Follow by Email

Thursday, 13 March 2014

புலிகளின் இன்னொரு முகம் -231992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி புத்தாண்டு தினத்தன்று இரவு உணவுக்குப் பின்னர் சிறைச்சாலைக்குள் இருந்தவர்கள் மீதான கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின்னர் ‘டாக்டர்’ மெய்யப்பன் எல்லோருக்கும் வழமையான ‘பிறிற்ரோன்’ குளிகைகளை வழங்கினார். 

எனக்கு மட்டும் அன்று தரவில்லை. எனது கால் விலங்குகளை காலையில் வெட்டிவிட்டவாறு இதிலும் ஏதாவது  ஒரு அதிசயம் இருக்குமோ என எண்ணினேன்.

இரவு உணவிற்குப் பின்னர் கைதிகள் தமது வழமையான குசுகுசு சம்பாசணைகளில் ஈடுபடத் தொடங்கினர். இந்த சம்பாசணைகளில் அன்றைய தினம் நடந்த விசாரணைகளில் யார் யாருக்கு எலும்புகள் நொருக்கப்பட்டது என்பது முதல், பல்வேறு இயக்க முக்கியஸ்தர்களின் அந்தரங்க வாழ்க்கை முதல் அமெரிக் ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்க்கைவரை ஆராயப்படுவது வழமை என்பதைப் பின்னைய காலங்களில் அறிந்து கொண்டேன்.

இரவு 10 மணிக்குப் பின்னர் சிறை வாசலில் ஆள் அரவம் தென்பட்டது. எல்லோரும் கிசுகிசுப்பதை நிறுத்திவிட்டு தூங்குவது போலப் பாசாங்கு செய்ய ஆரம்பித்தனர்.

சிறை வாசலில் வந்து நின்ற இருவர்களில் ஒருவன, கையில் வைத்திருந்த ரோச் லைற் வெளிச்சத்தை உள்ளே பாய்ச்சி எனது பெயரை அழைத்தான். இப்படி திடீரென அழைப்பது அபூர்வமானபடியால் எல்லோரும் கடைக்கண்ணால் அவதானிப்பதைக் கண்டேன். 

காலையில் கால் விலங்குகளை வெட்டியது, இரவில் வந்து அழைப்பது, எனவே இது எனது விடுதலைக்குத்தான் என அவர்களின் எண்ணங்கள் ஓடியிருக்கும் என நினைக்கின்றேன்.

கதவைத் திறந்து என்னை வெளியே எடுத்த அவர்கள், விறாந்தையிலிருந்த அலுமாரிக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த கைதிகளின் சொந்த உடைகளில் என்னுடையதைத் தேடி எடுத்து அதனை அணியச் சொன்னார்கள். இந்தச் செய்கையைப் பார்த்ததும் எனது விடுதலை நிச்சயமானதுதான் என சக கைதிகள் தீர்மானித்தே விட்டனர்.

எனவே “எனக்குத் தெரியும். காலையிலை சங்கிலி வெட்டியதும் ஆளுக்கு அலுவல் பாப்பு தொடங்கீட்டுது எண்டு. இப்ப விசயம் தெரியுதுதானே?” என்ற வார்த்தைகள் பலரினது வாய்களிலிருந்து ஏககாலத்தில் புறப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்னை அவர்கள் வெளியே அழைத்து வந்தபோது ஒரு ‘பிக்கப்’ வாகனம் அங்கு நிற்பதையும் அருகில் காந்தி, உதயன் மற்றும் சிலர் நிற்பதையும் கண்டேன். அவசரம் அவசரமாக எனது கண்களை ஒருவன் கறுப்புத் துணியினால் கட்டினான். பின்னர் என்னை அவ்வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவர்கள் எங்கோ புறப்பட்டார்கள்.

இரவு நேரத்தில் அச்சிறைச்சாலையினுள் இருந்து ஒருவர் வெளியே அழைக்கப்படுகிறார் என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். 

அநேகமானோர் வெளியே எடுக்கப்படுவது அவர்களது விசாரணைகள் முடிவுற்று, தண்டனைக்காலத்தை அனுபவிப்பதற்காக வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவதற்காக இருக்கும். 

இரவின் அமைதியில் வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு அந்தகார வெளிகளில் இருளின் மறைப்பில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக சிலர் வெளியே எடுக்கப்படுவார்கள். 

ஒரு சிலர் ஊராருக்குத் தெரியாமல் அகால வேளையில் அவர்களது வீட்டு வாசலில் வைத்து விடுதலை செய்யப்படுவதற்காக எடுக்கப்படுவதும் உண்டு. இதில் எனது ‘வெளியெடுப்பு’ எதற்காகவென என்னால் ஊகிக்க முடியவில்லை.

எமது வாகனம் சிறிது நேரம் ஓடிய பின்னர் ஓரிடத்தில் தரித்து நின்றது. அங்கு வைத்து யாரோ ஒருவர் வாகனத்தில் ஏறிக்கொண்டார் என்பது புரிந்தது. நான் வாகனத்தின் பின்பக்கத்தில் நடுவில் இருத்தி வைக்கப்பட்டு, சுற்றிவர புலிக் காலாளிகள் இருந்ததினால் ஏறியவரினதும் அங்கிருந்தவர்களினதும் உரையாடல்களை என்னால் செவிமடுக்க முடியவில்லை.

சிறிது நேர ஓட்டத்துக்குப் பின்னர் வாகனம் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு எனது கண்கள் அவிழ்க்கப்பட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். நாம் எல்லோரும் ஸ்ரான்லி வீதியிலிருந்த எமது புத்தக்கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தோம். 

எதற்காக இந்த இரவு வேளையில் இங்கு வந்திருக்கிறார்கள் என எண்ணினேன். ஏனெனில் எமது கடையில் ஆயுதங்களோ அல்லது இரகசிய ஆவணங்கள் எதுவுமோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. அப்படியானால் எதற்காக இந்த வருகை?

கைதுசெய்யப்பட்ட பின்னர் இந்த ஒரு வாரத்தில் வெளி உலகைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. இப்பொழுது தினமும் பழகிய அந்த இடங்களைப் பார்க்கையில், வேறோர் உலகத்தில் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. 

இரவு முதல் சினிமாக் காட்சியைப் பார்த்துவிட்டு, குழந்தைகளுடன் குதூகலமாக சம்பாசித்துக் கொண்டு குடும்பம் ஒன்று செல்வதைப் பார்க்கையில் ஆவலாகவும் சற்றுப் பொறாமையாகவும் கூட இருந்தது. 

நான் தமிழ் சினிமா பார்ப்பதை நிறுத்தி ஆண்டுகள் பலவாகிவிட்டன. கடைசியாகப் பார்த்த படம் ‘புதிய வார்ப்புகள்’ என்று ஞாபகம். அதுவும் இரவு இரண்டாம் காட்சி. நண்பர்களின் வற்புறுத்தலுக்காகச் சென்றது. அரைவாசி நேரம் தூங்கிவிட்டேன். இப்பொழுது அந்தக் குடும்பத்தைப் பார்க்க எனக்கும் சினிமா பார்க்க வேண்டும் போல இருந்தது.

இதைத்தான் ஒன்று இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியும் என்று சொன்னார்களோ? சுதந்திரத்தின் அருமையும் அது இல்லாதபோதுதான் அபரிமிதமாக தெரிகிறது. அது நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களுக்கும் பொருந்தும்.

என்னைக் கூட்டி வந்தவர்கள், “உங்கடை புத்தகக்கடை தான். இந்தாங்கோ திறப்பு, உங்கடை கையாலை திறவுங்கோ” எனச் சொல்லி கடைத் திறப்பை எனது கையில் திணித்தனர். அவர்களது கூற்றில் தேவையுடன் ஒருவித கிண்டலும் இருப்பதை அவதானித்தேன்.

திறப்பை வாங்கி கடையைத் திறந்தேன். கடையில் மின்சாரம் இல்லாதபடியால் அவர்கள் இரண்டு மூன்று ரோச் லைற்றைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தனர். 

உள்ளே வந்த பின்னர்தான் அவர்கள் வரும் வழியில் அழைத்து வந்த நபரை எனக்கு அறிமுகம் செய்தனர். அவரைச் சுட்டிக்காட்டிய காந்தி “இவர்தான் மாதவன் மாஸ்டர். ‘

விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியர்” என்று சுருக்கமாக அறிமுகம் செய்தான். பொதுவாக புலிகள் தமது ஆட்கள் யாரையும் வெளி ஆட்களுக்கு அறிமுகம் செய்வதில்லை. 

எனவே இந்த அறிமுகம் பெருமைக்காகவோ என்று எண்ணினேன். அதாவது, ‘இடதுசாரிகளிடம் இருப்பது போல எம்மிடமும் அரசியல் விற்பன்னர்களும் தத்துவார்த்தவாதிகளும் இருக்கிறார்கள்’ என்று காட்டவோ? 

நான் அப்படி எண்ணியதிற்கு ஒரு காரணம் இருந்தது. புலிகள் ‘ஈழநாதம்’ தினசரி உட்பட பல மாத வார இதழ்களை வெளியிட்டு வந்தாலும், அவர்களது கருத்தைக் கூறுகின்ற உத்தியோகபூர்வ பத்திரிகை ‘விடுதலைப் புலிகள்’ தான். எனவே அதன் ஆசிரியர் என்பவர் ‘முற்றும் தெரிந்த’ ஒரு மேதாவியாகத்தானே இருப்பார்?

உள்ளே அவர்கள் நாலா புறமும் ரோச் வெளிச்சத்தைப் பாய்ச்சி எதை எதையோ பார்த்தார்கள். அங்கு கூடுதலாக புலிகளுக்குப் பிடிக்காத சீன வெளியிடுகள்தான் பெருந்தொகையாக அலுமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

அவற்றில் சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் அவர்களின் ‘தேர்ந்தெடுத்த இராணுவப் படைப்புகள்’ என்ற ஆங்கில நூலும் இருந்தது. அதைக் கையிலெடுத்த மாதவன் மாஸ்டர், “வேறு ஏதாவது இராணுவம் சம்பந்தமான புத்தகங்கள் இருக்குதா?” என என்னிடம் வினவினான். நான் அதற்கு “இதுதான் மாஓவின் மிகச் சிறந்த நூல்” எனப் பதிலளித்தேன்.

அப்போது அவன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு மிகவும் சீரியஸான முறையில், “ஆனால் மாஓவின் மக்கள் யுத்தப்பாதை எங்கடை போராட்டத்துக்குச் சரிவராது” என்று கூறினான். ‘

மக்களைச் சார்ந்திருக்காத இவர்களது போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது’ என நான் எனக்குள் எண்ணிக்கொண்டாலும் அமைதியாக நின்றேன். மக்களுக்காக என்று சொல்லிக்கொண்டு, இவர்கள் அவர்களது ஹிரோக்களாக நின்று எம்.ஜி.ஆர் பாணியில் (அதனால்தான் எம்.ஜி.ஆருக்கும் இவர்களைப் பிடித்துக் கொண்டதோ என்னவோ?) நடாத்தும் போராட்டம் ‘கன’ தூரத்துக்கு ஓடாது என எண்ணினேன். மாதவன் மாஸ்டர் எமது புத்தகக்கடைக்குள் மேலும் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் காந்தி திடீரென என்னை நோக்கி, “விவேகானந்தன் தந்த பெட்டி ஒண்டு உங்களிட்டை இருக்காம். எங்கை அது” எனத் திடீரெனக் கேட்டான். 

அவன் கேட்ட பின்னர்தான் எனக்கே அதுபற்றி நினைவுக்கு வந்தது. இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில், தனது வீட்டில் மார்க்சிய புத்தகங்களை (அதுவும் அதில் பெரும்பாலானவை இந்தியர்களுக்குப் பிடிக்காத சீன வெளியீடுகள்) வைத்திருப்பது நல்லதல்ல என்று கருதிய தோழர் விவேகானந்தன் (அன்ரன்), தன்னிடம் இருந்த சில புத்தகங்களை ஒரு கடதாசிப் பெட்டியில் போட்டு, அந்த வகையான புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்து வந்த எமது கடையில் கொண்டு வந்து வைத்திருந்தார். அதைத்தான் இப்பொழுது இவர்கள் கேட்கிறார்கள்! 

புலிகளது கேள்வியை வைத்து என்னால் ஒன்றை ஊகிக்க முடிந்தது. அதாவது அவர்கள் தமது விசாரணையில் விவேகானந்தன் வாழ்க்கையின், அவரது அரசியல் வேலைகளின் முக்கியமான விடயங்களை மட்டுமின்றி, அவரது ஒவ்வொரு அசைவையும் கூட துருவித் துருவி விசாரித்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

அதாவது முக்கியமற்ற விடயங்கள்தானே என நினைத்து, புலிகளிடம் எதையும் அசட்டையாகத் தன்னும் சொல்லாமல் இருக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டேன். அதனால்தான் விவேகானந்தன் ‘மேல் வீட்டில்’ என்னைக் கண்டபோது முன்னெச்சரிக்கையாக, “மணியண்ணை உங்களுக்குத் தெரிந்த எல்லாத்தையும் சொல்லிப் போடுங்கோ, இந்த அடிகளையும் சித்திரவதைகளையும் உங்களாலை தாங்க ஏலாது” என்று கூறினாரோ என எண்ணினேன்.

விவேகானந்தனின் கடதாசிப் பெட்டிக்குள் ஒருசில புத்தகங்களே இருந்தன. அவற்றின் மத்தியில் இயக்கங்களின் செயற்பாடுகளை விமர்சித்து பெயர் குறிப்பிடாது வெளியிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரம் ஒன்றும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு அதை யார் வெளியிட்டது என என்னிடம் துருவித்துருவி விசாரித்தனர். 

அப்படி ஒரு பிரசுரம் வெளிவந்ததே எனக்குத் தெரியாது. அப்படியிருக்க நான் என்ன பதிலைக் கூற? பின்னரும் என் விசாரணைகளின் போது பல தடவைகள் அதுபற்றி விசாரிக்கப்பட்டது. ஒரு சிறிய அநாமதேய துண்டுப் பிரசுரத்திற்கு இவ்வளவு விசாரிப்பா என அதிசயப்பட்டேன். 

அதேநேரத்தில் ஒன்று விளங்கியது. யாராயிருந்தாலும் இயக்கங்களின் செயற்பாடுகளை விமர்சிப்பதை அவர்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதின் வெளிப்பாடே அது.

விவேகானந்தனின் கடதாசிப் பெட்டியை எடுக்கப் போவதற்காக கடையின் பின்பக்கம் சென்றபோது இன்னொன்றையும் அவதானித்தேன். பரந்தனைச் சேர்ந்த நண்பர் ஒருவர் புலிகள் என்னைக் கைதுசெய்த தினத்தன்று வியாபார நிமித்தம் வவுனியாவிலிருந்து சில ஆயிரம் ‘றினோல்ட்’ மற்றும் ‘ஒறெக்ஸ்’ போல் பொயின்ற் பேனாக்களைக் கொண்டு வந்திருந்தார். 

எதிர்பார்த்த விலை சரிவராததால் அவற்றை எமது கடையில் வைத்துவிட்டு, இரண்டு நாட்களில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றிருந்தார். அவர் வைத்த இடத்தில் இப்போது அவற்றினைக் காணவில்லை! என்னைக் கைதுசெய்த தினத்தன்று கடைத் திறப்பை என்னிடமிருந்து வாங்கிய புலிகள், பின்னர் கடையைத் திறந்து ஆராய்ந்த பொழுது அவற்றை ‘அபேஸ்’ செய்துவிட்டார்கள் என்பது புரிந்தது.

இப்படிப் பலர் தமது வியாபாரப் பொருட்களைக் கொண்டு வந்து எமது கடையில் வைப்பது வழக்கம். அன்று பரந்தன் நண்பரின் பொருள் மட்டுமே இருந்ததால், அதை மட்டும் சூறையாடிச் சென்றிருக்கிறார்கள் இந்த ‘உத்தம புத்திரர்கள்’.

சிறிது நேரம் அங்கு செலவிட்ட பின் மீண்டும் கண்கள் கட்டப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டேன்.

(இந்த 28வது கட்டுரைத் தொடர் வெளியாகி இரண்டு நாட்களில் நான் கைது செய்யப்பட்ட 1991 டிசம்பர் 26ம் திகதியின் 20வது நினைவு தினம் வருகிறது. இந்தத் தினத்தை அன்றிலிருந்து வருடாவருடம் நாம் மௌனமாகத் துக்க தினமாக அனுஸ்டிப்பது வழமை. 

இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் இந்தப் பூமிப்பந்தில் நிகழ்ந்துவிட்டன. அசைக்க முடியாத கோட்டை எனக் கருதப்பட்டு இருந்த புலிகளும் மண்ணோடு மண்ணாகி வரலாற்று அரங்கிலிருந்து காணாமல் போய்விட்டார்கள். எல்லாம் ‘மக்கள் சக்தியே மகேசன் சக்தி’ என்பதின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை)

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment