Follow by Email

Wednesday, 2 April 2014

புலிகளின் இன்னொரு முகம் -25

புலிகளின் விசாரணையாளன் தயாபரன் கேட்ட கேள்விக்கு காரண காரியங்களோடு விரிவான ஒரு பதிலை அளிப்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல. எனவே சுருக்கமான பதில் ஒன்றைச் சொன்னேன்.

“எமது கட்சி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக தமிழீழத்தை ஏற்கல்லை. அதாலை அந்தக் கொள்கையுடைய எந்த இயக்கத்தோடையும் என்னாலை சேர்ந்து வேலை செய்யேலாது. அதாலைதான் நான் ஒரு இயக்கத்தோடையும் சேரேல்லை”. இதுவே அவனது கேள்விக்கு எனது பதில்.

“சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு இவளவு கொடுமையளைச் செய்த பிறகும் அவங்களோடை சேந்து வாழலாம் எண்டு நம்புறியளோ?” என அவன் சற்று காட்டமாகக் கேட்டான்.

“இந்தப் பிரச்சனை வெள்ளைக்காரனாலை உருவாக்கப்பட்டு இரண்டு பக்கத்திலையும் உள்ள இனவாதிகளாலை வளக்கப்பட்ட விசயம். எனவே இதிலை மக்களிலை பிழை இல்லை” என்று சொன்னேன்.

“அப்படியெண்டால் தமிழ் மக்களுக்கு ஒரு கொடுமையும் சிங்களவங்களாலை நடக்கல்லை எண்டு சொல்லுறியளோ?” எனக் கேட்டான்.

“சில சந்தர்ப்பங்களிலை சாதாரண சிங்கள மக்களும் சில சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கெதிரான பெரும்பாலான சம்பவங்கள் சிங்கள இனவாத அரசியல்வாதிகளாலையும் அவங்கடை காடையர் கூட்டத்தாலும் தான் நடத்தப்பட்டது” எனச் சொன்னேன்.

எனது பதில் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பது புரிந்தது. ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கி, அவ்வாறு தொடங்கிய ஏனைய இயக்கங்கள் எல்லாவற்றையும் அழித்தொழித்துவிட்டு, அதன் பின்னர் இந்திய அமைதிப்படையுடனும் போர் புரிந்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் ஒர் இயக்கத்தைச் சேர்ந்தவன் அவன். 

அதுவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவன். பெரும் பயிற்சிகளைப் பெற்றிருப்பான். தமிழ் தேசிய வெறியின் உச்சத்தில் இருக்கும் அவன் போன்றவர்கள் நான் சொல்லும் கருத்துக்களை காதால் கேட்கவே விரும்பமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

“அப்பிடியெண்டால் உங்கடை கட்சி தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை ஏன் தொடங்கினது?” எனக் கேட்டான்.

“தமிழ் மக்கள் அரசாங்கத்தாலை இனரீதியான பாரபட்சத்துக்கு உள்ளாகிறார்கள் எண்டபடியாலை அதற்கு எதிராகப் போராடவே தொடங்கினம்” எனக் கூறினேன்.

“ஆமி தமிழ் மக்களைக் கொல்லேக்கை நீங்கள் என்ன போராட்டம் நடத்தப் போறியள்?” எனக் சற்றுக் கேலியுடன் கேட்டான். இந்த இடத்தில் நான் பதில் சொல்ல முடியாமல் அல்லது தங்கள் நிலைப்பாடுதான் சரி என்று ஏற்றுக் கொள்ளச் செய்து என்னை மடக்கி விடலாம் என அவன் எண்ணுவது தெரிந்தது.

“நாங்கள் என்ன வகையான போராட்ட வழியை பின்பற்றுவது எண்டது எங்கடை கையிலை இல்லை. அது எதிரியின் செயலை பொறுத்துத்தான் அமையும். நாங்கள் வலிஞ்சு போறது தவறு. எதிரி தாக்கும் போது மக்கள் தங்களைத் எந்த வடிவத்திலேனும் தற்காத்துக் கொள்வதில் தவறு இல்லை. 

அதன் மூலம் எதிரி செய்யும் அநியாயத்தை சிங்கள மக்களுக்கும் உலக மக்களுக்கும் காட்டேலும். ஆனால் அதற்குத் தீர்வு தனிநாடுதான் எண்டு போராடப் போனால் எல்லாற்றை எதிர்ப்பையும் தேட வேண்டி வரும். எல்லாரும் சேந்து எங்களை அழிச்சுப் போடுவாங்கள்” என்று சொன்னேன்.

“தமிழனுக்கெண்டு தனிநாடு ஒண்டு இருந்தால் எங்கடை மக்களை சிங்களவனாலை ஒண்டும் செய்யேலாது தானே? அதை நீங்கள் ஏன் எதிர்க்கிறியள்?” என அவன் வினவினான்.

அதற்கு நான், “தமிழர்களுக்கு ஒரு தனிநாடு அமையிறதை நாங்கள் எதிர்க்கல்லை. முதலாவது விசயம் தனிநாடு அமையிறதாலை தமிழ் மக்களின் பிரச்சனைகள் எல்லாம் தீந்திடும் என்றில்லை. அப்பிடி ஒரு ஆட்சி அமைஞ்சால் இஞ்சையுள்ள வசதி வாய்ப்புள்ள கூட்டம்தான் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும். அடுத்தது ஸ”

அதற்குள் அவன் குறுக்கிட்டு, “தலைவர் அதுக்கு விடமாட்டார்” என்றான்.

நான் தொடர்ந்தேன். “தனிநாடு அமையுறது லேசுப்பட்ட காரியமில்லை. தனிநாட்டுப் போராட்டத்தை இலங்கை அரசு மட்டுமில்லை இந்தியாவும் எதிர்க்கும். அதோடை இலங்கைக்கு உதவிற சீனா, ரஸ்யா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளும் எதிர்க்கும். 

ஆனபடியாலை அது லேசான விசயமில்லை. அதோடை எங்கடை சனத்திலை அரைவாசிக்கு மேலை அழிய வேண்டியும் வரும். பங்களாதேஸ் அமைக்கிறதுக்கு இந்தியா உதவி பண்ணியும் எத்தினை லட்சம் மக்கள் செத்ததுகள்? அப்பிடி இருந்தும் இண்டைக்குவரைக்கும் அங்கை நிம்மதியான ஆட்சி இல்லை. 

மக்களின் எந்தப் பிரச்சனையும் தீரல்லை. எங்கடை சனத்தைப் பொறுத்தவரை உப்பிடி இழப்புகளைத் தாங்கேலாது. அதோடை இந்தியாவைப் பகைச்சுக்கொண்டு எங்களாலை ஒண்டும் செய்யேலாது” என விளக்கினேன்.

எனது பேச்சைக் கேட்ட அவன் என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு, “எங்களோடை சேட்டை விடப்போய் இந்தியன் ஆமி வாங்கிக் கட்டிக்கொண்டு ஓடினது தெரியும் தானே?” என படு உற்சாகத்துடன் சொன்னான்.

இந்திய அமைதிப்படையுடன் புலிகள் மோதிய காலம் முழுவதும் நான் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன். எனவே உண்மையில் அப்பொழுது என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். இந்திய அமைதிப்படையுடன் புலிகள் ஓரளவு பலத்துடன் மோதினார்கள் என்பது உண்மைதான். 

ஆனால் இறுதியில் மிகப் பலமான அந்த இராணுவத்துடன் புலிகள் நின்று பிடிக்க முடியாமல் பின்வாங்கிச் சென்று, பிரபாகரன் உட்பட முக்கிய புலிகள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நித்திகைக்குளம் காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்தால் முடக்கப்பட்டார்கள்.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இறுதித் தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கையிலிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதி ஜெனரல் கல்கத் புதுடில்லியிலுள்ள இந்திய அரச உயர்பீடத்துடன் தொடர்பு கொண்டதாகவும், புலிகளைத் தப்பிப் போகும்படி அங்கிருந்து அறிவித்தல் கிடைத்ததாகவும், அதன் பின்னர் இந்தியப்படை தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதாகவும் செய்திகள் கசிந்திருந்தன.

(இந்திய இராணுவம் அன்றே - 1989 இல் -  முல்லைத்தீவு காட்டில் வைத்து புலிகளை ஒழித்துக் கட்டியிருந்தால், அதற்குப்பிறகு 20 வருட அழிவுகளை சந்தித்த பின்னர், 2009 மே மாதம் புலிகளை ஒழித்துக் கட்டும் வரை இலங்கை அரசு காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது)

எனவே ஒரு பெரும் கண்டத்திலிருந்து தப்பிய புலிகள், பின்னர் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து, இந்திய அமைதிப்படையை வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டு, பின்னர் தங்களை இந்திய அமைதிப்படையிடம் இருந்து காப்பாற்றிய பிரேமதாசவையும் கொலை செய்து, தங்களை முல்லைத்தீவு காட்டுச் சுற்றிவளைப்பிலிருந்து காப்பாற்றிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொலை செய்து தமது ‘நன்றிக்கடனை’த் தீர்த்துக் கொண்டனர்.

இப்படித்தான் அவர்கள் இந்தியப்படையை ‘எதிர்த்துப் போராடி வெளியேற வைத்த’ பெருமை இருந்தது. எனவே தாம் சண்டையிட்டுத்தான் இந்திய அமைதிப்படையை வெளியேற்றியதாக தயாபரன் பெருமையடித்துக் கொண்டதையும், ஆனபடியால் இந்தியா குறுக்கே வந்தாலும் அதை முறியடித்து தமிழீழம் அமைக்க முடியும் என்ற அவனது நம்பிக்கையையும் பார்த்த போது, என்னால் அமைதியாக இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

இருப்பினும் புலிகளது தமிழீழ கனவை நான் ஏற்கவில்லை என்பது, அவனுக்குக் கடுப்பாக இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.

“உங்களைப் போன்ற ஆட்களாலைதான் எங்கடை இனம் இன்னும் விடுதலை அடையாமல் இருக்கு” என அவன் சினந்து கொண்டான். (என்னைத் ‘துரோகி’ என முத்திரை குத்திவிட்டானோ என்ற அச்சம் எனக்குள் எழுந்தது) அதன் பின்னரும் அந்த விவகாரம் குறித்தே அன்றைய அவனது விசாரணைகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் என்னைக் கைதுசெய்தது, வெறுமனே இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிப்பதற்காக மட்டுமல்ல என்பது எனக்குப் புரிந்தது. இது பலவற்றில் ஒன்று. அவ்வளவுதான்.

அன்று இரவு முழுவதும் எனது மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. நான் தயாபரனுடன் அளவுக்கதிகமாகக் கதைத்துவிட்டோனோ என எண்ணி அச்சப்பட்டேன். அடுத்த நாள் காலையிலும் வழமைபோல விசாரணைகள் ஆரம்பமாயின. தயாபரனின் கேள்விகள் முதல் நாளைய தொடர்ச்சியாகவே இருந்தன.

விசாரணைகள் ஆரம்பமான சிறிது நேரத்தில் இருவர் எனது பின்பக்கமாக வந்து இரு மருங்கிலும் நின்று கொண்டனர். நான் அவர்களைப் பார்க்காதது போல நேரே தயாபரனைப் பார்த்தவாறு இருந்தேன்.

அவர்களில் ஒருவன் “ஐயாவுக்கு கதிரையும் குடுத்து ராச மரியாதையோடைதான் விசாரிக்கிறாய்” என்று தயாபரனிடம் கூறினான்.

மற்றவனோ தயாபரனை நோக்கி, “ஐயா என்ன சொல்லிறார்?” எனக் கேலியாகக் கேட்டான்.

அதற்கு மற்றவன், “ஐயாவுக்கு தமிழீழம் புளிக்குதாம். சிங்களவனுக்கு குண்டி கழுவி வாழுறதுதான் ஆசையாம். என்ன ஐயா அப்படித்தானை?” என்று கேட்டான்.

நான் அவர்களிருவரையும் மாறிமாறி பார்த்தேன். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என மனம் சொல்லியது. அவ்வளவுதான் வந்தவர்கள் இருவரும் எனது தலையிலும் உடம்பு முழுவதும் தாம் கொண்டு வந்திருந்த கொட்டன்களால் தாறுமாறாக அடிக்கத் தொடங்கினர். 

நான் தலையைப் பாதுகாக்க கைகளால் முயன்றும் பயனில்லை. எனது மண்டை உடைந்து இரத்தம் ஆறாக ஓடியது. எவ்வளவு நேரம் அடித்திருப்பார்களோ தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன்.

(தொடரும்)

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment