Follow by Email

Sunday, 6 April 2014

புலிகளின் இன்னொரு முகம் -28


புலிகள் என்னிடம் விசாரித்த நபர்களான சேரன், ஜெயபாலன், தர்மலிங்கம் மாஸ்டர் ஆகிய மூவரும் என்னுடன் நன்கு பழகியவர்கள்தான். இவர்களில் உ.சேரனும், வ.ஐ.ச. ஜெயபாலனும் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்கள் என்ற வகையிலும், கலை இலக்கிய மற்றும் அரசியல் ஈடுபாடுகள் உள்ளவர்கள் என்ற வகையிலும் என்னுடன் பல சந்தர்ப்பங்களில் கதைத்து பழகியிருக்கின்றனர். 

அதிலும் ஜெயபாலன் தன்னை ஒரு இடதுசாரியாகவும் இனம் காட்டிக் கொண்டவர். அவரது பெற்றோh நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும் (நெடுந்தீவில் அந்தக் காலகட்டத்தில் எமக்கு நிறையத் தோழாகள் இருந்தனர்) அந்த வழியிலும் அவருடன் பரிச்சயம் இருந்தது. 

அவர் முதலில் தோழர் விசுவானந்ததேவனின் தங்கையான சாரதாதேவியைத் (சாரதாதேவி 2008 ஆண்டில் திடீரென்று இலண்டனில் காலமானார்) திருமணம் செய்திருந்தவர் என்ற வகையிலும் இன்னொரு வழித் தொடர்பும் இருந்தது. இரண்டொரு தடவை ஜெயபாலன்  எனது அறையில் வந்து தங்கி இரவிராகக் கதைத்ததும்  உண்டு.

ஆனால் பிற்காலத்தில் சேரனும் ஜெயபாலனும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதனாலும், தமிழ் தேசியவாத அரசியல் சேற்றில் அவர்கள் தம்மை அமிழ்த்திக் கொண்டதனாலும், அவர்களுடனான எனது தொடர்பு அற்றுப்போய்விட்டது. 2004ம் ஆண்டளவில் ஜெயபாலனை மட்டும் ஒருமுறை கொழும்பில் சந்தித்தேன்.

‘ஈழநாதம்’ பத்திரிகை ஆசிரியர் ஜெயராஜின் மைத்துனர் தர்மலிங்கம் மாஸ்டரைப் பொறுத்த வரையில், அவர் ஜெயராஜின் மைத்துனர் என்ற வகையில் மட்டுமின்றி, நான் புத்தகக் கடை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள ஆத்திசூடி வீதியில் அவரது வீடு இருந்ததின் காரணமாகவும் எனக்கு அவர் பழக்கமாக இருந்தார். 

ஆத்திசூடி வீதியில் அவர்கள் நடாத்தி வந்த சனசமூக நிலையத்துக்கு எனது கடையில்தான் பத்திரிகைகள் வாங்குவது வழக்கம். அநேகமாக அவரே தினசரி பத்திரிகை எடுக்க வருவதால், சிறிது நேரம் உரையாடிவிட்டுச் செல்வார். அவர் ஒரு சிறந்த நாடகத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். திரைத்துறைத் தொடர்புகளும் இருந்தது.

அவரது ஆத்திசூடி வீட்டில்தான் ஜெயராஜ் தங்கியிருந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். யாழ்.பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பின்னர் அதில் கல்விகற்ற முதல் தொகுதி மாணவர்களில் ஜெயராஜ் மற்றும் புலிகளின் ஆலோசகர் போலச் செயற்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தின் பின்னர் இந்தியாவுக்குப் படகில் தப்பிச் சென்ற மு.திருநாவுக்கரசு ஆகியோர் இருந்தனர். 

அவர்கள் இருவரும் கடைசிவரை இணைபிரியா நண்பர்களாக இருந்ததுடன், தமிழ் தேசியவாதத்தை முன்னிறுத்தி கூட்டாக சில பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டுள்ளனர். தர்மலிங்கம் மாஸ்டரின் அந்த வீட்டில்தான் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா சில வேளைகளில் வந்து ஜெயராஜையும் திருநாவுக்கரசுவையும் சந்திதது உரையாடிச் செல்வது வழக்கம்.

ஜெயராஜ், திருநாவுக்கரசு ஆகிய இருவரும் என்னுடனும் சில வேளைகளில் அரசியல் விடயங்கள் அலசுவதுண்டு. இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்த பின்னா புலிகள் அவர்களிடம் ஆயுதங்களைக் கையளித்த வைபவம் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகிலிருந்த எனது கடைக்கு முன்னாலேயே நடைபெற்றது. 

புலிகளின் ஆயுதங்களை ஏற்றிய வாகனங்கள் எனது கடைக்கு முன்னால் உள்ள வீதியில் நீளத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக அங்கு குழுமியிருந்தனர். 

அதில் ஒருவராக அகில இந்திய வானொலியின் பிரசித்தி பெற்ற நிருபர் பெருமாளும் எனது கடை வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்த பெருமாளுடன் ஜெயராஜ், திருநாவுக்கரசு ஆகிய இருவரும் அடியாத குறையாகச் சண்டை போட்டதும் நான் விலக்குப் பிடித்துவிட்டதும் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் புலிகளின் விசுவாசிகளாக இருந்தவர்கள். ஆனால் தர்மலிங்கம் மாஸ்டர் அவ்வாறான ஒருவர் அல்ல.

நான் கைதுசெய்யப்பட்டு ஆனைக்கோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், ஒருநாள் தர்மலிங்கம் மாஸ்டரை எனக்கு அருகில் வைத்து புலி ஒருவன் விசாரித்துக் கொணடிருப்பதைக் கண்டேன். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அறிந்தேன்.

புலிகள் என்னிடம் விசாரித்த நபர்களான சேரன், ஜெயபாலன், தர்மலிங்கம் மாஸ்டர் ஆகிய மூவர் பற்றிய எனக்கு தெரிந்த பின்னணி இதுதான். உண்மையில் அவர்கள் மூவரும் ‘மக்கள் குரல்’ வானொலியில் நிகழ்ச்சிகள் ஏதாவது நடாத்தினார்களா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் மூவரையும் எனக்கு நன்கு தெரியும் எனக் கூறினேன்.

ஆனால் புலிகள் முன்னர் கூறியபடி இந்த மூவரினதும் பதிவு செய்யப்பட்ட குரல்கள் எதனையும் எனக்குப் போட்டுக்காட்ட வைக்கவில்லை. ஆனால் அவர்களில் ஒருவரான தர்மலிங்கம் மாஸ்டர் திரும்பவும் கைதுசெய்யப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் புலிகள் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிவிட்டார்கள் எனவும் ஒரு செய்தி புலிகளின் வதைமுகாமுக்குள் இரகசியமாக வலம் வந்தது. 

அது உண்மைதான் என்பதை நான் ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலையாகி வெளியே வந்த பின்னர், என்னைச் சந்தித்த ‘ஈழநாதம்’ ஆசிரியர் ஜெயராஜ் மூலம் அறிந்து கொண்டேன். அதுபற்றி என்னிடம் கருத்து வெளியிட்ட ஜெயராஜ், இயக்கம் என்றால் அப்படித்தான், இந்த விடயத்தில் தன்னால் தனது மைத்துனரைக்கூட காப்பாற்ற முடியவில்லை எனக் கவலையுடன் கூறினார்.

தயாபரன் என்னை விசாரிக்கும் போது, திட்டமிட்ட முறையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்படுவதாக தோன்றியது. கேள்விகளை எழுந்தமானத்தில் கேட்காமல், ஒரு கடதாசியைப் பார்த்து கேட்பதில் இருந்து அதைப் புரிந்து கொண்டேன். 

யாரோ எனது தினசரி விசாரணை அறிக்கையைப் பார்த்து அடுத்த நாளைக்கான கேள்விகளைத் தயார் செய்து கொடுக்கிறார்கள் என எண்ணினேன். அதன் அடிப்படையில்தான் எனது முதல் நாளைய அறிக்கையைப் பார்த்து திசையும் இன்னொருவனும் என்மீது தாக்குதல் நடாத்தியதும் புரிந்தது.

தயாபரன் என்னை விசாரிக்கும் சில நாட்களில், ‘அம்புறோஸ்’ என்ற ஒருவன் வந்திருந்து எனது விசாரணையை அவதானிப்பான். விசாரணை நடக்கும் இடத்தில் அவன் எதுவும் பேசமாட்டான். 

இவன் புலிகளின் மூத்த புலனாய்வு உறுப்பினர்களில் ஒருவன் எனப் பின்னர் அறிந்து கொண்டேன். மந்திகையைச் சொந்த இடமாகக் கொண்ட அவன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றவன். 

நன்கு கிரிக்கெட் விளையாடக் கூடியவன் என்றபடியால், பிரபல கிரிக்கெட் வீரன் அம்புறோசின் பெயரை இயக்கப் பெயராக வைத்திருந்தான். அவனது தோற்றத்தை வைத்து அவன் ஒரு புலி உறுப்பினன் என யாரும் அடையாளம் காண முடியாது. 

வழமையாக நாம் பார்க்கும் கன்னங்கள் உதுப்பிய, தலைமயிர் கட்டையாக வெட்டிய, உருண்டு திரண்ட தோற்றமுடைய புலிகள் போல அவன் இருக்கமாட்டான். மிகவும் கருமை நிறமுள்ள அவன், எப்பொழுதும் சாதாரண ஒரு சாரம் அணிந்து ஒரு கூலித் தொழிலாளி போலத்தான் தோற்றமளிப்பான்.

இந்த அம்புறோஸ் சில வேளைகளில் தயாபரன் என்னை விசாரித்து முடிந்ததும், தனியாக என்னை அழைத்துச் சென்று கதைப்பதுண்டு. அந்த நேரங்களில் அவனது உரையாடல்களில் எல்லா இயக்கங்களினதும் உள் விவகாரங்கள், இடதுசாரி அரசியல், சர்வதேச விவகாரங்கள், இலங்கையின் தேசிய அரசியல், இந்தியாவின் நக்சலைட் குழுக்கள், ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் என பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடுவான். 

சிறைக்குள்ளே பத்திரிகைகள் எதுவும் பார்க்கக் கிடைக்காதாகையால், அம்புறோஸ் என்னைக் கூட்டிச் செல்லும் நேரங்களில் வெளியே சில வேளைகளில் பத்திரிகைகள் வாசிக்கத் தருவான். சில வேளைகளில் வானொலியில் செய்தி கேட்கவும் ஒழுங்கு செய்வான். இந்த அம்புறோஸ் தான் தயாபரன் என்னிடம் கேட்கும் கேள்விகளைத் தயார் படுத்துபவன் என எண்ணினேன்.

ஒருநாள் தயாபரன் என்னை விசாரித்துக் கொண்டிருக்கையில் அங்கு திடீரெனத் தோன்றிய காந்தி, என்னை எழுந்து தன்னுடன் வரும்படி கூறிவிட்டு, வேகமாக முன்னால் நடந்தான். அவனது கையில் பூவரசு மரக் கொட்டன் ஒன்று இருந்தது. அவனது வழமையான இருப்பிடத்தை அடைந்ததும் கண்களை உருட்டியவாறு முகத்தை கடூரமான தோற்றத்தில் வைத்துக்கொண்டு,

“செல்விக்கும் உனக்கும் உள்ள தொடர்புகள் என்ன?” எனக் கேட்டான்.

“செல்வி கம்பசில் படிப்பதால் அவரைத் தெரியும்” என்றேன்.

“அதுமட்டும் தானா?” என வினவினான்.

“ஓம்” என்றேன்.

“அப்பிடி வேறை தொடர்பு ஒண்டும் இல்லையெண்டால்ஸ ஏன் செல்விக்கும் தில்லைக்கும் நீ பியோன் வேலை பார்க்கிறனி?” என உறுமினான்.

அவனது கேள்வியின் அர்த்தம் புரியாமல், “என்ன பியோன் வேலை?” என அவனிடம் நான் கேட்டேன்.

“டேய் அவையள் தாற கடிதங்களை நீதானே கொழும்புக்கு அனுப்புறனி?” என கடுமையான கோபத்துடன் காந்தி சத்தமிட்டான்.

“என்ன கடிதம்?” என நான் மீண்டும் தயக்கத்துடன் கேட்டேன்.

“டேய் செய்யிறதையும் செய்துபோட்டு சுத்திறியாடா?” என உறுமியவாறு அந்தக் கொட்டனால் என்மீது சரமாரியாகத் தாக்கத் தொடங்கினான்.

தொடரும்..
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

1 comment: