Follow by Email

Saturday, 10 May 2014

புலிகளின் இன்னொரு முகம் -31

சாதாரணமாக தில்லை இரகசியங்களை வெளியிடுபவரல்ல. ஆனால் புலிகளின் கடுமையான சித்திரவதைகள் அவரை நிலைகுலைய வைத்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. நான் அவரை சிறைச்சாலைக்குள் கண்டபொழுது அவர் இருந்த கோலமும் இந்த உண்மையை ருசுப்படுத்துவதாக இருந்தது.

தில்லை கைது செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்பதாக என்னிடம் இருந்த சில முக்கியமான ஆவணங்களையும், புத்தகங்களையும் அவரது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருந்தேன். அதற்கான காரணம், சில வேளைகளில் புலிகள் என்னைக் கடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்து வந்ததுதான். 

பெரும்பாலும் எல்லா இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டுப் பாதுகாப்புத்தேடி வெளியேறிவிட்ட சூழ்நிலையில், என்போன்ற ஓரிருவர்தான் அங்கு தங்கியிருந்தோம். எனவே என்னைப் போன்றவர்கள் கூட ஏன் அங்கு இருக்க வேண்டும் என்ற சிந்தனை புலிகளிடம் உருவாகக்கூடும் என எண்ணினேன்.

என்னைக் கைதுசெய்த 1991 டிசம்பர் 26ம் திகதிக்கு ஒரு மாதம் முன்னதாக நான் கொழும்பு சென்று வந்திருந்தேன். புலிகளிடம் அனுமதி சீட்டு (பாஸ்) பெற்றே சென்றேன். 

அப்பொழுது கொழும்பு பயணம் கேரதீவு – சங்குப்பிட்டி பாதையூடாக பூநகரியைத் தொட்டே செல்ல வேண்டும். நான் சென்ற வாகனத்தைப் பூநகரில் வழிமறித்த புலிகள், அதில் பயணம் செய்தவர்களின் அடையாள அட்டைகளைத் துருவித்துருவி ஆராய்ந்ததுடன் சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்களை கூட்டிச் சென்றார்கள். அந்தப் பாதையால் வந்த எல்லா வாகனங்களிலும் இது நடந்தது.

1990ல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆதரவுடன் புலிகள் முழு வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். 

அன்றே அவர்கள் மாற்று இயக்க உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள், இந்திய அமைதிப்படையுடன் சாதாரண முறையில் பழகியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோரைக் கடத்தி தமது வதை முகாம்களில் வைக்கத் தொடங்கியிருந்தனர். 

அந்த முகாம்களில் மிகப்பெரியது துணுக்காய் வதைமுகாம். அங்கு சுமார் நான்காயிரம் பேர் வரை தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மிகச் சிலரே உயிர் தப்பிப் பிழைத்தார்கள்.

அம்புறோஸ் என்ற புலிகளின் புலனாய்வாளன் என்னுடன் ஒருமுறை கதைக்கும் போது, “நீங்கள் அதிஸ்டசாலி. நாங்கள் எங்கடை நிர்வாகங்களை ஒழுங்குபடுத்தி, முறைப்படியான சிறைச்சாலைகளை அமைச்ச பிறகு கைதுசெய்யப்பட்டிருக்கிறியள். 

அதுக்கு முதல்லை பிடிபட்டிருந்தால் துணக்காயிலைதான் கிடந்திருப்பியள்” என்று கூறினான். இப்பொழுது நான் இருக்கும் முகாமே இப்படியென்றால், துணுக்காய் முகாம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.

நான் நவம்பரில் கொழும்பு சென்ற போது புலிகள் யாழ்ப்பாணத்தில் தமக்கு எதிரானவர்களை வகைதொகையில்லாமல் கைது செய்கிறார்கள் என்ற செய்தி அங்கும் பரவி இருப்பதைக் கண்டேன். எனவே பலர் – தோழர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்கள் கூட என்னைத் திரும்பி யாழ்ப்பாணம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர். 

ஆனால் நான் இன்னொருவரைப் பிணை வைத்து புலிகளிடம் அனுமதிச் சீட்டுப் பெற்று வந்ததால், நான் திரும்பிப் போகாவிட்டால் அவரைக் கைதுசெய்து வைத்துவிடுவாhகள் என்பதால், நான் எப்படியும் திரும்பிப் போகவேண்டிய நிலையில் இருந்தேன். 

அத்துடன் எனது மனைவியையும் குழந்தையையும் யாழ்ப்பாணத்தில் தனியே விட்டுவிட்டு, நான் மட்டும் பாதுகாப்புத்தேடித் தப்பியிருக்க முடியாது. எனவே திரும்பி யாழ்ப்பாணம் சென்று, புலிகளின் கைகளில் சிக்கிக் கொண்டேன்.

புலிகளிடம் சிக்கிக்கொண்டபடியால், இனி நான் அவர்கள் எனக்கு முன்னரே கைதுசெய்த தோழர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை ஒளிக்க முடியாது. நான் எதிர்பார்த்ததிற்கு மாறாக அவர்கள் தில்லை, செல்வி போன்றவர்களைக் கைதுசெய்திருந்தபடியால், குறிப்பாகத் தில்லையுடன் நான் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து அவரிடம் நிறைய விடயங்களைக் ‘கறந்திருப்பது’ தெரிந்தது.

நான் தில்லையிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்திருந்த புத்தகங்களில் கிடைப்பதற்கரிய சில மார்க்சிசப் புத்தகங்களும் இருந்தன. அத்துடன் ஆவணங்களில் கட்சியின் முக்கிய அறிக்கைகளுடன் சில கடிதங்களும் இருந்தன. 

அதில் ஒரு கடிதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த புலிகளுக்குச் சார்பான ‘மறுமலர்ச்சிக் கழக’த்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவரஞ்சித் என்பவர் எனக்கு எழுதிய கடிதம். 

அவர் நாட்டைவிட்டு வெளியேறி நோர்வேயில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சூழலில், சாதாரணமாக என்னிடம் சுகம் விசாரித்து அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.

சிவரஞ்சித் புலிகளின் ஒரு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், அவரும் அவரது துணைவியார் ரதியும் என்னுடன் அன்புடன் பழகியவர்கள். அதற்கொரு காரணம், வழமையான புலிகளின் பாணியைவிட்டு சிவரஞ்சித் எல்லோருடனும் சகஜமாகப் பழகியமையாகும். 

சிவரஞ்சித்தின் இந்தப் போக்குக் காரணமாகவும், புலிகளின் சில கொள்கைகளுடன் அவர் ஒத்துப் போகாததாலும், புலிகளுக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, அவரை அவர்கள் ஒதுக்கி வைக்கும் ஒரு சூழலும் ஒரு கட்டத்தில் உருவானது.

சிவரஞ்சித்தை புலிகள் ஒதுக்கிய பின்னர், சிவரஞ்சித் தம்பதியினர் வாடகைக்குக் குடியிருந்த நல்லூர் பண்டாரக்குளம் வீதி வீட்டையும் புலிகள் உளவு பார்த்து வருவதாக நான் கேள்விப்பட்டிருந்தேன். 

ஒருமுறை சிவரஞ்சித்தின் துணைவியின் உறவினரான சண் என்பவர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியும் இருந்தனர். சிவரஞ்சித் மறுமலர்ச்சி கழகப் பொறுப்பகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது நெருங்கிய நண்பரான தில்லை போன்றவர்களுடன் இணைந்து இன்னொரு வெளியீட்டைக் கொண்டு வந்திருந்தார். அது புலிகளுக்குப் பிடிக்கவில்லை.

குறிப்பாக “போராட்டத்துக்குள் போராட்டம்’ என்றொரு பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். அதில் தமிழீழ தேசியப் போராட்டத்தை நடாத்துகின்ற அதேநேரத்தில், தமிழ் சமுதாயத்துக்குள் நிலவுகின்ற சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை போன்றவற்றுக்காகவும் போராட வேண்டுமென்பதே அந்தப் பிரசுரத்தின சாராம்சம். 

இந்தக் கருத்து புலிகளுக்கு ஏற்புடையதல்ல. தமிழீழம் அமைப்பதற்கான போராட்டம் நடைபெறுகையில், வேறு எந்தப் பிரச்சினைகளுக்காகவும் போராடக்கூடாது என்பதே புலிகளின் நிலைப்பாடு.

தமிழர்கள் தமிழ் தேசியத்துக்காக மட்டும்தான் போராட வேண்டும், மற்றெந்தக் கோரிக்கைகளுக்காகவும் போராடக்கூடாது என்ற கருத்தும், தமிழர்களுக்கு ஒரேயொரு அமைப்புதான் தலைமைதாங்க வேண்டும் என்ற கருத்தும், புலிகளால் உருவாக்கப்பட்து என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை முதலில் உருவாக்கியவர்கள் புலிகள் அல்ல.

தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தான் அந்தக் கருத்தின் பிதாமகர் என்பதை, இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர் மு.கார்த்திகேசன் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்தேன். 

தோழர் கார்த்திகேசன் 1940களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளை உருவாக்கும் பொருட்டு கட்சியால் அனுப்பப்பட்டு அங்கு சென்று கட்சி வேலைகளை முன்னெடுத்த போது, தொழிலாளர்களும் விவசாயிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் உரிமை மறுக்கப்பட்ட பெண்களும் தமது உரிமைகளுக்காக தமது சமூகத்துக்குள்ளேயே போராடுவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

நிலப்பிரபுத்துவ பழமைவாதத்தின் பிடியில் சிக்கிக்கிடந்த யாழ்ப்பாணத்தில் தோழர் கார்த்திகேசன் விதைத்த இந்தப் புதுமைக் கருத்துக்கள், அவரை எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் முதற் தடவையாக செல்வநாயகத்தை ஒரு பொது நிகழ்ச்சியின் போது கார்த்திகேசன் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய நிர்வாகிகளில் ஒருவர் கார்த்திகேசனை செல்வநாயகத்துக்கு அறிமுகப்படுத்திய போது, “நீங்கள்தான் தமிழர்களில் இரண்டு விதமான தமிழர்களைப் பற்றிப் பேசித்திரியும் கார்த்திகேசனா?” என செல்வநாயகம் தன்னிடம் வேண்டா வெறுப்பாகக் கேட்டதாக கார்த்திகேசன் ஒருமுறை என்னிடம் கூறினார்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்பவர்கள் தமிழ் தேசியம் மட்டும்தான் பேச வேண்டும் எனபதும், ஏகப்பிரதிநிதித்துவத் தலைமைதான் இருக்க வேண்டும் என்பதும், பிற்காலத்தில் புலிகளால் துப்பாக்கி முனையில் நடைமுறைப்படுத்தப்பட்டதே தவிர, அது புலிகளுக்கு முன்னரே அவர்களது பிதா மகர்களால் (‘தந்தை’ செல்வா) உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், அது புலிகள் அழிந்த பின்னரும் இன்றும் தொடர்கின்றது என்பதும் தான் உண்மை. 

அப்படிப் பார்க்கையில் பன்மைக் கருத்துக்களும், பல்வகைத் தலைமைகளும் நிலவுகின்ற சிங்கள சமூகத்தின் ஜனநாயகத் தன்மை, தமிழர்களுடையதைவிட பலபடி முன்னேற்றகரமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், புலிகளுக்குப் பிடிக்காத சிவரஞ்சித், எனக்கு நோர்வேயிலிருந்து எழுதிய கடிதம் தில்லையிடமிருந்து புலிகளின் கைகளுக்குக் கிடைத்ததால், காந்தி அந்தக் கடிதம் குறித்தும் எனக்கும் சிவரஞ்சித்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் துருவித்துருவி என்னிடம் விசாரித்தான். 

அவனது சந்தேகம் சிவரஞ்சித் நோர்வே சென்ற பின்னர் நான், தில்லை போன்றவர்களுடன் தொடர்பு வைத்து தங்களுக்கு எதிராக வேலை செய்கிறோம் என்பதுதான். அதில் எந்தவித உண்மையும் இல்லையென்று எவ்வளவோ நான் விளக்கியும் காந்தி அதை நம்பத் தயாராக இருக்கவில்லை.

ஆனால் சிவரஞ்சித் பின்னர் இலண்டன் சென்று வாழத் தொடங்கிய பின்னர்,IBC Radio தொடர்ந்தும் புலிகளின் அமைப்புகளுடன் சேர்ந்து வேலைசெய்ததாகவும், புலிகளுக்குச் சார்பான இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி வானொலிக்கு பொறுப்பாக இருந்ததாகவும் கேள்விப்பட்டேன். 

அங்கும் சில கட்டங்களில் புலிகளுடன் முரண்பட்டதாகவும் கூட அறிந்தேன். நான் 1993 யூன் மாதம் புலிகளின் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர், இலங்கைக்கு தனது குழந்தையுடன் வந்த சிவரஞ்சித்தின் துணைவி ரதி ஸ்ரான்லி வீதியிலிருந்த எமது புத்தகக்கடைக்கு வந்து என்னைச் சந்தித்ததுடன், யாழ்.அத்தியடி புது வீதியிலிருந்த எமது வீட்டுக்குச் சென்று எனது மனைவி மகளுடனும் அளவளாவிவிட்டுச் சென்றார். இது அந்தக் குடும்பம் என்மீது கொண்டிருந்த உண்மையான அன்பின் நிமித்தம் என எண்ணுகிறேன்.

அதேநேரத்தில் தில்லைமீது மிகவும் பிரியம் வைத்திருந்த சிவரஞ்சித், தில்லை புலிகளால் கடத்தபபட்டபோது மிகவும் மனம் நொந்து போயிருந்ததாகவும், பின்னர் தில்லை புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை அறிந்து கதறி அழுததாகவும் கேள்விப்பட்டேன். புலம்பெயர் நாடுகளில் தற்பொழுது வாழ்ந்துவரும் தில்லையுடன் பழகிய வேறுபலரும் அவ்வாறு மனம் வெதும்பியதாகவும் அறிந்தேன். 

ஆனால் என்னுடனும் தில்லையுடனும் மிகவும் நெருக்கமாகப் பழகி, தான் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் எங்கள் இருவரையும் அந்த நெருக்கடியான நேரத்தில் கொழும்புக்கு அழைத்து அளவளாவிய, பலருக்கும் பரிச்சயமான தற்போது இலண்டனில் வாழ்ந்து வருகின்ற புலிகளின் தீவிர விசுவாசியாக மாறிப்போய்விட்ட பத்மநாப ஐயர், தில்லையின் படுகொலை குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தார் என அறிய நான் பல வழிகளிலும் முயன்றும் அது முடியவில்லை. என்னுடனும் அந்தக் கொழும்புச் சந்திப்பின் பின்னர் ஒருபோதும் தொடர்பு கொண்டதும் கிடையாது. புலிகள் இயக்கத்தின் விசுவாசிகளாக இருந்த இரு வௌ;வேறான நிலைப்பாடுகளைத் தெரியப்படுத்தவே இதை இங்கு குறிப்பிட்டேன்.

தில்லையிடமிருந்து புலிகளிடம் சிக்கிய இனனொரு கடிதம், செல்லத்துரை என்ற எனது நண்பரொருவர் கனடாவிலிருந்து எனக்கு எழுதிய கடிதமாகும். செல்லத்துரையும் புலிகளுக்குப் பிடிக்காதவர் என்பதால், அந்தக் கடிதமும் எனக்குப் பெரும் தலைவலியாக (தலைமீது அடியாகவும்) மாறியது.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment