கள் என்றால், அதன் தொடர்ச்சி புலிகளைப் பொறுத்த வரையில் வெள்ளை ஏகாதிபத்தியம் செய்தது போன்று நீதிமன்ற விசாரணை அல்ல என்பது, ‘தமிழ் ஈழ’த்தின் சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும்.

எனவே என்னைக் கைதுசெய்தது எதற்காக என்ற விசாரணை இன்னமும் பாதி வழி தாண்டாத நிலையில், விசாரணைக்குள் விசாரணையான இந்த கடிதங்கள் மற்றும் கல்வி வட்டம் தொடர்பான விசாரணைகள் வந்து என்னை மாபெரும் குற்றவாளியாக்கிவிட்டது. 

இதற்கே புலிகள் எனக்கு மரண தண்டனை தரக்கூடும். இருந்தாலும் காந்தி என்னவோ தெரியவில்லை சற்றுப் பொறுமையுடன் இந்தக் கல்வி வட்டம் தொடங்கப்பட்டதற்கான காரணத்தை அடுத்த நாள் என்னை தான் விசாரிக்கும் போது கேட்டான். 

அவனது வழமையான அடிதடிப் பாணியை விட்டுவிட்டு இந்த மாதிரி ஒரு அணுகுமுறையைக் கைக்கொண்டபடியால், நேற்று இரவு இது பற்றி வேறு யாருடனோ ஆலோசித்திருக்கிறான் என்பது விளங்கியது.

காந்தியின் விசாரணைகளுக்கு மத்தியில், தயாபரனின் வழமையான விசாரணையும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதுமாத்திரமின்றி இடையிடையே வேறு சிலரும் வெளியிலிருந்து வந்து அரசியல் ரீதியிலான விசாரணையும், இராணுவ ரீதியிலான விசாரணையும் செய்து கொண்டிருந்தனர். 

அவ்வாறு அங்கு ஒருமுறை சந்தித்தவன் பொட்டம்மான். இன்னொருமுறை கபிலம்மான். பின்னர் பொட்டம்மானை இரு தடவையும், கபிலம்மானை ஒரு தடவையும் சந்தித்தேன்.

தொடரும்-

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

1 comment: