Follow by Email

Tuesday, 6 May 2014

புலிகளின் இன்னொரு முகம் -30

காந்தியின் கேள்விகளிலிருந்து ஒரு விடயம் புரிந்தது. அதாவது தில்லை மிகக் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. சாதாரணமாக புலிகளிடம் சொல்லாமல் தவிர்க்கக்கூடிய விடயங்களைக்கூட தில்லையிடம் கறந்திருக்கிறார்கள்.

இரகசிய விடயங்கள் ஏதாவது அடங்கிய எந்தவொரு கடிதத்தையும் செல்வி என்னிடம் தந்ததோ அல்லது நான் செல்வியிடம் கொடுத்ததோ கிடையாது. அப்படியிருக்க காந்தி அப்படியொரு கேள்வியைக் கேட்டதின் நோக்கம் ஓரளவு புரிந்தது.

தில்லையிடம் நான் பரிமாறிய ஒரு கடித விவகாரத்தை வைத்துக்கொண்டு, செல்விக்கும் எனக்கும் இடையிலும் கூட ஏதாவது கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்குமா என ஒரு போடு போட்டுப் பார்த்திருக்கிறான் காந்தி என்பது விளங்கியது.

புலிகள் யாழ்ப்பாணத்தில் முழுமையான தர்ப்பார் நடாத்திய காலத்தில் அவர்களது அடாவடித்தனங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சில மனித உரிமை அமைப்புகள் தகவல்கள் திரட்டி வந்தது பற்றி அரசல் புரசலாக நான் கேள்விப்பட்டிருந்தேன். 

அதில் ஒன்று மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR) என்ற அமைப்பு. சில கிறிஸ்தவ மத குருமாரும் அவ்வாறான தகவல்களைத் திரட்டியதாகக் கேள்விப்பட்டேன். 

அவர்களில் ஒருவர் எனது இனிய நண்பரும், யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும், இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தில் (MIRJE)  முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவருமாவார்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் யாழ்ப்பாணம் அத்தியடி புதுவீதியில் இருந்த எனது வீட்டுக்கு எனக்கும் தில்லைக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் கடிதம் ஒன்றுடன் வந்து சேர்ந்தார். அவர் இடதுசாரிப் போக்குடைய தமிழ் தேசியவாத இயக்கம் ஒன்றுடன் இணைந்து வேலை செய்பவர். அதேநேரத்தில் சில மனித உரிமை அமைப்புகளுடனும் தொடர்புகள் கொண்டிருந்தார். தில்லை புளொட் இயக்கத்திலிருந்தும் தீப்பொறி இயக்கத்திலிருந்தும் விடுபட்ட பின்னர், இந்த இயக்கத்தினருடன் சில தொடர்புகளை வைத்திருந்ததையும் நான் அறிந்திருந்தேன்.

அப்பொழுது தில்லை தனது பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக்கொண்டு வவுனியா மாவட்டத்திலிருந்த பாவற்குளம் குடியேற்றத்திலிருந்த 4ஆம் யூனிற் பாடசாலை ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். ஓரிரு தடவைகள் நான் அங்கே போயிருக்கிறேன். 

நான் 1970 – 71ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பிரதேசத்தில் எமது புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்ததின் காரணமாக, அங்குள்ள பல கிராமங்களில் எனக்குத் தொடர்புகள் இருந்தன. 

அந்தத் தொடர்புகளை தில்லைக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே சென்று வந்தேன். 1988ல் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில், நான் முன்பு வவுனியாவில் தங்கி கட்சிப் பணிபுரிந்த புதுக்குளம் கிராமத்தில் நானும் தில்லையும் சேர்ந்து அங்குள்ள ஒரு தோழரின் வயலில் நெற்செய்கையும் செய்திருந்தோம்.

இந்த நாட்களில் பெரும்பாலும் வாராவாரம் தில்லை யாழ்ப்பாணம் வந்து தனது பல்கலைக்கழகத் தோழர்களுடனும் என்னைப் போன்றவர்களுடனும் அளவளாவிச் செல்வது வழமையாக இருந்தது. 

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி தனது அரசியல் சாராம்சத்தை மாற்றிக்கொண்டு, தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (Nடுகுவு) யாக உருமாறிய பின்னர், எமது கட்சி ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. 

மறுபக்கத்தில் புலிகள் மற்றைய இயக்கங்களைத் தடைசெய்து தாமே ஏகப்பிரதிநிதிகளாக மாறியிருந்தனர். இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் எமது கட்சியை புலிகளின் பாசிசப் போக்கிற்கு எதிரான ஒரு புரட்சிகர அமைப்பாக மீண்டும் சீரமைக்கும் பணிகளில் எம்மில் சிலர் ஈடுபட்டிருந்தோம். அதில் தில்லையையும் உள்ளடக்கியிருந்தோம்.

ஆனால் நான் குறிப்பிட்ட அந்த இடதுசாரி தமிழ் தேசியவாத இயக்கத்தினருடனும் தில்லை சில தொடர்புகளை வைத்திருந்தார். அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தில்லையிடம் ஒப்படைக்கும்படி ஒரு கடிதத்தை அந்த இரவில் கொண்டு வந்து தந்துவிட்டுப் போனார். அந்தக் கடிதத்தை அதிகாலை புகையிரதத்தில் வவுனியா செல்லும் தில்லை எடுத்துச் செல்வார் எனச் சொல்லியிருந்தார்.

அந்த மாதிரியான கடிதப் பரிமாற்றத்தில் தில்லை ஈடுபடுவது நல்லதல்ல என்பது எனது கருத்தாக இருந்தது. முதலாவது, அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது, யாருக்குச் செல்கின்றது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

இரண்டாவது, அந்தக் கடித விவகாரம் புலிகளுக்குத் தெரிய வந்தால் நான் உட்பட அதில் சம்பந்தப்பட்டிருந்த மூவருக்கும் ஆபத்து. இருந்தாலும் கடிதம் கொண்டு வந்தவரினதும் தில்லையினதும் நண்பராக நான் இருந்த காரணத்தால், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். 

இது ஒரு தொடர்கதை போல எனது வாழ்க்கையில் நடந்து வந்திருக்கிறது. எனது சிறு வயது முதல் மற்றவர்களின் முகத்தை முறிக்கக்கூடாது என்பதற்காக, சில விடயங்களில் என்னை ஈடுபடுத்தி தொல்லைகளில் மாட்டிய அனுபவம் நிறைய உண்டு.

கடிதத்தை தில்லையிடம் ஒப்படைப்பதாக பெற்றுக்கொண்டாலும், அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. எனது மனைவிக்கும் விடயம் தெரியும் என்றபடியால் அவரும் அச்சத்திலிருந்தார். 

கடிதத்தை எங்கு ஒளித்து வைப்பது என்று தெரியாமல் திண்டாடினேன். ஏனெனில் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் நாஜிப்படைகள் ஆக்கிரமித்திருந்த போலந்து, செக்கோஸ்சிலோவாக்கியா போன்ற நாடுகளில் உள்ள குடிமக்களின் வீடுகளில் நாஜிப்படைகள் திடீர் திடீரெனப் புகுந்து சோதனையிடுவது போல, பிரபாகரனின் புலிப்படைகளும் தமக்கு எதிரானவர்கள் எனச் சந்தேகப்படும் வீடுகளில் திடீரெனப் புகுந்து சோதனையிலீடுபடும் ஒரு நிலைமை அன்று இருந்தது.

எனவே முதலில் நான் போட்டுப் படுக்கும் தலையணை உறைக்குள் அந்தக் கடிதத்தை மறைத்து வைத்தேன். ஆனால் அது திருப்திப்படாமல் போனதால் பின்னர் சமையல் அறைக்குள் இருந்த தகர டப்பா ஒன்றுக்குள் போட்டு வைத்தேன். அப்படியும் எனக்குத் திருப்தி வரவில்லை. 

ஏதோ இந்தக் கடிதத்தைத் தேடி நிச்சயம் புலிகள் வருவார்கள் என்பது போலவும், அவ்வாறு வந்தால் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடுவார்கள் எனவும் மனம் சொல்லியது. எனவே எந்தக் காரணம் கொண்டும் கடிதத்தை வீட்டுக்குள் வைக்கக்கூடாது என எண்ணினேன்.

அந்தக் காலத்தில் எனக்கு சிகரட் புகைக்கும் பழக்கம் இருந்ததால், யோசனை காரணமாக நான்கைந்து சிகரட்டுகளை ஊதித்தள்ளி விட்டேன். நாம் அப்பொழுது வளர்த்து வந்த றெக்ஸ் நாய் ஒரு சின்ன முனகல் செய்தாலும், அச்சத்தால் உயிர் போய் வந்தது. நள்ளிரவின் பின்னர் ஒரு திடீர் யோசனை தோன்றியது.

எமது வீட்டில் இருந்த மாதுளை மரம் அந்த நேரத்தில் நிறையக் காய்த்திருந்தது. அந்தக் காய்களை அணில்கள் வந்து கோதிவிடாமல் இருப்பதற்காக ஒவ்வொரு காயைச் சுற்றியும் பொலிதீன் பைகளால் கட்டியிருந்தேன். 

அப்படிக் கட்டியிருந்த ஒரு காயின் பொலிதீனைக் கழற்றி அதனுள் அந்தக் கடிதத்தை பாதுகாப்பாக வைத்துவிட்டு, மீண்டும் அந்த பொலித்தீனை காயைச்சுற்றிக் கட்டியபின்னரே, அனறிரவு சற்று நேரம் என்னால் நிம்மதியாகத் தூங்க முடிந்தது.

இருந்தாலும் அதிகாலையில் தில்லையின் வரவை எதிர்பார்த்து நேரத்தோடேயே விழித்தெழுந்து காவல் இருந்தேன். அடிக்கடி கேற்றடிக்குச் சென்று தில்லையின் வரவை நோட்டமிட்டேன். இறுதியில் ஒருவாறு தில்லை வந்து சேர்ந்தார். 

அவரது கைகளில் அவசரமாக அந்தக் கடிதத்தைத் திணித்த நான், இந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என அவரை சற்றுக் காட்டமாகக் கடிந்து கொண்டேன்.

அவர் எனக்குத் தந்த விளக்கத்தின்படி வவுனியாவில் வைத்துத் தபாலில் இடுவதற்காகவே தான் அந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினார். 

ஏனெனில் அந்த நேரத்தில் புலிகள் தமது புலனாய்வுப் பிரிவினர் மூலம் யாழ்பாணத்துக்கு வெளியிடங்களில் இருந்து வரும் சில கடிதங்களையும், அதேபோல வெளியடங்களுக்குச் செல்லும் கடிதங்களையும் பிரதம தபால் கந்தோர்களிலுள்ள தமது கையாட்கள் மூலம் பிரித்துப் பார்ப்பதால், அந்த முக்கியமான கடிதத்தை யாழ்ப்பாணத்தில் தபாலில் இடாது வவுனியாவில் வைத்து இடுவதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறினார். 

அவரது பதிலில் எனக்குத் திருப்தி வராத போதும் அந்த விவகாரம் அத்துடன் முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தேன். ஆனால் அது எப்படியோ நான் எதிர்பார்த்தவாறு சில வருடங்கள் கழித்து காந்தியின் வடிவத்தில் எனக்கு முன்னால் கேள்வியாக வந்து விழுந்திருக்கிறது. இதை விதியென்பதா சதி என்பதா?

காந்தியின் அடிகளை வாங்கிய பின்னர் நான் அவனை நோக்கி, “செல்விக்கும் எனக்கும் இடையில் ஒரு காலமும் எந்தவிதமான கடிதங்களும் பரிமாறப்படவில்லை. அப்படி அந்தப் பிள்ளை சொல்லி இருந்தால், தனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு வில்லங்கத்திலிருந்து தப்புறதுக்காக பொய் சொல்கிறது எண்டு நினைக்கிறன். 

எனக்கு முன்னாலை அவவைக் கொண்டு வந்து சொல்லச் சொல்லுங்கோ. அப்படி அந்தப் பிள்ளை சொன்னால் நீங்கள் தாற எந்தத் தண்டனையையும் நான் ஏற்கத் தயார்” என்று கூறினேன்.

நான் கூறியதைக் கேட்ட காந்தி உரக்கச் சிரித்தான். பின்னர் அந்த மரக் கொட்டனால் ஓங்கி எனது தலையில் ஒரு தட்டுத் தட்டினான். பின்னர், “என்ன இருந்தாலும் உங்கடை மூளையள் பவுணாலைதான் செய்திருக்கு. செல்வி என்ன கோலத்திலை எப்பிடி இருக்கிறா எண்டு பாக்கிறதுக்கு வழி பண்ணப் பாக்கிறாய். என்ன?” என்றுவிட்டு மேலும் ஒரு தட்டுத் தட்டினான். அவனது தட்டு எனது மூளையை ஒரு தடவை பொறி கலங்க வைத்தது.

நான் எந்தவித உள்நோக்கமும் இன்றி சொன்ன கருத்து அவனுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணிவிட்டது. அவனது சந்தேக வார்த்தைகள் ஒர் உண்மையைத் தெளிவாக்கிவிட்டது. 

அதாவது செல்வியை எனக்கு முன்னால் கொண்டுவரக்கூடிய நிலையில் அவரது நிலை இல்லை என்பது தெரிந்தது. பச்சையாகச் சொன்னால், புலிகள் இயக்கத்தின் பெண் ராட்சசிகள் (சில வேளைகளில் ஆண் மிருகங்களுமாக இருக்கலாம்) செல்வியை குதறிக்கடித்து குற்றுயிராக்கி இருப்பார்கள் என்பது விளங்கியது.

பின்னர் காந்தி நேரடியாகவே விடயத்துக்கு வந்தான். அவனது கதைகளிலிருந்து தில்லையிடம் நான் ஒப்படைத்த கடிதம் சம்பந்தமாக அவர்  சொல்லிவிட்டிருப்பது தெரிந்தது. எனவே இனி அது சம்பந்தமாக ஒளிப்பதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி வேறு சில விடயங்களையும் தில்லை விசாரணைகளில் சொல்லிருப்பது காந்தியின் தொடர்ந்த விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment