Follow by Email

Friday, 4 April 2014

புலிகளின் இன்னொரு முகம் -27

வவுனியாவைச் சேர்ந்த இந்த சௌந்தரராஜன் என்ற வாலிபர், கிளிநொச்சியிலிருந்த திசை என்பவனின் வதை முகாமில் இருந்து காந்தியின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த இந்த வதை முகாமுக்கு மாற்றப்பட்டு வந்தவன். 

வரும்போதே உடம்பு முழுவதும் அடித்தழும்புகளுடன் தான் வந்து சேர்ந்தான். (இப்படியான தழும்புகளுடன் இந்தச் சிறையிலும் பலர் இருந்தனர். அப்படியானவர்களை எமது கைதிகள் ‘வரிப்புலிகள்’ எனக் கேலியாகக் குறிப்பிடுவதுண்டு)

இந்த வாலிபன் வவுனியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தவன். அங்கு ஒரு முஸ்லீம் யுவதியைக் காதலித்து அவளுடைய பெற்றோரின் சம்மதம் இன்றித் திருமணம் செய்திருந்தான். 

வண்டில் மாடு வைத்து வவுனியா நகருக்கும் ஓமந்தையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைப் பகுதிக்கும் பொருட்கள் ஏற்றி இறக்குவது அவன் செய்து வந்த தொழிலாகும்.

ஒருமுறை ஓமந்தைக்கு மாவு மூடைகளை ஏற்றிச் சென்றபோது புலிகளால் திடீரென்று கைது செய்யப்பட்டான். வழமைபோலவே அவனும் என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டான் என்பது அவனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கிளிநொச்சிக்குக் கூட்டிவரப்பட்டு பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே, அவன் எதற்காகக் கைது செய்யப்பட்டான் என்பது தெரிய வந்தது.

அவனுடன் படித்த ஒருவன் புளொட் இயக்கத்தில் இணைந்திருந்தான். அவனுடன் இவன் ஒருநாள் வவுனியா நகரில் அவனுடைய மோட்டார் சைக்கிளில் சிநேகிதம் நிமித்தம் பயணம் செய்திருக்கிறான். அதன் காரணமாக இவனும் புளொட் முத்திரை குத்தப்பட்டு இந்த சித்திரவதை முகாமுக்கு ‘அழைத்து’ வரப்பட்டிருக்கிறான்.

அவன் சொன்ன தகவல்களின்படி, திசையின் முகாம் ஒரு மரணக்குழிதான். அந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் சாப்பிடுகிற நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கண்களை கறுப்புத் துணியால் கட்டியபடியே இருக்க வேண்டும். 

எல்லோருக்கும் கால்களில் சங்கிலி இடப்பட்டிருப்பதுடன், கைகளும் பின்பக்கம் பிணைக்கப்பட்டிருக்கும். கைதிகள் ஒருவரோடு ஒருவர் கதைக்கக்கூடாது. சாப்பிடும் போது ஒரு ‘கப்’ தண்ணீர் மட்டுமே குடிப்பதற்கு வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒருதரம் மட்டுமே மலசலம் கழிப்பதற்குச் செல்லலாம். இப்படிப் பலப்பல கட்டுப்பாடுகள்!

திசையின் வதை முகாமுடன் ஒப்பிடுகையில் காந்தியின் இந்த முகாம் பல மடங்கு ‘திறம’; என்பதே சௌந்தரராஜனின் கருத்து. அவன் சொன்ன தகவல்களில் இருந்து ஒரு விடயம் தெரிய வந்தது. அதாவது புலிகளின் இந்த மாதிரியான சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சர்வாதிகாரிகளாகவே செயல்படுகின்றனர் என்பதே அது.

நான் அங்கு இருந்த நாட்களில் இன்னொரு சம்பவமும் நடந்தது. திடீரென ஒருநாள் இந்த சௌந்தரராஜனைப் பார்ப்பதற்காக அவனது பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டனர். சிறைக்கு வெளியே சந்திப்பு நிகழ்ந்தது. 

அவர்கள் கொண்டு வந்த பலகாரங்களை இவனுக்குக் கொடுத்து அளவளாவி விட்டுச் சென்றனர். ஏன் இந்த திடீர் ஏற்பாடு என்று தெரியவில்லை. வழமையாக ஒரு கைதியை அவனது உறவினர்களுக்கு சிறைச்சாலைக்கே அழைத்துத் காண்பிக்கும் வழக்கம் புலிகளிடம் கிடையாது. எனவே இது எமக்கெல்லாம் பெரும் அதிசயமாக இருந்தது. 

சௌந்தரராஜன் அங்கிருந்தவர்களில் என்னிடமே அதிக அதிக நட்புடன் இருந்தாலும், என்னிடமும் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. (அவன் ஓரு இந்திய வம்சாவழித் தமிழனாக இருந்ததாலும், ஒரு ‘சோனகப் பெட்டை’ யை திருமணம் செய்ததாலும், இந்த யாழ்ப்பாணியர்களுக்கு அவன் மீது ஒரு ‘ஐமிச்சம்’)

ஆனால் அவனால் நீண்ட நாட்கள் வாயைத் திறக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் மிகவும் இரகசியமாக என்னிடம் விடயத்தை அவிழ்த்துவிட்டான். அவன் சொன்ன விடயம் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. 

அதாவது அவனுடைய அண்ணன் ஒருவன் வியாபாரத்துக்காக சைக்கிளில் வவுனியாவைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று வருவதுண்டு. அப்படிச் சென்று வரும்போது திரிகோணமலை வீதியிலுள்ள ஹொரவப்பொத்தானை என்ற முழுக்க முழுக்க சிங்கள மக்கள் நிறைந்து வாழும் சிறிய நகரத்தில் புலிகள் தரும் சைக்கிள் குண்டொன்றை அங்குள்ள பஸ் நிலையத்தில் வெடிக்க வைக்க வேண்டும் என்பது புலிகளின் வேண்டுகோள்! 

அப்படி அந்தக் குண்டை அண்ணன் மூலம் வெடிக்க வைத்தால், சௌந்தரராஜன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான் என்பது புலிகள் அவனுடன் மேற்கொண்ட பேரப்பேச்சின் சாராம்சம். 

அதற்கு சௌந்தரராஜன் உண்மையில் புலிகளுக்கு என்ன பதில் சொன்னான் என்பது எனக்குத் தெரிய வரவில்லை. ஆனால் அந்த விவகாரம் முழுக்க முழுக்க அண்ணன் சம்பந்தப்பட்டதால், தான் அதில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என புலிகளிடம் சொல்லிவிட்டதாக அவன் என்னிடம் மிகவும் இரகசியமாகச் சொன்னான். 

அவன் என்னைத் தவிர வேறு எவரிடமும் இந்த விவகாரம் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை என நினைக்கிறேன். நான்கூட அவனுடன் மிகவும் அவதானமாகவே நடந்து கொண்டேன். ஏனெனில் புலிகளின் சிறைகளில்கூட, எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் அந்த சௌந்தரராஜன் உடனும் விடுவிக்கப்படவில்லை என்பதை, நான் ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையாகி வந்த பின்னர் அறிந்து கொண்டேன். நான் விடுதலையான பின்னர்தான் விடுதலையான அவன், எப்படியோ எமது புத்தகக் கடையை விசாரித்துப் பிடித்து தான் விடுதலையானதை என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனான். 

அந்தவேளையில் அவனது முஸ்லீம் மனைவியும் அவனை அழைத்துப்போக வந்திருந்தாள். அப்பொழுது யாழ்ப்பாணம் புலிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால், பயத்தின் காரணமாக நான் அவர்களை எனது வீட்டுக்கு அழைத்து உபசரிக்கக்கூட இயலவில்லை.

சௌந்தரராஜனின் கதையை இங்கே எழுதவேண்டி வந்ததிற்கான காரணம், இந்த மாதிரியான பல சம்பவங்கள் புலிகளின் சிறைகளில் நடந்து வந்திருக்கின்றன என்பதைத் தெரிவிக்கவே.

எனக்கு அடி காயங்களினால் ஏற்பட்ட நோவு மாறுவதற்கு முன்னரே விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. இப்பொழுது விசாரணைகள் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டதாகவே இருந்தன. 

மீண்டும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் தயாபரன் என்மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பிராயச்சித்தம் செய்ய விரும்பினான் போலும்? தங்களது தினசரி விசாரணை அறிக்கைகளில் முக்கியமானவற்றை காந்தி இரவு வேளைகளில் படித்துப் பார்ப்பதாகவும், அதன் அடிப்படையில் சில முடிவுகளை அவர் எடுப்பது வழக்கம் எனவும் என்னிடம் அவன் கதையோடு கதையாகக் கூறினான். 

இதன் மூலம் அவன் என்மீதான தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்றும், அது முழுக்க முழுக்க காந்தி சம்பந்தப்பட்ட விவகாரம் என்று சொல்ல வந்தான் என்பது புரிந்தது.

UTHRஅரசியலைப் பொறுத்தவரை எனது கடந்தகால நடவடிக்கைகள் பற்றி துருவித் துருவிக் கேட்டான். குறிப்பாக புலிகள் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களுடனும் எனக்கு இருந்த தொடர்புகள் குறித்து விபரமாகக் கேட்டான். புலிகள் இயக்கத்திலும் யார் யாருடன் கூடுதலான தொடர்புகள் உண்டு என்பதை நுணுக்கமாக அறிய விரும்பினான். புலிகள் தங்கள் ஆட்களைப் பற்றியே ஒருவரை ஒருவர் உளவு பார்ப்பவர்கள் என்பதால், நான் அதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன்.அவர்கள் அறிய முற்பட்ட இன்னொரு முக்கியமான விடயம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR)  என்ற அமைப்புடன் எனக்கு இருந்த தொடர்புகள் பற்றியதாகும்.அதற்கொரு காரணம், அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான கலாநிதி கே.சிறீதரன் எனது நீண்ட நாள் நண்பராக இருந்தமையும், மற்றைய முக்கியஸ்தர்களான கலாநிதி ராஜன் ஹ_ல், டாகடர் ராஜினி திராணகம ஆகியோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தமையும் ஆகும். 

UTHR அமைப்பால் வெளியிடப்பட்ட ‘முறிந்த பனை’ என்ற பிரசித்தி பெற்ற நூலை நான் அதுவரை கண்ணால் ஒரு தடவை தன்னும் பார்த்திருக்காத போதும் (அந்த நூல் 1995ல் யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரே நண்பர் மனோரஞ்சன் மூலம் எனக்குக் கிடைத்தது!), அதில் வெளியிடப்பட்டிருந்த விபரங்களில் சிலவற்றை நானே திரட்டிக் கொடுத்ததாக புலிகள் சந்தேகப்பட்டிருந்ததை பின்னர் அவர்களது விசாரணைகளின் போது அறியக்கூடியதாக இருந்தது.

நான் ‘முறிந்த பனை’ நூலை அதுவரை பார்க்கவில்லை என எனது விசாரணையின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட போது, அங்கிருந்த புலிகள் ஒருவரை ஒருவர் பார்த்து உரக்கச் சிரித்ததின் மூலம், என்னை ஒரு பொய்யனாக எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு அவர்கள் உரத்துச் சிரித்த சம்பவம் நிகழ்ந்தது.

அந்தக் காலகட்டத்தில் இராணுவத்தின் பலாலி படைத்தளத்திலிருந்து ‘மக்கள் குரல்’ என்றொரு வானொலி ஒலிபரப்பாகி வந்தது. அந்த ஒலிபரப்பை ஈ.பி.டி.பி. கட்சியின் பராளுமன்ற உறுப்பினராகவும், ‘தினமுரசு’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட அற்புதன் என்பவரே நடாத்தி வந்ததாகப் பரவலாக ஒரு கதை இருந்தது.

அந்த வானொலியில் புலிகளை மிகவும் மோசமாகவும் நையாண்டித்தனமாகவும் விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் ஒலிபரப்பப்பட்டு வந்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். அப்பொழுது யாழ்ப்பாணம் புலிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால், புலிகளின் ஆதரவாளர்கள் உட்படப் பலரும் இரகசியமான முறையில் அந்த வானொலியைக் கேட்டு வந்தனர். ஆனால் நான் அதையும்கூட ஒருபோதும் கேட்டதில்லை.

ஆனால் புலிகளோ அந்த வானொலிக்கும் நானே சில விடயங்களை வழங்கி வருவதாகச் சந்தேகித்து என்னிடம் விசாரித்தனர். நான் அதை ஒருபோதும் கேட்டதுகூட இல்லை என்று சொன்ன போது, அவர்கள் தங்களை அடக்க முடியாது வாய்விட்டுச் சிரித்துக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் நான் சொன்ன (அவர்களது பார்வையில்) ‘பொய்க்காக’ என்னைத் தாக்காது ‘பெரும்தன்மையுடன்’ நடந்து கொண்டனர்.

ஆனாலும் ஒரு விடயத்தை என்னிடம் கேட்டனர். அந்த வானொலியில் பல்வேறுபட்டவர்கள் பங்குபற்றி கருத்துகள் கூறி வந்த விடயம் அது.  அவ்வாறு கருத்துக் கூறியவர்களின் ஒலிப்பதிவைப் போட்டுக் காட்டினால் அந்தக் குரல்களை வைத்து, அது யார் யாருடைய குரல்கள் என்று இனங்காண முடியுமா என்று என்னிடம் கேட்டனர்.

அவ்வாறு குரல்களை அடையாளம் காட்டக்கோரி புலிகள் கேட்ட பெயர்களில் கவிஞர்கள் வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜின் மைத்துனர் தருமலிங்கம் மாஸ்டர் ஆகியோரின் பெயர்கள் இருந்தன.

தொடரும்......
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்


1 comment:

  1. நன்று.. தொடருங்கள்

    ReplyDelete