Follow by Email

Thursday, 20 March 2014

புலிகளின் இன்னொரு முகம் -24

1992ம் ஆண்டு பிறந்துவிட்டது. பிறந்த கையோடு புத்தாண்டு தினம் முடிந்தும் விட்டது. புலிகளின் வதை முகாமில் வாடிக்கொண்டிருக்கும் எம்மைப் போன்ற கைதிகளுக்கு புத்தாண்டு தினம் எத்தகைய சிறப்புகளுக்கும் உரிய ஒன்றல்ல. ‘நாளை மற்றொரு நாளே’ என்பது போல, எமக்கு புத்தாண்டு தினமும் மற்றொரு நாளாகக் கழிந்துவிட்டது.

புத்தாண்டுக்கு அடுத்த நாள் வழமைபோல கைதிகளின் விசாரணைகள் ஆரம்பமாயின. எனது விசாரணையையும் தயாபரன் ஆரம்பித்தான். இந்தத் துன்பத்திலும் சில நகைச்சுவைகளைப் பரிமாறி கைதிகள் சிறிது நேர இன்பம் காணவும் தவறவில்லை.

“ஒருநாள் விசாரணை, அடிதடி என்டு இல்லாமல் நேற்று கழிந்ததால், விசாரிக்கிறவங்களின்ரை கை கால்கள் உளைவெடுத்திருக்கும்” என ஒரு கைதி இரகசியமாகச் சொல்ல, அது சிறையெங்கும் நொடிப்பொழுதில் பரவி மௌனச் சிரிப்பலையைக் கிளப்பியது.

தயாபரன் மீண்டும் விசாரணை தொடங்கியதும் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “புதுவருசத்திலண்டு என்ன செய்தியள்?” என்பதாகும். வெளியே சுதந்திரமாகத் திரிபவன் ஒருவனிடம் கேட்க வேண்டிய கேள்வியை, சிறைக்கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பவனிடம் அடைத்தவனே கேட்பது என்பது, நான் முன்பு கண்டு கேட்டு இருக்காத ஒன்றாகும்.

“நல்லாகக் குளிச்சுச்; சாப்பிட்டு நித்திரையும் கொண்டன்” என துணிந்து, மனமறிந்து ஒரு பொய்யைச் சொன்னேன்.

“அப்ப நேற்று உங்கடை எல்லாற்றை பாடும் கொண்டாட்டம் தான் எண்டு சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் அவன்.

அவனுடைய கேள்வியையும், அதற்கு நான் சொன்ன பதிலையும், அதற்கு அவன் சொன்ன பதில் கருத்தையும் எண்ணுகையில் எனக்கே சிரிப்பாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட முடியாதே. வெளிக்காட்டினால் அதற்கு விளக்கம் வேறு சொல்ல வேணுமே. அவன் சொன்னதை ஆமோதிப்பது போல மெதுவாகத் தலையை ஆட்டினேன். அவனது முகத்தில் திருப்தி பளிச்சிடுவதைக் காண முடிந்தது.

அடுத்ததாக அவன் திடீரென என்னிடம், “உங்கள் கால் சங்கிலி நேற்று ஏன் வெட்டப்பட்டது எண்டு தெரியுமோ?” எனக் கேட்டான். நான் ‘இல்லை’யெனத் தலையசைத்தேன். அவன் ஏதாவது விளக்கம் சொல்லுவான் என எதிர்பார்த்தேன். அவன் அதுபற்றி மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனது விசாரணையை ஆரம்பிப்பதில் அக்கறை காட்டினான்.

:”நீங்கள் எந்த இயக்கத்துக்கு சப்போட்?” என நான் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டான்.

“நான் ஒரு இயக்கத்துக்கும் சப்போட் இல்லை” எனப் பதிலளித்தேன்.

“கம்பசுக்கு (கம்பஸ்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) முன்னாலை உள்ள உங்கடை கடைக்கு எல்லா இயக்கக்காரரும் வந்து போறவைதானே?” என்று கேட்டான்.

“ஓம் எல்லாரும் வாறவை. எல்லா இயக்கத்தின்ரை வெளியீடுகளும் நான் விக்கிறனான். அதோடை இந்தியாவிலிருந்து வெளிவாற சிறு சஞ்சிகைகள் எல்லாம் எனக்குக் கிடைப்பதால், அது வாங்குகிறதுக்காகவும் ஆட்கள் வாறவை. 

எல்லா இயக்கக்காரரும் என்னோடை நல்ல சிநேகிதமாகத்தான் பழகிறவை. எனது கடை ஒரு பொது இடம் மாதிரி. எனது கடைக்கு ‘மரினா பீச்’ (அதாவது சென்னையில் எல்லோரும் கூடும் மரீனா கடற்கரை போல) என்று ஒரு பெயரும் இருக்கிறது” என்று விளக்கினேன்.

“அது என்ன மரினா பீச்? ஆர் வைச்சது அந்தப் பேரை?” என்று ஆவலுடன் வினவினான்.

“உங்கடை இயக்கத்தினர் தான் அந்தப் பெயரை வைச்சதாக அறிஞ்சனான்” என்று சொன்னேன்.

“அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்?” என எதிர்க் கேள்வி எழுப்பினான்.

“எனது கடைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினரும் வாறவை. அந்த இயக்கம் தPrison -1டை செய்யப்பட்ட போது, எனது கடைக்கு வழமையாக வரும் அந்த இயக்க ஆட்கள் யாராவது அங்கு இருக்கிறார்களா என அறிஞ்சு வரும்படி கம்பசுக்குள் இருந்து உங்கள் இயக்கம் அனுப்பிய ஆளிடம் ‘மணியண்ணையின்ரை மரினா பீச்சுக்குள் ஆராவது இருக்கிறாங்களா’ என்டு பார்த்து வரும்படி சொன்னதாக அறிந்தேன். அதற்குப் பிறகுதான் எனது கடைக்கு உங்கடை ஆட்கள் அப்பிடியொரு பேர் வைச்ச விடயம் எனக்குத் தெரியும்” எனத் தெரிவித்தேன்.

“அப்பிடியா விசயம்” என்றதோடு அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். ஆனால் இன்னொரு முக்கியமான கேள்வியை என்னை நோக்கி வீசினான்.

“நீங்கள் எல்லா இயக்கத்தோடையும் பழகியும் ஏன் ஒரு இயக்கத்திலையும் சேரல்லை?” என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு எனக்கு எந்தவிதமான சிரமமும் இல்லை. 

ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பவன் எனது தலைவிதியைத் தனது கையில் வைத்திருப்பவன். எனவே மிகவும் கவனமாகத்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதேநேரத்தில் அதில் உண்மையும் இருக்க வேண்டும். எனினும் ஒரு விடயம் சந்தோசமாக இருந்தது. அதாவது அவனது கேள்வியின்படி, நான் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவன் என அவர்கள் கருதுகிறார்கள் எனப் புரிந்தது.

“நான் சேருவது பற்றி யோசிக்கல்லை” எனச் சொன்னேன்.

“அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன்” என அவன் திரும்பவும் கேட்டான். நான் அவனுக்குத் திருப்தியான ஒரு பதிலைச் சொல்லும் வரை அவன் விடமாட்டான் எனத் தெரிந்தது. அவன் அவ்வாறு கேட்டதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

அதாவது ஒரு காலத்தில் எமது கட்சி கொள்கைப் பிடிப்பில் மிகவும் உறுதியானதாகவும், கட்டுக்கோப்பில் உருக்குப் போலவும் இருந்த ஒன்றாகும். பொதுவாகவே அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் ஒரு கருத்துச் சொல்வார்கள். அதாவது இறுக்கமான கட்டுக்கோப்பில் கத்தோலிக்க திருச்சபையும் கம்யூனிஸ்ட் இயக்கமும் ஒரே மாதிரியானவை என்று. ஆனால் கால ஓட்டத்தில் இரண்டுமே ஆட்டம் கண்டுவிட்டன.

இந்த நிலை எங்கள் கட்சியிலும் ஏற்பட்டது. எங்கள் கட்சியிலிருந்து கருத்து வேறுபாட்டால் ரோகண விஜேவீர விலகிச் சென்று ஜே.வி.பியை உருவாக்கிய போது, எமது அணியிலிருந்து ஒரு சிலரே அவருடன் சென்றனர். 

அவரது இயக்கம் ஒரு குட்டி முதலாளித்துவ சிங்கள குறுந்தேசியவாத இயக்கம் என்ற தத்துவார்த்தத் தெளிவு எமது கட்சியினர் அனைவருக்கும் இருந்தது. 

ஆனால் அவர் 1971ம் ஆண்டு ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சி செய்த போது, அவரது இயக்கத்தின் சரி பிழை எல்லாவற்றையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘ஜே.வி.பி. தான் உண்மையான புரட்சிகர இயக்கம்’ என்ற கருத்து எமது கட்சியில் - குறிப்பாக இளைஞர் அணியினர் மத்தியில் உருவாகி, எமது கட்சி முதல் தடவையாக ஆட்டம் காணத் தொடங்கியது. 

அதேபோல தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகி 1976ல் வட்டுக்கோட்டையில் ‘தமிழீழ’ தீர்மானம் எடுக்கப்பட்ட போது, அந்த இயக்கம் சம்பந்தமாகவும் அதனது தனிநாட்டு கொள்கை சம்பந்தமாகவும் (அது ஏகாதிபத்திய சார்பானது, தவறானது என்ற) தெளிவான உறுதியான நிலைப்பாட்டில் இருந்த எமது கட்சியினர், 1983ன் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான போது பலர் நிலை தளும்பி விட்டனர். 

தீவிரமான தமிழ் தேசியவாத அலையில் எமது கட்சி ஆட்டம் கண்ட சூழ்நிலையில், பலர் பல்வேறு தமிழ் தேசியவாத இயக்கங்களுடன் இணைந்து கொண்டனர். 

1972க்கு முன்னர் எமது கட்சியின் பொதுச்செயலாளராகவிருந்த நா.சண்முகதாசன் கூட (அந்த ஆண்டுதான் அவர் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் விலக்கப்பட்டார்) பின்னர் புலிகள் இந்தியாவை எதிர்த்துப் போரிட்டார்கள் என்ற ஒரேயொரு காரணத்தை வைத்து, (1962ல் நடைபெற்ற இந்திய – சீன யுத்தத்துக்குப் பின்னர் இந்தியாவை விஸ்தரிப்புவாத நாடு என்றே எமது கட்சி கூறி வந்தது) புலிகளை ஆதரித்து அறிக்கை விடும் நிலைக்குச் சென்றார் என்றால், நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலைமையில் என்னைப் போன்ற சில ‘பேயன்கள்’ தமிழ் தேசியவாத இயக்கங்களில் சேர்ந்து பிழைக்கத் தெரியாமல் போனதை தயாபரன் ஒரு தரக்குறைவாக எண்ணினானோ என்னவோ? (இவன் போன்றவர்களும் இப்படித்தான் எண்ணியிருப்பார்களோ என்னவோ)

அவன் கேள்வி கேட்ட பின்னரான சற்று நேரத்துக்குள்ளாகவே எமது கட்சியில் இருந்து வெளியேறி பல்வேறு தமிழ் தேசியவாத இயக்கங்களில் சேர்ந்தோரை நினைத்த போது, இவ்வளவு தொகையானோர் சேர்ந்திருக்கிறார்களே என முதல் தடவையாக அதிர்ச்சியாகவும் சற்று சீரணிக்க முடியாததாகவும் இருந்தது.

முதல் இயக்கமாக புலிகள் இயக்கத்தை நினைத்துப் பார்த்தேன். அங்கே எமது கட்சியிலிருந்து சென்ற மூர்த்தி – எமது கட்சியுடன் இருக்கும் போது பாலு – (மூர்த்தி: புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ் செல்வனின் சொந்த அண்ணன்) புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருக்கிறார். 

எமது கட்சியிலிருந்து சென்ற பதுவை இரத்தினதுரை புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர். என்னுடன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலிருந்து படிப்பைத் துறந்து கட்சிக்கு ஒன்றாக வந்தவரும், என்னுடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் கட்சி மற்றும் விவசாயிகள் சங்க பணிகள் செய்தவருமான நா.யோகேந்திரநாதன் புலிகளின் கலை பண்பாட்டுக் கழக முக்கியஸ்தராக இருப்பதுடன், கிளிநொச்சியிலிருந்து வெளியாகும் புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகைக்கும் ஆசிரியர். 

அதேபோல என்னுடன் அதே கல்லூரியிலிருந்து படிப்பைத் துறந்து கட்சிக்கு வந்து, வவுனியா பிரதேசத்தில் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கப் பணிகள் செய்த அ.கௌரிகாந்தன், அரசியல் பொறுப்பாளர் மூர்த்தியின் தாவடிக் காரியாலயத்தில அவரது முக்கிய உதவியாளர். (கௌரிகாந்தன் முன்னதாக புளொட் இயக்கத்தில் டி.சிவராமுடன் சேர்ந்து, தத்துவ ஆசிரியராக இருந்து பின்னர் தான் புலிகள் இயக்கத்துக்குச் சென்றவர். கடைசியாக ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தில் இணைந்து பெங்களுரில் இருந்தார். இப்போதைய நிலை தெரியவில்லை) எமது கட்சியைச் சேர்ந்த மட்டுவில் மானாவளை கிராமத்தைச் சேர்ந்த முருகேசு ஆசிரியர் ‘அன்பு மாஸ்டர்’ என்ற பெயரில் புலிகளின் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அரசியல் விரிவுரையாளர். இப்படி இன்னும் பலர்.

ஏனைய தமிழ் தேசியவாத இயக்கங்களை எடுத்துக்கொண்டால் அங்கும் ஒரு காலத்து எம்மவர்களே முக்கிய பொறுப்புகளில் அணிவகுத்து நிற்பதைக் காணலாம்.

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment