Follow by Email

Thursday, 15 May 2014

பிரபாகரன், மே 18-ம் தேதி உயிர் தப்பியது எப்படி?இந்த மாதம் (மார்ச்) 18-ம் தேதி, இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள், வெளி நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே தினத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனுக்கு இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்துவதில்லை என முடிவாகியுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டு 5 ஆண்டுகளின் பின், அவரது மரணத்தை அறிவிப்பது என வெளிநாட்டு புலிகள் மத்தியில் முன்பு முடிவாகி இருந்தது.

“அதை இந்த மாதம் 18-ம் தேதி நடைமுறைப் படுத்த வேண்டும்” என வெளிநாட்டு புலிகளில் ஒருதரப்பும், “இன்னும் கொஞ்ச காலம் விட்டுப் பிடிக்கலாம்” என மற்றொரு தரப்பும், கடந்த சில வாரங்களாகவே முறுகல் நிலையில் பேச்சுவார்த்தைகள் நடத்தின.

ஒரு கட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை முறிவடைந்து, “யார் வந்தாலும், வராவிட்டாலும் பிரபாகரனுக்கு நாம் அஞ்சலி செலுத்த போவதாக அறிவிக்கப் போகிறோம்” என வெளிநாட்டு புலிகளின் ஒரு பிரிவினர் உறுதியாக இருந்தனர். (இந்தப் பிரிவினர், யுத்தம் நடந்தபோது இலங்கையில் இருந்துவிட்டு, 2009-ம் ஆண்டு மே மாதத்துக்கு பின் வெளிநாடு வந்தவர்கள். விநாயகத்தின் தலைமையில் இயங்குபவர்கள்)

அப்படி நடந்து விட்டால், கதை கந்தலாகி போய்விடும் என புரிந்து கொண்ட எதிரணியினர் (இவர்கள் 2009-க்கு முன்பிருந்தே வெளிநாடுகளில் ‘புலி விவகாரங்களை’ கவனித்துக் கொண்டிருந்தவர்கள், நெடியவன் படைப்பிரிவு என அறியப்பட்டவர்கள்), சில நலன் விரும்பிகளின் மத்தியஸ்தத்துடன் மீண்டும் பேசி, ஒரு டீலுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆண்டு மாவீரர் தினத்தின் போது (நவம்பர் 27) அஞ்சலி செலுத்துவது என கொள்கையளவில் முடிவாகியுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், பிரபாகரன் உயிர் தப்பி விட்டார்.

ஆனால், இந்த டீலுக்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட போதிலும், விநாயகம் அணியினர் கடும் கோபத்துடனே உள்ளனர்.

காரணம், ஒவ்வொரு ஆண்டும், இப்படியான விஷயங்களில் (பிரபாகரன் அஞ்சலி, மாவீரர் தின நிகழ்வுகளை இரு பிரிவாக வைக்காமல் ஒன்றாக வைப்பது.. ect etc) கடைசி நிமிடம் வரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் தாம் நினைத்ததை சாதித்து விடுவது நெடியவன் குரூப்புக்கு வாடிக்கையாக போய்விட்டது என்பதுதான்.

சரி. வெளிநாட்டு விடுதலைப் புலிகளின் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? ஒரு சிறிய பின்னணி சொல்லி விடலாம்.

விநாயகம் அணியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவினர். பொட்டு அம்மானின் கீழ் இருந்தவர்கள்.

யுத்தம் முடிந்தபின் இந்தியா, மலேசியா, அல்லது இந்தோனேசியாவுக்கு சென்றுவிட்டு, பின் ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு வந்தவர்கள். இவர்களை தவிர ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து, நெடியவன் படையணியின் ‘நடவடிக்கைகள்’ பிடிக்காமல் இதில் சேர்ந்தவர்களும் உள்ளார்கள்.

இதில், ஈழப் பிரதமர் உருத்திரகுமார் ‘ஸ்கைப்’பில் நடத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, விநாயகம் அணிக்கு ஆதரவு.

தமிழ் ஈழப் பிரதமர் எதற்காக விநாயகம் அணியை ஆதரிக்க வேண்டும்? அதற்கும் ஒரு பின்னணி உள்ளது.

யுத்தம் முடியும்வரை வெளிநாடுகளில் புலிகளின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்த நெடியவன் அணியினர், யுத்தம் முடிந்தபின் புலம் பெயர்ந்தவர்களை பங்குபோட மற்றொரு அமைப்பாக தமிழீழ அரசு வந்ததை விரும்பவில்லை. பல விதத்திலும் இடைஞ்சல் கொடுத்துப் பார்த்தார்கள்.

அப்படியிருந்தும் தமிழீழ அரசு அமைந்து விட்டது (அட, வெளிநாட்டில்தானுங்க).

இதையடுத்து, முதலில் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களை வைத்து ‘கலைச் சொல் தாக்குதலை’ நடத்தினர்.

துரோகி.. அடிவருடி.. எலும்பு சூப்பி.. ஒட்டுண்ணி.. வெட்டுக்கிளி.. பட்டுப்பூச்சி.. என்றெல்லாம் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இந்திய உளவுத்துறை ‘ரா’வின் ஏஜென்ட், சி.ஐ.ஏ.வின் ஏஜென்ட் என்றெல்லாம் கட்டுரைகள் பாய்ந்து வந்தன (இந்த இரு உளவுத்துறை பெயர்கள் மட்டும்தான் அவர்களுக்கு தெரியும்)

ஆனாலும், தமிழீழம் (நாடுகடந்த) சுருண்டு விடவில்லை.

இந்த இடத்தில்தான், நெடியவன் படையணி, தமது பிரம்மாஸ்திரத்தை உபயோகிப்பது என்ற அகிலமே நடுங்கக்கூடிய முடிவை எடுத்தார்கள்!

நெடியவன் படையணியினர், இறுதி பிரம்மாஸ்திரமாக தமிழீழ அரசை நடுங்க வைக்க ‘தேசிய நடவடிக்கை’ எடுக்க தயாரானார்கள்.

தமிழீழ அரசு ஆட்களோ, பெரும்பாலும் கோட் சூட் ஆசாமிகள் (இதற்குள்ளும் நெடியவன் படையணி ஆட்கள் ஊடுருவியுள்ளது வேறு விஷயம்).

இவர்கள் ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ என்று அழைத்து கூட்டம் நடத்தியபோது, நெடியவன் படையணியின் ‘தேசிய மனிதநேய செயற்பாட்டாளர்கள்’, தமது பாணியில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, “டேய்.. பனங்கிழங்கு” என்று கூச்சலிட்டபடி, குபீரென பாய்ந்தார்கள்.

ஈழம் பற்றி பேசிக்கொண்டிருந்த கோட் சூட் கனவான்கள், வனிதாமணிகள் வெலவெலத்துப் போனார்கள்.

பாவம், அவர்களுக்கோ, இந்த ‘தேசிய நடவடிக்கை’யில் முன்பின் பரிச்சயம் கிடையாது. பாதிப் பேருக்கு வேட்டி கட்டிக்கூட பழக்கமில்லை.

இந்த லட்சணத்தில், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பாய்ந்த ம.நே.தே. செயற்பாட்டாளர்களை எப்படி எதிர்கொள்வது?

“Why are they calling us பனங்கிழங்கு” என்று அலறியபடி சிதறியோடினார்கள். இதில் வெளியிட முடியாத வார்த்தைப் பிரயோகங்களுடன், துரத்திச் சென்ற வீர வேங்கைகள், தமிழீழ அமைச்சர்களையும், பிரதானிகளையும் விரட்டியடித்தார்கள்!

நல்லவேளையாக லேப்டாப்பில், ஸ்கைப் மூலம் பேசி்க்கொண்டிருந்த பிரதமருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், லேப்டாப் தூள் தூள்.

இதனால் அடுத்த கூட்டம் போட முடியாத நிலை, தமிழீழ அரசுக்கு ஏற்பட்டது.

அந்த நேரத்தில்தான் நெடியவன் படையணிக்கு எதிரணியாக, விநாயகம் அணி காட்சிக்குள் வந்தது. சினிமாவில், வில்லன்களிடம் இருந்து தப்பிக்க ஹீரோவிடம் போய் முறையிடுவது போல, விநாயகம் அணியின் கைகளை பற்றிக் கொண்டார் பிரதமர்.

“யாமிருக்க பயமேன்” என அபயம் அளித்த விநாயகம், தமிழீழ அரசு ‘தேசிய செயல்பாட்டு’ அபாயத்தில் இருந்து தப்ப, ஒரு உபாயம் செய்தார்.

விநாயகம் அணியின் ஆட்கள் கிளம்பிச் சென்று, நெடியவன் அணியின் லண்டன் மனிதநேய தேசிய செயற்பாட்டாளர் தலைவரை போட்டு புரட்டியெடுத்து, நையப்புடைத்து விட்டார்கள்.

பல ஆண்டுகளாக லண்டனில் ஹம்பர்கர் சாப்பிட்டுக்கொண்டு ‘தேசிய சேவை’யில் ஈடுபட்டவரை, வன்னியில் குரக்கன் ரொட்டியும், மான் இறைச்சியும் சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் அடித்தால்… எப்படியிருக்கும்?

உங்கவீட்டு அடி, எங்கவீட்டு அடி அல்ல.. செம அடி!

அத்துடன் தமிழீழ அரசுக்கு எதிரான நெடியவன் படையணியின் ‘தேசிய செயல்பாடு’ முடிவுக்கு வந்தது.

(அடி வாங்கிய வெட்கத்தை மறைக்க, “சிங்கள புலனாய்வு கைக்கூலிகள் எமது மனிதநேய தேசிய செயற்பாட்டு வீரரை தாக்கினர். சிங்களவரின் தாக்குதலை சிங்கிளாக நின்று சமாளித்து, வெற்றிகரமாக தளம் திரும்பினார் எம் வீரவேங்கை” என ஒரு அறிக்கை வெளியானது, இதன் உச்சக்கட்ட தமாஷ்)

இதுதான், இவர்களது பின்னணி.

விநாயகம் அணியினரோ, “பிரபாகரனின் மரணத்தை நேர்மையாக அறிவித்து, அஞ்சலி செலுத்தலாம். அதுதான், நாம் தலைவருக்கு கொடுக்கும் மரியாதை.

இலங்கை ராணுவமே, “பிரபாகரன் போர்க்களத்தில் நின்று இறுதிவரை போராடி உயிரிழந்தார்” என்று சொல்கிறார்கள்.

ஆனால் நாமோ, “பிரபாகரன் வன்னியில் 3 லட்சம் மக்களையும், 30 ஆயிரம் போராளிகளையும் அம்போவென விட்டுவிட்டு, தான் மட்டும் தப்பியோடி, அடையாளம் தெரியாத இடத்தில் பதுங்கியிருக்கிறார்” என்று சொல்வது, அவரை கேவலப்படுத்துவதாக உள்ளது” என்கிறார்கள்.

அதற்காகவே, இந்த மாதம் 18-ம் தேதி அவரது மரணத்தை முறைப்படி அறிவிக்கலாம் என்றார்கள். நெடியவன் படையணி அதற்கு இணங்கவில்லை.

கடந்த ஆண்டும் இதே நிலைப்பாட்டில் விநாயகம் அணியினர் இருந்தபோது, நெடியவன் அணியினர் ஒரு டீல் போட்டார்கள்.

“தலைவர் இறந்ததை உடனே அறிவிக்க முடியவில்லை. இப்போது திடீரென அறிவித்தால் நன்றாக இருக்காது. ஒரேயடியாக 5-வது ஆண்டு நிறைவின்போது அறிவிக்கலாம் என்றார்கள்.

அதை விநாயகம் அணியினர் நம்பி, ஏற்றுக் கொண்டார்கள் (பாவம், பொட்டு அம்மான். அவரது ஆட்கள், இவ்வளவு வெகுளிகளாக உள்ளார்களே!).

அந்த 5-வது ஆண்டு நிறைவுதான், வரும் 18-ம் தேதி வருகிறது.

இப்போது நெடியவன் அணியினர், “மே-18 நினைவுகூரல் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அனைவருக்கும் – பொதுமக்கள் உட்பட – பொதுவான நிகழ்வு. ஆனால், நவம்பர் 27 நினைவுகூரல், விடுதலைப் புலிகளின் மாவீரர்களுக்கு மாத்திரமானது. அதில் தலைவரை நினைவுகூருவதுதான் சரியானது” என டெக்னிகலாக கூறியதை, விநாயகம் அணியினர் இம்முறை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதையடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்த 18-ம் தேதி உயிர் தப்பியுள்ளார்.

ஆனால், வரும் நவம்பர் 27-ம் தேதி, அவரது உயிருக்கு ஒரு கண்டம் இருக்கிறது. அதிலும் தப்பித்து கொள்வாரா பார்க்கலாம்.

ரிஷி–

(இந்தக் கட்டுரைக்காக நாம், நெடியவன் படையணியினரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தமது தரப்பு நியாயத்தை தெரிவித்தனர். கட்டுரை நீளமாகி விட்டதால், அதை மற்றொரு கட்டுரையாக நாளை தருகிறோம்)

No comments:

Post a Comment