Follow by Email

Wednesday, 2 April 2014

புலிகளின் இன்னொரு முகம் -26

எனக்கு மயக்கம் தெளிந்தபோது சிறைக்குள் படுத்திருப்பதை உணர்ந்தேன். படிப்படியாக நினைவுகள் மீண்டு வந்தன. தயாபரன் என்னை விசாரித்துக்கொண்டு இருந்தபோது இருவர் வந்து என்னருகில் நின்றதும், பின்னர் அவர்கள் என்னை நோக்கிக் கேலி பேசியதும், அதன் பின்னர் அவாகள் என்னைக் கொட்டன்களால் தாக்கியதும் நினைவுக்கு வந்தன. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை. யாரோ என்னைச் சிறைக்குள் கொண்டுவந்து படுக்க வைத்திருக்க வேண்டும்.

கண் விழித்தாலும் எழும்பி இருக்க இயலவில்லை. தலை சுற்றியது. தலையிலும் உடம்பு முழுவதிலும் வலியாக இருந்தது. படுத்திருந்தவாறே தலையைத் தடவிப் பார்த்தேன். மண்டை உடைந்த இடத்தில் பஞ்சில் மருந்து தோய்த்து பிளாஸ்ரர் போடப்பட்டிருந்தது தெரிந்தது. ஆனால் உடம்பு நோவுக்கு எவ்வித நிவாரணமும் செய்யப்படவில்லை.

தயாபரனின் கேள்விக்கு நான் சொன்ன பதில் பிடிக்காததால்தான் அவர்கள் அடித்திருக்கிறார்கள் என்பது விளங்கியது. இவ்வளவிற்கும் நான் அவர்களது புலிகள் இயக்கத்தைத் தாக்கி எதுவும் சொல்லவில்லை. 

தமிழ் தேசியவாதம் பற்றியே எனது கருத்தைச் சொன்னேன். அதற்கே இந்தத் தாக்குதல் என்றால், என்னைக் கைது செய்தமைக்கான குற்றச்சாட்டுகள் (?) குறித்து விசாரிக்கப்படும்போது என்னென்ன சித்திரவதைகள் நடக்குமோ என எண்ணினேன்.

அவர்கள் தங்கள் இயக்கத்தை நான் தாக்கிப் பேசாவிட்டாலும், தமிழ் தேசியவாதம் குறித்து விமர்சனம் செய்தாலே வெறி கொண்டதைப் பார்க்கும் போது, எதிர்காலத்தில் இது சம்பந்தமாக என்னென்ன விபரீதங்கள் நடக்கப் போகின்றனவோ என்ற அச்சம் ஏற்பட்டது. 

இந்த தமிழ் தேசியவாதம், அதன் பாதுகாவலர்கள் பற்றி நான் மெத்தனமாக எண்ணிவிட்டது புரிந்தது. இது தமிழ் காங்கிரஸ் - தமிழரசு கட்சிகளால் உணர்ச்சிகரமாக வளர்க்கப்பட்டு வந்தாலும், அதை அடைவதற்காக அது ஆயுதப்போராட்டமாக மாறிவிட்ட பின்னர், வெறிகொண்ட ஒரு போக்காக அது மாறிவிட்டதை உணர முடிந்தது. 

புலிகள் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்றிக்கொண்டு விட்டதால் அப்படி நடந்து கொள்கிறார்கள். புலிகளின் இடத்தில் இன்னொரு தமிழ் தேசியவாத இயக்கம் இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலக வரலாற்றில் ஹிட்லரின் ஜேர்மன் தேசியவாதத்திலிருந்து எல்லாத் தேசியவாதங்களை எடுத்து நோக்கினாலும், அங்கே ஒரு பாசிய வெறி ஊழிக் கூத்தாடியதைக் காண முடியும். 

இது தேசியவாதத்தின் ஒரு பொதுக் குணாம்சம். பாட்டாளி வர்க்கத்தால் தலைமைதாங்கப்படாத எல்லாவிதமான வெறும் தேசியவாதப் போராட்டங்களிலும் ஜனநாயகம் என்பது மருந்துக்கும்கூட இருந்தது இல்லை என்பதை பல வரலாற்று உதாரணங்களின் மூலம் லெனின் அடிக்கடி எடுத்துக் கூறியமை நினைவுக்கு வந்தது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தற்போதைய என்மீதான தாக்குதல்.

எனக்கு மிகவும் களைப்பாக இருந்ததால் தண்ணீர் தரும்படி அருகில் இருந்த பெரியவரிடம் கேட்டேன். எனது தேவையை உணர்ந்தவுடன் பலர் ஓடோடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்தனர். 

சிறைக்குள் இருந்த பலர் என்னருகில் வந்து அனுதாபமாக என்னைப் பார்ப்பதை அவதானித்தபோது சற்றுக் கூச்சமாகவும் இருந்தது. அவர்களில் பலர் எம்முடன் தண்டனை அனுபவிக்கும் புலி உறுப்பினர்கள். அவர்களும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக எம்முடனேயே ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். 

இங்கு எதிரும் புதிருமான வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும், தாம் எல்லோரும் கைதிகள் தானே என்ற ஒரு பொது உணர்வு இருப்பதை அவதானித்தேன். அதனால் ஒரு புலி உறுப்பினர்கள்கூட, தனது சக கைதி தனது இயக்க புலனாய்வு நபரினால் தாக்கப்படும் போது, தாக்கப்பட்டவன் மீது அனுதாபம் கொள்வதைக் காண முடிந்தது.

இந்த உணர்வு பொதுவானது என நினைக்கிறேன். இங்கு தாம் எந்த இயக்கப் பின்னணியில் இருந்து வந்தோம் என்பதை விட, தாம் அனைவரும் பாதிப்புக்குள்ளான மனிதர்கள் என்ற பொது உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. இது மனித இயல்பு.

சில கைதிகளின் உதவியுடன் கைத்தாங்கலாக மலசல கூடம் சென்று வந்தேன். ஒருவர் ஒரு குவளையில் உப்புக் கரைசலைக் கொண்டுவந்து உடம்பு முழுவதும் தேய்த்துவிட்டார். அது சற்று இதமாக இருந்தது. அதைக்கூட சிறைக் காவலனுக்கோ, வேறு புலி உறுப்பினர்களுக்கோ தெரியாமல்தான் செய்தார்கள். அவர்கள் அறிந்தால் அதற்கு வேறு தண்டனை கிடைக்கும்.

இந்த உப்புக் கரைசல் எப்படி சிறைக்குள் ஒரு சர்வரோக நிவாரணியாக மாறியது என்பதை எண்ணியபோது, மண்டைதீவைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் கூறிய ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. 

வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்த அவர் அங்கு எமது விவசாய சங்க வேலைகளின் போது அறிமுகமாகிப் பின்னர் எமது நெருங்கிய நண்பராக இருந்தவர். அவர் ஊரில் ஒரு சண்டியன் என அறியப்பட்டவர். 

ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய பின்னர்தான் தெரிந்தது அவர் வெறும் சண்டியன் அல்ல என்ற விடயம். நியாயத்துக்காக கதைக்கப் போய் பல வம்புகளில் மாட்டிக்கொண்ட ஒருவர் அவர்.

அவர் தனது வாழ்நாளில் 52 வழக்குகளில் சிக்கியுள்ளார். ஆனால் ஒரு வழக்கைத் தவிர ஏனைய வழக்குகள் எல்லாவற்றிலும் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையானவர். இருந்தாலும் அவர் கைதுசெய்யப்படும் ஒவ்வொரு முறையும் அனேகமாகப் பொலிசாரால் தாக்கப்படுவது வழக்கம். 

அதன்பின்னர் கோட்டைச் சிறைக்காலைக்குள் விளக்கமறியல் கைதியாக வைக்கப்படுவதும் வழக்கம். பொலிசாரின் அடி நோக்களுக்கு மருந்துகள் எதுவும் தரும் வழக்கம் கிடையாது. 

கோட்டையில் மறியலில் இருக்கும்போது அங்குள்ள கிணற்று நீரில் குளித்தால், அடி நோவு எல்லாம் தானாகப் பறந்துவிடும் என அவர் கூறுவார். அதற்கு அவர் கூறும் காரணம், அந்த நீர் உப்புத் தன்மையுள்ள தண்ணீர் என்பதுதான். அதன் காரணமாகவே இந்த உப்பு நீர் வைத்தியம் இந்தச் சிறையினுள்ளும் வந்ததோ என்னவோ?

அதன் பின்னர் சுவரில் சாய்ந்தவாறு எனக்காக ஒதுக்கி வைத்திருந்த மதிய உணவை சிறிது உண்டேன். உணவை விட சற்று நேரம் ஆசுவாசமாகப் படுத்திருக்க வேண்டும் என்ற விருப்பம்தான் கூடுதலாக இருந்தது. மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டேன். அன்று மாலை எனக்கு விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தயாபரனும் மேலும் சில புலிகளும் சிறை வாசலில் வந்து நின்று என்னை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றனர். அவர்கள் வந்ததின் நோக்கம் நிச்சயமாக அனுதாபம் தெரிவிப்பதற்காக இருக்காது. எப்படி வலியுடன் போராடுகிறேன் என்பதை வேடிக்கை பார்பதற்காக இருக்கும்!

என்னைப் பார்க்க வந்தவர்களில் ஒருவன், என்னை கொட்டன்களால் தாக்கியவர்களில் ஒருவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். அவர்கள் வந்து போனபின்னர்தான் அவனது பெயர் திசை என அறிந்தேன். எம்முடன் கைதியாக இருந்த வவுனியாவைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்ற ஒருவர் மூலமே அவனது பெயரை அறிய முடிந்தது. அவன் இந்த முகாமைச் சேர்ந்த விசாரணையாளன் அல்ல என்பதும் தெரிய வந்தது.

அவன் கிளிநொச்சி கனகபுரத்திலிருந்த புலிகளின் வதை முகாமுக்குப் பொறுப்பானவன். அதற்கு முதல் அவன் இந்திய அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகள் துணுக்காயில் அமைத்திருந்த மிகப்பெரிய வதை முகாமில், அந்த முகாமின் பொறுப்பாளன் ‘மல்லி’ என்பவனுக்குக் கீழ் செயல்பட்டவன். 

அந்த துணக்காய் முகாமில் சுமார் 4,000 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், மிகவும் மோசமாகச் சித்திரவதையும் செய்யப்பட்டவர்கள். அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு சிலரே விடுதலையானார்கள். 

ஏனையோர் அனைவரும் புலிகளால் தீர்த்துக் கட்டப்பட்டுவிட்டார்கள். (இந்த மல்லி தான் மணலாறு பகுதியில் வேவு பார்க்கச் சென்றபோது இராணுவத்தால் பிடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டவன். புலிகள் அரசுடனான பேச்சுவார்த்தையின் போது அவனது தலையைத் தன்னும் தரும்படி வேண்டியிருந்தனர். இவனை நான் உள்ளேயிருந்த போது ஒருமுறை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது)

மல்லியிடம் பயிற்சி பெற்றபடியால் திசையின் செயற்பாடுகளும் அதற்கேற்ற வகையில்தான் இருந்தது. திசையின் முகாமில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் அனுபவித்த கொடுமைகளை அந்த சௌந்தராஜன் என்ற வாலிபர் விபரித்தபோது, இங்கு நாம் காந்தியின் சிறையில் இருப்பது சற்றுப் பரவாயில்லை என்று தோன்றியது.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

1 comment: