Follow by Email

Wednesday, 30 April 2014

புலிகளின் இன்னொரு முகம் -29

நான் 1991 டிசம்பர் 26ம் திகதி புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு சுமார் இரண்டு வாரங்கள் வரைதான் கழிந்துள்ள போதும், இதுவரை அவர்களின் மூன்று பாரிய தாக்குதலுக்கும் சிலசில சிறிய தாக்குதலுக்கம் உள்ளாகிவிட்டேன். இப்பொழுது செல்வியுடனான தொடர்களை அறியும் பொருட்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளேன். இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ?

காந்தி என்ன விடயத்தை மனதில் வைத்துக்கொண்டு செல்விக்கும் எனக்குமிடையிலான தொடர்பு பற்றிக் கேட்கிறான் என எனக்கு விளங்கவில்லை. 

செல்வியும் நானும் ஒரே அரசியல் அணியைச் சேர்ந்தவர்களில்லை. ஆனால் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நேச உறவு இருந்தது. (அப்பொழுது புளொட் இயக்கத்தின் தளப் பொறுப்பாளராகவும், செல்வியின் காதலராகவும் இருந்த, தற்பொழுது பிரான்சில் வாழ்ந்து வரும் அசோக்குடனும் - யோகன் கண்ணமுத்து - கூட எனக்கு நல்ல நட்பு இருந்தது)

செல்வி புளொட் இயக்கத்தின் மகளிர் பிரிவில் தீவிரமாகவும் அர்ப்பணிபு;புடனும் வேலை செய்த யாழ். பல்கலைக்கழக மாணவி. அவருடன் கலா என்றொரு இன்னொரு மாணவியும் இணைந்து வேலை செய்தார். (அவர் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார் என நினைக்கிறேன்) 

அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எப் மகளிர் அணியில் அஞ்சலி, அம்பிகா என்ற மாணவிகள் முக்கிய பொறுப்பில் இருந்தனர். (பின்னர் அஞ்சலியும் அம்பிகாவும் முறையே அதே இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளிலிருந்த ஜேம்ஸ், இளங்கோ ஆகியோரைத் திருமணம் செய்து கொண்டனர்) 

புலிகளின் மகளிர் அணியிலும் சில பல்கலைக்கழக மாணவிகள் இருந்தனர். இவர்கள் எல்லோருமே பல்கலைக்கழகத்துக்கு முன்னாலுள்ள எனது கடைக்கு வந்து என்னுடன் அந்நியோன்யமாக உரையாடிச் செல்வது வழமை. அதற்கு அப்பால் அவர்களுடன் எனக்குப் விசேடமான அரசியல் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை.

செல்வியைப் பொறுத்தவரை, நான் அவதானித்த வரையில் தனது மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்புடன் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நேர்மையான எண்ணத்துடன் செயல்பட்டவர். 

வவுனியா மாவட்டம் சேமமடு குடியேற்றக் கிராமத்தின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சோந்த ஒருவர் என்ற காரணத்தால், பொதுவாகக் கிராமிய மக்களிடம் காணப்படும் நேர்மையான வெளிப்படையான தன்மை செல்வியிடமும் ஒரு விசேட குணாம்சமாக இருந்திருக்கலாம் என எண்ணுகிறேன்.

ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான போது புதிய புலிகள் என்ற இயக்கமே உருவானது. இது 1975ல் எமது தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி உருவான பின்னர் உருவான அமைப்பாகும். 

பிற்காலத்தில் பரம வைரிகளாக மாறிய பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஆரம்பத்தில் இந்த புதிய புலிகள் இயக்கத்திலேயே ஒன்றாகச் செயல்பட்டவர்கள். 

பின்னர் பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், உமா மகேஸ்வரன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும் (புளொட்) உருவாக்கிக் கொண்டு கீரியும் பாம்பும் போல செயற்பட்டனர். (தமிழர்களின் மூத்த அரசியல் கட்சிகளான தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும் 25 ஆண்டுகள் செயற்பட்டது போல!)

புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வடக்கின் கரையோர மீனவ சமூக மக்களிடமே அவர்களுக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. ஆனால் புளொட் வடக்கின் பெரும்பான்மையான வேளாள சமூகம் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள்வரை பரவலான செல்வாக்கு உள்ள ஒரு இயக்கமாக இருந்தது. 

வன்னிப் பிரதேசத்திலும் புளொட் இயக்கம் அதிய செல்வாக்குப் பெற்றிருந்தது. குறிப்பாக அங்கு சமுதாயத்தின் அடிநிலையில் வாழ்ந்து வந்த இந்திய வமட்சாவழி மக்களிடமும் அது செல்வாக்குப் பெற்றிருந்தது.

அத்துடன் புளொட் வெகுஜன அமைப்புகளையும் கொண்டிருந்தது. அது பாலஸ்தீன விடுதலை இயக்கம், இலங்கை - இந்திய இடதுசாரி இயக்கங்கள் என்பனவற்றுடன் தொடர்புகளைக் கொணடிருந்ததால், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையும் சோசலிச அபிலாசைகளையும் கூட குறிப்பிட்டளவு கொண்டிருந்தது. 

இதன் காரணமாகவே நகரப்புறங்களில் இருந்த முற்போக்கு எண்ணம் கொண்டிருந்த பல புத்திஜீவிகளும், கிராமப்புறங்களிலிருந்த செல்வி போன்றவர்களும், தில்லை போன்ற வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களும்  புளொட்டில் இணைந்து கொள்ளக் காரணமாயிற்று.

ஆனால் பின்னர் புளொட் இயக்கத்துக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும் பிளவுகளும், புலிகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளும் சேர்ந்து செல்வி, தில்லை போன்ற பல நல்வர்கள் அந்த இயக்கத்தில் இருந்து ஒதுங்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டது. 

அதன் சரி பிழைகளை இங்கு ஆராய்வது எனது இந்தத் தொடரின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் செல்வி கடத்தப்பட்ட போது புளொட் இயக்கத்திலிருந்து தன்னை விலக்கி வைத்துக்கொண்ட ஒருவராக இருந்ததை நான் உறுதிபடக் கூற முடியும்.

அந்தக் காலகட்டத்தில் செல்வி, தில்லை, சிவரமணி (முன்னதாக தற்கொலை செய்து கொண்ட செல்வியின் தோழியும் சக மாணவியும்) ஆகியோர் என்னுடன் அடிக்கடி சந்திப்பவர்களாக இருந்ததால், அவர்கள் அரசியலில் கொண்டிருந்த மனநிலையை நான் நன்கறிவேன். 

(இன்று செல்விக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடாத்தி அரசியல் ஆதாயம் பெற முயல்பவர்களில் சிலர், செல்வியின் நிழலுடன்கூட தொடர்பில்லாதவர்கள் என்பதுடன், அவரது கொள்கைகளுடன் மருந்துக்கும் ஒட்டுறவில்லாதவர்கள் என்பதையும் நினைக்கையில், வேதனைதான் மிஞ்சுகிறது)

இப்பொழுது செல்வி பற்றி காந்தி திடீரென விசாரித்த போது, செல்வியுடனான எனது கடந்தகால நினவுகள் நெஞ்சில் நிழலாடின.

செல்வி புலிகளால் கடத்தப்பட்ட கடைசி நிமிடத்திற்கு முன்னர் அவரை இறுதியாகச் சந்தித்த அவரது நண்பன் நான்தான் என நினைக்கிறேன். அந்தத் துன்பமான நிகழ்வு மனதில் இன்னமும் பாரமாக அழுத்துகிறது.

இன்னொரு பல்கலைக்கழக மாணவனும் செல்வியின் நண்பர்களில் ஒருவருமான மனோகரன் உரும்பிராயிலிருந்து திரும்பும் வழியில் புலிகளால் கடத்தப்பட்ட சிறிது நேரத்தில், தில்லை யாழ்.பல்கலைக்கழகத்தின் பின்புற ஒழுங்கையில் வைத்துக் கடத்தப்பட்டார். 

அந்த நேரத்தில் செல்வி பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவர்கள் இருவரும் கடத்தப்பட்டதைக் கேள்வியுற்ற செல்வி மிகுந்த பதட்டத்துடன் இராமநாதன் வீதியில் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்கு முன்னால் இருந்த எனது கடைக்கு உடனடியாக வந்து சேர்ந்தார். 

அப்பொழுது அவர் மிகுந்த பதட்டத்திலிருந்தார். ஏனெனில் மனோகரனும் தில்லையும் கடத்தப்பட்டது மாத்திரமின்றி, அடுத்ததாக புலிகள் தன்னையும் கடத்துவதற்கு வரலாம் என்ற அச்சமே அதற்குக் காரணம்.

செல்வி மனோகரனும் தில்லையும் புலிகளால் கடத்தப்பட்ட தகவலைச் என்னிடம் சொல்லிவிட்டு, தான் தங்கியிருந்த அறைக்குச் செல்ல எத்தனித்தார். 

அவர் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் ஆத்திசூடி வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அந்தப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு பகுதி. புளொட் இயக்கத்துக்கு அந்தப் பகுதியில் கணிசமான செல்வாக்கு இருந்தது. எனவே அங்கு சென்று தங்குவது தனக்குப் பாதுகாப்பானது, அந்த மக்கள் புலிகளிடமிருந்து தன்னைப் பாதுகாப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை செல்வியிடம் இருந்தது.

ஆனால் செல்வியினது கருத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. பொதுமக்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்விட்டு புலிகள் செல்வியை இழுத்துச் செல்வது, புலிகளைப் பொறுத்தவரை சிரமமான காரியமோ புதுமையான காரியமோ அல்ல என்பதை நான் அறிவேன்.  

எனவே அவரது அறைக்குப் போவதைத் தவிர்த்து, வேறு எங்காவது பாதுகாப்பான இடத்துக்குச் சென்று தற்காலிகமாகத் தங்கும்படியும், அதன்பின்னர் நிலைமையை அவதானித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனவும் அவரிடம் கூறினேன்.

ஆனால் செல்வி அப்போதிருந்த பதட்டமான மனநிலையில், எனது ஆலோசனையை பெரிதாக ஏற்கவில்லை. தனது அறைக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் இருப்பது தனக்குக் கூடுதலான பாதுகாப்பாக இருக்கும் என அவர் எண்ணுவது தெரிந்தது. அதன்பின்னர் அவர் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.

அவர் போன பின்னரும் எனது மனம் அலைக்கழிந்த வண்ணமே இருந்தது. மிகவும் கவலையாகவும் இருந்தது. நிச்சயமாக புலிகள் செல்வியைப் பிடித்துவிடுவார்கள் என எனது மனது சொல்லியது. 

அவரை எவ்வழியிலேனும் காப்பாற்ற முடியவில்லையே என்று மன ஆதங்கமாகவும் இருந்தது. அதேநேரத்தில் அடுத்து புலிகளின் இலக்கு என்னைப் போன்றவர்களாக இருக்குமோ என்ற சந்தேகமும் இடையிடையே தலைகாட்டியது.

நான் எதிர்பார்த்தபடியே செல்வி தனது அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் புலிகள் அங்கு வந்து அவரைப் பிடித்துச் சென்றதாக, அவர் தங்கியிருந்த வீட்டின் பெண்பிள்ளை ஒருவர் என்னிடம்வந்து கவலையுடன் கூறிவிட்டுச் சென்றார். எல்லாம் முடிந்துவிட்டது.

செல்வியையும் தில்லையையும் நோக்கி சில கெட்ட ‘கிரகங்கள்’ நகர்ந்து வருகின்றன என்ற ஒருவிதமான முன்னச்ச உணர்வு அவர்களுக்கும் இருந்து வந்ததை நான் அறிவேன். 

ஆனால் அவர்கள் அதைப் பாரதூரமாக எடுக்கத் தவறிவிட்டனர். அவர்கள் தலைக்கு இப்பொழுது வந்துள்ள அபாயம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து செயற்பட்ட ‘கலாச்சாரக் குழு’ காலத்திலேயே முளைவிட்டிருந்தது.

அந்தக் கலாச்சாரக் குழுவே ‘மண் சுமந்த மேனியர்’ நாடகத்தை வடக்கின் பட்டிதொட்டியெங்கும் அரங்கேற்றியது. அந்த நாடகத்தை நெறியாள்கை செய்த புலிகளின் தீவிர ஆதரவாளர் கந்தையா சிதம்பரநாதன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பத்மினி சிதம்பரநாதனின் கணவர்) இன்றும் யாழ்.பல்கலைக்கழக நாடக விரிவுரையாளராக இருக்கின்றார் என நினைக்கின்றேன். 

ஒருகாலத்தில் எனதும் செல்வி, தில்லை போன்றவர்களினதும் நல்ல நண்பராக இருந்த சிதம்பரநாதனுடன், செல்விக்கும் தில்லைக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையே, அவர்களது இந்த அவல நிலைக்குக் காரணம் என்ற அபிப்பிராயம், என்னைப் போன்ற பலருக்கு உண்டு. அதுபற்றிப் பின்னர் எழுதுவேன்.

ஆனால் காந்தி இப்பொழுது கேட்கும் செல்வியின் கடிதம் கொண்டு செல்லும் பியோனாக நான் ‘இருந்த’திற்கும், நடந்து முடிந்த கலாச்சாரக் குழு விவகாரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமாக என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

காந்தி எனக்கு அடித்து ஓய்ந்த பின்னர் என்னை நோக்கி, “செல்வியும் தில்லையும் தாற கடிதங்களை கொழும்பிலை ஆருக்கு அனுப்பிறனி? உள்ளதைச் சொல் அல்லது அவங்கடை வாயாலை சொல்ல வைப்பன். அதுக்குப் பிறது நீ உயிரோடை இருக்கமாட்டாய்” என எச்சரித்தான்.

அதற்குப் பிறகுதான் தில்லை என்னிடமிருந்து ஒருமுறை எடுத்துச் சென்ற கடிதம் ஒன்று எனது ஞாபகத்துக்கு வந்தது.

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

1 comment:

  1. நன்றி...தொடருங்கள்..

    ReplyDelete