Follow by Email

Thursday, 20 March 2014

: வாய்மையே வெல்லும்- நரேந்திர மோதி உரைஎன் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

உண்மை மட்டுமே வெல்லுமென்பதே இயற்கையின் சட்டம். அதாவது வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே). நமது நீதியமைப்பு இதை வெளிப்படுத்தியுள்ள இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் எனது மனதில் உள்ள கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை தெரிவிப்பது முக்கியம் என்று கருதுகிறேன்.

இந்த முடிவு ஆரம்பத்தின் நினைவலைகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. 2001ம் ஆண்டில் குஜராத்தையே குலுக்கிய பூகம்பம், பலபேரை பலிவாங்கி, பேரழிவை ஏற்படுத்தி, பலரை ஆதரவற்றவர்களாக்கியது. 

ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர், ஏராளமானவர்கள் தங்கள் வாழ்வு ஆதாரங்களை பறி கொடுத்தனர். கற்பனை செய்ய முடியாத இத்தகைய இயற்கையின் கோர தாண்டவம் 

நிகழ்ந்த நேரத்தில் மக்களை அமைதிப்படுத்தவும் மற்றும் புனர்வாழ்வு அளிக்கவும் பாடுபட என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நாங்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு முழு மனதுடன் இதில் ஈடுபட்டோம்.

எனினும், அதற்கு பின் வெறும் ஐந்தே மாதங்களில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொடிய வன்முறை மற்றொரு எதிர்பாராத பெரிய பிரச்சினை. இதில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர், குடும்பங்கள் ஆதரவின்றி தவித்தன. 

ஆண்டுக் கணக்கில் உழைத்து உருவாக்கிய சொத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இயற்கை ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மீள்வதற்குள், ஏற்கனவே மிக அதிகமாக பாதிக்கப்பட்டு நிலை குலைந்திருந்த குஜராத்திற்கு இது மற்றொரு பேரிடி.

நான் உண்மையிலேயே மிகவும் நிலை குலைந்து போய்விட்டேன். வருத்தம், துயரம், சோகம், வலி, துன்பம் என்று எதைச் சொல்வது. இத்தகைய மனித நேயமற்ற ஒரு சூழ்நிலையை காணும்போது அது ஒருவருக்கு ஏற்படுத்தும் உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது.

ஒரு புறத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம், மற்றொருபுறத்தில் கலவரங்களின் விளைவால் கதிகலங்கி நிற்கும் மக்கள். இத்தகைய ஓர் கொடிய சூழ்நிலையை எதிர்கொள்ள மிகவும் தீர்மானமாக, இறைவன் எனக்கு கொடுத்த பெரும் மன வலிமையுடன் நான் அமைதி, நீதி, மற்றும் புனர்வாழ்வு அளிக்கும் பணியில் துணிந்து செயல்பட்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட வலி மற்றும் துயர உணர்வை மனதில் அடக்கிக் கொண்டேன்.

அத்தகைய சவாலான தருணங்களில், நான் நமது பாரம்பரிய நூல்களில் குறிப்பிட்டுள்ள விவேகத்தை நினைவு கூர்ந்தேன். உயர்பதவிகளில் இருப்போருக்கு பிறருடன் அவர்களின் சொந்த வலி மற்றும் துயரத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. 

அவர்கள் தனிமையில்தான் அதை நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கும். அதேபோல் நான் இந்த துயரத்தை மிகவும் வேதனையுடன் அனுபவித்தபடி வாழ்ந்தேன். அத்தகைய துயரமான நாட்களை நினைவு கூரும்போதெல்லாம் நான் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். 

இத்தகைய துரதிருஷ்டமான நாட்கள் வேறு எந்த ஒரு நபருக்கும், சமூகத்திற்கோ, மாநிலத்திற்கோ அல்லது நாட்டிற்கோ மீண்டும் ஒருபோதும் நிகழக் கூடாது என்பதுதான்.

அந்த காலகட்டத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட இந்த திகிலூட்டும் மன வருத்தத்தை உங்களுடன் நான் இப்போது பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை.

கோத்ரா ரயில் எரிப்பு நடந்த நாளன்றே, இதே மன உணர்வுகளுடன் நான் குஜராத் மக்களிடம் ஓர் கோரிக்கை வைத்தேன்; அமைதியாவும், கட்டுப்பாடாகவும் இருந்து, அப்பாவிகளின் உயிர்கள் பலியாகாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்று அடிக்கடி வலியுறுத்தினேன். 

2002 பிப்ரவரி - மார்ச் மாதத்தில் அந்த துயரமான நாட்களில் மீடியாக்களில் நான் உரையாடும்போதெல்லாம் நான் இதே கொள்கைகளைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். 

எனது அரசியல் மன உறுதி மற்றும் அதே போல ஒரு பண்பான பொறுப்பு இரண்டையும் பொதுவாக குறிப்பிடும் விதத்தில் அமைதியை உறுதிப்படுத்த, நீதியை வழங்கிட மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க அரசு கொண்ட உறுதியை நான் வெளிப்படுத்தினேன். 

எனது சத்பாவனா உண்ணா விரதங்களில் எனது சமீபத்திய பேச்சுக்களில் எனது இந்த ஆழ்ந்த உணர்வு வெளிப்பாடுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்போது, நாகரீகமான ஒரு சமுதாயம், அதன் வாழ்க்கையில் இத்தகைய துயரமான சம்பவங்களை அனுமதிக்கவே செய்யாது என்று நான் எடுத்துக் கூறியுள்ளேன் மற்றும் இது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் வேதனை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளேன்.

உண்மையில் நான் மிக முக்கியமாக வலியுறுத்துவது என்னவென்றால், அது ஒற்றுமைக்கான ஒரு உத்வேகத்தை உருவாக்கி அதற்கு முக்கியத்துவம் அளிப்பதே. நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆரம்பத்திலிருந்தே நான் முக்கியத்துவம் அளிக்கும் விஷயம் எனது 5 கோடி குஜராத்தி சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் இருப்பதே.

எனினும், இந்த அத்தனை துயரங்களும் போதாதென்று, எனது அன்புக்குரியவர்களாக இருந்தவர்களின், என் குஜராத்தி சகோதர சகோதரிகளின் மரணம் மற்றும் துயரங்களுக்கு பொறுப்பாளி நான்தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டேன். அப்போது எனக்கு ஏற்பட்ட வேதனை மற்றும் மனக் கொந்தளிப்பை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

பல ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து என் மீது இத்தகைய கருத்து தாக்குதல்களை செய்து வருகிறார்கள். ஆனால் என்னை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

குறுகிய மனப்பான்மை மற்றும் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக மிகுந்த பொறாமையுடன் எனது மாநிலம் முழுவதையும் மற்றும் நாட்டையும் அவமானப்படுத்தும் விதத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. 

நாங்கள் ஆற்றிக்கொள்ள முயன்று வரும் காயங்களை இந்த இரக்கமற்ற செயல்கள் மீண்டும் ரணமாக்குகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நீதியும் இதனால் தாமதமானது. ஏற்கனவே வருந்தி வதங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மேலும் எத்தகைய துயரத்தை தாங்கள் ஏற்படுத்துகிறோம் என்பதையும் அவர்கள் உணராமல் இருக்கலாம்.

எனினும் குஜராத் அதன் சொந்த பாதையை தீர்மானித்துள்ளது. வன்முறைக்கு பதிலாக அமைதி, வேற்றுமைக்கு பதிலாக ஒற்றுமை, வெறுப்புக்கு பதிலாக அன்பு என நாங்கள் தேர்ந்தெடுத்து கொண்டுள்ளோம். 

இவை எல்லாம் எளிதாக இருக்கவில்லை. ஆனால், நீண்ட கால வளமைக்கு இவை முக்கியம் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம். தினசரி நிச்சயமற்ற நிலை மற்றும் பீதி என்றதொரு வாழ்க்கையிலிருந்து இப்பொழுது எனது குஜராத் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் கொண்ட ஓர் மாநிலமாக உருமாறியுள்ளது. 

இப்போது நான் மிகுந்த திருப்தி உடையவனாக எதையும் சாதிக்கும் ஒரு நபராக இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இவை அனைத்துக்கும் ஒவ்வொரு குஜராத்திக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

குஜராத் அரசு, நம் நாட்டில் முன்பு நிகழ்ந்த எந்த ஒரு கலவரங்களிலும் யாரும் செயல்படாத விதத்தில் குஜராத்தில் வன்முறை நிகழ்ந்தபோது மிகவும் விரைவாக, சிறப்பாக செயல்பட்டு அதை அடக்கியது. 

நம் நாட்டின் மிகப் பெரிய நியாயத்தலமான இந்தியாவின் உச்ச நீதிமன்றம் முன் எப்போதுமில்லாத விதத்தில் மிகவும் ஆய்ந்து, ஆலோசித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத்தின் 12 ஆண்டுகால போராட்டம் ஓர் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது நான் சுதந்திரம் மற்றும் அமைதியை முழுமையாக உணருகிறேன்.

இந்த சோதனைக் காலத்தில் என் தோளோடு தோள் நின்ற அனைவருக்கும் உண்மையிலேயே எனது நன்றி. பொய்கள் மற்றும் சூது இவைகளையே பார்த்து, அதன் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி எதிரிகள் மகிழ்ந்திருந்த நேரத்தில், இப்போது நான் இதைப்பற்றி அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றும் அசல் நரேந்திர மோடி சிறப்பாகச் செயல்பட ஆற்றல் மிக்கவர் ஆகிறார் என்றும் அறிந்து கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

பிறருக்கு மன வேதனை ஏற்படும் விதத்தில் செயல்பட்டு, அதன் மூலம் திருப்தி அடைவோர், எனக்கு எதிரான கண்டனத்தை நிறுத்தாமல் மேலும் தொடரலாம். அவர்கள் அதை நிறுத்துவார்கள் என்று நானும் எதிர் பார்க்கவில்லை. 

ஆனால் நான் அவர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் குஜராத்தின் 6 கோடி மக்களை அவனமானப்படுத்தும் விதத்தில் பொறுப்பின்றி பேசுவதை, செயல்படுவதை இப்போதாவது நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதே. 

வலி மற்றும் துயரம் நிறைந்த இந்த பயணத்திலிருந்து இனி என் உள்ளத்தில் எந்த ஒரு கசப்பும் ஏற்படும் சூழ்நிலை வரக்கூடாது என்றே இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். இது என் சொந்த வெற்றி என்றோ, அல்லது பிறரின் தோல்வி என்றோ நான் இந்த தீர்ப்பை பார்க்கவில்லை. 

நான் எனது நண்பர்களுக்கும் குறிப்பாக என் எதிரிகளுக்கும் அவ்வாறு கருதாதீர்கள் என்றே கூற விரும்புகிறேன். 2011ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதே விஷயத்தில் வெளிவரும்போதும் நான் இதே கொள்கையைத்தான் பின்பற்றினேன். 

ஆக்கப்பூர்வமான தீர்ப்பை செயல்படும் நடவடிக்கையாக மாற்றிட நான் 37 நாட்கள் சத்பாவனாவுக்காக உண்ணாவிரதம் இருந்தேன். இதன் மூலம் நமது சமூகத்தில் பெருமளவு ஒற்றுமை மற்றும் சத்பாவனாவை வலியுறுத்தினேன்.

எந்த ஒரு சமூகமோ, மாநிலமோ அல்லது நாடோ அதன் வருங்காலம் மனித நேயத்தில்தான் இருக்கிறது என்பதை நான் மிகவும் நம்புகிறேன். முன்னேற்றமும் செழிப்பும் வேண்டுமானால், அதற்கு இதுதான் ஒரே அஸ்திவாரம். 

இதற்காக ஒருங்கிணைந்து பாடுபட நான் அனைவரையும் வலியுறுத்துகிறேன் மற்றும் அதற்காக கைகோர்த்து பாடுபட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவர் முகத்திலும் புன்னகை மலர உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

மீண்டும் கூறுகிறேன், வாய்மையே வெல்லும்!

வந்தே மாதரம்!

நரேந்திர மோடி.

No comments:

Post a Comment